ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (09.09.2023) தொடங்குகிறது…

 ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (09.09.2023)  தொடங்குகிறது…

டெல்லியில் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர். உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து பல்வேறு விஷயங்களை செயல்படுத்துவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இதன் மாநாடுகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும்த இதில் அந்தந்த அமைப்புகளுன் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் ஜி20 என்ற அமைப்பு சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. இதில் 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

சர்வதேச பொருளாதாரத்தின் சிக்கல்களை வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கலந்து பேசுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. உறுப்பு நாடுகளின் அகர வரிசையின் படி ஜி20 மாநாடு அந்தந்த நாடுகளில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் இந்த ஜி20 மாநாட்டின் முழக்கம் என்னவெனில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான். ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நாடு முழுவதும் 9 மாதங்களாக நடந்தது. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லியில் இன்று ஜி20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லியில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில்தான் ஜி20 மாநாட்டு கூட்டங்கள் நடக்கின்றன. இதில் ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வங்கதேச பிரதமர ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் டெல்லிக்கு நேற்றே வந்துவிட்டனர். ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் வரவேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்கிறார். அது போல் சீன அதிபர் ஜின்பிங் ஜி20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் கலந்து கொள்கிறார்.

ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல் சில நாட்டு தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அரசு அழைத்திருந்தது. அந்த வகையில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

உலகத் தலைவர்கள் ஒரே இடத்தில் குவிவதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் மருந்து சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம் , பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் முக்கிய சர்வதேச மாநாடாக இது விளங்குகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...