முக்கோண மனிதன்”/பிருந்தா சாரதியின் கவிதை முகம்/முனைவர் மு. அப்துல் சமது
முக்கோண மனிதன்” :
பிருந்தா சாரதியின் கவிதை முகம்
*
– முனைவர் மு. அப்துல் சமது
*
“இன்று என் கையில் இருக்கும் கூழாங்கல், நேற்று எந்த மலையில் குன்றாய் இருந்ததோ? நாளை எந்த ஆற்றில் மணலாய் கிடக்குமோ?”
– இதுதான் கவிஞர் பிருந்தாசாரதியின் கவிதைகளின் உள்ளீட்டு ஆன்மா.
கவிஞன் தன் வாழ்நாள் நகர்வில் தன் சகமனிதர்கள் சமூகம், சூழலியல் எனத் தான் உள்வாங்கும் மகிழ்வு, கவலை, ஆதங்கம், கோபம் இவற்றுடந்தான் பயணிக்கிறான். அழகான வாழ்வை, அழகான உலகைப் பத்திரப்படுத்த முடியாதா என்று அவன் விடும் பெரும்மூச்சின் உயிர் வடிவம்தான் அவனது கவிதைகள். பிருந்தாசாரதியை வாசிக்கும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
பார்வைத் திறனற்றவன், “ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது” என்று காதலியின் அருகை உணர்வதுபோல், வானிலிருந்து இறங்கும் மழைத்துளியின் பயனை, அது மீண்டும் வானேறி இறங்கி நிகழ்த்தும் சுழற்சி இரசவாதத்தை வானகம் இங்கு தென்பட, மண் பயனுறு விளைவைப் போல் வாழ் என்று தனக்கு விதித்துக் கொண்ட வாழ்வியல் நோக்கத்தால் “மழைத்துளியே நீயே என் ஆசான்” என்று விரிந்து கொள்கிறார்.
புகை திரண்டு வானேறி, கர்வத்துடன் மேகத்தைப் பார்த்து நானும் மேலே வந்து விட்டேன் பார்த்தாயா? என்று கர்வித்தபோது, மேகக் கூட்டமாக ஒன்று திரள… இடி முன்னல் தாளமிட… மழையாய் இறங்குகிறது. அப்போது புகையைப் பார்த்து மேகம் சொன்னது, “ஏறுவதில் அல்ல, இறங்குவதில்தான் இருக்கிறது பெருமை!” – கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையில் விரியும் இந்த வாழ்வியல் முயற்சிதான் பிருந்தாசாரதியின் கவிதைகளின் மலர்ச்சியாய் அமைந்திருக்கிறது.
“முக்கோண மனிதன்” தலைப்பு – தொகுப்பிலுள்ள மொத்தக் கவிதைகளின் வெளிப்பாட்டுக் குறியீடு. “அவன் மட்டும்தான் காதலரைத் தாக்கியவர்களை எதிர்த்து நின்று போராடுகிறான். நிச்சயம் அவன் அயலுலகவாசியாகத் தான் இருக்க வேண்டும்” என்ற கவிஞரின் எள்ளல், ஒதுங்கிப்போகும் நம் பொதுப் புத்தியின் மீதூன கல்லெறிதல்.
யார் அழகு? எந்த முகம் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதோ அந்த முகம் அழகான முகம். எனக்கு மகாத்மா காந்தியின் முகமும், அன்னை தெரசாவின் முகமும், நெல்சன் மண்டேலாவின் முகமும் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதே? இவர்களெல்லாம் அரிதாரப் பூச்சுடன் திரையில் மின்னும் அழகர்களா? இல்லை. பின் ஏன் பார்த்தவுடன் அவர்கள் முகங்கள் பிடித்துப் போகிறது? மக்களுக்கான அவர்கள் வாழ்வியல் அர்ப்பணிப்பு, தியாகம்தானே! இப்படி எந்த முகம் பார்த்தவுடன் பிடித்துப் போகிறதோ அந்த முகம்தான் அழகான முகம்.
இந்த அழகை – அழகான முகங்களை கவிதைகளில் அறிமுகம் செய்கிறார் கவிஞர். “கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை கையில் அள்ளி முத்தமிட்ட அதரங்களிலும்; விபத்தொன்றில் கொத்துக் கொத்தாய் மனித உடல்கள் சிதறிக் கிடந்த தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கசிந்த மணிவிழிகளிலும்; அடை மழை நாளொன்றில் சேற்றில் சரிந்து கிடந்த செடியொன்றை எடுத்து மீண்டும் நட்டு வைத்தக் கரங்களிலும்; போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றில் குறுக்கே ஓடிய குட்டி நாயொன்றை அடிபடாமல் காக்க ஓடிய கால்களிலும்; அடுத்தவர் பசியை உள் வயிற்றால் அறியும் தாய்மையிலும் அல்லவா இருக்கிறது அழகு” என்று வடித்த கவிஞரை உச்சி முகர்ந்து கொண்டாடலாம்.
