வானவில் !

 வானவில் !
அவன் பிச்சைக்காரன் அல்ல…
ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்!
சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில் சில ஈர நெஞ்சங்கள் மட்டும் தன்னால் இயன்றதில் சிறிதளவு அவனுக்காகவோ, அவன் திறனுக்காகவோ போட்டுவிட்டு தன் இயந்திரப் பயணத்தை நோக்கிச் சென்றுவிடும்.
உதிரம் சிந்தும் இயேசு நாதர் தன் சிலுவையோடு, கோகுலத்துக் கண்ணன் தன் பசுக்களோடு, மாவீரன் தன் குதிரையோடு, ஓர் அன்புத்தாய் தன் குழந்தையோடு…என்று எண்ணற்ற எண்ணங்கள் அங்கே சித்திரமாய் சிதறிக்கிடக்கும் சில்லறைகளுக்கு நடுவே.
அதன் மேல் விழும் நாணயங்களை எடுக்க அவன் நாணியதில்லை! அது பிச்சைக்காசு அல்ல தன் திறமைக்குக் கிடைத்த பரிசு! தன் உழைப்புக்கு கிடைத்த ஊதியம் அதனால் அவன் பெருமை கொள்கிறான். ஆனால் கர்வம் கொள்ளாதவன். தன் உடலால் வலு குறைந்தவன் என்றாலும் மனத்தால் வலு மிகுந்தவன். தன் உழைப்பால் மட்டுமே தன் வயிற்றை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அவனுக்கு சொத்தென இருப்பது ஊருக்கு ஒதுக்குப்புரத்து ஓலைக்குடிசை, அது ஓட்டைக்குடிசை, இரண்டு அலுமினியத்தட்டு, ஒரு பானை, சில கந்தல்துணிகள், ஒரு சாக்குப்பை அதில் கரித்துண்டுகள் கொஞ்சம், வண்ண சாக்பீஸ் துண்டுகள் கொஞ்சம், இறந்து போன மனைவியின் புகைப்படம் ஒன்று, அவள் அழகாய் பெற்றுப்போட்ட சத்யா எனும் ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, கிழிந்த பாய் ஒன்று, மெலிந்த நாய் ஒன்று அவ்வளவே! அவன் பிச்சைக்காரன் அல்ல.
கதிரவனின் காலைப்பணி துவங்கியதன் அடையாளமாக தன் ஒளிக்கதிர்களை அவன் குடிசையின் ஓட்டைகளுக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்.ஒளிபட்டு விழி திறந்தவனின் எதிரே தன் மனைவியின் அழகிய புகைப்படம் அழகிழந்து வாடிய மலர் சரத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது.
எட்டு வருடத்திற்கு முன்பு சாலையில் தன் ஓவியத்தை பரப்பிக் கொண்டிருந்தவன் யதார்த்தமாக திரும்பிப் பார்க்க மேகக்கூட்டத்திற்கு நடுவே பவுர்ணமி நிலவு போல, மக்கள் கூட்டத்திற்கு நடுவே எழிலோவியமாய் அவள் நின்றிருந்தாள்! இலங்கையில் ஒரு நாள் கலவரம் ஏற்பட்டு பாதி இலங்கையே அழிந்துவிடும் அபாயகரமான வேளையில் தன் பெற்றோரை இழந்துவிட்ட இவள், தன் சகோதரனுடன் அகதியாய் இந்தியாவுக்கு வந்தவள்.
