வேப்ப மரத்துப் பூக்கள் – 3 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 3
“எடுத்த உடனே எந்த உயர்வும் வந்து விடாது.
பொறுமை, விடா முயற்சி, நம்பிக்கை மூலமே
மெதுவாக உயர முடியும். சூரியன் கூட மெதுவாகத்தான்
மேலெழும்புகிறது.”
“ஒன், டூ சச்சச்சா, டூ, த்ரீ சச்சச்சா”
மௌனிகா டேன்ஸ் ஆடியபடி உடற்பயிற்சி செய்யச் செய்ய நாலைந்து குழந்தைகளும் சுற்றி நின்று செய்தார்கள். செய்யத் தெரியாமல் கீழே விழுந்து எழுந்து டேன்ஸ் ஆடுவது ரசனையாக இருந்தது. கல்யாணி அவர்களை ரசித்தபடி சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
வீடு நன்றாக இருந்தது. வந்த அன்று தன் உறவினர் வீட்டில்தான் தங்கினாள். மங்களம் மாமி தந்த முகவரியில் போய்ப் பார்த்ததும், அவரும் மரியாதையாகப் பேசி வீட்டைக் காட்டினார். பெருங்களத்தூரில் அபார்ட்மெண்ட் . வசதியாக இருந்தது, ஒரு பெட்ரூம்தான். ஹால் பெரியது. அதிலேயே பூஜை ரூம். கிச்சன். அதை ஒட்டி டைனிங் ஹால். அருகில் சின்ன சிட் அவுட். அதில் நின்றால் தெருக்கோடி வரை தெரிந்தது. வருவோர்,போவோர், இரு சக்கர வாகனங்கள் என்று ஜெகஜோதியாக இருந்தது.
எதிர் பக்கம் ஓரு மியுசிக் ஸ்கூல். எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருக்கும். மாலை நேரத்தில் குழந்தைகள் ஒன்று சேர்ந்து சரளி வரிசை சொல்லும் பொது, கேட்கவே இனிமையாக இருக்கும்.
மௌனிகாவுக்கு வந்த அன்றே விளையாட ஆட்கள் கிடைத்து விட்டது. அக்கம் பக்கம் நாலைந்து குழந்தைகள் இவளுடன் பழகி விட்டது. அவர்களுக்கு இசையுடன் சேர்ந்து உடற்பயிற்சி கற்றுக் கொடுக்க நெருக்கமாகி விட்டார்கள்.
“ஏய் குண்டு தலைகாணி கையை இப்படி உசத்து.”
அந்த குண்டு மாம்பழத்திற்கு உட்கார்ந்து எழ முடியவில்லை.
“போக்கா.” சிணுங்கியது.
“இவளை பிளாஸ்டிக் பைல போட்டு தூக்கி எரிஞ்சுடலாம்.” வேறு ஒரு பையன்.
“அய்யே இப்போ பிளாஸ்டிக் ஃப்ரீ. தெரியுமா?”
“அப்படின்னா என்னக்கா?” ஒரு நாலு வயசு கேட்டது.
“அங்க பிளாஸ்டிக் இலவசமா கிடைக்கும்னு அர்த்தம்.”
“ஏய்.” அதட்டினாள் கல்யாணி. “பொய்யான மீனிங் சொல்லாதே.குழந்தைகள் அப்படியே பிடிச்சுக்கும்.”
“ஓ.கே, டன். ஏன் குழந்தைகளா நீங்க எல்லாரும் நல்லாப் படிக்கரவங்களா?”
“ஆமாம், ஆமாம்,”கோரஸாகக் கத்தியது குழந்தைகள்.
“நீங்க என்ன கேள்வி வேணாலும் கேளுங்க. என் புக்குல. ஆன்சர் எல்லாம் என் பிங்கர் டிப்ஸ்ல.” ஒரு இரண்டாம் வகுப்பு மார் தட்டியது.”
“எங்க உன் விரல்களைக் காமி” மௌனிகா அவன் விரல்களை எடுத்துப் பார்த்து விட்டு “போடா நீ பொய் சொல்றே. உன் விரல் நுனியில எந்த ஆன்சரும் இல்லை.”
குழந்தைகள் எல்லாம் சேர்ந்து சிரிக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
வாழ்க்கை என்பது ரேடியோ மாதிரி. அதை டியூன் செய்து கொண்டே இருக்க வேண்டும். உற்சாகம் என்பது நாம் விரும்பும் ஸ்டேஷனை நாம் டியூன் செய்வது போல்தான் என்பாள் மௌனிகா. அவள் தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வாள். சோர்ந்து அமர மாட்டாள்.