புதிய தொன்மம்
மின்சாரம் போல் ஒரு தூய காதல் தேசம். நிர்வாணம் ஆபாசம் என்றறியாத முதன்மைக் குடிகள். “பருவ சூல் கொண்ட இளையோர் பாறை மீது காதல் செய்வதை கண்ணுறும் முதியோர் பழுத்த கனிகளைப் பரிசளிப்பர். குழந்தைகள் மரங்களின் மீதேறி இலைகளை உலுக்கி நீல மலர்களை அவர்கள் மீது உதிரச் செய்வர்.” கல்மிஷம் என்பதே இல்லாத அவ்வுலகில் காதலும் காமமும் ஒன்றாய் பரிணமித்த சித்திரிப்பு கவிஞரின் அழகியல் சித்திரம்.
ஆதாமும் ஏவாளும் சுவனத்து ஏதன்ஸ் தோட்டத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தனர். விலக்கப்பட்ட கனியை புசித்தனர். விவிலியம் அதனை “அறிவுக்கனி” என்கிறது. கனியைப் புசித்த இருவருக்கும் பகுத்தறிவு பிறந்தது. அப்போதுதான் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தனர். ஒருவரைப் பார்த்து ஒருவர் வெட்கப்பட்டனர். மரங்களின் பின்னால் சென்று மறைந்து கொண்டனர். இலை தழைகளைப் பறித்து ஆடைகளாக உடுத்திக்கொண்டனர். அறிவு பிறந்தவுடன் மனிதன் செய்த முதல் வேலை மானத்தை மறைத்ததுதான். இது மனிதனுக்கு ஆடை வந்த தொன்மச் செய்தி.
ஆனால் கவிஞரோ காதலும் காமமும் ஒன்றாக வித்தியாசம் இல்லாமல் பார்க்கப்பட்டபோது நிர்வாணம் கூட பண்பாடாய்த்தான் இருந்தது. மனிதனிடம் காமம் இச்சையாக மாறி எப்போது பாலியல் ருசி கொண்டதோ அப்போதே மனிதனுக்கு ஆடை தேவையாயிற்று என்று ஒரு புதுத் தொன்மம் வரைகிறார்.
“காதல் காட்சியை ரசித்தப் பெண்ணொருத்தி, அதனைத் தன் இணைக்குக் காட்ட, அவன் அவளை விட்டு இன்னொருத்தியை ரசிக்க, சூரியகாந்தி கண்கள் இதழுதிர்த்து எல்லோர் முகத்திலும் முளைத்தன வெண்திரையும் கருவிழியும் கொண்ட கல்மிஷக் கண்கள். நாணம் படர்ந்தது. அப்போதுதான் அவர்களுக்கு இலைகள் ஆடைகளாகின. காதலும் காமமும் இரண்டாய் பிரிய ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்கின்றனர் இலை தேசத்தார் வெட்கத்தில். அதன் பின் தொடங்கியது தான் இந்த நாகரிக உலகம். பின் பேஷன் ஃஷோவும்.”
– என்று நாகரிக கோலத்தின் வளர்நிலையை புதுத் தொன்மாக்கி சித்திரப்படுத்தியுள்ளார்.
அழகியல் சித்திரங்கள்:
“நீண்ட நேரம் சிந்தித்துக் கடைசியில் இந்தக் கவிதையில் கட்டி வைத்தேன் அதன் ஒளிக்கீற்று ஒன்றின் முனையை!” – எல்லா அழகையும் கவிஞனால் கட்டிப் போட முடியும்.
பிருந்தாசாரதியின் கவிதைகளில் அழகியல் எப்போதும் அஞ்ஞனம் தீட்டி நிற்கும். “மலர்ந்த மலர் மீண்டும் மொட்டாகியது நீ விரல் குவிக்கையில்!” “பூக்கள் மிதிபடுவதைத் தாங்க முடியாத இதயங்கள்… நடைபாதையில் வீழ்ந்து கிடக்கும் பூவரசு மர இலைகள்.” – என நூலெங்கும் அழகியல் சித்திரங்கள்.
