காத்து வாக்குல ரெண்டு காதல் – 5 | மணிபாரதி
அத்தியாயம் – 5
ராகவ் ஆபிஸ்.
ஒரு வாரம் கழித்து பத்மா ராகவ்வை சந்தித்தாள். பத்மா “சார் என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“ எனக் கேட்டாள்.
“நந்தினி கிடைக்குலங்குறது கஷ்டமாதான் இருக்கு.. அதே சமயம் உன்னையும் காத்திருக்க வைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்ல.. வள்ளி படத்துல ரஜினி ஒரு டயலாக் சொல்வாரு, கண்ணா விரும்புனது கிடைக்கலன்னா, கிடைச்சத விரும்பிடுன்னு.. நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன்.. நீயும் எனக்கு பொருத்தமான மனைவியா இருப்பன்னுதான் தோனுது.. அதனால என் மனச மாத்திகிட்டு உன்னை ஏத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..“
பத்மா அவனது கைளைப்பற்றி “தாங்ஸ் ராகவ்..“ என்றாள்.
“நான்தான் உனக்கு தாங்ஸ் சொல்லனும்.. நா நந்தினிய விரும்புனது தெரிஞ்சும், அவ என்னை நிராகரிச்சது தெரிஞ்சும், என்னை விடாம உன்னோட விருப்பத்த தெரிவிச்ச பாரு.. அங்கதான் நீ உயர்ந்து நிக்கிற..“
“அவ உன்னை நிராகரிச்சுட்டாங்குறதுக்காக நீ தரம் தாழ்ந்து போயிடுவியா என்ன.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா.. ஒரு வருஷமா உன் கூட பழகிட்டுதான இருக்கேன்..“
“இருந்தாலும் உன் இடத்துல வேறொரு பொண்ணு இருந்துருந்தா பொறாமையில பழி வாங்கனும்ன்னு கூட நினைச்சுருக்கலாம்..“
“பத்மா அந்த மாதிரி மட்டமால்லாம் என்னிக்குமே யோசிக்க மாட்டா.. இப்ப கூட நீ என்னை ஏத்துக்கலன்னு சொல்லியிருந்தன்னு வையேன், அதுக்காக வருத்தப்பட்டுருப்பேனே தவிர.. கோவப்பட்டுருக்க மாட்டேன்.. இது அவங்கவங்களோட உரிமை.. எதோ ஒரு மணி நேரம் சிரிச்சு பேசி பிரிஞ்சு போற விஷயமில்ல.. காலம் முழுக்க சேர்ந்து வாழனும்.. அந்த வாழ்க்கையில சந்தோஷம் நிலைச்சுருக்கனும்.. அப்ப அது தன்னிச்சையா உருவானாதான நல்லா இருக்கும்..“
அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“எனக்கு இந்த சந்தோஷத்தை இப்பவே கொண்டாடனும் போலருக்கு.. வெளில போய்ட்டு வரலாமா..“
“ஓ..“
இருவரும் ஆபிஸை விட்டு வெளியே வந்தார்கள். ரோட்டை கிராஸ் பண்ணி எதிரில் உள்ள ரெஸ்ட்டாரென்ட்டிற்கு வந்தார்கள். ஒரு டேபிளை தேர்வு செய்து உட்கார்ந்தார்கள். பேரர் மெனு கார்டை நீட்ட –
“எதாவது ஸ்வீட் சாப்பிடலாமா ராகவ்..“ எனக்கேட்டாள் பத்மா.
“ஓ எஸ்..“ என்ற ராகவ் மெனு கார்டை புரட்டிப் பார்த்து “பாதாம் கீர் சொல்லலாமா..“ எனக்கேட்டான். அவள் “ம்..“ என்றாள். அவன் பேரரிடம் “ரெண்டு பாதாம் கீர்.. அப்புறம் ஒரு செட் வெங்காய பஜ்ஜி..“ என்றான். பேரர் கிச்சனை நோக்கி சென்றான்.
