கரை புரண்டோடுதே கனா – 4 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 4 | பத்மா கிரக துரை

        

அத்தியாயம் – 4

ந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி வெப்பத்தை வியர்வைக் கோடுகளாய் அவர்கள் முகத்தின் மீது இறக்கிக் கொண்டிருந்தது..

“சை ஒருத்தனாவது மதிக்கிறானா..? எவ்வளவு இன்ஸெல்டாக பார்க்கிறார்கள்..?” நெற்றியிலிருந்து வடிந்து கண்ணிற்குள் விழுந்து சுரீரென கண்ணெரிந்த வியர்வை துளியால் எரிச்சலடைந்தபடி பேசினாள் ஆராத்யா.

இரண்டு நாட்களாக சென்னையின் பிரபல இரு சக்கர வாகன தொழிற்சாலைகள் அனைத்தையும் போய் பார்த்துவிட்டு தோல்வியோடு உட்கார்ந்திருக்கிறார்கள்..

“ஏன்பா நம்மை பார்த்தால் அப்படி ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரியா தெரிகிறது..?” ரூபிணி தனது போனை ஆன் செய்து அதில் தன் முகத்தை ஆராய்ந்தாள்..

ஏனென்றால் அவர்கள் அணுகிய கம்பெனிகள் எல்லாமே அவர்களை அப்படித்தான் பார்த்தார்கள்.. சிறு பிள்ளை விளையாட்டு போல் என்ன வேலை இது என்பது போல்.. போதும் உன் செப்பு சாமானை தூக்கிட்டு போ என்பது போல்.. இவர்கள் மூவரும் நொந்துப் போனார்கள்..

“மக்கும் இதைக் காரணம் வைத்து உன் எண்பது கிலோ எடையை மறைத்து சின்னப் பப்பாவாக காட்டிக் கொள்ள பார்க்கிறாயாக்கும்..?”

போனில் தன் முகத்தில் குழந்தைத்தனத்தைத் தேடிக் கொண்டிருந்த ரூபிணியை வம்பிழுத்தான் ரஞ்சித்.

“என்னது நான் என்பது கிலோவா.. அடேய் உன்னை..”ரூபிணி தன் கையிலிருந்த பேக்கினால் அவன் முதுகில் போட அவன்..

“சாரி.. சாரி.. எழுபத்தியெட்டு சரியா.?” என்க ரூபிணி ஆங்காரமாய் அடித்த அடிகளில் சில அருகில் அமர்ந்திருந்த ஆராத்யாவிற்கும் லேசு பாசாக கிடைக்க, அவள் ரூபிணி கை பேக்கினை பிடுங்கினாள்..

“இங்கே பாருங்க ப்ரெண்ட்ஸ், அவங்க பீல் பண்ற மாதிரி சைல்டிஷ்ஷா தானே நீங்களும் பிஹேவ் பண்ணுகிறீர்கள்..”

“நீ தள்ளுடி, நான் அவனை இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணாமல் விட மாட்டேன்.. திமிர் பிடித்தவன், நான் அறுபத்தைந்தே கிலோதாண்டி, என்னை எழுத்தியெட்டுங்கிறானே.. நீயாடா எனக்கு சோறு போட்டு வளர்த்தாய்..?”

ரூபிணியின் ஆத்திரம் அடங்கவில்லை.. ஆராத்யாவை தாண்டிக் கொண்டு ரஞ்சித்தை அடித்துக் கொண்டிருந்தாள்..

“என்ன ரஞ்சித் இது..? ஏன் அவளை சீண்டுகிறாய்..?” ஆராத்யா தோழனை முறைத்தாள்..

“சும்மா ஆரா, இரண்டு மூன்று நாட்களாக நமக்கு சரியான அலைச்சல்.. மைண்ட் ஸ்ட்ரெஸ் வேறு.. கொஞ்சம் ரிலாக்சாகிக் கொள்வோமென்றுதான் ரூபிணியை வம்பிழுத்தேன்..”

ரஞ்சித்தின் சமாதானம் ஆராத்யாவிற்கு போல் ரூபிணிக்கு ஏற்புடையதாய் இல்லை..

“உன் மைண்டை ரிலாக்சாக்கிக் கொள்ள என் வெயிட்டை யூஸ் பண்ணுவாயாடா நீ..?” அவள் தொடர்ந்து தோழனை தாக்குவதிலேயே இருந்தாள்..

இறுதியாக ரஞ்சித் காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போட்டு.. சாரி கேட்டு.. இன்னமும் சில சம்பிரதாயங்களுக்கு பிறகு கொஞ்சம் இறங்கி வந்தாள்.. அதுவும் ஒரு கண்டிசனோடுதான்..

