எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 4 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 4
வெள்ளி தாம்பாளத்தில் தண்ணீரை கொஞ்சமாய் ஊற்றினாள் கோதை. மாமியார் பறித்து வைத்துவிட்டுப்போன மலர்கள் இன்னொரு தட்டில் இருந்தன. அதை எடுத்தாள். அத்தனையும் செவ்வந்தி மலர்கள். அடர்ந்த மஞ்சள், இள மஞ்சள், வயலட் நிறம், அடர்ந்த பீட்ருட் நிறம்..என பல நிறங்களில் சிரித்தன.
மலர்களில் இத்தனை நிறங்களா? ஆச்சரியத்தோடு அழகையும் அள்ளித்தரும் மலர்கள். முதல் வரிசையில் ; பீட்ருட்கலர், அடுத்து வெளிர் மஞ்சள், அடுத்து வயலட் மலர்கள், நடுவில் மஞ்சள் என வட்ட வட்டமாக அலங்கரித்தாள். நடுவில் வெள்ளி காமாட்சி விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி ஏற்றினாள்.
எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது கேட்டைத் திறந்துக்கொண்டு அவள் வந்துக்கொண்டிருந்தாள்.
டைட்டான ஜீன்ஸ் அதே போல் டைட்டான டி.ஷர்ட். விரிந்து பரந்த கூந்தல். விழிகளை மறைத்த கூலிங் க்ளாஸ். கொஞ்சம் கிட்ட வந்தபோது உதடுகள் வரைந்து வர்ணமிட்டு ஒட்டவைத்ததைப் போல் அடர்ந்த லிப்ஸ்டிக்கோடு அளவுக்கு மீறிய கவர்ச்சியில் சிரித்தது.
‘யார் இவள்?” கோதை யோசனையாய் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் அருகில் வந்தாள்.
“ஹாய்… புதுப் பெண்ணே… ஐயாம் சங்கீதா.” என வலது கையை நீட்டினாள். வளையல் இல்லாத அந்த கரத்தை டஜன் கணக்கில் தங்க வளையல்கள் குலுங்கும் தன் கையால் பற்றினாள் கோதை. மணநாளில் போட்ட மருதாணி இன்னும் நிறம்மாறாத கோதையின் விரல்களுக்கு வலிக்குமோ என மென்மையாக குலுக்கினாள் சங்கீதா.
“நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே” புருவங்களை கேள்விக் குறியாக்கினாள் கோதை.
“எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவள்தான். உள்ளே கூப்பிட மாட்டியா?” உரிமையாக அவள் ஒருமையில் கூப்பிட்டது உறுத்தினாலும் உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்த சங்கீதா அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவாறே “அத்தை இல்லையா?” என்றாள்.
“கோவிலுக்குப் போயிருக்காங்க. “
“அத்தைக்கு பக்தி அதிகம். உனக்கும் பக்தி அதிகம் போலிருக்கு. வாசல்ல ஏத்திவச்ச விளக்கே சொல்லுது. செவ்வந்தியெல்லாம் வச்சு பார்க்கவே ரொம்ப மங்களகரமா இருக்கு.”
“இப்படி அலங்காரம் பண்றது எனக்குப்பிடிக்கும். “
“ம்…இதெல்லாம் மாமியார் மனசுல இடம் பிடிக்கிற ஒரு யுக்தி இல்லையா?’ சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள்.
ஏனோ கோதைக்கு எரிச்சலாக இருந்தது.
“நீங்க யார்னு சொல்லவேயில்லையே.!”
“அதான் சொன்னேனே உனக்கு வேண்டப்பட்டவதான்னு. சொந்தக்காரிதான்.”
“சொந்தம்னா எப்படி? உங்களை கல்யாணத்துல பார்த்த மாதிரி தெரியலையே!”
“கம்பெனி விஷயமா நான் பத்து நாள் கனடா போயிருந்தேன். அதான் கல்யாணத்துக்கு வரமுடியலை”
“ஓ.. சொந்தம்ங்கறிங்க எப்படின்னு சொல்லலையே.”
“உனக்கு பதிலா உன்னோட இடத்துல இருக்க வேண்டியவள்”
முகம் மாறினாள் கோதை.
