பூத்திருக்கும் விழியெடுத்து – 1 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 1 | முகில் தினகரன்

                                                    

அத்தியாயம் – 1

“விசாகா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி” திருச்சி, நகரை விட்டுத் தள்ளியிருந்தாலும், அதன் கற்றுத் தரும் திறன், கட்டுப்பாட்டுத்திறன், மற்றும் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த தலைசிறந்த நிறுவனங்களை கல்லூரிக்கு அழைத்து தங்கள் மணவ, மாணவியருக்கு நல்ல வேலையை உடனடியாகப் பெற்றுத்தரும் ஆற்றல், போன்றவற்றால் நல்ல பெயர் பெற்று,  மாநிலத்தின் சிறந்த பத்துக் கல்லூரிகளில் ஒன்றாக கடந்த ஏழு வருடங்களாகத் திகழ்கின்றது.  அதன் காரணமாய் அக்கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகிப் போனது.

எப்படியாவது பணத்தைக் கொட்டி அங்கு அட்மிஷன் பெற்று விடலாம், என்கிற கனவோடு வருபவர்களுக்கெல்லாம் அங்கு “கெட்அவுட்” காத்துக் கொண்டிருக்கும்.  நல்ல மதிப்பெண்களோடு வந்து நிற்பவர்களுக்கு “உடனடி அட்மிஷன்” கதவைத் திறக்கும்.

ஸ்டாஃப் ரூமில் தனியே அமர்ந்து அந்தப்பட்டியலைத் தயார் செய்து முடித்த வைசாலி, அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பியூனை அழைத்தாள்.

“முருகண்ணா… முருகண்ணா”

வைசாலி வயது நாற்பது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பேரிளம்பெண்.

ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் கொடிகட்டிப் பறந்த ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசாய்,

“ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி”யாய் இருந்தவள் இன்று சம்பளத்திற்குப் பணி செய்யும் ஒரு கல்லூரிப் பேராசிரியராக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறாள். வாழ்ந்து கெட்டவர்களின் பக்குவம் என்பது எந்தப் பல்கலைக்கழகத்தாலும் கற்றுத்தர முடியாத பாடமாகும்.

“இதோ வந்திட்டேம்மா” என்றபடி நிதானமாய் வந்து நின்றார் முருகண்ணன்.

”இந்த லிஸ்ட்டைக் கொண்டு போய் பிரின்ஸிபால் டேபிள்ல வெச்சிடுங்க”.

அவள் கொடுத்த லிஸ்டை வாங்கிய முருகண்ணன், “என்னம்மா அடுத்த கல்ச்சுரல் புரோக்ராம்முக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு” கேட்டார்.

“ஆமாம் முருகண்ணா… இந்த தடவை நடக்கறது ஒரு பெரிய போட்டி… அதாவது இண்டர் ஸ்டேட் காம்படிஸன்…. அதுக்காக பத்து ஸ்டூடண்ட்ஸை செலக்ட் பண்ணியிருக்கேன்… கூடவே செலவு பட்ஜெட்டையும் போட்டிருக்கேன்… பிரின்ஸிபால் மேடம் அக்ரி பண்ணிட்டாங்கன்னா… ஆரம்பிச்சிட வேண்டியது தான்”

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அந்தக்கல்லூரியில் சர்வீஸ் செய்தவர் முருகண்ணன்.

ஓரளவுக்கு எல்லா விஷயங்களையும் அறிவார், எல்லோருடனும் அன்போடும், பண்போடும் பழகுவார்.

“ஒண்ணும் பிரச்சினை இல்லைங்கம்மா… நீங்க என்ன எழுதிக் குடுத்தாலும் பிரின்ஸிபால் மேடம் உடனே ஓ.கே. பண்ணிடுவார்!..

பின்னே?..