“அழுவதாலோ, சோர்ந்து உட்காருவதாலோ எதுவும் மாறி விடப் போவதில்லை. எப்படியும் எதுவும் நடக்கப் போகுது. நடக்கறதை வேடிக்கை பார்த்துண்டு ஜாலியா என்ஜாய் செய்யலாம் என்பாள்.
மௌனிகா வளர்ந்த பின் கல்யாணியின் உலகே வண்ண மயமாக மாறி விட்டது. எந்நேரமும், சிரிப்பு, கேலி கிண்டல்தான்.
உறுதியா நில்லு. நேர்மறையா நில். எடுத்த முடிவிலிருந்து விலகாதே என்பார் ரகுராமன். அதுவே மௌனிகாவின் மந்திரமும். அவள் எல்லா விஷயத்திலும் ரகுராமன் மாதிரி.
‘அவர் பொண்ணு நான். அவர் மாதிரிதானே இருப்பேன்.”
பேச வேண்டிய நேரத்தில் அவர் பேசலை. அதனால்தான் உனக்கு மௌனிகா என்று பெயர் வைத்தேன் என்று அடிக்கடி சொல்வாள் கல்யாணி. மௌனிகா அவரைச் சந்தித்தால் அடையாளம் தெரியுமா என்று ஒரு சந்தேகம் உண்டு. ஆனால் மௌனிகா அதைப் பற்றி கவலைப் படவில்லை.
“ உன் கணவர் எந்த ஏரியான்னு சொல்லு. ஆளை அரெஸ்ட் பண்ணிடலாம்.”
“அப்படி எதுவும் அடாவடியாய் செஞ்சுடாதே. நிதானமா அவர் மனசுல இடம் பிடிக்கணும்”
“அதுக்குள்ளே உனக்கு வயசாயிடும். குடுகுடு கிழவி”
“ஆகட்டுமே. அவர் வாயால நீ அவர் மகள்னு ஏத்துகிட்டா போதும். நான் கிளம்பிடுவேன்.”
“எங்கே?’
“பகவான் பாதத்துல சேர.”
“இங்கிருந்து எலெக்ட்ரிக் டிரெய்ன் போகுது. டைம் பார்த்துச் சொல்றேன்.”
“போடி” என்றாலும் அவள் உள் மனசு ரகுராமனை சந்திக்கும் நாளுக்காக ஏங்க ஆரம்பித்தது. மௌனிகா அடிக்கடி சொல்வாள். நாம் அதிகமா நினைக்கறதும், பேசறதும், பார்க்க நினைக்கறதும் நாம் அதிகமா நேசிப்பவர்களைத்தான்.
உண்மைதான். இந்த பிரபஞ்சத்தை விட அதிகமாக நேசித்தாள் ரகுராமனை. அவர் மீது எரிமலை போல் கோபம் பொங்கினாலும் அவர் தன் மீது காட்டிய அன்பை, பிரியத்தை அவளால் மறக்க முடியவில்லை. அன்பிலும் போலித் தனம் கலக்க முடியுமா?
“நீ ஏம்மா அவரைத் தப்பா நினைக்கிரே. ஏதானும் காரணம் இருக்கும்.’
“எந்தக் காரணமா இருந்தாலும் மனைவியை விட்டுத் தரக் கூடாது.”
மௌனிகா பதில் சொல்ல மாட்டாள். எந்தச் சந்தேகம், குழப்பம் எதுவென்றாலும் காலத்தால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். முதலில் கல்யாணியும் ரகுராமனும் சந்திக்க வேண்டும். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் என்பதில் உறுதியாக இருந்தாள் மௌனிகா.
நிதானம், பிரதானம் என்று சிரித்தாள் மௌனிகா.
“ நீ எப்போ ஜாயின் செய்யப் போறே?”
“நாளை கழித்து மறுநாள். நான் வீட்டை ரெடி பண்ணிட்டு, வண்டியைக் கொண்டு வரணும். முகூர்த்த நாள் அன்னைக்கு.”
“ஹலோ வீடு எப்படி இருக்கு?” புதிதாக ஒரு ஆண் குரல்.
புன் சிரிப்புடன் ஒரு நடுத்தர வயதுக்காரர் நின்றார். அறுபது வயதுக்குள் இருக்கும். நன்றாகப் படித்தவர் போல் இருந்தார். சிறிது பருமனாக இருந்தாலும் குள்ளம். முன் தலை வழுக்கையாக இருந்தது. சுவாதீனமாக வந்து முன் அறை சோபாவில் அமர்ந்தார்.
