நீ என் மழைக்காலம் – 7 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 7
கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை பேசியிருக்கிறாள், கைக்கோர்த்து சிரித்து இருக்கிறாள்… நனைந்த பூக்களை எடுத்து அவன் மீது வீசியிருக்கிறாள்… எல்லாவற்றிற்கும் பதிலாய் அவன் சிரிப்பான் காதலாய்… ! மயக்குவான் ஒற்றை சிரிப்பிலேயே!
அந்தக் காதல் கிறுக்கன் வாங்கிக் கொடுத்த மூக்குத்தி இன்று காணவில்லை என்றால் எப்படி இருக்கும்?
ஜீவநாடி அத்தனையும் கழன்று விழுந்து விட்டது போல் தோன்றியது நிவேதிதாவிற்கு. ஏற்கனவே ஒருமுறை, ஒரு பவுன் தங்கச் சங்கலியை அவள் தொலைத்து இருக்கிறாள். எங்கு விழுந்தது என்றே தெரியவில்லை. அப்போது, விதியே என்று நொந்துக் கொண்டு சமாதானம் அடைந்தாள். நமக்கு கிடைக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அது கிடைத்தே தீரும். அது நமக்கில்லை என்று நினைத்தால் கண்டிப்பாக அது கிடைக்காது என்று சமாதானம் ஆனாள். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி போனது என்று சமாதானம் அடைந்து கொண்டாள்.
‘‘அக்கா கூட என்னடி இப்படி செயினை தொலைச்சிட்டு வந்து கூலாநிற்கிறே?’’ என்றாள்.
‘‘தொலைஞ்சு போன ஒண்ணுக்காக என்ன செய்ய முடியும்? அதையே நினைச்சு கவலைப்பட்டால் மட்டும் வந்துடப் போகுதா?’’
கூலாக பதில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
ஆனால் இப்போது சின்ன ஒற்றைக்கல் மூக்குத்திக்காக தவிக்கிறாள்.
பொருள்கள் தொலைவது முக்கியமில்லை. அது யாருடையது, யார் கொடுத்தது என்பதைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த மூக்குத்திக்காகத் தான் அவள் மூக்கு குத்திக் கொண்டாள். அதுவரை மூக்கே குத்தியதில்லை சிறுவயதாக இருந்தபோது அம்மா குத்திக்கச் சொல்லி ஆசாரியிடம் கூட்டிப் போனாள். அவளுக்கு முன்பாக ஒரு பெண் மூக்கு குத்தும் போது அழுததைப் பார்த்தவள், திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். அம்மா பின்னாடியே ஓடி வந்தாள்.
‘‘ஏய் மலர் நில்லுடி! ஏன்டி எதுவும் சொல்லாமல் ஓடறே?’’ என்றாள். அவளுக்கு நிவேதிதாவை விட, மலர் அழகாகத் தெரிந்தது. எளிமையாகவும் இருந்தது.
‘‘அதோ அந்தப் பொண்ணு அழுததை பார்த்த இல்ல. அப்புறமும் என்ன?’’ தடுக்கிய பாவாடையை தூக்கி மேலே பிடித்துக் கொண்டு வேகமாக நடந்தாள். அதன் பிறகு அம்மாவும் எத்தனையோ முறை கெஞ்சிப் பார்த்து விட்டாள். “முகம் மொட்டையாக இருக்கும்டி. மூக்குத்திப் போட்டா இன்னும் கூடுதல் அழகைக் கொடுக்கும்” என்றாள்.
”இருந்துட்டு போறேன் மொட்டையாவே” என்றாள்.
”கல்யாணம் பண்ணும் போது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேப்பாங்கடி” என்றாள் அம்மா.
”கேட்டால் நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றாள்.
”எக்கேடோ கெட்டுப்போ” என்று ஒருநாள் அவளிடம் கேட்பதையே விட்டொழித்து விட்டாள் அம்மா.
அக்கா கயல்விழியும் தன் பங்குக்கு, ” அம்மா பேச்சை கேட்டால் தான் என்ன” என்றாள். அவள் மூக்குத்தியை தொட்டு பார்த்தபடி.