இது மாதிரி பலதடவை பல நடனப் போட்டிகளுக்கு நம்ம பசங்களையும்… பொண்ணுங்களையும் கூட்டிட்டுப் போய் பல மேடைகள்ல பரிசுக் கோப்பைகளை வாங்கிக் குடுத்தவங்களாச்சேம்மா நீங்க?…

பேர் என்னவோ இங்கிலீஸ் புரபஸர் தான்… ஆனா நீங்க ஆர்கனைஸ் பண்ற கல்ச்சுரல் புரோக்ராம்ஸ் தான் உங்களை மிகப்பெரிய செலிபிரிட்டி ஆக்கியிருக்கு மேடம்”

அந்த முருகண்ணன் புகழ்ந்து கொண்டே போக,

“அய்யோ முருகண்ணா கொஞ்சம் இருங்க!… இதுல என் திறமையைவிட அந்தந்த ஸ்டூடண்ஸோட திறமை… இருக்கே… அது தான் முதல் காரணம்!”

இயல்பாய்ச் சொன்னாள் வைசாலி.

“இருந்தாலும் அவங்களுக்கு எப்படிப் போட்டியை எதிர்கொள்ளணும்?… எந்த மாதிரி டான்ஸ் எடுபடும்?… எப்படி ஆடினா ஜெயிக்க முடியும்?…ன்னு பயிற்சி குடுக்கறது நீங்க தானேம்மா…

அப்பப்ப நீங்களும் டான்ஸ் ஆடிக்காட்டறீங்களே… அதை நானும் பார்க்கிறேனே!… எனக்கென்னமோ நீங்க படிக்கற காலத்துல… உங்க காலேஜ்ல மிகப்பெரிய டேன்ஸராய் இருந்திருப்பீங்க!ன்னு தோணுது… என்ன நான் சொன்னது சரி தானேம்மா?”

அதைக்கேட்டு சில நிமிடங்கள் அமைதியாய் தலை குனிந்திருந்த வைசாலி,

“சரி…சரி…சீக்கிரம்போங்க… பிரின்ஸ்பால் மேடம் கிளம்பிடப் போறாங்க” என்றாள்.

பியூன் முருகண்ணா சென்றதும் தன் இருக்கையில் சாய்ந்தமர்ந்து யோசித்தாள் வைசாலி.

‘இந்ததடவை ஒவ்வொரு டான்ஸிலேயும் ஏதாவதொரு கனமான கருத்தைப் புகுத்தணும்!… தேசபக்தியை சொல்ற மாதிரியோ…

தன்னம்பிக்கையைச் சொல்றமாதிரியோ… இல்லேன்னா… நடப்புச்சமூகத்தில் நடக்கிற அநியாய அக்கிரமங்களைச் சுட்டிக்காட்டற மாதிரியோ.. அதன் மூலம் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வைக் கூட்டற மாதிரியோ….

ஏதாவதொரு மெஸேஜைச் சொல்லணும்!… அப்பத்தான் ஜெயிக்க முடியும்…. ஏன்னா… நடக்கப்போறது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி… காம்படிஸன் ரொம்ப பலமாயிருக்கும்!…

என்ன செய்யலாம்?’

அப்போதிருந்தே சிந்திக்கத் தொடங்கினாள்.

சரியாக பதினைந்தாவது நிமிடம் பியூன் முருகண்ணன் திரும்பி வந்தார்.

வரும்போதே வாயெல்லாம் பல்.

“நான் என்ன சொன்னேன்?… நீங்க என்ன எழுதிக்குடுத்தாலும் பிரின்ஸிபால் மேடம் உடனே ஓகே.ன்னு கையெழுத்துப் போட்டுடுவாங்க ன்னு சொன்னேன் அல்ல?…

பாருங்க அதே மாதிரி படிச்சுப் பார்த்திட்டு கொஞ்சம் கூட யோசிக்காம உடனே கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டாங்க”

அவர் கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டவள்,

வேறொரு சிறிய தாளில் சில பெயர்களை எழுதி அதைப்பியூனிடம் கொடுத்து,

“இந்த ஸ்டூடண்ட்ஸை… மதியத்துக்கு மேலே கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்கு வரச்சொல்லிடுங்க“

“சரிங்கமேடம்”

மதியம் 3.00 மணி,

கான்ஃப்ரென்ஸ் ஹாலில் கூடியிருந்த அந்த ஒன்பது ஸ்டூடண்ட்ஸ்களில் நான்குபேர் மாணவிகள், மீதியெல்லாம் மாணவர்கள்.

