சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா

 சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா

————————————————————–.

சுஜாதாவின் பிறந்த நாள் இன்று
எந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்
எழுத்தாளர்
இவரைப்பற்றி
வாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு

சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற அத்தனை விஷயங்களிலும் நான் தொடர்ந்து சுஜாதாவை மிஸ் பண்ணுகிறேன். எனக்குத் தெரிந்து பலர் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜாதா என்னும் பெயரை பதின்மங்களில் அறிந்து கொள்ளல் பெரும்பேறு. ஆனால் நான் பால்யத்திலேயே அறிந்து கொண்டிருந்தேன். குமுதம் வாங்கும் அப்பாவின் மூலம் ஏதோவொரு வகையில் எனக்கு அறிமுகமாயிருந்தார். கிடைத்ததை படித்துக்கொண்டிருந்தவள் பக்கத்து வீட்டின் விகடனில் மெல்ல ஏன்.. எதற்கு.. எப்படி யை நோக்கி நகர்ந்திருந்தேன். விடுமுறைக் காலங்களில் தவறாமல் செல்லும் பெரியப்பா வீட்டில்தான் நாவலாசிரியராக அறிமுகம் ஆயிருந்தார். அதற்கு முன் தேவிபாலா, கண்மணி போன்ற இதழ்களின் அதிதீவிர ரசிகையாயிருந்தேன். முதலில் படித்த நாவல் ஒரு இளைஞனின் முதல் பெண் தீண்டலைப் பற்றியது. எப்படி ஒரு சிறுவன், விடலைப்பையன், வாழ்க்கையில் எதுவும் பெரிதாய் நோக்கமில்லாதவன் தன் வாழ்க்கையில் இன்டர்வியூ லெட்டரை மிக முக்கியமாக கருதக் கூடிய அந்தக் கூட்டுப்புழுவின் தோல் கழலும் முக்கியமான தருணம். எனக்கு அது வெகு முந்தைய தருணம்தான் எனினும் என்னால் அந்த நடை.. துள்ளல். நகைச்சுவை.. யதார்த்தம் சப்புக்கொட்டிக்கொள்ள வைத்தது. அதற்கப்புறம் லெண்டிங் லைப்ரரி போய் வரும் அக்காவை சுஜாதா நாவல்கள் கொண்டு வருமாறு பிடுங்க ஆரம்பித்தேன். அப்பாவிடம் குமுதத்தில் இருந்து விகடனுக்கு மாறும்படி வற்புறுத்தலும். ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணின் வற்புறுத்தலை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள். எனவே கிடைக்கும் இடங்களிலெல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு எழுதியிருப்பார். எவ்வளவு ஆழம்? தீர்க்கம். யதார்த்தம். கேலி. பகடி. பரிதாபம்.. டீட்டெய்லிங்.. எவ்வளவு சிக்கலாயினும் மடமடவென இவ்வளவுதான் என பிய்த்துப் போடும் லாவகம். முட்டி மோதிக் கொண்டிருப்போம் புரிந்து கொள்ள முடியாமல். சிறிது சிறிதாய் வெட்டிச் சில உதாரணங்களை அளித்து லேசாய் விமர்சனச் சுண்ணாம்பைத் தடவிச் சுருட்டி கொடுத்து விடுவார். ஓரமாய் அதக்கிக் கொண்டு சாற்றை உறிஞ்சிக் கொள்ள வேண்டியதுதான்

விகடனில் தீண்டும் இன்பம் ஆரம்பித்தது. முதல் அத்தியாயமே திக். திக்.. அம்மாவும் நானும் தொடர்கதைக்கு எப்போதும் அடித்துக் கொள்வோம். படித்தே ஆக வேண்டும். அம்மா ஆபிஸ் விட்டு வருவதற்கு அன்று மட்டும் லேட்டாகிவிட வேண்டும் என்றெல்லாம் கூட வேண்டிக் கொள்வேன். கதை போகப் போகப் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களுடன் வளைய வளைய எனக்கு ஆச்சர்யம். இப்படியெல்லாம் கூடவா..என்று திகைப்பு. ஆனால் எனக்கு அந்த பட்டவர்த்தனம் பிடித்திருந்தது. நாசுக்கு.. தேர்ந்த நடை. இத்தனைக்கும் பட்டிக்காட்டில்தான் இருந்திருந்தேன். ஆனால் தீண்டும் இன்பம் எனக்களித்த வெளிச்சமே வேறு.

