திரையரங்கில் வசூலை குவித்து வரும் ஜெயிலர் விரைவில் ஓடிடி ரிலீஸ்…
திரையரங்கில் வெற்றி நடைபோட்டு வசூலை அள்ளிவரும் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அட்டகாசமான அப்டேட் வெளியாகி உள்ளது. ஸ்டைலு ஸ்டைலுதான்…இது சூப்பர் ஸ்டாலுதான் என்று தனது விதவிதமான ஸ்டைலால் ஆட்டிப்படைத்த ரஜினிகாந்த் நான்கு தலைமுறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட போன்ற படங்களும் வசூலில் குறைக்கவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால் அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு கடைசியாக நெல்சனை தேர்வு செய்தார்.
நெல்சன் கதைக்கு ஓகே சொன்ன பிறகு, பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனத்தில் சிக்கி நெல்சன் சின்னாபின்னமானார். படுமோசமாக வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வீறு கொண்ட சிங்கமாக காத்துக்கொண்டிருந்த நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அதிரடியாக களமிறக்கி, ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டி விமர்சனம் செய்தவர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல், பேமிலி ஆடியன்ஸையும் இத்திரைப்படம் கவர்ந்து விட்டதால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். தொடர்ந்து வந்து விடுமுறை ஜெயிலர் படத்தின் மகத்தான வசூலுக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. ஜெயிலர் திரைப்படம் இதுவரை 400 கோடியை வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஐந்தாவது இந்தியப் படமாகத் ஜெயிலர் படம் திகழ்கிறது.
இந்நிலையில் ஜெயிலர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி மற்றும் ஓடிடி தளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலரின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் நெட்வொர்க் நிறுவனம் ஜெயிலர் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பதிப்புகளின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.
ஜெயிலர் படம் வெளியாகி 28 நாள் ஆனபின் செப்டம்பர் 6ந் தேதி அல்லது 7ந் தேதி சன்நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகிய தளங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.