நீ என் மழைக்காலம் – 3 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 3 | இ.எஸ்.லலிதாமதி

     

அத்தியாயம் – 3

ழையில் நனையும் வீடொன்றை ஓவியமாக வரைந்தான் கார்த்தி.  அந்த வீட்டின்பின் நிற்கும் மரம்,  இலைகளில் நீர்த்துளிகளை சொட்டிக் கொண்டிருந்தது.  பூக்களை உதிர்த்து தலையில் நனைய வைத்துக் கொண்டிருந்தது.   திறந்திருக்கும் வீட்டின் சன்னல் வழியாக நுழைந்த மழை, அறையின் உள்ளேயும் சிலப்பல தூளிகளை அனுப்பி வைத்திருந்தது.

வரைந்த ஓவியத்தை ஓர் ஓரமாக வைத்தான் கார்த்தி. மனம் திருப்தியாக இருந்தது. மழையின் மகிழ்வாக இருந்தது.  மனதிற்குப் பிடித்த ஒரு வேலையை செய்யும் போது தானாகவே மகிழ்ச்சி வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஓவியம் வரையும் பொழுது, நல்ல இசையைக் கேட்கும் பொழுது, பிடித்தமானவர்களுடன் பேசும் பொழுது என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.  எதுவுமே மனத்திற்குப் பிடித்து செய்தால் தான் ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.  ஓவியம் பிடித்தது போலவே கார்த்திக்கு அவன் வேலையும் பிடித்தது. எப்போதும் தனக்குக் கொடுத்த வேலைகளை கடகடவென்று முடித்துவிட்டு தான் அடுத்த வேலையைப் பார்ப்பான்.

இப்போதும் அப்படித்தான்,  தான் கொடுக்க வேண்டிய கட்டுரைகளை கடகடவென்று எழுதி முடித்தான்.  மீதியிருக்கும் நேரத்தை எப்படி கடத்துவது என்று யோசித்த போது தான் பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு வரையத் தொடங்கி விட்டான்.  அதையும் முடித்து மணி பார்த்த போது, ஏழு என்று காட்டியது. இன்றைய இரவு விரைவிலேயே வந்து விடக்கூடாதா? என்று ஏங்கினான். டேபிளில் கிடந்த புத்தகங்களைப் புரட்டினான். இணையத்தில் சென்று அப்டேட் செய்திகளைப் பார்த்தான். இரவு ஒன்பது மணி எப்போது வரும் நொடி நொடியாய் நகரத்திக் கொண்டிருந்தான்.

சரியாக 8.58 க்கு நிவேதிதா சொன்ன அலைவரிசையில் போய் நின்றான். இரவின் மடியில் அவள் வழங்கிய அத்தனைப் பாடல்களும் தேனாக இனித்தன. மனதை மயிலிறகாய் வந்து வருடச் செய்தது. பாடல் ஒவ்வொன்றிக்கும் இடையில் அவள் கூறிய வர்ணனை,  மனதை ஈர்த்தது. கவிதை நயத்துடன் கூடிய தமிழ் உச்சரிப்பு…. அவனை வியக்க வைத்தது.

அவள் குரலா அது ? நேரில் பேசியதற்கும் காற்றில் கரைந்து வந்த அவள் குரலுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறதே என்று நினைத்தான்.

இத்தனை தெளிவாய்,  இத்தனை மென்மையாய், இத்தனை கவிதையாய் ஒலிக்கிறதே அவள் குரல்.

அவன் கரைந்தான். அவள் ஒலிபரப்பிய பாடலிலும், காற்றில் மிதந்து வந்த அவள் குரலிலும்.

அவள் குரலுக்காகவே அவன் தினமும் நிகழ்ச்சியை கேட்க ஆரம்பித்தான். அதற்காக முன்கூட்டியே தன் வேலைகளை முடித்தான். எடிட்டர் கூட அவனைப் பாராட்டினார். ‘‘உன்னைப்போல் சுறுசுறுப்புடன் வேலை செய்தால் நான் ஒருநாளைக்கு பத்து பேப்பர் கொண்டு வருவேன்’’ என்று.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்து வைத்தான்.

அவள் குரல் பிடித்ததால் அவளைப் பிடிக்கிறதா, அவளைப் பிடித்ததால் குரலைப் பிடிக்கிறதா? உள் மனம் கேள்வி எழுப்ப,  இரண்டும் தான் என்றான்.

பிறகொருநாள்அவளிடம்கேட்டான்.