“வாங்க சார். என்ன குடிக்க வேணும்?” மௌனிகா
‘என்ன இருக்கு? நீ எது குடுத்தாலும் குடிக்கலாம். புது விருந்தினர்.”
“இப்போதைக்கு தண்ணீர் மட்டும்தான் இருக்கு.”
“எதேஷ்டம்.” என்றவர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். நான் எதிர் வீட்டில்தான் இருக்கேன். என் பெயர் பலராமன். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்போ சின்னதா ஒரு பிசினஸ் செய்யறேன். ஒரே ஒரு மனைவி ரெண்டு பொண்ணு. ரெண்டுபேரும் யு.எஸ்ல செட்டில்டு. ரெண்டாவது பொண்ணுக்கு பிரசவம்னு வீட்டம்மா அங்க போயிருக்காங்க.”
“ஸோ சார் ஃப்ரீ பேர்டு”
“ நீ வேற. வயசுக் காலத்துல மனைவியின் அருகாமை தேவைம்மா. உடல் உபாதைகளுடன் பத்தியச் சாப்பாடும் தேவை. தனிமையைக் கரைக்க பேச்சுத் துணைக்கு ஒரு வாழ்க்கைத் துணை.”
“இப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?”
“நம்ம அபார்ட்மென்ட்ல ஒரு அம்மா மெஸ் வச்சு நடத்தறாங்க. அருமையா இருக்கும். அப்பப்போ சாட் ஆயிடம்ஸ் கூடக் கிடைக்கும்.”
“ஹை” மௌனிகா குதித்தாள். “முதல்ல அவங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க சார்.”
“மாலை நானே கூட்டிட்டுப் போறேன். இந்த ஃப்ளோர் கடைசிலதான்.’
“நன்றி, நன்றி,நன்றி.” மௌனிகா குனிந்து வணங்கினாள்.
“நான் இந்த அபார்ட்மென்ட் குடியிருப்போர் சங்கத் தலைவர். என்ன உதவின்னாலும் கேட்கலாம்.”
“ஓ! அருமை. கட்டாயம் கேட்கிறேன்.”– கல்யாணி
“மௌனிகா பிசியோதெரபிஸ்ட். சரி. நீங்க என்ன செய்யறீங்க?”
“நான் டில்லியில ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்திட்டிருந்தேன். இப்போ இங்கு வந்து அதையே செய்யலாம்னு நினைக்கிறேன்.”
“ஆஹா அற்புதம். எங்க நண்பர்கள் கூட உங்க சேவையை பயன்படுத்திப்பாங்க. நீங்க இங்கேயே ஆபீஸ் போடலாம். நான் சில வாய்ப்புகள் வாங்கித் தருகிறேன். நல்ல நிறுவனத்தின் சேவை இல்லாமல் சிரமமாக இருக்கு.”
“ரொம்ப நன்றி சார். கடவுள் மாதிரி வந்து சொல்றீங்க.”– கல்யாணி நெகிழ்ந்தாள்.
“இது என்னம்மா பெரிய உதவி?” அவர் எழுந்தார்.
எந்த நேரம் ஆனாலும் கூப்பிட்டா உடனே ஓடி வருவோம் என்று கூறி விட்டு வெளியேறினார்.
“அட, சென்னையிலும் நல்ல மனிதர்கள்?” மௌனிகா.
“இங்க இருக்கறவங்க மோசம்னு யார் சொன்னாங்க உனக்கு? நல்லவர், கெட்டவர்னு எல்லாப் பக்கமும் உண்டு. எங்கே இருந்தாலும் நாம ஜாக்கிரதையா இருக்கணும் மௌனிகா. நாகரீகம், முன்னேற்றம்னு பேசினாலும், எந்த ஒரு மானக்கேடுன்னாலும் அது பெண்ணுக்குத்தான். ச்சீ போன்னு எதையும் துடைச்சி எறிந்சுட்டுப் போக முடியாது நம்மால.”
“அதனால்தான் நீ இன்னமும் அப்பா அடுத்த கல்யாணம் செஞ்சிருக்க மாட்டார்னு நம்பறியா?”
“நம்பிக்கை மனசு சார்ந்த விஷயம் மௌனிகா. நான் அவர் கூட ரெண்டு வருஷம் வாழ்ந்திருக்கேன். கணவன்தான் மனைவியின் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவன். அந்த மனசு சொல்றது அவர் கல்யாணி ராமன்னு.”