வந்த இடத்தில் தன் சகோதரனையும் தொலைத்துவிட்டு துயரத்தின் உச்சத்தில் அவனைத்தேடி ஊரைச்சுற்றிய போது இவனது ஓவியத்தை ரசிக்கும் கூட்டத்தில் நுழைந்துவிட்டிருந்தாள். அந்நேரம் அவன் வரைந்திருந்த ஓவியம் தன் குடும்பத்தை நினைவுபடுத்த அங்கேயே கதறியழுது மயங்கி விழுந்தாள். கண் விழித்தவள் அவனது ஓலைக்குடிசையில், அருகில் பதட்டமாய் அவன், மெதுவாய் எழுந்தவள் அவசரமாய்த் தேடினாள் தன் கைப்பையை. ‘இதுதானே’ என்று அவள் மயங்கியபோது கையில் வைத்திருந்த ஒரு சிறு துணிப்பையை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் அவசரமாய் அதைப்பிரித்து அதிலிருந்நு எடுத்தாள் ஒரு புகைப்படத்தை அதில் அவளது குடும்பம் இருந்தது, அதை தன் முகத்தோடு ஒட்டிவைத்துக் கதறினாள்.அவள் பசியோடு இருப்பதை உணர்ந்தவன் அவனுக்காய் வைத்திருந்த பழையசோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அவளிடம் நீட்டினான்.அவள் மறுக்க அவன் கட்டாயப்படுத்தினான்.
அவள் அவனை நன்றியோடு பார்த்துவிட்டு தன் கையிலிருந்த புகைப்படத்தை கீழே வைத்தாள். அதில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனுடன் புன்னகை முகமாய் பளிச்சென இருந்தாள். ஆதரவற்று வந்தவளுக்கு ஆதரவாய் அவன் இருந்தான். சில நாட்கள் அவனோடே தங்கினாள், நாளடைவில் அவன் வரைவதுபோலே ஓவியக்கலையையும் அவனிடம் கற்றாள்.
அவளின் ஆர்வம் அவனுக்குப் பிடித்துக் போக தன்னோடு பல இடங்களுக்கும் அழைத்துப்போனான். அவளுக்கு உதவியாய் அவனும், அவனுக்கு உதவியாய் அவளும் இருக்க, சில நாட்களில் இருவரும் திருமணம் செய்வதாய் முடிவெடுத்தனர். புது உறவில் பழைய உறவுகளின் இழப்புகளை மறக்கத் துவங்கினாள். என்றாவது நினைவு வந்து முகம் புதைக்கையில் அவன்மடி ஆறுதலளித்தது அவளுக்கு.
குயில்களின் நாதம் மட்டுமல்ல அவன் குழந்தையின் பாதமும் பட்டது அவன் குடிசையில். மழையில் நனையும் குடில்தான் என்றாலும் மழலையின் குரல்தனில் இருவரும் மகிழ்ந்தனர். ஏனொ கடவுளின் கண்கள் அன்று மட்டும் இவர்களைப் பார்க்கவில்லை போலும். வழக்கம் போல் அன்றும் தன் குழந்தையை ஒரு மரத்தடியில் புடவையில் தொட்டில் கட்டி போட்டுவிட்டு அருகிலேயே தன் பணியை ஆரம்பித்தனர் இருவரும்.
ஓவியத்தின் எழில் கூடக் கூட அதன் பாகம் விரிய தான் நடுச்சாலையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து ஓவியத்தில் லயித்திருந்தனர் இருவரும். அப்போது எதிர்பாராத திருப்பத்தில் வேகமாக திரும்பிய லாரி ஒன்று அவளின் மேல் மோதிவிட்டு வேகமாய்ச் சென்றுவிட, ஓவிய வண்ணமெல்லாம் அவளின் இரத்தத்தினால் தீட்டப்பட்டிருந்தது. பதறியெழுந்த அவன் அவளை மடியில் கிடத்தி பேச எத்தனிக்கும் வேளையில் அவள் விழி மூடினாள்.
பழைய நினைவுகளின் கூட்டுக்குள் நுழைந்துவிட்ட அவன் நினைவு திரும்பியவனாய் தன் மனைவியின் புகைப்படத்துக்கு ஒரு முத்தம் வைத்துவிட்டு தன் காலைப்பணிகளை முடித்தவன் சாக்குப்பையை தூக்கித்தன் தோளில் மாட்டியபடி தன் மகள் சத்யாவைப் பார்த்தான்.
வாடிய முகம், கலைந்த தலை, ஒல்லியான தேகம், ஒட்டிய வயிறு… நன்றாக அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். பாவம் நேற்று சற்று கடுமையாக நடந்துகொண்டுவிட்டேன். அவள் நெற்றியில் படிந்திருந்த முடியை வருடிவிட்டு கண் கலங்கினான். நேற்று அவள் அப்படி என்னதான் கேட்டுவிட்டாள். ஊரில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் அம்மா இருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை. எனக்கு இப்பவே அம்மா வேணும் என்று ஆர்ப்பாட்டம் செய்தாள்.
எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் பிஞ்சு மனம் கேட்டபாடில்லை. அதனால் இவன் கை ஓங்க வேண்டியதாயிற்று. மனம் வெறுத்துப்போன அவள் ‘அம்மா இருந்திருந்தாள் என்னை அடித்திருப்பாளா?’ என்று அழுது புரண்டு இரவு தூங்க மணி பன்னிரண்டு ஆகிவிட்டது, அதான் காலையில் இப்படி அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறாள். சரி, அவளாக எழுந்து தான் வடித்து வைத்திருக்கும் சோற்றை போட்டு சாப்பிட்டுக்கொள்வாள் என்று நினைத்தவாறே கிளம்பினான்.
இப்படிதான் சிலநாட்கள் அவன் அவளை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வதுண்டு. அந்நாட்களில் அவளுக்குத் துணையாக நாய்க்குட்டி ஸ்டெல்லா இருப்பாள். நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில் நன்றியுள்ள ஜீவனோடு வாழலாம் என்று அந்த நாய்க்குட்டியை வளர்த்து வந்தான். என்றோ ஒரு நாள் அவன் ஓவியத்திற்கு நிறைய சில்லறைகள் கிடைக்க, கறிக்கடையில் எலும்பு வாங்க வந்தான். அன்று கறிக்கடை வாசலில் நின்றிருந்த இந்த ஸ்டெல்லா அவன் பின்னாலேயே ஓடி வந்துவிட்டது. அன்று மட்டும்தான் அதுக்கு வாய்க்கு ருசியாக எலும்பு கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை கனவில்கூட எலும்பைப் பார்த்திராது அவனோடே வாழ்ந்து வருகிறது இந்த ஸ்டெல்லா.
இன்று சத்யா விழிக்கும் முன்னே இவன் கிளம்பிவிட்டான். காலைக்கதிரவன் ஏனோ இவன் முகத்தில் விழிக்க மனமில்லாது மேகப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டது. வானில் மேகம் சூழ்ந்திருந்தது, காற்று பலமாக வீசத்துவங்கியது. இவன் மண் சாலையிலிருந்து தார் சாலையில் ஏறி நடந்தான். தன் எண்ண ஓட்டங்களில் எல்லாம் தாய் இல்லாத தன் மகளின் எதிர்காலம் பற்றியதாய் இருந்தது,  எப்படியாவது தனது வருமானத்தை பெருக்கியாக வேண்டும். தன் வயிறு நிறைவதற்கு மட்டும் சம்பாதித்தால் போதாது, தன் மகளின் எதிர்கால வாழ்வுக்கு தான் ஏணியாக இருக்க வேண்டும். இனி ஒரு நாளைக்கு இரண்டு மூன்று இடங்களில் வரைந்து சம்பாதிக்க வேண்டும்.
காற்று பலமாக வீசத்துவங்கியது, இவன் எண்ணங்களும் அதனோடே வேகமாக வீசிக்கொண்டிருந்தது, இன்று எப்படியாவது மக்கள் அதிகமாய் நடமாடும் இடத்தில் மிகமிக அழகாய் ஓர் ஓவியம் வரையவேண்டும். அடுத்து வேறொரு இடம் அதற்கடுத்து வேறொரு இடம் இப்படியே இன்று மூன்று இடங்களில் வரைந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தவாறு சாலையின் இருபுறங்களையும் பார்த்தபடி வேகமாய் நடந்தான். ஒரு புளியமாத்தடி இவனுக்கு ஏற்றதாய் இருந்தது. தன் சாக்குப்பையை கீழே வைத்தான். அதிலிருந்து துடைப்பத்தை எடுத்தான். நன்றாக அகலமாக சாலையை சுத்தம் செய்தான். அவனை மக்கள் கவனிக்கிறார்களா என்றும் பார்த்துக்கொண்டான்.
பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் மக்களுக்கு இதனைப் போன்ற வேடிக்கைகளைப் பார்ப்பதற்கு எப்படிதான் நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை. பார்க்கட்டும் அப்போதானே இது போன்ற ஜீவன்களும் வாழமுடியும். இவன் வரைவதற்கு முன்பே நான்கு பேர் இவனை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். இவனது திறமையை தெரிந்திர்ப்பார்கள் போலும்.இவன் சாக்குப்பையை கீழே கொட்டி அதிலிருந்த வண்ண சாக்பீஸ் துண்டுகளை எடுத்து வரைய ஆரம்பித்தான். தன் மகளின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டி, தினமும் காலையை பிரகாசமாய் துவக்கிவைக்கம் சூர்யபகவானை வரைய ஆரம்பித்தான்.
இப்போது கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. அதிகப்பச்சமாக முப்பத்தைந்து பேர் இருப்பார்கள்.இவன் மனதிற்குள்ளே இன்றைய வருமானம் எவ்வளவு இருக்கும் என்று திட்டம் போட்டபடி வரைந்து கொண்டிருந்தான்.வண்ண ஆபரணங்கள் அலங்கரித்த குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்து அலங்காரமாய் சூர்யபகவான் வந்து கொண்டிருப்பது போல அவனது ஓவியம் பாதி வேலை முடிந்திருந்தது, மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது.அவனுக்கு மகிழ்ச்சி. மிகவும் சிரமப்பட்டு ஓவியத்துக்கு எழில்கூட்டி வரைய ஆரம்பித்தான். கூட்டத்தில் சிலர் சில சில்லறைகளை வீசினர். சிலர் ‘பூமிக்கு சூரியன் வந்துடுச்சில்ல அதான் வானத்துல காணோம்’ என்று கிண்டலடித்தபடி கை கட்டி நின்றனர். காற்று வீசிய வேகத்தில் அவன் மீது மண்ணடிக்க அதைக் கூட பொருட்படுத்தாமல் தன் வேலையை கவனமாகச் செய்துகொண்டிருந்தான்.
மேகம் சூழ்ந்து கொண்டுவர, மழைத்தூறல் போட ஆரம்பித்தது. மழை வெள்ளத்துக்கு பயந்து மக்கள் வெள்ளம் ஓட ஆரம்பித்தது. தூறலாய் ஆரம்பித்த மழை பெரிதாய் வளர ஆரம்பித்தது. இவன் முழுதாய் நனைந்துவிட்டான். மழையின் வேகத்தில் ‘சூர்யபகவான்’ கரைந்துவிட்டான். வானிலும், மண்ணிலும்.
இவன் அதிர்ச்சியடைந்தவனாய் கரைந்தோடும் தன்  ஓவியத்தில் தன் மகளின் எதிர்காலமும் கரைந்து போவது போல பார்த்துக்கொண்டிருந்தான். அவன் விழிகளில் இன்னொரு அடைமழை.
மழை கொஞ்சம் விட்டிருந்தது. வானம் தெளிவாகிக்கொண்டிருந்தது, ஆனால் சாலையில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததால் இவனால் இன்று ஏதும் செய்ய இயலாது. மனமுடைந்தவனாய் தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழை நின்று விட்டது, தன் குடிசையை நெருங்கியவன் தன் மகள் துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் குடிசைக்கு மேலே வானத்தில் அழகாய், மிகப்பெரிதாய் தோன்றியிருக்கும் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தாள். அவளோடு ஸ்டெல்லாவும்.
இவனைப்பார்த்ததும் ‘ அப்பா..அப்பா… அங்க பாரு வானவில் ரொம்ப அழகா இருக்கு’ என்றவாறு கைதட்டி குதித்தவாறு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்தாள். அந்த சிரிப்பில் இவனது வறுமை பறந்திருந்தது. அவளது சோகம் மறந்திருந்தது. இவனும் அவளோடு சேர்ந்து வானவில்லை ரசிக்கத்துவங்கினான்.
இவன் வரைந்த ஓவியம் அங்கே கரைந்திருந்துவிட்டது. இயற்கைத் தீட்டிய ஓவியம் இங்கே சிரித்துக்கொண்டிருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...