எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 5 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 5
“இந்த கிஃப்ட்டை பாருங்களேன்” கோதை தன் கையிலிருந்த அந்த தங்க வாட்சைக் காட்டினாள்.
படுக்கையில் சரிந்தவாறே அதை கையில் வாங்கிய குமணன் “ரொம்ப அழகாயிருக்கே. நமக்கு வந்த கல்யாண கிஃப்ட்டுல இது இருந்த மாதிரி தெரியலையே.”
“இந்த கிஃப்ட் நம்ம கல்யாணத்துக்குத்தான் கிடைச்சது. ஆனா..கல்யாணத்தன்னைக்கு கிடைக்கலை. இன்னைக்குத்தான் கிடைச்சது.”
“இன்னைக்குத்தான் கிடைச்சுதா? யார் கொடுத்தா?”
“எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்கத்தான்.”
“எனக்கு வேண்டப்பட்டவங்களா? எனக்கு வேண்டப்பட்டவ நீ மட்டும்தான். அதுவும் இந்த நேரத்துல ரொம்ப வேண்டப்பட்டவ.”என்றபடி அவளை அணைக்க முற்பட்டான். நாசூக்காக அவனிடமிருந்து விலகியவள்
“சங்கீதா வந்திருந்தாங்க. அவங்கதான் இதை எனக்கு கிஃப்ட்டா தந்தாங்க”என்றாள்.
“கனடாவ்லயிருந்து வந்துட்டாளா? நான் வர்ற வரைக்கும் இருக்க சொன்னா என்ன? ஏன் கல்யாணத்துக்கு வராம கனடா போனேன்னு காய்ச்சி எடுத்திருப்பேன்ல?”
“இப்படித்தான் அத்தைக்கேட்டாங்க. அதுக்கு அவங்க என்ன பதில் சொன்னாங்கத் தெரியுமா?”
“ஏதாவது எடக்கு மடக்கா பதில் சொல்லியிருப்பா. அவ பிகேவியரே தனி”
“அவங்க உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாங்களாமே”
“ஆமா..”
“அப்பறம் ஏன் நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கலை?”
“அம்மாவுக்கு இஷ்டம் இல்லை”
“ஆச்சரியமா இருக்கு. எல்லாரும் தன் அண்ணன் பொண்ணு, தம்பி பொண்ணுக்குத்தான் முக்கியத்துவம் தருவாங்க. தன்வீட்டு மருமகளா ஆக்கிக்கனும்னு நினைப்பாங்க. ஆனா… உங்கம்மா வித்தியாசமா இருக்காங்க.”
“அப்படி இல்லை. அம்மாவுக்கு சங்கீதாமேல எந்த வெறுப்பும் கிடையாது. பொறுப்பில்லாதவன்னு அவளைப்பத்தி சொல்லுவாங்க”
“பொறுப்பில்லாதவங்களா? அப்பாவோட கம்பெனியில பொறுப்பா வேலை செய்யறாங்க. தனியா வெளிநாட்டுக்கெல்லாம் பிசினஸ் விஷ யமா போய்ட்டு வராங்க. அவங்களா பொறுப்பில்லாதவங்க!”
“தொழில்ல பொறுப்போட இருந்தா போதுமா? வாழ்க்கையில பொறுப்பு வேண்டாமா?”
“அப்படி என்ன பொறுப்பு இல்லாம இருந்தாங்க?”
“அவளுக்கு வாழக்கையில எந்த விஷ யமுமே சீரியஸ் கிடையாது. எல்லாத்தையுமே ரொம்ப ஈஸியா எடுத்துப்பா.”
“இந்த விஷயம் நல்லதுதானே. பெரிய பிசினஸ் பண்றவங்களெல்லாம் இப்படி இருக்கறதுதானே நல்லது. சில பேர் சின்ன விஷயத்தைக் கூட பெருசா எடுத்துக்கிட்டு அதை ஊதி பெரிசாக்கி அனாவசிய டென்ஷனை ஏற்படுத்திக்கிட்டு பிபி,சுகர்ன்னு உடம்பையும் கெடுத்துக்கிட்டு வாழற இந்த உலகத்துல இப்படி எதையும் டேக் இட் ஈஸின்னு எடுத்துக்கறது நல்லதுதானே.”