”இதபாரு… உன்னை மாதிரி எல்லாம் என்னால் வலி தாங்க முடியாது. நீ வேலையைப் பாரு” என்றாள் .
அப்பாவும் ”எதுக்கு அவளை தொந்தரவு செய்றீங்க? மூக்கை வைச்சுத்தான் ஒருத்தன் கல்யாணம் செய்வான்னா எம்பொண்ணுக்கு அப்படிப்பட்ட மாப்பிள்ளையே வேணாம்” என்றார்.
இத்தனை பெரிய ரணகளம் அவள் மூக்குக்குப் பின்பாக நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிடிவாதமாக மறுத்தவள் அவள்.
ஆனால் அவன் பரிசளித்தபோது மட்டும், அவளால் தட்ட முடியவில்லை. அத்தனைக்கும் காரணம் அவன் மீதான காதல். காதலுக்காக அவரவர்கள் உயிரையே கொடுக்கிறார்கள். நான் சின்ன மூக்கில் ஒரு குட்டியூண்டு துளையிடப் போகிறேன்… அவ்வளவு தானே!
பிறந்தநாள் பரிசாக அப்படி என்னதான் கொடுத்தான் என்று ஆவலுடன் வீட்டிற்கு வந்து பார்த்தவள், உள்ளே மூக்குத்தி மின்னியதைப் பார்த்து திகைத்தாள்.
“நான் மூக்கே குத்தலியே, எதுக்குடா மூக்குத்தி” என்றாள் போனில்.
“நீ குத்தாட்டி என்ன நான் குத்தி வச்சிருக்கேன்” என்று அவளை மூக்குத்தியுடன் வரைந்த புகைப்படம் ஒன்றை வாட்சப்பில் அனுப்பினான்.
அச்சு அசலாய் அவளையே வரைந்து இருந்தான். பார்க்கப் போனால் அவளைவிட இன்னும் கூடுதல் அழகாய் இருந்தாள் அந்த ஓவியத்தில்.
“ஏய் நீ ஓவியம் கூட வரைவியா?” என்றாள்.
“ஏதோ கொஞ்சம் கிறுக்குவேன்” அவன் தன்னடக்கமாய் சொன்னான்.
“ஏன் இத்தனை நாளா சொல்லல?” அவள் உரிமையாய் கோபித்துக் கொண்டாள்.
“சொல்ல வேண்டிய சூழல் வரவில்லை” என்றான்.
“கிரேட் கார்த்தி நீ. எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டு ஏதும் தெரியாதது போல் இருக்கே நீ” என்றாள்.
“ உஸ்ஸ்ஸ்.. குளிருது’ ‘ என்று அவன் ஸ்மைலி ஒன்றை அனுப்பினான்.
அதன் பிறகு அவன் வரைந்த புகைப்படத்தை பிரேம் போட்டு கொடுத்தான். அதை பெருமை பொங்க வீட்டில் வந்து மாட்டி வைத்தாள்.
இவள் மூக்கும் குத்திக்கிட்டு போய் அவன் முன்னாடி நின்றாள்.
அவளை ஆசை பொங்க பார்த்துவிட்டு“ தேவதையாட்டம் இருக்கே” என்றான்.
‘‘அந்த தேவதையின் மூக்குக்குப்பின் பெரிய கதையே இருக்கு தெரியுமா?’’ என்றாள்.
‘‘ஏய் என்ன சொல்றே? என்ன கதை?’’ என்றான் ஆர்வமாய்.
அவள் யாவற்றையும் சொல்லி முடிக்க, அவன் சிரிப்பதை விட்டு சீரியசாக யோசித்தான்.
‘‘என்ன கார்த்தி திடீர்னு ஊமையாகிட்டே? என்றாள். நான் சொன்னது நம்பும்படி இல்லையா ?’’ என்றாள்.
‘‘சே! அப்படியில்லை நிவேதா. யார் சொல்லியும் கேட்காத நீ , ஒரு குட்டியூண்டு பரிசுக்காக மூக்கு குத்திக்கிட்டு வந்து நிற்கிறே. அதுக்கு என்ன அர்த்தம்? அதை நினைச்சேன். மனசு நெகிழ்ந்திடுச்சி’’ என்றான்.