  “பாடல்களை நேயர் விருப்பமாக ஒலிபரப்பு செய்றீங்களே, அன்னிக்கு என்னுடைய விருப்பத்தை எழுதிக் கொடுக்கட்டுமா?”  என்றான்.

 “தாராளமாகக் கொடுக்கலாம் ”  என்றாள்

அவன் அப்படி எழுதிக்கொடுத்தப் பாடலில் முதலாவதாக கரைந்தது,

`நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்’  என்ற இருவல்லவர்கள் படப் பாடல்.

இரண்டாவதாக` அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர்கடிதம்’  என்றது.

மூன்றாவது பாடலில்` ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா’ என்றான். இப்படி அவன் தேர்வு செய்திருந்த பத்து பாடல்களிலும் காதல் உருகியது.  காதலில் தொலைய வைத்தது.

“எனக்கும் இந்தப்பாடல்களை எல்லாம் பிடிக்கும் ”அவள் நிகழ்ச்சி முடிந்ததும் அவனுடைய அலைபேசிக்கு வந்தாள்.

“உங்களுக்கு மட்டும் அல்ல, கேட்கும் எல்லோருக்குமே பிடிக்கும்” என்றவன்,

“உங்கள் குரல் மயக்குதுங்க. அது ஒரு வசீகர குரலா  இருக்குதுங்க. கேட்கும் எல்லோரையும் அப்படியே காற்றில் கரைய வைக்கிறது. இப்படி ஒருகுரல் அமைய கொடுத்து வைத்திருக்கணும். சில பெண்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் குரல் கரடுமுரடாய் ஆண் தன்மையுடன் இருக்கும். சில ஆண்களுக்கு கீச்சுகீச்சுன்னு பெண் குரல் இருக்கும். போனில் யாராவது கேட்டால் கூட ஒருபெண் தான் பேசுவதாய் நினைத்து ஏமாந்து விடுவார்கள்.  நீங்க அப்படி கிடையாது. உங்க உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்றவகையில் உங்கள் குரல் அமைந்திருப்பது அழகு என்றான். உண்மையைச் சொல்லணும் என்றால், பாடலுக்கு முன்பாக ஒலிபரப்பாகும் உங்கள் குரலை கேட்பது தான் நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது”  என்றான்.

அந்தப்பாராட்டு அவளுக்குள் சில பூக்களை மலரச் செய்தது. மேகங்கள் சில நீர்த்துளிகளை பரிசளித்துவிட்டுப் போனது.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரோ ஒருவர் யாருடைய பாராட்டுக்காகவோ ஏங்கியபடி தான் காத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பாராட்டில் சில வாசல்கள் திறக்கப்படுகின்றன. சில சிகரங்கள் எட்டப்படுகின்றன. சில சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது எதுவும் இல்லாவிட்டாலும் ஒருபாராட்டில் சில மனங்கள் வாழ்கின்றன என்று கூட சொல்லலாம். நிவேதிதாவுக்கு அந்தப்பாராட்டு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும், மேலும் மேலும் அவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று தோன்றியது.

அவனுடைய பாராட்டை மனம் எதிர்பார்ப்பது அவளுக்கு புது அனுபவமாகவும், விசித்திரமாகவும் இருந்தது.

ஆய்வுக்குரிய புத்தகங்களையும், மேற்கோள் பாடல்களையும் இணையத்தில் தேடிய போதுதான்,  அந்தப்பாடல் கண்ணில் பட்டது நிவேதிதாவுக்கு . கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு.  குறிஞ்சிநில தலைவி 99 விதமான பூக்களைப் சேகரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு தலைவன் வருகிறான். அந்த நேரம் பார்த்து யானை ஒன்று வருகிறது. யானைக்கு பயந்த தலைவி, அவனருகே ஓடிக்சென்று கட்டிக் கொள்கிறாள். அவன் யானையை அம்பு எய்து விரட்டுகிறான். தலைவிக்கு தலைவன் மீது காதல் வருகிறது.  தலைவன் அவள் அன்புக்கு செவி சாய்க்கிறான்’ இப்படி ஒருகதையை அந்தக்குறிஞ்சிப் பாட்டில் படித்த நிவேதிதா நகைத்திருக்கிறாள்,  அதெப்படி ஒரே நாளில் ஒருவன் மீதோ, ஒருத்தி மீதோ காதல் வரும் என்று.

ஆனால் தமிழ் இலக்கியம் காதல் எப்போது எங்கு வேணுமானாலும் வரலாம் என்கிறது. சண்டையிடுகையில்,  பூப்பறிக்கையில், போர்களத்தில் போரிடுபவனைப் பார்க்கையில்,  மரக்கிளையில் ஊஞ்சலாடுகையில், தினைபுலத்தைகாவல் காக்கையில்…  இப்படி பல சூழல் சங்ககாதலுக்கு.