“பொறந்ததுலேருந்து இன்னிக்குதான் நா அதிக சந்தோஷமா இருக்கேன்..“
“உன்னை எனக்கு புடிக்கும் பத்மா.. நா ஒத்துக்குறனோ இல்லையோ, விடாம என் கூட பழகிட்டு இருந்த பாரு, அது உன்னோட மெச்சூரிட்டின்னுதான் சொல்வேன்.. சப்போஸ், ச்சீப்பா பிஹேவ் பண்ணியிருந்தன்னு வை.. இன்னிக்கு நம்ம ரிலேஷன்ஷிப் நீடிருச்சுருக்கும்ங்குற.. சான்ஸே இல்ல..“
“ஒண்ணு நமக்கு கிடைக்கலன்னா அதை நேர்மையான வழில எப்படி அடையனும்ன்னுதான் யோசிக்கனும்.. அதை விடுத்து, குறுக்கு வழிய கையாண்டோம், அது தப்பான வழிலதான் போய் முடியும்..“
“அப்பா.. என்ன ஒரு பாஸிட்டிவ் திங்கிங்..“
அப்போது பாதாம் கீர் வந்தது. இருவரும் சுவைத்து சாப்பிட்டார்கள். பத்மா கேட்டாள்.
“எப்போ என் வீட்டுக்கு வர்ற..“
“எப்ப வேணாலும்..“
“சூப்பர்டா.. எங்க வீட்டுல உன்னை பார்த்தாங்கன்னா சந்தோஷப்படுவாங்க.. உன்னைப் பத்தி எல்லா விஷயமும் அவங்களுக்கு தெரியும்.. என் தங்கச்சி ரம்யா எப்ப பாக்கலாம் எப்ப பாக்கலாம்ன்னு துடிச்சுகிட்டு இருக்கா..“
“என்னது உனக்கு தங்கச்சி இருக்காளா..“
“ம்.. என்னை விட அழகா இருப்பா..“
“அவசரப்பட்டுட்டனோ..“
“ம்.. ஆசை.. நீ என் ப்ராப்பர்ட்டி.. உன்னை நா மட்டும்தான் கட்டி ஆளுவேன்.. இதுல யாராவது குறுக்க வந்தாங்க, கன்னம் பழுத்துடும்..“
“அவ்வளவு லவ்வாடி என் மேல..“
“கல்யாணம் முடியட்டும்.. எவ்வளவு லவ்வுங்குறத நிரூபிச்சு காட்டுறேன்..“ என்று சொல்லி கண்ணடித்தாள்.
“இறைவா, அந்த நாள சீக்கிரம் தாயேன்..“
“அவர எதுக்கு தொந்தரவு பண்ற.. நாமளே பாத்துக்கலாம்..“
“அப்ப சரி..“ என்று சொல்லி அவன் கண்ணடித்தான்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை.
பத்மா, அவளது வீட்டில் ராகவ்விற்காக காத்திருந்தாள். அவளை விட ரம்யா மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பத்மாவிற்கு ஒரு புடவையை தேர்வு செய்து கட்டி விட்டதே அவள்தான். “எப்பவும் போல சுடிதார போட்டுகிட்டு நிக்காத.. மாப்பிள்ளை வரார்.. கொஞ்சம் கலாச்சாரத்த அனுஷ்டி..“ என்று கூறினாள். அவளது அப்பா அம்மாவிற்கு கூட அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ராகவ் சொன்ன நேரத்திற்கு காரில் வந்து இறங்கினான். என்ன ஆச்சரியம்? அவனும் வேஷ்ட்டி சட்டையில் வந்திருந்தான். பத்மா அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்தாள்.
அப்பா, அம்மா, ரம்யாவிற்கு “இவன்தான் அந்த ஜென்டில் பாய்..“ என அறிமுகப்படுத்தினாள். ரம்யா, அவன் வேஷ்ட்டி சட்டையில் வந்திருப்பதைப் பார்த்து “சேம் பிஞ்ச்“ என மனதில் நினைத்துக் கொண்டாள். பத்மாவின் காதில் “ரெண்டு பேருக்கும் செம பொருத்தம்..“ என கிசுகிசுத்தாள். அவள் சொன்னதை கேட்டு வெட்கத்தால் அவளது முகம் சிவந்தது. அதை கவனித்த ராகவ் “மச்சினி என்ன சொல்றா..“ எனக்கேட்டான். பல்லவி “அவளுக்கென்ன எதாவது சொல்லுவா..“ என சமாளிக்க, ரம்யா குறுக்கிட்டு “உங்க ரெண்டு பேருக்கும் செம பொருத்தம்ன்னு சொன்னேன் அங்கிள்..“ என்றாள். அதைக் கேட்டு ராகவ் “தாங்ஸ்.. கரெக்ட்டாதான் சொல்லி இருக்க..“ என்றான். அதைக் கேட்டதும் அவளது முகம் மேலும் சிவந்தது. “உங்க விளையாட்ட இதோட நிறுத்துறீங்களா..“ என்றாள். ரம்யா “வெட்கத்த பாருடா..“ என்றாள். அனைவரும் சிரித்தார்கள். ரம்யாவின் அப்பா “ரம்யா மட்டுமல்ல.. பத்மாவுக்கு ஒரு அண்ணனும் இருக்கான்.. பேரு சரவணன்.. யு எஸ்ல ஒர்க் பண்றான்..“ என்றார். ராகவ் “அப்படியா..“ என ஆச்சரியமாக கேட்டான். ரம்யா “ஹனிமூன் அங்கதான்..“ என்றாள். பத்மா “சும்மா இருக்கியா..“ என்றாள்.