“புரியலியா? குமணனுக்கு நான் மாமா பொண்ணு. உங்க அத்தைக்கு சொந்த அண்ணன் பொண்ணு”
இப்பொழுது கோதை கொக்கியைப் போட்டாள்.
“முறைப்பொண்ணுன்னா ஏன் நீங்களே அவரைக்கட்டிக்கலை?”
“கட்டி வச்சாத்தானே கட்டிக்க முடியும்? அம்மா சொல்ற பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு சொல்றவரை இழுத்துட்டா ஓடமுடியும்?”
“ஏன் அத்தைக்கு உங்களை பிடிக்கலையா?அழகாத்தானே இருக்கீங்க.”
“அத்தைக்கு தேவை அழகி இல்லை. ஒரு அடிமை.”
“அப்போ என்னை அடிமைன்னு சொல்றிங்களா?”
“பணக்காரவீட்ல வாழ்க்கைப்பட்ட பெண் எப்படி ராணியாவா? அடிமையாத்தான் இருக்கனும்.”
“அத்தை என்னை அப்படி நடத்தலை. அன்பாகத்தான் நடத்தறாங்க”
சங்கீதா சலங்கை ஒலி செய்தாள் சிரிப்பின் மூலம்.
“ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. போக போகத்தான் சாயம் வெளுக்கும்…”அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணீரென அம்சவேணியின் குரல் அங்கே ஒலித்தது.
“அட…சங்கீதாவா? கனடாவிலேர்ந்து எப்ப வந்தே?” அம்சவேணி கேட்டபடியே உள்ளே வந்தாள்.
“நேத்துத்தான் வந்தேன்.”
“நீ கல்யாணத்துக்கு வரலன்னதும் எப்படி வருத்தப்பட்டேன் தெரியுமா?” என்றபடியே அவளருகே அமர்ந்தாள்.
“ஆமா…ஆமா..வருத்தப்பட்டதுல கல்யாணத்துல ஒரு வாய் சாப்பாடு கூட நீங்க சாப்பிடலைன்னு அப்பா சொன்னாரு’
“போடி…உனக்கு ரொம்ப கிண்டல்தான்”
“பின்னே எதுக்கு இந்த பொய்யெல்லாம?”
“அது சரி உனக்கு குமணன் கல்யாணத்தைவிட கனடா போறதுதான் முக்கியமா?”
“ஆமா…கல்யாணத்துல பொண்ணு நானாயிருந்தா இருக்கலாம். வாழ்த்து சொல்ற நிலமையில என்னை வச்ச பின்னாடி நான் இங்க இருந்தா என்ன? கனடாவ்ல இருந்தா என்ன?”
“யேய்… சும்மாயிருக்க மாட்டே. அவ ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறா.”
“ஆமா தப்பா எடுத்துக்கிட்டு அப்படியே கோவிச்சுக்கிட்டுப் போய்டப்போறா. வந்ததுமே எல்லாத்தையும் சொல்லிட்டேன்.”
அம்சவேணியின் முகம் இருண்டது. தர்மசங்கடமாக கோதையைப் பார்த்தாள்.
“கோதை…நீ போய் காபி கொண்டா” என்றாள்.
சங்கீதா வாய்விட்டு சிரித்தாள். “கோதை என்னமோ உன் மாமியார் உன்னை அன்பா நடத்தறாங்கன்னு சொன்னே. இதான் அன்பா? காபி போட்டுட்டு வான்னு அதிகாரம் பண்றாங்க. இது அடிமைத்தனம் இல்லையா? இதே நானா இருந்தா நீ போய் போடுன்னு பதில் கொடுத்திருப்பேன்”
இதைக் கேட்டு சிரித்தபடியே கோதை உள்ளே சென்றாள். அவள் சென்றதும் அடிக்குரலில் அவளை கோபமாகக் கேட்டாள்.
“என்னடி.. என்னடி..சொன்னே அவக்கிட்டே?”
“ம்…என்னை உங்கப்பிள்ளைக்கு கட்டி வைக்கமாட்டேன்னு சொன்னிங்கள்ல. அதைத்தான் சொன்னேன்.”
பெருமூச்சுவிட்டாள் அம்சவேணி.
அடிக்குரலில் அதட்டினாள். “இதப்பார்…அவக்கிட்ட வேற எதையாவது உளறிக் கொட்டிக்கிட்டிருக்கற வேலையெல்லாம் வச்சுக்காதே”
-(தொடரும்…)