“அதோ அங்கே ஒரு ஸ்டால் இருக்கிறது பார்.. அங்கே போய் எனக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி வா பிறகு உன்னை மன்னிக்கிறேன்..” பார்க்கின் வாசலில் இருந்த சிறு கடையை காட்டினாள்..

தலையசைத்து எழுந்தவனிடம்.. “பாதாம் மில்க் ஷேக் இருக்கிறதா எனக் கேட்டு, எனக்கு ஸ்பெசலாக போடச் சொல்லி வாங்கி வா..” என அடுத்த உத்தரவிட்டாள்..

“ஏய் அந்த சின்ன கடையில் ஏதடி பாதாம் மில்க் ஷேக்..?” ஆராத்யா ஆட்சேபிக்க..

“எழுபத்தியெட்டை என்பதாக்க வேண்டாமா ஆரா..?” கேட்டு விட்டு ரூபிணியின் கைக்கெட்டாமல் கடையை நோக்கி ஓட ஆரம்பித்தான் ரஞ்சித், அந்த ஓட்டத்திற்கு தோழிகள் இருவருமே புன்னகைத்தனர்..

ஆராத்யாவின் பார்வை பார்க்கின் எதிர்புறம் ரோட்டைத் தாண்டி இருந்த அந்த பெரிய பில்டிங் மீது பதிந்தது..

“இந்தக் கம்பெனியிலாவது நம் ஹெல்மெட்டை ஏற்றுக் கொள்வார்களா ரூபிணி..?”

“எனக்கென்னவோ இங்கே சக்சஸ் ஆகும்னு தோணுதுப்பா.. ஏன்னா கம்பெனி பெயரை பாரேன்..”

ரூபிணி சுட்டிய கம்பெனி போர்டில் “ஆரா ஆட்டோ மொபைல்” என்ற பெயரிருந்தது.. பிரபல கம்பெனிகளெல்லாம் அவர்களை திரும்பியும் பார்க்காமல் விரட்டி விட, இந்தக் கம்பெனியின் விசிட்டிங் கார்டினை அவர்கள் கரஸ்பாண்டன்டே கொடுத்தார்..

“மிகப் பெரிய கம்பெனி இல்லை.. ஆனால் தற்போது வளர்ந்து வரும் கம்பெனி, இங்கே டிரை பண்ணிப் பாருங்கள்..” கார்டை கொடுத்து விட்டு அடுத்த வேலைக்குள் போய்விட்டார்..

ஏய் “ஆரா” உன் கம்பெனியா..? எப்போது ஆரம்பித்தாய்..? சொல்லவேயில்லை பார்த்தியா..? தோழர்களின் இதமான கேலியோடு, இந்தப் பெயர் ஆராத்யாவிற்குமே ஆச்சரியமே.. ஆனால் உள்ளே போனதுமே அந்த கம்பெனியின் பெயர் காரணம் அவர்களுக்கு தெரிந்து விட்டது..

இந்தக் கம்பெனி எம்.டியை பார்க்கத்தான் காலையிலேயே கிளம்பி வேகமாக வந்து பத்து மணிக்கெல்லாம் அவரை பார்த்து விட வேண்டும் என்ற உறுதியோடு வந்தனர்.. ஆனால் அவர்கள் எம்.டி ஆபிஸ் வர மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் ஆகுமாம்.. தகவல் அவர்களுக்கு சொல்லப்பட, நகரை விட்டுத் தள்ளியிருந்த இந்தக் கம்பெனியிலிருந்து இனி மீண்டும் நகருக்குள் போய் திரும்பி வருவது கடினமென்பதால், அந்த கம்பெனியின் எதிரில் இருந்த பார்க்கில் காத்திருக்க தொடங்கினர்..

“எந்த பொறுப்புள்ள எம்.டியாவது மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஆபிஸ் வருவானாடி..? இவனெல்லாம் ஒரு மனுசன்.. இவனை நம்பி நாம் காத்துக்கிடக்கிறோம்..” சுழன்றடித்த காற்று அள்ளித் தட்டிய வெப்ப அனலில் முகம் சுருங்கி கடுப்பாய் பேசினாள் ஆராத்யா..

“அவருக்கு வேறு எங்கே என்ன வேலையோ..? ஏன்டி எதையும் தப்பாகவே நினைக்க வேண்டும்..?”

“பர்ஸ்ட் இம்ப்ரெசன் இஸ் தி பெஸ்ட்னு சொல்லுவாங்க.. எனக்கென்னமோ முதலிலேயே இந்த எம்.டி மீது ஒரு கரும்புள்ளி விழுந்து விட்டது..”

“ஆனால் எனக்கு அவர் மீது ஒரு அபிப்ராயம் விழுந்துவிட்டது..”

