டிவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: டிவிட்டரும் … தொடரும் மாற்றங்களும்..!.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரின் லோகோவை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தினமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள்…தொடரும் சர்ச்சைகளும் என போய் கொண்டுள்ளது.
ஏற்கனவே குருவி படத்துக்குப் பதிலாக நாய் படத்தை மாற்றினார். ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லாததால் மீண்டும் குருவியே லோகோவில் வைத்துவிட்டார்.
இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நீலக் குருவி லோகோவையும் அவர் எக்ஸ் என ஆங்கில எழுத்தில் மாற்றியிருக்கிறார்.
ஏற்கனவே, அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட நீல நிற டிக் தொடர கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். இது மட்டுமல்லாமல் மிக முக்கியமான நபர்களின் டிவிட்டர் கணக்குகளையே முடக்கியும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டிவிட்டர் கணக்கு மற்றும் அலுவலக நிர்வாகத்திலும் எலான் மஸ்க் பதவியேற்ற தருணத்திலிருந்து மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் பல நிறுவனத்தின் வளர்ச்சியை நேரடியாக பாதித்து உள்ளதாம்.
நிறுவனத்தின் விளம்பர வருவாய் 50 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் எலான் மஸ்க் ஒப்புக் கொண்டிருந்தார். ஒருபக்கம் வருவாய் குறைவு மறுபக்கம் கடன் அழுத்தம் என இருந்து வருகிறது.
தற்போது மீண்டும் டிவிட்டர் பெயர் மற்றும் லோகோவையும் மாற்றியிருக்கிறார் எலான் மஸ்க்.
டிவிட்டர் நிறுவனப் பெயர் மற்றும் லோகோ இனி ஆங்கில எழுத்தான எக்ஸ் என குறிப்பிடப்படும் என்று தெரிகிறது.