“நாகலிங்க மரத்தடியில் பிறக்கும் இசை” “ஆருங்காட்சியக ஓவியங்கள்” போன்ற கவிதைகள் அழகியலின் வண்ண ஓவியங்கள்தான்.
“சாப்பிட்டாயா என்று உள்ளங்கைப் பற்றி முகர்ந்தாள். கைமணம் போய்விட்டது. ஆனால் அவள் முகர்ந்த அன்பின் நறுமணத்தை காலம் தாண்டியும் சொல்லியது உன் சுவாசம் என் உள்ளங்கையில்”
– இது காதல் பித்தன் மட்டுமே அறிந்த ரகசியம்.
வண்ணத்துப் பூச்சிக்கு “நிறங்கள் எழுதிய கவிதை” என்று அழகிய படிமம் தந்தவர், பார்வையற்றவன் பார்வையில் அது “முடிவற்ற கற்பனை” எங்கிறார். “கண்களின் பார்வையைத் தாண்டியது உண்மை” – கவிஞர் தத்துவவாதியாகப் பரிணமிக்கும் இடம் இது.
“முரண்” எப்போதும் கவிதைக்கு அழகியலுடன் கருத்துச் செறிவூட்டி நிற்கும் உத்தி. “திரி மேல் எரியும் சுடர் – இரவைத் தொடரும் பகல்”; “விழிக்குள் இருள் ஆதனுள் சுடர்” – என முரண்களால் “சித்தன்” கவிதையில் ஞானதரிசனம் தேடுகிறார்.
“உடல் பகல் – மனம் இருள்” என்ற முரண் “உடல் இருள் – மனம் பகல்” என முரணியிருந்தால் சரியாக இருத்திருக்குமோ? எப்போதும் விழித்திருப்பது மனதின் செயல் அல்லவா?
கடவுளுக்கு அருகில் மனிதனை அழைத்துச் செல்லும் இரண்டு சிறகுகள் “காதலும் கண்ணீரும்” என்று இன்னொரு முரணை முழுக் கவிதையாக்கியுள்ளார். “ஒருவரோடு காதல் கொள்வது இல்லறம். உலகையே காதல் கொள்வது துறவறம். ஒருவருக்காகக் கண்ணீர் சிந்துவது காதல். உலகிற்காகக் கண்ணீர் சிந்துவது மனிதம்!” – என்று “காதலும் கண்ணீரும்” கடவுளை நெருங்கச் செய்யும் புனிதம் என்கிறார்.
“இசைத்தட்டு” இன்றைய தலைமுறை அறியாத ஒன்று. மூத்தத் தலைமுறையின் காதுகளைத் திருடிய கானங்கள் அதிலிருந்துதான் பிறந்தன. “இசைத்தட்டு” அருமையான உருவகக் கவிதை, “கறுப்பழகியே! என் இசைத்தட்டே… உன் உடல் ரேகைகளில் என் உதட்டு ரேகைகள் உரசுகையில் எழும் மௌனம்… நாம் இருவர் மட்டுமே அறிந்த இசை”
இந்த இசை பிறப்பதற்கு நிறம் எதுவும் தடையில்லை. “மௌனம் நாம் இருவர் மட்டுமே அறிந்த இசை” – ஆஹா… என்ன அருமையான வரி.
அழகியல் சிறுகதை
“சவப்பெட்டி” செய்பவன் கவிதை ஓர் அழகியல் சிறுகதை. சவப்பெட்டி செய்தவன் செத்ததால், அவனுக்கு சவப்பெட்டி செய்கிறான் வேறு மரவேலை பார்ப்பவன். ஒருமுறை சவப்பெட்டி செய்ததால், தீட்டு அவனை சவப்பெட்டி மட்டுமே செய்பவனாக்கி விட்டது. அவன் சொல்கிறான், “நான் சாகும்போது இப்பணிக்கு அழைக்க வேண்டாம் தொட்டில் செய்பவனை…”
ஆனால் சமூகத்தின் சாத்திர எண்ணத்தைத் தூக்கி எறி என்று கவிஞர் அவனிடம் கூறுகிறார், “நீண்ட உறக்கத்திற்கு உதவுபவன் நீ! கடவுளால் கவனிக்கப்படுகிறது உன் பணி! அது மட்டுமல்ல, இப்போது நீ செய்வதும் ஒரு தொட்டிலே! மண்ணின் மடியில் நீள் துயில் காண உதவும் தொட்டிலையே நீ செய்கிறாய்!”
– தொழிலின் புனிதம் மனிதம் சார்ந்தது என்பதை இக்கவிதையில் உரக்கச் சொல்கிறார்.