“அது ஏண்டி..?”

“முதலில் அவர் பெயர் “ஆர்யன்” என்ன அழகான பெயர்.. இந்த “ஆரா” வோட காரணம் இவரது பெயர் தான் போலும்.. பிறகு அவரது பிகர்..”

“என்னது பிகரா..? ஏய் அவரை நீ எங்கேயடி பார்த்தாய்..?”

“இதோ இங்கே தான்..” ரூபிணி தன் கையிலிருந்த விசிட்டிங் கார்டை காட்டினாள்..

“இந்த கார்டின் ஓரத்தில் அந்த எம்.டியோட போட்டோ சிறிதாக பிரிண்டாகி இருக்கிறது பாரேன்.. ஹி லுக்ஸ் மேன்லியா..”

“எங்கே பார்க்கலாம்.. நான் இதைக் கவனிக்கவில்லையே..” ஆராத்யா ஆவலோடு விசிட்டிங்கார்டை வாங்கினாள்.. அந்த சிறிய கார்டின் வலது மூலையில் கொஞ்சம் சிறியதாக அந்த முகம் தெரிந்தது..

“என்னடி ஒண்ணுமே தெரியலை இத்தனூண்டா தெரிவதற்கு எதற்காக அவன் முகத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்..?” கார்டினை தனது கண்களுக்கு நேரமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு புருவம் சுருக்கி பார்த்தபடி கேட்டாள்..

“ஏய் நல்லா பாருடி, கழுத்து வரை மட்டுமே இருந்தாலும், லவ்லி பேஸ்டி, இல்லை..?”

ஊன்றி கவனித்தபின் ஆராத்யாவிற்கும் ஓகே என்று தான் தோன்றியது.

“ஆமாம்டி காது, கண்ணு, மூக்கு எல்லாம் அதது இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருக்கிறது..”

“ஆமாம் நம் ப்ராஜெக்டை அக்செப்ட் பண்ணிக்கிறானோ இல்லையோ, இவனைப் பார்ப்பதற்காகவாது நாம் இந்த கம்பெனிக்குள் இப்போது போக வேண்டும்..”

“ஏன்டி இவங்கிட்ட மெல்ல ரூட் விட்டு பார்த்தால் என்னடி..?” திடுமென தோன்றிவிட்ட சுவாரஸ்யத்துடன் ஆராத்யா கேட்டாள்..

“என்னடி சொல்கிறாய்..?”

“இவன் பார்க்க கொஞ்சம் நன்றாக இருக்கிறான்.. எப்படியும் மனதிற்குள் பெரிய ஹீரோங்கிற நினைப்பு இருக்கும்.. அதை நாம் பயன் படுத்திக் கொண்டால்..”

ரூபிணி பெரு மூச்சுடன் குனிந்து சற்றே உப்பிய் தன் உடலை பார்த்துக் கொண்டாள்.. கோவில் சிற்பத்தின் வடிவுடன் தன்னருகே இருந்த தோழியையும் பார்த்தாள்..

“ஆரா, என்னால் முடியாதுடி, இதெல்லாம் உனக்குத்தான் சரி, நீயே டிரை பண்ணு..”

“கட்டாயம் டிரை பண்ணத்தான் போகிறேன்.. இன்று அந்த ஆர்யனை வசப்படுத்தி என் வழிக்கு கொண்டு வந்து நம்ம ப்ராஜெக்டை அவனை அக்செப்ட் பண்ண வைக்கிறேன் பாருங்க..”

சாவல் போல் சற்று சத்தமாகவே ஆராத்யா அறிவித்த போது, ரஞ்சித் கையில் குளிர்பான பாட்டில்களோடு வந்தான்..

“என்ன செய்ய போகிறாய் ஆரா..? சபதமெல்லாம் தூள் கிளப்புகிறாய்..”

“இதோ இந்த ஆர்யன் பார்க்க கொஞ்சம் ஹீரோ போல் தெரிகிறான்.. அவனிடம் நீங்கள் ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கிறீர்கள் சார்.. உங்கள் நடை என்ன.. உடை என்ன.. உடல் என்ன.. முகம் என்ன.. என்ன.. என்ன.. என்னன்று நிறைய கேட்டு அவன் தலை மேல் ஊட்டியை தூக்கி வைத்து குளிப்பாட்டி, இந்த ப்ராஜெக்டில் சைன் வாங்க போகிறேன் ரஞ்சித்..”

“எதற்கு ஆரா இந்த ரிஸ்க்..? இதெல்லாம் வேண்டாமே..”