“உன் நம்பிக்கை நிஜமாகட்டும்.”
மௌனிகா தன வேளையில் ஈடுபட்டாள்.
அம்மாவின் செயல் அவளுக்குச் சிறிது மன வருத்தம்தான்.
எவ்வளவு பெரிய துரோகம் செஞ்சிருக்கார் ரகுராமன். இன்னும் அவர் மேலான மரியாதை குறையவில்லை கல்யாணிக்கு. மௌனிகாவிடம் அவரைப் பற்றி சிறிதும் தரக் குறைவாகப் பேச மாட்டாள் கல்யாணி. அப்பா என்பவர் மௌனிகாவின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். அந்த அளவுக்கு அவரைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தாள் கல்யாணி.
“எதுக்காக வெறுக்கணும். ஒருவரைப் பற்றி குறை சொல்வது மூலம் அவர்களுடைய பாவங்களைப் பூரா நாம் ஏத்துக்கறோம். போதும் என்ன பாவம் செஞ்சோமோ இத்தனை வேதனை. அவர் அவர் செய்த பாவத்துக்கு அவர் அவர்கள் அனுபவிப்பார்கள். இதுதான் நடக்கனும்னு இருக்கு. அது நடக்குது. நீயோ, நானோ மாத்த முடியுமா?”
“ ரொம்ப தத்துவம் பேசறே”
“இல்லை மௌனிகா, அனுபவம். என்னை மாதிரி நீ வேதனைப் பட வேண்டாம். ஆனா புருஷனால கைவிடப்பட்டு. ஒரு பெண் குழந்தையோடு தனியா நிற்கும் இளம் பெண்ணுக்கு எத்தனை சிரமங்கள், கழுகுகள் கொத்தக் காத்திருக்கும்னு உனக்குத் தெரியாது. இந்த வாழ்க்கை எனக்கு நிறைய அனுபவங்கள் தந்திருக்கு. அதுல முக்கியமானது யாரையும் நம்பக் கூடாது. இதோ இப்ப வந்துட்டுப் போனாரே பலராமன். அவர் நல்லவர்னா கூட நான் நம்ப மாட்டேன்.”
கல்யாணியின் பேச்சில் யதார்த்தம் இருந்தது.
அவளின் அனுபவம் எல்லோரையும் நேசித்தாலும் ஓடிச் சென்று உதவிகள் செய்தாலும், யாரையும் நம்பாதே என்றுதான் சொல்லித் தந்திருந்தது. வேலை பார்த்த இடம், குடியிருந்த பகுதி சென்ற இடமெல்லாம் அவளுக்கு சில கழுகுகளின் தொந்தரவு இருந்தாலும் அவள் அதிலிருந்து நாசுக்காக தப்பித்து வரத் தெரிந்திருந்தாள். தன் மகளுக்கு சொல்லித் தந்ததை விட வாழ்ந்து காட்டியதில் அதே ஜாக்கிரதை மௌனிகாவிடமும் இருந்தது.
மௌனிகா நெகிழ்வோடு அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
“அம்மா உன்னுடைய போராட்டத்தை நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கேன். நிச்சயம் உனக்கு மகிழ்ச்சி தரும் விதமாத்தான் நான் நடப்பேன். ரெண்டு பெரும் ஒரு நல்ல விஷயத்தை நோக்கி போயிட்டிருக்கோம். அது கண்டிப்பா நிறைவேறும்.”
“நடக்கணும். அது மட்டும்தான் என் லட்சியம்.”
கல்யாணி தன் வேலைகளைக் கவனிக்கப் போய் விட்டாள்.
மௌனிகா மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.
எத்தன வருடத்துக் கனவு? அப்பா என்று தன் தோழிகள் தங்கள் தந்தையை அறிமுகப் படுத்தும்போது அவளுக்கும் ஏக்கமாக இருக்கும். தந்தை கை பிடித்து நடக்க, தனக்கு ஆலோசனைகள் சொல்ல, அம்மா, அப்பா என்று ஒன்றாக வாழ என்று தந்தை குறித்து நிறைய கனவுகள் அவளுக்கு இருந்தது. அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இருபது வருடம் கழித்து அவரை எப்படி, எங்கு சந்திக்கப் போகிறோம்?
அப்பா நீங்க எங்கே இருக்கீங்க?
மனம் கேள்வி கேட்க யோசனையுடன் அமர்ந்திருந்தாள் மௌனிகா.
-(ஏக்கங்கள் தீரும்…)