அம்மா அசோகா ஸ்வீட் பண்ணியிருந்தாள். அதை ஒரு பிளேட்டில் வைத்து எடுத்து வந்து ராகவ்விடம் கொடுத்தாள். அவன் அதை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான்.
அப்பா “பத்மாவுக்கு நாங்க முழு சுதந்திரம் குடுத்து இருக்கோம்.. அவ எதை பண்ணாலும் சரியா இருக்கும்ங்குறது எங்களோட நம்பிக்கை.. அதனாலதான் அவ உங்களப்பத்தி வந்து சொன்னதும், சரிம்மா கூட்டிகிட்டு வான்னு அவளுக்கு அனுமதி குடுத்தோம்..“ என்றார்.
“அது எனக்கும் தெரியும் அங்கிள்..“
“உங்க வீட்டுல சொல்லிட்டிங்களா.. இல்ல இனிமேதான் பேசனுமா..“
“இனிமேதான் பேசனும்..“
“ஒண்ணும் அவசரமில்ல.. மெதுவாவே பேசுங்க.. ஒரு நல்ல நாள் பார்த்து ரெண்டு குடும்பமும் கலந்து பேசுவோம்..“
“நிச்சயமா சார்..“
“அங்கிள் இன்னும் கொஞ்சம் அசோகா வைக்கட்டுமா..“ ரம்யா கேட்டாள்.
“இல்ல போதும்மா..“
அவன் எழுந்து வாஷ்பேஸினில் கை கழுவினான். பத்மா டவல் எடுத்து வந்து கொடுத்தாள். யாருக்கும் தெரியாமல் “என்ன எங்க ஃபேமிலி ஓகேவா..“ என கிசுகிசுத்தாள்.
“உன்னை மாதிரியே அழகான ஃபேமிலி..“
“இந்த டயலாக் எல்லாம் ஆம்பளைங்க எங்கதான் மறைச்சு வச்சுருப்பிங்களோ.. சமயம் பார்த்து அடிக்குறீங்க..“
“ஏன் நீ அழகு இல்லையா..?“ என அவளை இழுத்து வாஷ்பேஸின் மிர்ரரில் காட்டினான். அப்போது ரம்யா அங்கு வந்து “ரொமான்ஸ் இங்கயே ஸ்டார்ட் ஆயிடுச்சா..“ எனக்கேட்டு சிரித்தாள். இருவரது முகத்திலும் ஈ ஆடியது. அதன்பிறகு ராகவ் ஹாலுக்கு வந்து உட்கார்ந்தான். அம்மா காபி எடுத்து வந்தாள்.. அதன் மனம் ஹால் முழுவதும் வீசியது. அவன் ருசித்து ருசித்து குடித்தான். அப்பா “எப்படி மாப்ள காபி..“ எனக்கேட்டார். அவன் “எல்லாமே அற்புதம் அங்கிள்..“ என்றான். அவர் “தாங்ஸ் மாப்ள..“ என்றார். காபி குடித்து முடித்ததும், அனைவரிடமும் சொல்லிக் கொண்டு, எழுந்து வெளியில் வந்தான். பத்மா உடன் வந்தாள். “என்ன சந்தோஷமா..“ எனக்கேட்டாள்
“உனக்கு சந்தோஷம்ன்னா எனக்கும் சந்தோஷம்தான்..“
“உள்ளுக்குள்ள றெக்க கட்டி பறந்துகிட்டு இருக்கேன்..“
“ரொம்ப தூரமா போயிடாத.. அப்புறம் என்னால புடிக்க முடியாது..“
“கவலைப்படாத.. உன் கைக்கு எட்டுற தூரத்துலதான் பறப்பேன்..“
“தாங்ஸ்..“ என்று கூறி தனது கையை நீட்டினான். அவளும் தனது கையை நீட்டினாள். இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
பின், அவனது காரில் ஏறி, அவளுக்கு கையசைத்து விட்டு புறப்பட்டு சென்றான். அவள் நிம்மதியாக வீட்டிற்குள் திரும்பினாள்.
–காற்று வீசும்