அதற்குப் பிறகாவது நான் அவ்வளவு சீக்கிரம் சுஜாதாவை அடைய முடிந்து விட்டாதா என்ன? லைப்ரரிகளில் அண்ணன்கள் அக்காக்களை வசப்படுத்த எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். நான் மெல்ல மெல்ல துப்பறியும் கதைகளில் நுழைந்து வியந்து, கணேஷ் வசந்துடன் விழுந்து சிரித்து.. சுஜாதா எனும் நிஜ எழுத்தாளனை அடைவதற்குச் சில வருடங்கள் ஆயிருந்தன.

அதற்குள் என்னை பாலகுமாரனும் ஆக்ரமித்திருந்தார். இந்த இரண்டு பேரின் முதுகில்தான் மொத்தமாய் அறிவுச்சவாரி செய்திருக்கிறேன். கல்யாணம் ஆனவுடன் ஒருவழியாய் ஆனந்த விகடனையும் அடைந்து விட்டேன். (கடைசிவரை என் அப்பா மட்டும் ஏக-குமுத-விரதனாக இருந்தார்.. இருக்கிறார்). அதற்குள் சுஜாதாவின் பிரம்மாண்டம் பிடிபட்டு போயிருந்தது. திரைப்படங்கள், கட்டுரைகள், நாவல்கள், அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிலும் அவரின் வீச்சு பரவியிருந்தது எக்கச்சக்க மரியாதையை ஏற்படுத்தித் தந்தது.

மிக ஆழமாய் நான் சுஜாதாவை உணர்ந்தது மத்யமர், பஞ்சபூத கதைகள், நகரம், எல்டொராடோ போன்ற சிறுகதைகளில்தான். துப்பறியும் நாவல்களின் மோகம் சற்றே மட்டுப்பட்டிருந்த இளமைப்பருவம் கூட காரணமாயிருந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுகதைகள் எதையோ உணர்த்திப் போயிற்று. சகலவித குற்றங்களிலும் வாயைத்திறக்க முடியாத, இயலாமைகளால் இவ்வுலகைக் கடக்கிற, மிக மிகச் சாதாரணனாக என்னால் இக்கதைகளில் ஒடுங்க முடிந்திருந்தது. சூழ்நிலைகளின் கைதியாய் போன ஏதும் செய்ய வக்கற்றவனின் வாக்குமூலம் போல என்னையும் என்னைச் சுற்றி இருக்கும் நடைமுறை வாழ்க்கையையும் அது கூறு போட்டது. ரமணிசந்திரன் நாவலில் மயங்கிய கிறக்கமெல்லாம் தொலைந்து நான் மெய்ப்பொருளில் கலந்த நாட்களாக இவற்றைக் கருதுகிறேன் . என் கனவுலக வாழ்க்கையை விட்டு இந்தக் கதைகள்தான் என்னை நிஜமென

நான் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள, வாழ்வின் விதிப்படி வாழ, கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது

எல்டொராடோ சிறுகதையில் ஆரஞ்சு பழம் கேட்கும் முதியவர், கிளிமாஞ்சாரோ பத்தி பேசலாமா என்று கேட்கும் ஓடிப் போன மகன் பரத் அதிராமல் படிக்க முடிந்திருக்கிறதா சுஜாதா என்பவர் வெறும் சயின்ஸ்பிக்ஷன் த்ரில்லர் தமாஷ் போன்றவை மட்டுமல்ல. உள்ளார்ந்த உணர்வுகளை வெகுஜனத்துக்கு வெகு அருகே பிரதிபலித்தவர்.

பெண்கதாபாத்திரங்களெல்லாம் ரொம்ப அசலாக நேரடியாக இருக்கும். பாத்திரங்களை இவ்வளவு நேர்த்தியாய் எந்த மேற்பூச்சுமின்றி வலிந்து ‘பெண்ணென்றால் பாவம்’ என்பது போன்ற க்ளிஷேக்கள் இன்றி பட்டவர்த்தனமாய் காண்பித்தவர்

ஒரு காவியச் சித்திரமெல்லாமில்லை. ஆணுக்கு என்ன பெண்ணிடம் தோன்றுமோ பெண்ணுக்கு ஆணிடம் என்ன தோன்றுமோ அவ்ளோதான். திரைக்கதைக்குரிய அனைத்து இலக்கணங்களும் இருக்கும். இலக்கியத்துக்குரிய விவரணைகளும். The complete author A,B, C அனைத்து சென்டர்களிலும் வசூல் செய்யும் படம் போன்றது அவர் எழுத்து கையாலாகாத, இயலாமையுடன் கூடிய இவ்வுலக வாழ்க்கையை யாரையும் குறை சொல்லும் நோக்கமுமின்றி தன் கதைகளை மட்டுமே ஆயுதமாக்கினார். நிலம் என்ற சிறுகதை. அந்த liaision officer கடைசியில் உதிர்த்துப்போகும் தத்துவம் வாழ்க்கையின் உச்ச பட்ச அவலச்சுவை அதுதான்.