அனுபவப் பகிர்வு:
கவிஞன் தான் வாழ்ந்த மண் – மனிதர்கள் – வாழ்க்கையின் அனுபவங்களைத் தன் கவிதைகளில் உயிர் சத்தாக்கிக் கொள்கிறான்.
“அன்று நாம் ஊதிய பூவரசம் பீப்பியின் இலையை ஒரு புத்தகத்தில் பாடம் செய்து வைத்திருந்தேன். இன்று… உலர்ந்த என் இதயம் போலிருந்தது அது!”
அறியாப் பருவத்து அனுபவம் என்றாலும் அது இதயத்துக்கு ஈரப்பதம் சேர்த்திருக்கிறது இன்று… இது போன்ற நினைவுகளை மறந்து வாழும் சராசரி மனிதர்கள் நாம். கவிஞன் ஒருவன்தான் அதை கவிதையில் கவனிப்படுத்துகிறான்.
“விளையாட்டுப் பருவத்தில் இது சாதம், இது குழம்பு, இது ரசம், இது கூட்டு, இது பொரியல் என்று ஒவ்வொரு விரலும் ஓர் உணவாகும். அந்தக் கற்பனை ருசிக்கு ஈடாகுமோ எந்த ருசியாவது?”
– என்று கேட்கும் போது, நாமும் நம் விரல்களைப் பார்க்கிறோம். அம்மாவின் விரல்களைப் பார்க்கிறோம். அம்மாவின் விரல்கள் நம் பிஞ்சு விரல்களை உணவாக்கி ஊட்டிய பரிசம் நினைவில் சுகமாய் சூழ்கிறது.
சமூகக் குரல்:
“வழியெல்லாம் வலி என்றால் வாழ்வதெப்படி?” – இது கவிஞரின் சுயகுரல் மட்டுமல்ல சமூகத்திற்கான சார்புக் குரல்.
உலகமும் வாழும் சமூகமும் அன்றாடம் எதிர் கொள்ளும் சவால்கள் அனைத்தும் கவிஞனை கவலைக்குள்ளாக்குகிறது. அவன் அந்தக் கவலைகளை, பிரச்சனைகளால் நிகழ்ந்த பாதிப்புகளை, உருவாக்கியவர்கள் மீதான கோபங்களை, தான் எதிர்நோக்கும் தீர்வுகளை கவிதைகளில் கொட்டித் தீர்த்து விடுகிறான்.
பிருந்தாசாரதி கவிஞனுக்கே உரிய கரிசனத்துடன் எழுதினாலும், மற்றக் கவிஞர்களை விட அதிகமாக மண்ணின் வளம், விவசாயிகளின் நிலை குறித்து நிறையவே எழுதுகிறார்.
என் புதிய வீட்டிற்கு நண்பர் ஒருவர் வருகிறார். புதிய வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன். இறுதியாக சமையல் கட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே, கண்ணாடி செல்பில் மளிகைப் பொருட்களுக்கு மத்தியில் ஒரு பெரிய புட்டியில் POISON என்று எழுதி ஒட்டி விசமும் வைத்திருக்கிறேன். அதைப் பார்த்து அவர் அதிர்ந்து நிற்கும் போது, “முதன் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. இருந்து சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும்” என்று நான் கூறினால், சாப்பிடுவாரா?
சமையல் கட்டில் விசம் இருந்ததால் அந்த வீட்டில் எப்படி நம்பி சாப்பிட முடியாதோ அதுபோலத்தான் ஒரு தேசத்தின் சமையல்கட்டு விளைநிலம். அதுவே விசமாகப் போனால் எப்படி மக்கள் நலத்தோடு வாழ முடியும்?
எனது கேள்வி கவிஞரின் கவிதையின் கவலையாக விரிகிறது. “மண்ணின் கருப்பையை மலடாக்கும் இரசாயன உரம். நம் கைகளைத் திருவோடாக்குவதைக் கதறிக் கதறிக் கரைகின்றன பதரைத் தின்று வாழும் பறவைகள்!”
– இந்த சப்தங்களால் நம் சூழல் நிறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இது கவிஞரின் எச்சரிக்கை.
“தன் விதையை அவன் தன் நிலத்தில் இருந்தே எடுத்த கதை எல்லாம் எப்போதோ புதைந்துவிட்டது. அவன் பாடுபட்ட மண்ணில் இப்போது அது கார்ப்பரேட்டுகளின் கரங்களில்!”