“ஏன் இதில் என்ன இருக்கிறது..? நீ நம் டிபார்ட்மெண்ட் ஹெட்டுக்கு இது போல் ஐஸ் வைத்து குளிர வைத்து அவரை நம் ப்ராஜெக்ட் ரிவியூவிற்கு கூட்டி வரவில்லையா..? நம் கரஸ்பாண்டன்டிடம் நாம் உங்களால் தான் முடியும் சார்.. என்று போய் நிற்கவில்லையா..? நம் மனதிற்கு பிடிக்கவில்லையென்றாலும் நமக்கு காரியம் ஆக வேண்டுமென்று இதையெல்லாம் செய்தோமே.. இப்போதும் அது போலவே செய்வோம்..”

“அப்படியா சொல்கிறாய்..?” ரஞ்சித் யோசனையில் ஆழ்ந்தான்.

“ஆமாம் ரஞ்சித்.. இதுவரை நாம் பார்த்த கம்பெனி எம்.டிக்கள் எல்லோரும் மினு மினு தலையுடன் இருந்தார்கள், இல்லையென்றால் இரண்டு கன்னங்களிலும் பெரிய குழிகள் வைத்திருந்தார்கள், இவன் ஒருவன்தான் சின்ன வயதாக யூத்தாக இருக்கிறான்.. இவன்தான் புகழ்ச்சிக்கு மயங்குவான்.. ஒரு அழகான பொண்ணு அழகன்டா நீ அப்படின்னு சொல்லிவிட்டால் எந்த ஆம்பளையாக இருந்தாலும் விழுந்திடுவான்..”

“ம்.. ஓகே.. இதையும் டிரை பண்ணுவோம்.. ஆனால் ப்ரைமெரி பெர்சன் நீயில்லையே..?”

“அப்படியென்றால்..?”

“இது மாதரி ஐடியா என்றால் அதனை தயவு செய்து ஆராவிடம் விட்டு விடு.. ரிஸ்க் எடுத்து நீ தலையிட்டாயென்றால் நம் ப்ராஜெக்ட் ஹோகயாதான்..” சொல்லிவிட்டு பாதுகாப்பாக காலி கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை எடுத்தக் கொண்டு விறு விறு நடையுடன் முன்னால் நடந்து விட்டான்.. அவன் பின்னால் பாய தயாரான ரூபிணியை கையை பிடித்திழுத்து நிறுத்தி சமாதானப் படுத்திய ஆராத்யா, தாங்கள் செய்ய இருக்கும் வேலையின் அவசியத்தை நினைவுறுத்தினாள், தற்காலிகமாக சமாதானமான ரூபிணி ‘உர்’ரென்ற முகத்துலேயே கம்பெனிக்குள் வந்தாள்..

“எம்.டி பேக்டரி ரவுண்ட்ஸ் போயிருக்கிறார்.. இப்படி உட்காருங்க..” ப்யூன் அவர்களுக்கு இருக்கைகளை காட்டினான்.

இவன்தான் கொஞ்ச நேரம் முன்பு, ஏய் அங்குட்டு தள்ளிப் போய் விளையாடுங்கப்பா என்ற ரீதியில் அவர்களை விரட்டியவன்.. அப்போது அவர்கள் மூவரும் தங்களது கண்டுபிடிப்பினை கைகளில் வைத்துக் கொண்டு, ஒருவர் கை மாற்றி ஒருவர் வாங்கி கொடுத்து பார்த்து பேசிக் கொண்டிருந்தனர்.. அது அவனுக்கு பாஸிங் தி பால் விளையாட்டு போல் தெரிந்ததோ என்னவோ..?

அவன் சொன்னபடி தள்ளிப் போய் விளையாடுவதாக உதட்டை இளித்து காட்டிவிட்டே, எதிரில் இருந்த பார்க்கினுள் நுழைந்திருந்தார்கள்.. இப்போது அவன் பேச்சில் சிறு மரியாதை என்பது போலொரு பிரமை அவர்களுக்குள் வந்தது..

“உஷ்.. எழுந்திரிங்க, இவர் தான்..” குசு குசு குரலில் ப்யூனின் எச்சரிக்கையை தாமதமாக உணர்ந்து தங்கள் போனில் தலை குனிந்து மூழ்கியிருந்த மூவரும் விழி நிமிர்த்தியபோது, இரு உயரக் கால்கள் அவர்களை கடந்து அறைக் கதவை திறந்து உள்ளே போனது..

இவன்தான் எம்.டியா..? இவனென்ன இப்படி இருக்கிறான்..? ஆராத்யா அவனை ஓரவிழியில் முழுவதும் ஆராய்வதற்குள் அவன் அறைக்குள் போய்விட்டான்.. இரண்டாவது நிமிடமே அவர்களை உள்ளே வருமாறு அழைப்பு வந்தது..

-(கனா தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...