சோமசுந்தரர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் விழா

 சோமசுந்தரர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய லீலை நடந்தது. ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.
அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்மன் தங்கக் குதிரையிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
இந்தத் திருவிழாவுக்கு வழக்கமாகத் திருப்பரங்குன்றம் சுப்பிமணியசுவாமி யும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். அதனால் இந்த லீலை நிகழ்ச்சிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமியும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விழாவில் நிகழ்த்திக் காட்டிய நரியை பரியாக்கிய லீலை புராண வரலாறு வருமாறு:-
மதுரையை ஆண்ட அரிமர்த்தனப் பாண்டிய மன்னரிடம், மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராகப் பணியாற்றி வந்தார். அப்போது படைக்குத் தேவைப்படும் குதிரைகள் வாங்க பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை மன்னர் அனுப்பி வைத்தார்.
அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனைக் குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலாயத் திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என, தான் கொண்டுவந்த அனைத்து முழுப் பொருளையும் செலவிட்டார்.
இந்த நிலையில அரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்தப் பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார்.
ஆவணி மூலத் திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.

மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார்.
உடனே இறைவன் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களைக் குதிரைகளின் பாகர்களாக்கி, தானே அவற்றுக்குத் தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதைக் கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரைப் பாராட்டி விடுவித்தான்.

ஆனால் அன்றிரவே அந்தக் குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடு நோக்கி ஓடின. உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுக்க செய்தார். அதன் வாயிலாக மன்னன் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்தார் என்று வரலாறு கூறுகிறது.

இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது. இதற்காக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள். அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெறும். நடை சாத்தப்படும். சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி இரவு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதி கிடையாது. சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...