பிரிவோம் சந்திப்போம் மதுமிதா அந்த மரம்..பாபநாசம் அணை பாபநாசத்தில் முடிந்து அமெரிக்காவில் ஆரம்பிக்கும் இரண்டாம் பாகம்.. கொலையுதிர்காலத்தில் வந்த பேய் சம்பந்தமான அதிர்ச்சிகள். Hologram technology எல்லாம் திரைப்படத்தில் கொண்டுவர விவேகம் வரை ஆயிருக்கிறது..

பெண் பிள்ளைகளின் வசீகரத்தை, அவர்களின் துள்ளலை அவர்கள் அவர்களாய் வெளிப்படுத்தும் சுயத்தை வேறு யார் இத்தனை எளிமையாய் சொல்லியிருக்கிறார்களாம்? அனிதாவின் காதல்கள் தேவதைத்தனத்திற்கும், நடைமுறைக்குமான சிறு இடைவெளியை அந்தப் பெண்ணின் பார்வையில் அருகிலிருப்பது போல..

இருள் வரும் நேரத்தில் வன்கலவி செய்யப்பட்ட மனைவியை கையாளும் பேராசிரியர். குழப்பங்கள். கேங் ரேப் செய்தவனின் மனநிலை விவரிப்பு… ஒரு கட்டத்தில் அவனையே குற்றம் சாட்டக் கூட தோன்றாது.அந்த மஞ்சள் பூக்களுடன் இருக்கும் வீதியும், அதன் பாட்டனி பெயரும். அந்த ஆய்வு படிப்பு படிக்கும் மாணவியுடனிருக்கும் பெயர் சொல்லப்படாத ஆசை கூட.. அடடா..எத்தனை மன நுண்ணுணர்வு.

வெகு உன்னிப்பாகத் தடம் மாறாமல் மைய இழையைத் தொட்டிருக்கும் கதைகள். எதுவுமே இலக்கை மறந்ததில்லை. ஒரு கதைக்குள் உட்புக முதல் பத்தி வேண்டும். முதல் பக்கம் வேண்டும். பிறகு தொய்வில்லாமல் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும். பிறகு ஒரு மென் நடை, சாந்தம். அனுபவித்தல். இதுதான் நல்ல கதைகளுக்கான இலக்கணம். அதிலெல்லாம் எந்த குறையுமிருக்காது. கடைசியில் மொத்த கதையையே திருப்பிப்போடும் ஒரு வித்தை கூட காட்டிப்போயிருக்கிறார்.

நிறைய புதுமைகள். ஆ வென ஆரம்பித்து ஆ வென முடியும் கதை அதில் ஸ்பெஷல் ரகம்

எத்தனை பேரை கைதூக்கி விட்டிருப்பார். ஒரு ஹைக்கூவில், ஒரு கதையில் இவன்தான் என எத்தனை பேரை அடையாளம் கண்டு கொண்டிருப்பார்?

திறமையை ஒரேவீச்சில் அளந்துவிடும் சாதுர்யம். ஒரு அலட்டலுமிருக்காது.

“விகடனில் இடம்பெற எத்தனையோ பேர் காத்திருக்க.. நானே அதிக பக்கங்களை எடுத்துக்கொள்வது தகாத செயல்”

இத்தனை அறம்.எழுத்தாளனுக்கான அங்கீகாரமாய் எதையும் எதிர்பார்த்திராதவராய்தான் பார்க்க முடிகிறது. அதனால் என்றைக்கும் எந்த புதுமுக எழுத்தாளனையோ, தொடர்ந்து எழுதுபவர்களை தடம் மாற்றும் முயற்சிகளையோ அவர் செய்ததேயில்லை.

ஒருசமயம் தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் தன்னை புண்படுத்துவதாகவும், தொல்லை தரும்படி நடந்து கொள்வதாகவும் லேசாய் முணுமுணுத்திருந்தார். அதற்குப் பிறகுதான் அவரை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையையும் ரசிகையாய் நெருங்குவதில்லை என்ற பாடம் அதிலிருந்தே கற்றுக்கொண்டேன்.

