அரசு பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளி தந்த அப்பள வியாபாரி..!

 அரசு பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளி தந்த அப்பள வியாபாரி..!

அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்.. ஒருவர் வாழ்நாளில் சேமிக்க வேண்டியது என்றால் நல்ல நினைவுகள் தான்…நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து மனதிருப்பதியாக வாழ்வது தான். மதுரையை சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார். பணம் யாரிடம் இருக்கிறது இருக்கிறது என்பது முக்கியமல்ல.. அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதே அவரது குணத்தை தீர்மானிக்கும். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களை படிக்க வைக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள்.

கல்வி தான் இந்த உலகத்தில் ஆகச்சிறந்த சொத்து. அசுரன் படத்தில் வரும் டயலாக் அதற்கு சிறந்த உதாரணம். உன்னிடம் காடு இருந்தால் பிடுங்கி கொள்வார்கள்.பணம் இருந்தால் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் பறிக்கவே முடியாது. படிப்பு மட்டும் சரியாக இருந்துவிட்டால், எல்லாவற்றையும் சுயமாக தேடிக்கொள்ளலாம். இதனை உணர்ந்த பலர் ஏழை மாணவர்கள் கல்வி பயில் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் படிக்க முடியமால் கஷ்டப்படும் யாரும் ஒரே ஒரு வீடியோ எடுத்து உண்மையான வறுமை நிலையை சொல்லி உதவி கேட்டால் போதும், ஓடி வந்து உதவ இங்கே ஆயிரம் பேர் காத்துக்கிடக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் அப்பள வியாபாரி ராஜேந்திரன்.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயதாகும் டிபி ராஜேந்திரன், அப்பளம், மோர்மிளகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் விருதுநகர். 5-ம் வகுப்பு வரை படித்தவர் விருதுநகரில் பூண்டு கடையில் 25 ரூபாயில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு போயிருக்கிறார். உழைத்து கிடைத்த பணத்தை உதாரித்தனமாக செலவு செய்யாமல் சிறுக சிறுக சேகரித்துள்ளார். அப்படி 300 ரூபாய் பணத்துடன் 1951-ம் ஆண்டில் மதுரைக்கு வந்துள்ளார். மதுரைக்கு அந்த காலத்தில் வந்த போது முதலில் அரிசி வியாபாரம் செய்திருக்கிறார், பின்னர் காய்கறி வியாபாரத்தை செய்திருக்கிறார். அதில் ஓரளவு வருமானம் கிடைத்திருக்கிறது. அப்படியே அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். தினமும் சைக்கிளில் போய் அப்பளம் வடகத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அந்த பணத்த சேகரித்து 1988-ம் ஆண்டில் முதல் முதலாக இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளார். திருமணம் ஆகி அவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டார். அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று பெண்குழந்தைகளை கரை சேர்த்த பிறகு அவர் சம்பாதித்த பணம் அத்தனையையும் பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தி வருகிறார். வாழ்க்கையில் இப்போது அவர் சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் படிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். மதுரை, செல்லூர் வட்டாரத்தில் டி.பி.ராஜேந்திரன் இப்போது ஏக பிரபலம்.

இவர் ஏராளமான முறை சமூக சேவைகளை செய்திருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருகிறார். இவரது அப்பள நிறுவனத்தில் 40 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவதுடன், அவர்களை அவ்வப்போது சுற்றுலா அழைத்து சென்று வருகிறார். இவரது ஆண்டு வருமானம் 50 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மதுரை திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடியில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார். இதுதவிர கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ.71. 45 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், போர்வெல், உணவுக்கூடம் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். இதுதவிர கஜா புயலின் போது பாதிக்கப்பட் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

வலது கைக்கு தெரியாமல் இடது கையில் உதவுவது என்பது ராஜேந்திரனின் பழக்கமாக இருந்துள்ளது. எந்த விளம்பரமும் தேடிக்கொள்ளவில்லை. இவரை பற்றி கேள்விப்பட்ட மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்தே ராஜேந்திரனின் என்னென்ன சேவைகள் செய்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. மதுரை மாநகராட்சி திரு.வி.க. பள்ளி சமையல் அறை மோசமான நிலையில் உள்ளதால் அங்கு ரூ.7 லட்சத்தில் புதிய சமையல் அறையை கட்டித் தர உள்ளாராம். இதுதவிர அரசு சார்பில்மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி கொடுக்க உள்ளாராம். செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தரவும் முடிவு செய்துள்ளாராம்.

மதுரைக்கு வரும் போது எதுவும் என்னிடம் இல்லை என்று கூறும் ராஜேந்திரன். எனக்கு தொழிலை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும். அதில் கிடைக்கும் பணத்தில் பிறக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி வாழ்ந்து வருகிறேன் என்றார். இவரது சேவை மதுரை மக்களுக்கே இப்போது தான் தெரியவந்துள்ளது. இப்ப சொல்லுங்கள் நான் சொன்ன முதல் வரியின் படி இவர் மனசு கடவுள் தானே.. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று பலருக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...