“உண்மைதான். ஆனா..அன்பு, நட்பு, காதல் இதையெல்லாம் அப்படி எடுத்துக்க முடியாதே”
அவனை புரியாமல் பார்த்தாள் கோதை.
“ஏன் அப்படி சொல்றிங்க?”
“சங்கீதா ஃபாரின்ல படிச்சவ. ரொம்ப மார்டனா இருப்பா. ரெண்டு தடவை லவ் பிரேக்கப் பண்ணியருக்கா.”
“ரெண்டு தடவைன்னா.. எப்படி ஒரே லவ்வையா?”
“ இல்லை. ரெண்டு பசங்களை. தன்னோட கொஞ்சம் ஒத்துவரலைன்னா கூட உடனே கட் பண்ணிவிட்டுடுவா. அட்ஜஸ்ட் பண்ணிப்போகனும்கற எண்ணம் துளிகூட கிடையாது. அம்மாவுக்கு அவ ரெண்டுபேரை காதலிச்சு பிரேக்கப் செய்ததெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஆனா…எதிர்காலத்துல என்னோட ஒத்துப் போகாம டைவேர்ஸ் அது இதுன்னு போய் நின்னா என்ன பண்றதுன்னு அம்மாவுக்கு பயம்.”
“அத்தை பொண்ணாச்சே. உங்களுக்கு அவ மேல இஷ்டம் இல்லையா?”
“என்னைப் பொறுத்தவரை அம்மா எடுக்கற முடிவுதான். இதுவரை அம்மா சொன்ன எதையும் நான் மீறியதே இல்லை.”
“அப்போ நீங்க அம்மா பிள்ளை இல்லையா? அம்மா பேச்சை மட்டும்தான் கேட்பிங்க இல்லையா?”
“யார் சொன்னா… உன் பேச்சையும்தான் கேட்பேன். பட் ராத்திரியில மட்டும்தான். பகல்ல அம்மா பேச்சை கேட்பேன். இப்ப உன்னோட சாய்ஸ். சொல்லு என்ன பண்ணனும்?” அவன் மறுபடியும் அவளை அணைத்துக்கொண்டான்.
“கோதை…”
“ம்;..”
“நமக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகப்போகுது. உன்னை நான் எங்கயுமே அழைச்சுக்கிட்டுப் போகலை.”
“சினிமாவுக்கு ரெண்டு மூணுதடவை போயிருக்கோமே”
“நான் ஹனிமூனை சொன்னேன். அம்மாக்கிட்ட ரெண்டு மூணுதடவை சொன்னேன். அம்மா ஒத்துக்கலை. என்னை விட்டுட்டு அம்மாவால ஒரு நாள் கூட இருக்கமுடியாது. பட் எனக்கு ஹனிமூன் போகனும்னு ஆசையாயிருக்கு. அம்மாக்கிட்ட திரும்பவும் அடம் புடிச்சு கேட்கப்போறேன்”
இதைக்கேட்டு கோதை சிரித்தாள்.
“என்ன சிரிக்கறே. இவன் என்ன இதுக்கெல்லாம் போய் அம்மாக்கிட்டக் கேட்குறான்னா… நான் அப்படித்தான்” என்று லைட்டை அணைத்தான்.
“என்ன நீ… எனக்கு உன்னைவிட்டு இருக்க முடியாது. ராத்திரியில தூக்கம் வராது. உனக்கு இதெல்லாம் தெரியாதா?ஹனிமூனுக்கு வெளிநாடு போறேங்கறே.”அம்மா அவளுக்கு சொந்தமான கதையை வழக்கம் போல் சொன்னாள்.
அம்மா இப்படித்தான். அவனை எங்கேயும் விடமாட்டாள். தொழில் சம்பந்தமாக அவன் வெளிநாடு செல்லவேண்டும் என்றால் கூட அனுமதிக்கமாட்டாள். அதனால் அவன் எப்பொழுதும் தனக்கு பதிலாக நம்பிக்கையானவர்களை அனுப்பி வேலையை முடிப்பான்
முக்கியமான அலுவலக வேலைக்கே அனுப்பாதவள் தேன்நிலவுக்கு அனுப்பிவிடுவாளா? அவன் தன் ஆசையை சொன்னதுமே அவசர அவசரமாக அதை அழிக்கும் வேலையைத்தான் பார்த்தாள்.