அவர்கள் அனைவரும் அந்தக் கல்லூரியிலும்,  இன்னும் பல வெளிக் கல்லூரிகளிலும் பல வித்தியாசமான நடன நிகழ்ச்சிகளைச் செய்து.. பரிசுகளை வாங்கிக் குவித்தவர்கள்.

தங்கள் பேராசிரியர் ஏதோ முக்கியமான விஷயத்தைச் சொல்வதற்காகத் தான் தங்களை அங்கே அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள் அனைவரும் வைசாலி வாயையே ஆர்வத்துடன் பார்த்தபடி நின்றிருந்தனர்.

“டியர் ஸ்டூடண்ட்ஸ்… அடுத்தமாதம் இருபதாம் தேதி இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸன் நடக்கப்போகுது…  அதுல நீங்க எல்லோருமே கலந்துக்கப் போறீங்க”

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

மாணவ மாணவியரின் ஓங்கிய குரல் அவர்களது நம்பிக்கையையே காட்டியதாய் நினைத்தாள் வைசாலி.

“இங்க பாருங்கஸ் டூடண்ட்ஸ் இந்த தடவை ஒவ்வொரு டான்ஸிலேயும் ஹெவி கான்ஸெப்ட் கொண்டு வரணும்!…

ஏதாவதொரு கனமான விஷயத்தைச் சொல்லணும்!… தேசபக்தியை சொல்ற மாதிரியோ… தன்னம்பிக்கையைச் சொல்றமாதிரியோ…

இல்லேன்னா… நடப்புச் சமூகத்தில் நடக்கிற அநியாய அக்கிரமங்களைச் சுட்டிக்காட்டற மாதிரியோ..

அதன் மூலம் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வைக் கூட்டற மாதிரியோ…. ஏதாவதொரு மெஸேஜைச் சொல்லணும்!… அப்பத்தான் ஜெயிக்க முடியும்….

ஏன்னா… நடக்கப்போறது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி… காம்படிஸன் ரொம்ப பலமாயிருக்கும்!…”

“யெஸ்மேம்”

“சொல்லுங்க…. நீங்க உங்களுக்குத் தோணுற ஐடியாக்களைச் சொல்லுங்க!… அதிலே ஏதாவது சூட் ஆகும்ன்னா… அதையும் கன்ஸிடர் பண்ணுவோம்” வைசாலி சொல்ல,

“மேம்… இப்ப சமூக வலைதளங்களிலேயும்… டிவி.நியூஸிலேயும் அதிகமா வந்திட்டிருக்கற வருத்தமான விஷயம் என்னன்னா?… ஆன்லைன் ரம்மி!… அதுக்கு அடிக்ட் ஆகி எத்தனையோ இளைஞர்கள் தற்கொலை வரைக்கும் போயிருக்காங்க… அதை ஏன் நாம டான்ஸ் மூலமா சொல்லக்கூடாது?”

“சூப்பர்…”என்றாள் வைசாலி.,

“மேடம்…. மொபைலில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தாகும் விஷயத்தையும் சொல்லலாம்”

“வெரிகுட்”

“மேடம் நம்ம நாட்டுல படிச்சிட்டு வெளிநாட்டுக்குப் பறந்து போய் அங்கே வேலை பார்க்கிறவங்களைப் பற்றிய ஒரு கான்ஸெப்ட் கூட பண்ணலாம் மேடம்”

“அருமை”

அதற்கு மேல் வேறு எதுவும் வராமல் போக,

“ஓ.கே…. இந்த மூன்று கான்ஸெப்டையும் வெச்சு நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்றேன்… எது நல்லாவருதோ அதை செலக்ட் பண்ணிடுவோம்” என்று வைசாலி சொல்ல,

“மேடம்… நாம ஒன்பது பேர் இருக்கோம்… இந்த மூன்று கான்ஸெப்ட்களையும் எடுத்துக்கிட்டு… ஒவ்வொரு கான்ஸெப்ட்டுக்கும் மூன்று பேர் என்கிற விதத்தில் மூணு டீமா போட்டியில் கலந்துக்கிட்டா… அட்லீஸ்ட்  ஏதாவது ஒரு டீமாவது ஜெயிக்கும் அல்லவா மேடம்?”

