தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே பல்லாண்டு காலமாக வணிக ரீதியாகவும் கலாச்சர ரீதியாகவும் தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை வெகு சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து மிகமிககுறைவான நேரத்தில் இலங்கையின் தலைமன்னாரை அடைந்துவிட முடியும்.
தீவு நாடான இலங்கை நாகப்பட்டினம் தொடங்கி தூத்துக்குடி வரை இந்தியாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது. யாழ்பாணம் மாவட்டம் இந்த பக்கம் என்றால், அந்த பக்கம் கொழும்பு வரை இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும் நகரங்கள் அகும். இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடந்த காரணத்தால் அங்கு பல்வேறு துறைமுகங்கள் சேதம் அடைந்திருந்தன. அந்த வகையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகமும் சேதம் அடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கி இருந்தது இந்தியாவின் நிதி உதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தப்பட்டது. வர்த்தக ரீதியியாக அந்த துறைமுகம் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தும் பணி முடியும் போதே இந்தியாவுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று இருநாட்டிலும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன்படி காங்கேசன்துறையிலிருந்து புதுச்சேரியிலுள்ள காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகளும் நடந்தது.
இதனிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்போது காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தகவலை வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் உறுதி செய்துள்ளார். காங்கேசன்துறை – காரைக்காலுக்கு பதிலாக காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டிருக்க நிர்வாக ரீதியாக காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகறிது. இதனிடையே நாகப்பட்டினத்தில் கப்பல் பயணிகள் வந்து செல்வதற்காக பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தபடி ரூ.8 கோடியில் முதல்கட்டப் பணிகள் நடந்து வருகிறது தற்போதைய நிலையில் காங்கேசன் துறை – நாகப்பட்டினம் இடையே சுமார் 110 கி.மீ. தொலை இருக்கிறது. இதை கப்பலில் சென்றால் 4 மணி நேரத்தில் அடைந்துவிடலாம்.யாழ்பாணம் பகுதிக்கு கப்பலில் வெறும் 4 மணி நேரத்தில் செல்ல முடியும் என்றால் இலங்கை மற்றும் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய பலனாக இருக்கும். சுற்றுலா ரீதியாகவும், வணிக ரீதியகாவும் நாகப்பட்டினம் துறைமுகம் பெரிய அளவில் வளரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து இலங்கையில் உள்ள வடமாகாணப் பகுதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.