குமணனால் எரிச்சலை அடக்க முடியவில்லை. மனைவியிடம் வந்து கொட்டினான்.
“ச்சை…இந்த அம்மா ஏன் இப்படியிருக்காங்களோ? என்னைவிட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சு இருக்கமுடியாதாம்.; இதே புராணத்தை சொல்லி சொல்லித்தான் ஃபாரின்ல படிக்கனும்கற என் ஆசையில மண்ணையள்ளிப் போட்டாங்க. இல்லாட்டி சங்கீதாவைப் போல நானும் ஃபாரின் போய் படிச்சுட்டு வந்திருப்பேன்.:
“இந்தியாவ்ல படிச்சதால இப்ப என்ன குறைஞ்சுப்போய்ட்டிங்க?”
“ஒண்ணும் குறைஞ்சுப்போகலை. ஆனா…நமக்குன்னு சில ஆசைகள் இருக்குல்ல. பெரிய ஆசைகள்தான் நிறைவேறலைன்னாலும் சின்ன சின்ன ஆசைகள் கூட நிறைவேற அம்மா தடையாயிருக்காங்க. எனக்கு ஹைதராபாத்ல காலேஜ்ல சீட் கிடைச்சபோது நான் அங்க போய் படிக்கனும்னு ஆசைபட்டேன். அப்ப கூட எங்க அம்மா என்னை ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்கவிடலை. ஹைதராபாத்ல சொந்தமா ஒரு வீடு வாங்கி என் கூடவே வந்துட்டாங்க. எப்பவும் அவங்க பக்கத்திலேயே வச்சுக்க நினைப்பாங்க.”
“சரி விடுங்க இதை பெரிசா எடுத்துக்க வேண்டாம். காசு பணம் இருக்கறவங்கதான் இப்படி ஹனிமூன் அது இதுன்னுக்கிட்டு காசை செலவழிப்பாங்க. ஏழை பாழையெல்லாம் எந்த ஊருக்கு ஹனிமூன் போறாங்க?”அவள் அலட்சியப்படுத்தினாலும் அவன் மனம் ஆறவில்லை.
அம்மாவிடம் பேசுவதை தவிர்த்தான். அது அம்சவேணியின் மனதை உறுத்தியது. புரிந்தது. அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருமகளை அழைத்தாள்.
“குமணன் என் மேல கோபமா இருக்கான்னு நினைக்கிறேன். அவன் ஹனிமூனுக்கு வெளிநாடு போறேன்னு சொன்னதுக்கு நான் ஒத்துக்கலை. என்ன பண்றது? நான் அவனை பிரிஞ்சு இருந்ததே இல்லை. அவன் கிட்ட வெளிநாடு எங்கயும் போகவேண்டாம்;. இங்கயே இந்தியாவுக்குள்ள எங்கயாவது போய்ட்டு வரசொன்னதா சொல்லு”என்றாள்.
அதுவே குமணனுக்கு பெரும் சந்தோஷத்தை தந்தது. கோவா போக முடிவுசெய்தான். அடுத்த இரண்டுநாளில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துகிளம்பிவிட்டனர்.
விடைப்பெற்றுக்கொண்டு வாசலுக்கு வந்தபோது அம்சவேணி கோதையை மட்டும் தனியாக அழைத்தாள்.
அவளுடைய கைகளைப்பற்றிக்கொண்டாள். மெதுவான குரலில் சொன்னாள்.
“கோதை.. குமணனை பத்திரமா பார்த்துக்க.”
கோதைக்கு சிரிப்பு வந்தது. ‘என்னயிது? என்னை பார்த்துக்கொள்ளுமாறு அவனிடமல்லவா சொல்லவேண்டும்? மாற்றி சொல்கிறாளே.’
“கோதை அவனை.. தனியா எங்கயும் விட்டுடாதே”
இப்பொழுது கோதைக்கு சிரிப்பு வரவில்லை. கலக்கம் தெரியும் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள்.
தன்கைகளைப்பற்றிக் கொண்டிருந்த மாமியாரின் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள்.
இராமனை பிரியும்போது தசரதன் அடைந்த துயரை மாமியாரின் முகத்தில் கண்டாள். ராமன் காடடுக்குப்போனான். தசரதனின் துயரத்தில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இவன் ஹனிமூன் அல்லவா போகிறான்?
-(தொடரும்…)