ஒல்லிக்குச்சி உடம்புக்காரியானா கனிகா சொல்ல,

“ம்ம்ம்… இதுவும் நல்ல ஐடியா தான்… ஆனா… ஒரு கல்லூரியிலிருந்து ஒரு டீம் மட்டும் தானே பர்ஃபாம் முடியும்?”

“அப்ப ஒண்ணு செய்வோம் மேடம்… ஒன்பது பேருமே ஒரே டீமாக இருந்து… இந்த மூணு விஷயங்களையுமே ஒட்டு மொத்தமா  சொன்னா என்ன?”

ஒரு மாணவி கேட்க,

“கரெக்ட்…

“அது தான் சிறந்தவழி… அப்படியே செய்வோம்!… இன்னிக்கு ராத்திரியே உட்கார்ந்து இந்த மூணு விஷயங்களையும் சொல்லுற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணி நாளைக்குக் கொண்டு வர்றேன்” வைசாலி உற்சாகமானாள்.

“ஓ.கே…மேடம்… இந்த முறை… இந்த இண்டர் ஸ்டேட் காம்படிஸன்ல… நம்ம காலேஜ் தான் வின் பண்ணுது…”

என்று சற்று பருமனாய் இருந்த ஒரு மாணவன் சொல்ல,

எல்லோரும் மறுபடியும் “ஹேய்ய்ய்ய்ய்” என்று கத்த,

“ஓ.கே… ஸ்டூடண்ட்ஸ்… இப்ப நீங்கெல்லாம் கிளாஸுக்குப் போங்க… நாளைக்கு ஸ்கிரிப்ட் ரெடியானதும் நானே கூப்பிடறேன்”

“தேங்க்யூமேடம்”

சொல்லிவிட்டு அவர்கள் களைந்து சென்றதும்,

சீரியஸானாள் வைசாலி.

“ம்ம்ம்…

மூணு விஷயங்களையும் ஒரே டான்ஸ் பர்ஃபாமென்ஸ்ல எப்படிக்கொண்டு வர்றது?”

*********************

“அசோக்… காலேஜ் ஆண்டு விழாஃ பங்ஷன்ல நீ என்ன பண்ணப்போறே?”

“ம்ம்ம்… டான்ஸ் பண்ணப் போறேன்” .

“அது தெரியும்… என்ன டான்ஸ்?”

“ம்ம்ம்.. பேய் டான்ஸ்”.

“அப்படின்னா உனக்கு மேக்கப் செலவு மிச்சம்”.

“ஏய்ய்ய்… என்ன கிண்டலா?”.

“இல்லை… சுண்டல்”.

“சரி வைசாலி… நக்கல் போதும்… விஷயத்துக்கு வா”

“ஆண்டு விழாவில் நான் ஒரு ஸ்பெஷல் டான்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்…                  ஏதாச்சும் க்ளூ குடு அசோக்”

“அதுக்கு ஏதாச்சும் லஞ்சம் குடு… சொல்றேன்”.

“என்ன லஞ்சம்?”

“ம்ம்ம்…  தொடர்ந்து பத்து நாளைக்கு எனக்கு ஈவினிங் டிபன் வாங்கிக்குடு”.

“அட தின்னிப் பிசாசு.. இதுதான் உனக்கு லஞ்சமா?.. நான் கூடவேற என்னமோ நெனச்சேன்!… சரி… சரி வாங்கிக்கோ”

*********************

வேகமாய்த் தலையைச் சிலுப்பி அந்த பிளாஷ்பேக் நினைவுகளை அழித்தாள் வைசாலி.

‘ச்சை…எந்த துரோகியை சாகிற வரைக்கும் நினைக்கவே கூடாது! ன்னு மனசுக்குள்ளிருந்து வெளிய தூக்கிப் போட்டுட்டேனோ…

அவனே மறுபடியும் மறுபடியும் ஞாபகத்துல வந்திடறான்!… அதுவும் அவனைத் தூக்கிக்கடாசி கிட்டதட்ட சுத்தமா இருபத்தி அஞ்சு வருஷங்க ஆச்சு… ஆனாலும் போகமாட்டேங்குறான் சனியன் பிடிச்சவன்’

அசோக் என்னும் அந்த முன்னாள் காதலனைத் திட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்…

-( மலரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...