வாசிப்பில் நாவல்களை விட்டு விடவே கூடாது என தேடித்தேடிப் படிப்பேன். கடன் வாங்கி வருவேன். லெண்டிங் லைப்ரரி, அரசினர் லைப்ரரி என எந்த இடத்திலும் பாக்கி வைத்ததில்லை. எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு பழைய புத்தகக்கடையைத் தேடி அதில் நாலை வாங்கி படித்து விட வேண்டும். இரண்டு புது புத்தகம் வாங்கும் விலையில் நான்கைந்து பழைய புத்தகம் வாங்கி விடலாமில்லையா.. அந்த அல்பம்தான்.

இன்னும் எனக்கு அந்த நாள் ஞாபகமிருக்கிறது. பல்வலி. திருகிப் போட்டிருந்தது. அடுத்தநாள் கடினமான இடத்திலிருக்கும் பல்லைப் போராடி எடுத்து விட்டார்கள். ஆனால் மரத்துபோக போட்ட மருந்து எதையும் உடல் ஏற்க வில்லை. ஒரு வருடக் குழந்தை கையில். 4 வருட குழந்தை பள்ளியில். வலியின் உச்சம். குழந்தைகளைக்கூட சமாதானப்டுத்தி பழக்கம்தான். வலியை என்ன செய்வது. தயங்கி தயங்கி கணவரிடம் புத்தக கடைக்கு வண்டியை விடுமாறு சொல்லியிருந்தேன். நல்லூழ். எனக்கு ஜாக்பாட். ரத்தம் ஒரே நிறம். அனிதா இளம் மனைவி, இருள்வரும் நேரம். ஒரு கையால் கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு ஆழ்ந்தவள்தான். என்ன சாதாரணக்கதையா அது? சாதாரணமாய் காலங்களுக்குள் போய் சொல்லும் பீரியட். டைப் விஷயங்கள் எனக்கு மிகப் பிடித்தம். அதுவும் இந்தக் கதை அசரடித்து விட்டது.

இதில் காணப்படும் பூஞ்சோலைக்கும் எமிலிக்கும் ஒரேமனதும் வெவ்வேறான சமூக சாத்தியக்கூறுகளும்.. சிப்பாய் கலக அடிப்படை காரணங்கள்…தாந்த்யா தோபே, வடஇந்திய கலக அறிமுகங்கள்.. நிறைய பட்டவர்த்தனங்கன்.. இதை முதலில் எழுதி சாதி அடிப்படையிலான சர்ச்சையில் கையை வெட்டிடுவேன் என மிரட்டல் வந்தது.” எனக்கு இடது கையால் எழுத தெரியாதுப்பா” என அதை ஹாஸ்யத்துடன் கடந்து பின் வேறுபெயரில் எழுதிய சாமர்த்தியம்..

ஒயின் க்ளாசையும் கொட்டாங் குச்சியையும் சம்பந்தப் படுத்தியிருப்பார். எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் ஒரே வயதில் ஒரே காலகட்டத்தில் இரு பெண்களை இந்த சமூகம் எவ்வாறு நடத்துகிறது என்றுதான் இந்த நாவலில் நான் பார்த்த விஷயம். ஆங்கில துரையால் முடிந்தது முத்துக்குமரனால் முடியவில்லை கடைசிவரை.

இப்போது கூட வருத்தமென்றால் இதைத் தவிர காந்தளூர் வசந்த குமாரன் கதை மட்டுமே சரித்திரப் பின்புலத்தில் எழுதியிருக்கிறார். சரி. போகட்டும். இந்த துப்பறியும் கதைகளில் ஒன்றிரண்டைக் குறைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் உள்ளே போயிருக்கலாம். நாடோடித் தென்றலில் அவர் பங்கைக் கேள்விப்பட்டதும் கூட இந்த ஏக்கத்தை இரட்டிப்பாக்கியிருந்தது. சில தகவல்களை கதைகளின் மூலம் எளிதில் நம்மால் நினைவில் நிறுத்திக் கொள்ள முடிகிறது. அதை இன்னும் கொஞ்சம் அந்த ஜானரில் எழுதியிருக்கலாம் என்ற வருத்தம் மிச்சமிருக்கிறது.