எனக்கும் அப்படித்தான் அவன் மீது ஈர்ப்பு வந்திருக்கிறதோ? அதனால் தான் அவனுடைய பாராட்டுக்கு மனம் ஏங்குகிறதா? இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று துடிக்கிறதா? அவன் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டும் என்று துடிக்கிறதா?  இது ஏன்? எதற்கு அவன் கவனம் தன்மீது திரும்பவேண்டும் என்று மனம் விரும்புறது?  அவனை என் மனம் விரும்புகிறதோ? அவளுக்குள் கேள்வி எழுந்தது.  அவனுக்கும் கூட அப்படியான ஓர் ஈர்ப்பு அந்தக் கண்களில் இருப்பதாகவே அவளுக்குப்பட்டது.

அவன் பேசுகையில் கண்கள் வேறென்னவோ பேசுகிறது. அவன் சிரிக்கையில் வேறென்னவோ வைத்துக்கொண்டு சிரிப்பதாகவே பட்டது. பேசுகையில் சில சொற்களை மறைத்து வைத்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது.

இந்த மனம் நினைப்பதை எல்லாம் உதடுகள் வெளியில் சொல்லி விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.

ஆனால் அடுத்த நொடியே அவ்வளவு தான் உலகில் எவருமே நல்லவர்களாக இருக்க முடியாது என்று தோன்றியது. நினைப்பதெல்லாம் வெளியில் தெரிந்துவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி போய்விடும் என்று நினைத்தாள்.

இடையில் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டாள். மாலையில் தானே உனக்கு அலுவலகம். பகுதி நேரம் எல்லாம் வேண்டாம். முழு நேரமாகப்படி, இரண்டு மணிக்கெல்லாம் கல்லூரி முடிந்து விடும்’ என்றான் கார்த்தி. அவளுக்கும், அவன் சொல்வது சரியென்று பட்டாலும், அதற்குள் ஆய்வை எப்படி முடிப்பது என்ற தடுமாற்றம் இருந்தது. அதனால் அவள் யோசிக்கத் தொடங்கினாள்.

‘‘பயப்படாதே. நான் உனக்கு உதவி செய்கிறேன். புத்தகங்கள் கொண்டு வந்து தருகிறேன். கட்டுரைக்கான குறிப்புகளையும் தருகிறேன். போதாதைக்குறைக்கு இணையமும் இருக்கிறது. முழுநேரமாய் சேர்ந்து விடு. ஒரே வருடத்தில் படிப்பு முடிந்து விடும். அப்புறம் நிவேதிதா எம்.ஃபில் என்று போட்டுக்கலாம்…” என்றான்.

“ஐயோடா! இவ்ளோ ஸ்பீடா போனா நான் ஆறுமாசத்திலேயே எம்.ஃபில் முடிச்சிடுவேன்”  என்று சிரித்தாள்.

“முடி நிவேதா”  நிவேதிதா சுருங்கி,  நிவேதாவாகி இருந்தாள். அவளும் அவனை ஒருமையில்  கூப்பிடும் அளவிற்கு வந்திருந்தாள்.  ஒருநாள் வார்த்தைகள் வராமல்,  அவள் முன்பாக அவன் திணறியபடி நின்றான். ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் தொண்டைக்குழிக்குள்ளே விழுங்கினான். பார்த்தநாள் முதலாய் கலகலவென்று பேசிக்கொண்டு இருந்தவன்தானே அவன்? இப்போது ஏன் இப்படி தயங்கி நிற்கிறான்?  வித்தியாசமாகப்படுகிறான்?’  மனதில் வந்து போனது அவளுக்கு.

“நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே?”

“இல்ல என்ன?” என்றாள். .

“திட்டக்கூடாது”

“இல்ல திட்டல”

“இல்ல வேணாம்… ” என்றான்.

“லூசாடா நீ?  சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லிட்டுப்போ”  என்றாள்.

“எதுவா இருந்தாலும் சொல்லலாமா?  என் மீது கோவிச்சுக்க மாட்டியே?”

“சத்தியமாக கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு”  என்றாள்.

‘‘எதுவாக இருந்தாலும் ?’’அவன் இழுத்தான்.

‘‘இல்லடா! சொல்லு’’ என்றாள்

“ஐலவ்யூ  ”  என்றான் அவன்.

-(சாரல் அடிக்கும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...