கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலாதலங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பைன் மரச்சோலை அருகே சாலையோரம் வேனை நிறுத்திய போது, அவ்வழியாக வந்த மற்றொரு வேன் அதன் மீது மோதியது. இதில் தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுப்பையா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் மீது அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதில் பெண்கள், குழந்தைகள் என 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தைத் தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.