படிக்கும் அத்தனை கதாபாத்திரங்களாக மாறி மாறி உருக்கொள்வது வாசிப்பனுபவமெனில் ஏதோவொரு பாத்திரத்தில் நிலைகொள்ளுதலும், தன்னைப் பற்றித்தான் அப்படி எழுதியிருக்கிறார் என நம்பிக்கொள்ளலும் கூட எழுத்தில் உள்ளார்ந்து போவதுதான். பிரிவோம் சந்திப்போமில் மட்டும் எத்தனையாய் பிரிந்து எனக்குள் சண்டையிட்டிருப்பேன். ரகுபதியைப்போல் அந்த மரத்தின் கீழ் நின்று கொண்டு யோசித்திருந்திருக்கிறேன். மதுமிதாவின் பேதமையில் என்னை உள்கொடுத்திருப்பேன். ஏன்? மதுமிதாவின் அம்மாதான் நான் என என்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அனிதாவின் காதல்களில் வைரவனை தவறவிட முடியாமலும் திசைக்கொன்றாய் பரவும் அழுத்தத்திலும் திகைத்து நின்றதும். காகித சங்கிலியில் ஆஸ்பத்திரியில் தனித்து விடப்பட்டவளாயும் இப்படி உணர்ந்துக் கொள்ளவும் நிகழ்த்திக் கொள்ளவும் ஆயிரம் படிமங்கள் இருந்தன. சொர்க்கத்தீவில் கம்ப்யூட்டர் இன்ஜீனியரை ஏமாற்றி கூட்டி வருவாளே ஒருத்தி.. அவளைக்கூட நான் விட்டு வைத்ததில்லை. .

கமல் ஒருமுறை இப்படிச் சொன்னார். ‘நமக்கு நெருங்கியவர்கள் நம்மை விட்டு போகும்போது அன்றைக்கு நாம் அத்தனை அழத் தோன்றுவதில்லை. ஆனால் என்றேனும் அவர்கள் திரும்பி வரவே போவதில்லை என்று உணரும் கணத்தில் வரும் துக்கம் போன்றதில்லை அது’ அப்படித்தான் எனக்கு அவரின் மரணம் வாய்த்திருந்தது. அவர் இறந்த அன்று ஒரு குடும்பவிழாவின் மூத்த மருமகளாக நின்று சுழன்று கொண்டிருந்தேன். சட்டென செய்தி வந்தது. ஒரு நிமிடம் கூட என்னால் அதை நின்று கேட்க முடியவில்லை. அடுத்து என்ன என்று கேட்க என்னைச்சுற்றி பத்துப்பேர் நின்றிருந்தனர். அடுத்தக்கட்ட துவக்கத்தை அறிவிப்பவள் நானாக இருந்தேன். பரிதவித்த என் முகத்தைப் பார்த்து வேறெதோ என்று எண்ணிக்கொள்ள மொத்தமாய் ஆட்கள் இருந்தனர். சட்டென சுஜாதாவை விழுங்கி விட்டு வேலையைத் தொடர்ந்த அந்த சராசரித்தனம்தான் நான் சுஜாதாவிடம் கற்றுக்கொண்டதாய் பின்னாட்களில் உணர்ந்தது.

நான் நிறையமுறை அந்த மனிதரைப் பற்றி யோசித்துப் பார்ப்பேன். எனக்கு சுஜாதா பழக்கம் என்று யாராவது ஏதாவது விஷயம் சொன்னால் மெல்ல முந்தானைக்குள் மறைத்து எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து விடுவேன். கட்டுரைகளைப் படிப்பேன். இல்லை. இப்பொழுது வரை அப்படியெல்லாம் என்னால் அந்த மனிதைப் பற்றி எந்த வரிவடிவமும் கொடுத்துவிடவில்லை. இன்னமும் எனக்கு அவர் ஆச்சர்ய பிரதிபலிப்புதான். அவர் செய்ததெல்லாம் எனக்கு இன்னும் அதிசயம்தான். எந்த வடிவத்தில் அவர் இருந்திருந்தாலும், அவர் அதைச் செய்ததே தெரியாதிருந்தாலும் கூட நான் அதை ரசித்திருந்திருக்கிறேன். வியப்புற்றிருக்கும் பிம்பங்களின் அருகில் போய் அதன் நிஜத்தன்மையை அறிந்து கொள்ள விரும்பாத சுபாவம் என்னுடையது. எனவே அவரைப்பற்றிய எந்த காழ்ப்புரைகளோ, விமர்சனங்களோ என் வியப்பை பாதிக்கவேயில்லை.

சவிதா

இன்னும் வரும் காலத்தில் கூட. ரியலி மிஸ் யூ சுஜாதா./சவிதா

thanks சவிதா

சுஜாதா
எழுத்தாளர்
ஒரு வாசகனாக நாம் அவரைப்பற்றி
சொல்ல நினைப்பதை[அதை விட அதிகமாக] அப்படியே சவிதா அவர்கள் மனம் திறந்து சொல்ல அதை இங்கே நமது வாசகர்களுக்கு பகிர்ந்து இருக்கேன் சுஜாதா வாசகனாக

-உமாகாந்த்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...