தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)

 தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)

கனமழை எதிரொலி- திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26/11/2024) விடுமுறை அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (26.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சித் தலைவர். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்.


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. அவரது மீதான பாலியில் குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றவழக்குகள், தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.அந்த வகையில், 2020ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அரசின் ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு,சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் மனுவில், ‘அதிபரிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதித் துறைக் கொள்கையில் அனுமதி இல்லை’ என குறிப்பிட்டு இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிரம்ப் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 75 பயணிகளுடன் மதுரை நோக்கி இண்டிகோ விமானம் இன்று காலை வந்தது. அப்போது மோசமான வானிலை நிலவியதன் காரணமாக விமானத்தால் மதுரையில் தரையிறங்க முடியவில்லை. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத நிலையில் விமானம் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று கூறப்படுகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அய்யப்பனை கூடுதல் நேரம் தரிசிக்க அடுத்த மண்டல பூஜையின்போது ஏற்பாடு செய்யப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது காலையில் 6 மணி முதல் 11 மணி வரையிலும், மதிய உணவு 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும், இரவு உணவு மாலை 6.30 மணி முதல் பக்தர்களின் கூட்டம் நிறைவடையும் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சில்வர் பாட்டில்களில் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை 24 மணி நேரமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 14-ம் தேதியன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில், சி.ஏ. தேர்வை நடத்துவது, இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதன்படி பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்ததற்கு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு, ஜனவரி 16-ம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் தபாங் டெல்லி – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி 6வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 7வது இடத்திலும், உ.பி.யோத்தாஸ் 8வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 9வது இடத்திலும் உள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...