காலச்சக்கரம் சுழல்கிறது-25 || நற்பணி ஆற்றிய என்.வி.ராஜாமணி

 காலச்சக்கரம் சுழல்கிறது-25  || நற்பணி ஆற்றிய என்.வி.ராஜாமணி

நாடகம்சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடகசினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும்சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி அவர்கள் 1922ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சேலம் மாநகரில் உள்ள நங்கவள்ளி எனும் ஊரில் வெங்கட்ராமன் – பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர், பாரதி கலைஞரும் பிரபல திரைப்பட நடிகரும் எனது குருநாதருமான  எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த சகோதரியின் மகன் ஆவார்.

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. கணிதவியல் படித்தவர்.

என்.வி.ராஜாமணி என்றால் எழுத்து உலகில் இருக்கும் அனைவருக்கும்  தெரிந்தவரே.  உதவி இயக்குநராக 1952ஆம் ஆண்டில் இருந்து 1956ஆம் ஆண்டு வரை திரைப்பட மேதை எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியுள்ளார்.

அது சமயம் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் நட்பும் கிடைக்கப் பெற்றார். புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சில வருடங்கள் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். 

1990ஆம் ஆண்டு இவர் கேர் எனும் அமெரிக்க நிறுவன அமைப்பில் முதன்மைப் பணியில் சேவை செய்தவர். தமிழ், ஆங்கில இலக்கிய அறிஞர்கள் பலராலும் புகழ்ந்து பாராட்டப்பட்டவர்.

இவருக்கு ஒரு மகனும், ஐந்து மகள்களும், வாரிசாகப் பிறந்தார்கள். இவரது மனைவி பெயர் அகிலா. 1952ஆம் ஆண்டு இவரது தாய்மாமனாகிய S.V.சகஸ்ரநாமம் அவர்கள் சேவா ஸ்டேஜ் நாடக சபாவைத் தொடங்கிய போது முதன்முதலாக ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான ‘தி விஷன்’ எனும் நாவலை நாடக ஆக்கம் செய்து அதற்குக் ‘கண்கள்’ எனும் தலைப்பைச் சூட்டி முதன்முதலில் சேவா ஸ்டேஜில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தின் வசனத்தை எழுதியவர் ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி ஆவார்.

அதன் பிறகு இருளும் ஒளியும், வானவில் என்ற நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, சேவா ஸ்டேஜில் அரங்கேறிய நாடகங்கள் ஆகும். கண்கள்,  இருளும் ஒளியும் என்ற இரண்டு நாடகத்திலும் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்கள் உடன் சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடித்தார் என்பது நாடக வரலாற்றில் ஒரு முக்கிய செய்தி.

மூன்றாவதாக இவர் எழுதிய நாடகம்தான் ‘வானவில்’. இது ஆர்ட் டைரக்டர் கலாசாகரம் ராஜகோபால் அவர்களால் வடிவமைக்கப்பட்டு ரோலிங் ஸ்டேஜ் முறையை முதன்முதலாக்க கொண்டுவந்த நாடகம். இந்த நாடகத்தைப் பார்த்த பிறகு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களும் தனது ‘சரஸ்வதி சபதம்’ எனும் நாடகத்தில் இந்த ரோலிங் ஸ்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்.

அதே காலகட்டத்தில் ‘நாடகக் கல்வி’ என்ற ஒரு பயிற்சிக் கூடத்தையும் உருவாக்கியபோது அதற்கு உரிய நிர்வாகப் பணிகளையும் இவர்தான் பொறுப்பேற்று செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாகவி பாரதியாரின் ‘குயில்பாட்டை’ திரு எஸ்.விஎஸ். அவர்களின் விருப்பத்திற்கிணங்க  நாடக உருவாக்கி மேடையேற்றினார். அன்றைய காலகட்டத்தில் இந்த பரீட்சார்த்த நாடகம் பல தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

நாடக உலகிற்கு நற்பணி ஆற்றிய என்.வி. ராஜாமணி 1990ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவு எழுத்து உலகிற்கும், இலக்கிய உலகிற்கும் ஒரு மாபெரும் இழப்பு.

சேவா ஸ்டேஜ் நாடக மன்றத்தில் நான் நடிகனாக இருந்ததால் இவரைப் பற்றி நான் ஓரளவிற்குக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்தக் கட்டுரையை நான் எழுத எனக்குப் போதுமான தகவல்களைத் தந்து உதவியவர் திருமதி. சாந்தி வைத்தியநாதன். இவர் S.V. சஹஸ்ரநாமம் அவர்களின் மகள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றாண்டைக் கடந்தும் என்.வி. ராஜாமணி அவர்களின் எழுத்தாற்றல் புகழ்ந்து பேசப்படுகிறது.

நான் மிகவும் போற்றி புகழ்வது எழுத்தாளராகிய என்.வி. ராஜாமணி எனும் ராமன் அரசன் அவர்களைத்தான்.

குறிப்பு : எனது முதல் நூலாகிய ‘அங்கீகாரம்’ (My Autobiography). ஆன்லைனில் ஏற்றப்பட்டுள்ளது. அதைப் படித்தால் மேலும் பல தகவல்களை அறியலாம்.

-கலைமாமணி பி.ஆர்.துரை

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...