‘‘என்ன அர்த்தம் ? என்ன காரணம்?’’ அவள் அவனை வம்புக்கு இழுத்தாள்.
‘‘ என் மீது நீ வைத்துள்ள அன்பு தான் காரணம். காதல் தான் காரணம். மற்ற எல்லோரையும் விட நீ தான்டா எனக்கு முக்கியம் என்பதும் தான் காரணம். இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்….’’
‘‘உஸ்ஸ்ஸ்ஸ்… பேசாத கார்த்தி. அமைதியாய் இரு.’’ அவள் சட்டென்று அவன் கரங்களைப் பற்றிக் கொள்ளவும், அவன் அவளை காதலோடு முத்தமிட ஆரம்பித்தான்.
அம்மா சென்னை வந்தபோது இந்த அதிசயத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்.
‘‘நான் எத்தனை முறை சொன்னேன். அப்போதெல்லாம் கேட்டியா நீ? இப்போ மட்டும் எப்படி குத்திகிட்டே?” என்றாள் ஆச்சர்யமாய்..
”அப்போ வலிக்கு பயந்தேன். இப்போ வலி தெரியாமல் ஸ்ப்ரே அடிச்சுட்டு குத்திகிட்டேன்” என்று சமாளித்தாள்.
கார்த்திக் கண்ணெதிரே நின்று ‘‘அந்த ‘ஸ்பிரே’ நானா ” என்றான்.
‘‘போடா நீ என் நறுமணம். உன் உயிர் … ’’ என்றாள்.
இப்படி ஒரு மகா செண்டிமென்ட் கதை, அந்த மூக்குத்திக்குள் அடங்கி இருக்கும் போது, அது தொலைந்து போனால், யாருக்குத்தான் வருத்தம் இருக்காது? நிவேதிதா வருந்தினாள்.
அனிச்சையாக இடது கை மூக்கின் மீது விரல்கள் சென்றன. உள்ளே திருகாணி மட்டும் எப்படியோ ஒட்டிக் கொண்டிருந்தது.
திருகாணி இருக்கிறது என்றால், மூக்குத்தியும் இப்போது தான் எங்காவது விழுந்திருக்க வேண்டும் என்று அவள் தேடலானாள்.
தலை துவட்டிய துண்டை எடுத்துப்பார்த்தாள். தரையை கூட்டிப் பெருக்கினாள். ஊகூம் காணோம்.
குளியலறை லைட்டைப் போட்டுப் பார்த்தாள். வாளி, மக்கு என்று எல்லாவற்றிலும் தேடினாள். அவிழ்த்துப் போட்ட சுரிதார், நாற்காலி மீது வீசியெறிந்த துப்பட்டா என்று ஒரு இண்டு இடம் கூட விடாது தேடினாள்.
வழியில் எங்காவது விழுந்து விட்டதா, வீட்டிற்குள் தான் விழுந்ததா? படுக்கை விரிப்பையெல்லாம் கூ டஎடுத்து குவித்துப் பார்த்தாள்.
கிடைத்த பாடில்லை. என்ன செய்வது? வேறுயாராவது கொடுத்த மூக்குத்தியாக இருந்தால், போனால் போகிறது என்று விட்டுத் தொலைத்திருக்கலாம். அது கார்த்திக் கொடுத்தது. அதை எப்படி தொலைத்தேன் நான்? எப்படி தவற விட்டேன்? அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? எப்படி அவன் முன்னால் நாளைக்குப் போய் நிற்பது?
“ஒரு சின்ன பொருளைக்கூட உன்னால் பத்திரமாக வச்சுக்கத் தெரியலை. என்னை எப்படி வச்சு பாதுகாப்பே? என்பானா?”
`எவ்ளோ ஆசையாவாங்கிக் கொடுத்தான் அவன். அதை போய் தொலைத்து விட்டு நிற்கிறேனே நான்…’ அவள் வருத்தமுற்றாள். அதைவிட அவள் வருத்தமுறுவது போன்ற செய்தி அவளுக்கு கல்லூரியில் காத்திருக்கிறது என்பது அறியாமல்.
-(சாரல் அடிக்கும்)