என் பெயர் கொண்ட இந்திய ஜெர்சி.,என் தாயின் கனவும் நிறைவேறிவிட்டது.. நெகிழ்ச்சியில் இளம் வீரர்!

 என் பெயர் கொண்ட இந்திய ஜெர்சி.,என் தாயின் கனவும் நிறைவேறிவிட்டது.. நெகிழ்ச்சியில் இளம் வீரர்!

இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் என் கனவு மட்டுமல்லாமல் என் தாயின் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் மூலம் விளம்பரம் தேடும் வீரர்களுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்கே பெரும் விளம்பரத்தை கொடுத்தவர் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ரசிகர்களால் கற்பனை கூட செய்திடாத சாதனையை படைத்து அனைவரையும் மிரள செய்தார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் இருக்கும் வீரர் டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று ஐபிஎல் தொடரின் போது ஒரு பாடமே எடுத்துவிட்டார் ரிங்கு சிங்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 4 அரைசதங்கள் உட்பட 474 ரன்களை விளாசி தள்ளினார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 59.25 சராசரியில் 149.53 ஸ்ட்ரைக் ரேட்டில் ரிங்கு சிங் விளையாடி அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தரமான இடதுகை பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்திய அணியுடன் முதல்முறையாக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரிங்கு சிங், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஜெர்சியை அணிந்தது பற்றி ரிங்கு சிங் பேசுகையில், அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நண்பர்களுடன் நொய்டாவில் இருந்தேன். அப்போது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக எம் அம்மாவுக்கு செல்போனில் அழைத்து தகவலை கூறினேன்.

இந்திய அணிக்காக ஒருநாள் விளையாடுவேன் என்று எப்போதும் எனக்கு ஆதரவாக நின்றவர் அவர் தான். அதன் மூலம் எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது. இந்திய அணி வீரர்களுடன் இருப்பதே நல்ல உணர்வை கொடுக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் இந்தியாவுக்காக ஆடுவதே கனவாக இருக்கும். எனது பெயர் கொண்ட இந்திய அணியின் ஜெர்சியை பார்த்த போது உணர்வுப்பூர்வமாக ரிஉந்தது. இதற்காக தானே இத்தனை நாட்களாக தீவிர உழைத்தேன் என்று மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...