வரலாறு படைக்கும் இந்தியா., நிலவுக்கு மிகவும் நெருக்கமாக நகரும் சந்திரயான் 3..!
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது முறையாக இதன் தூரம் மேலும் குறைக்கப்பட்டு நிலவுக்கு 100 கி.மீ தொலைவு நெருக்கமாக கொண்டுவரப்பட இருக்கிறது.
நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.
ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். தற்போது நிலவுக்கு குறைந்தபட்சமாக 150 கி.மீ தூரத்திலும், அதிகபட்சமாக 177 கி.மீ தூரத்திலும் சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த தூரத்தை மேலும் குறைத்து நிலவுக்கு 100 கி.மீ தொலைவில் சந்திரயானை நிலைநிறுத்தும் பணியில் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதன் பின்னர் 7 நாட்களில் அதாவது வரும் 23ம் தேதியன்று சந்திரயானிலிருந்து ரோவர் பத்திரமாக நிலவில் தரையிறக்கப்படும். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் நிலவில் ரோவரை இறக்கிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.