‛இந்தியாவின் மருமகன்’ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க டெல்லி வந்தார்.

 ‛இந்தியாவின் மருமகன்’ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க டெல்லி  வந்தார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வந்தார். இந்த வேளையில், ரிஷி சுனக் தன்னை ‛‛இந்தியாவின் மருமகன்” என குறிப்பிட்டு சொன்ன ஜோக்கால் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

ஜி20 அமைப்பில் மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. இந்த ஜி20 மாநாடு இன்று மற்றும் நாளை  என 2 நாட்கள் டெல்லியில் நடைபெற உள்ளது.

டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிற நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட பலர் இன்று வருகை தர உள்ளனர். அதன்படி இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் டெல்லியில் வந்து இறங்கினார்.

இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இந்தியா என்பது எனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் பிரியமான நாடு” என்றார். மேலும் ‛‛பல இடங்களில் இந்தியாவின் மருமகன் என என்னை குறிப்பிடுவதை பார்க்கிறேன்” என ஜாலியாக ஜோக்கடித்த ரிஷி சுனக், ‛‛உண்மையிலேய இந்தியாவின் மருமகன் என்பதை சிறப்பானதாக உணர்கிறேன்” என சிரித்தபடி கூறினார். இதை கேட்ட பத்திரிகையாளர்களும் சிரித்தனர்.

ரிஷி சுனக் இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியை காதலித்து திருமணம் செய்துள்ளார். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்தவர். இதனால் ரிஷி சுனக் இந்தியாவின் மருமகனாக உள்ளார். இவர்களின் திருமணம் பெங்களூரில் உள்ள ஹோட்டலில் கடந்த 2009 ம் ஆண்டு நடந்தது.

மேலும் ரிஷி சுனக் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்த கேள்விக்கு, ‛‛ரஷ்யா-உக்ரைன் மோதல் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஏனென்றால் இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தற்போது மீண்டும் விளாடிமிர் புதின் ஜி20 மாநாட்டில் இருந்து விலகி உள்ளார். அவர் தனது அதிபர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விளாடிமிர் புதினின் அழிவு தொடர்பான நடவடிக்கையை தடுக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக ஜி20 மாநாடு குறித்து ரிஷி சுனக் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அதில், ‛‛ஜி20 மாநாட்டுக்காக இந்தியா செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி 20 மாநாட்டுக்கு தெளிவான திட்டமிடலுடன் செல்கிறேன் உலக பொருளாதாரம், சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், பாதிக்கப்படும் நாடுகளை ஆதரித்தல் உள்ளிட்டவற்றை சாராம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளேன்” என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛ உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இதனால் மனித உரிமைகள் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தடுப்பதில் இந்தியா மிகவும் முக்கிய பங்காற்றும். விளாடிமிர் புதினின் மிருகத்தனமான போர் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவின் செல்வாக்கை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” என்றார்.

முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரிஷி சுனக்கும் சந்தித்து பேசினர். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு பிறகு பிரிட்டன்-இந்தியா இடையேயான வர்த்தகம் குறித்து ரிஷி சுனக் லண்டனில் இந்திய பிரதிநிதிகளை சந்தித்தார். இதையடுத்து கடந்த மே மாதத்துக்கு பிறகு ஜி20 மாநாட்டின் ஒருபகுதியாக ரிஷி சுனக், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...