– விவசாயம், விவசாயி குறித்த கவிஞரின் குரல் நவீன விரைவான உலகின் காதுகளில் எட்டுமோ?
கைபேசி, வைஃபை, மடிக்கணினி என மூழ்கும் உலகம் கண்ணயர்வது சூரியன் உதிக்கையில். “நம் பருவங்களை உறிஞ்சி பசுமைகளைக் கருக்கும் புவியின் வெப்பமோ… நம் நதிகளைச் சுரண்டி நவீன நகர்களை எழுப்பும் புதிய பொருளாதாரமோ புரிந்திடாத பகல் தூக்கம். இவர்கள் மீண்டும் கண் விழிக்கையில் தண்ணீரும் உணவும் கணினித் திரையில் மெய்நிகர் காட்சியாக மட்டுமே இருக்கும்”
– என்ற கவிஞரின் எச்சரிக்கை, இன்றைய நவீன நுகர்வு குறித்த அழுத்தமான பதிவு.
எங்கு மனிதம் காயப்பட்டாலும் கட்டுப்போடுவதற்கு முதலில் கவிதையை நீட்டுபவன் கவிஞன். கேரளாவில் உணவுப் பொருள் திருடியதற்காகக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞன் மதுவின் இழப்புக்காக, “கைகள் கட்டப்பட்ட கடவுள்” கவிதை. “இந்த பூமியின் தானியங்களில் ஒன்றில் கூட மதுவின் பெயரை ஏன் எழுதவில்லை கடவுள்?” என்று விம்முகிறார்.
கஜா புயலின் தாக்கம் – பேரிழப்பு – “புயலின் சாய்ந்த காடு” என்ற தனிப்பகுதியாக நீள்கிறது. “ஆறு வறண்டு கிடக்க மழைக்கு வீடு இடிந்த இந்த கொடுமையை முதலில் மறக்க வேண்டும்” என்று சமாதானப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் போல் அது குறித்து இவர் எழுதிய கவிதைகளும் அதிகம்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகம் என்ற குறள் எப்போதையும் விட இப்போது மிகவும் பொருந்துகிறதோ?”
வருத்தம் மேலிட மானுட வரலாற்றைப் படிக்கிறேன். நோய்கள் வந்துபோன பின்னும் மனிதனும் மனிதமும் உயிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இறுதியில் நோய்கள்தான் செத்திருக்கின்றன. நெருநல் உள ஒரு நோய் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு என்று வாழ்வியல் நம்பிக்கைக் குறள் பாடுகிறார்.
நான் அறிந்தவரை கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும் சோகமாய் நிகழ்ந்த புலம் பெயர் தொழிலாளர்களின் அவலத்தை கவிஞரைவிட அதிகமாக யாரும் பதிவு செய்யவில்லை.
“சமூக விலகல் தூரம் இன்றி நெருக்கியடித்துப் பேருந்து நிலையத்தைக் கடக்கும் எங்களுக்கு அறிவிருக்கிறதா என்று இணையத்தில் நீங்கள் விவாதிக்கிறீர்களாமே … ஆம் இருந்திருந்தால் இங்கு ஏன் வந்திருக்கப்போகிறோம்…?”
“அறிவற்ற எங்களிடமும் கேட்க ஒரு கேள்வியுண்டு. நினைத்துப் பார்த்தீர்களா? ஒரு உத்திரவால் ஊரடங்கி விட்டது? எந்த உத்தரவால் எங்கள் பசியடங்கும்?
– புலம் பெயர் மக்களின் குரலாய் காத்திரமாக ஒலித்தது கவிஞரின் குரல் மட்டுமே!
இறுதியாக…
கவிஞரின் குரலில், “என் சொற்களைக் காப்பாற்றுங்கள்! அவற்றை வெறுக்காமல் விதையுங்கள். அல்லது அன்போடு புதையுங்கள். ஏதோ ஒரு தீவில் பசுஞ்செடியாய் முளைத்து அவை கிளை பரப்பும். அல்லது எங்கோ ஒரு வயலில் கிழங்காகி யார் பசி போக்கவோ காத்திருக்கும்”
– ஒரு மகத்தான மானுடன் கவிஞனாக மலர்ந்திருக்கிறான் என்பதற்கு அத்தாட்சி “முக்கோண மனிதன்”
*
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்,
எண் 9, ரோகிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு,
சென்னை – 600078 .
போன் : 99404 46650,
பக்கம்: 224, விலை: ₹ 250/-
*
நன்றி: இனிய உதயம் ( ஆகஸ்ட் 2023 )