தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் பண்டிகைகால சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.
பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் தமிழ்நாட்டில் பெருநகரங்களில் பணி, படிப்புக்காக தங்கி இருக்கும் மக்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் சொந்த ஊர்களுக்கு பெரும் அளவில் செல்வது வழக்கமாக உள்ளது. அப்போது வாகனங்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இதனை தவிர்த்து பயணிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பண்டிகை கால சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவது வழக்கம். சிறப்பு ரயில்கள், பேருந்துகளுக்கான முன்பதிவுகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே சுமார் 4 மாதங்களுக்கு முன்பாஜக ஜூலை மாதமே முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பின.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கால அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 30 நாட்களுக்கு முன் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெறும் நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்று முன்பதிவு செய்யலாம்.
அதேபோல், நவம்பர் 11 ஆம் தேதி பயணம் செய்ய இருப்போருக்கான முன் பதிவு நாளை (வியாழக் கிழமை அக்டோபர் 12 ஆம் தேதி) தொடங்க இருக்கிறது. இந்த் முன்பதிவை தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது அதன் செயலி மூலம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி, பேருந்து நிலையங்களில் இருக்கும் முன்பதிவு மையங்களின் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.