தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற பண்டிகைகளை விட தீபாவளிக்கு ஏராளமானோர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். இதற்கேற்ப அதிகப்படியான சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். இதுதொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பண்டிகை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வரும் வாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை வருகிறது. அதாவது தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதையொட்டி பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களின் வசதிக்காக 4,000 சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த பேருந்துகள் வார இறுதி விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையை ஒட்டி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. இது வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிறு அன்று வருகிறது. வார நாட்களில் வந்திருந்தால் ஒருநாள் விடுமுறை கிடைத்திருக்கும்.
ஆனால் ஞாயிறு அன்று வருவதால் வார இறுதி விடுமுறை உடன் கடந்து சென்றுவிடும். இருப்பினும் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களுக்கு பலரும் விடுப்பு எடுத்துக் கொள்வர். இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. மற்ற பண்டிகைகளை போல தீபாவளி கிடையாது. ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை செய்பவர்கள் கூட தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று கொண்டாட வேண்டும் என்று விரும்புவர்.
எனவே பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். இதையொட்டி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பண்டிகையை கொண்டாட பல்வேறு நகரங்களுக்கு எத்தனை பேருந்துகளை இயக்கலாம்.
எந்தெந்த கழகங்களுக்கு எத்தனை பேருந்துகளை ஒதுக்கலாம். பண்டிகை முடிந்து மீண்டும் திரும்புவதற்கு எத்தனை பேருந்துகள் இயக்கலாம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி அன்று தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் வரும் நாட்களில் முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. அப்போது சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. அவை, கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவை ஆகும்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே 1.5 லட்சத்தை தாண்டியது. ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனவே நடப்பாண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்து பயணிகளின் சிரமத்தை தமிழக அரசு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.