வேப்ப மரத்துப் பூக்கள் – 1 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 1 | ஜி ஏ பிரபா

“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன்
எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது”

அத்தியாயம் – 1

ழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது.

       நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து வீட்டில் “உலகாளும் ஈசனே உமா மகேஸ்வரா என்று பாடல் ஒலிக்கும்போது எழுந்து வாக்கிங் கிளம்பி விடுவார். இருபது வருடமாக இங்கு வீடு கட்டி வந்த காலத்திலிருந்து வழக்கம்.

       சிறு வயதிலிருந்து ஒன்றாகப் படித்த மூன்று பேர் மொத்தமாக இடம் வாங்கி அருகருகே வீடு கட்டிக் கொண்டார்கள். கீழே ஒரு போர்ஷன், மாடியில் ஒன்று. வலப்பக்கம் ராமானுஜம். இடப் பக்கம் சங்கர நாராயணன். வரிசையாக எல்லார் வீட்டு வாசலிலும் வேப்ப மரங்கள். பூவரசு, காகிதப் பூ செடிகள். வண்ண மயமாக, வேப்பம்பூக்களின் நறுமணத்துடன் பொழுது விடிகிறது.

       இப்போதும் கம்மென்று மணம். மூச்சை இழுத்து விட்டார்.

       புது வாசனையோடு பூக்களின் மணம் நாசிக்குள் நுழைய “குட் என்று துள்ளிக் குதித்து எழுந்தார். அம்பத்தி நாலு வயசுக்கு உடம்பு நல்ல ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. கண் மூடி நன்றி இறைவா என்று கை கூப்பி வணங்கினார்.

       அஞ்சரை மணிக்கே நல்ல வெளிச்சம் வந்து விட்டது. மார்ச் இறுதி. மாசி பிறந்து பாதி கடந்து விட்டது. மரங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பித்து, வீட்டு வாசல் முழுதும் வெள்ளை நிறத்தில் வேப்பம்பூக்களும், பழங்களும் உதிர ஆரம்பித்து விட்டது.

       ரகுராமன் ரூம் லைட்டை அனைத்து விட்டு  வெளியில் வந்தார் .

       மேல்  போர்ஷனில் அவரின் மூத்த சகோதரி பிரேமா இருக்கிறாள். அவள்தான் எல்லோருக்கும் மூத்தவள். அடுத்து கௌசல்யா. பக்கத்திலேயே இருக்கிறாள். கடைசி ரகுராமன்.

       திருமணம் ஆன நாளிலிருந்து இங்குதான் இருக்கிறாள். மாமாவுக்கு சொந்த பிசினஸ். ஒரே பையன். அவன் பி.ஈ முடித்து விட்டு ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறான். அடிக்கடி நான் இங்கிருந்து போறேன் என்று சொல்லிக் கொண்டே, முப்பது வருஷமாக இதே வீட்டில் இருக்கிறாள். அம்மாவுக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.

       கௌசல்யா  எங்கோ தள்ளி இருக்கிறாள் என்று வருத்தம். நீ பக்கத்துலேயே ஒரு போர்ஷன் கட்டு. அதுல அவ வந்து  இருக்கட்டும் என்று நச்சரித்தாள். ஆனால் கௌசல்யா மறுத்து விட்டாள். நான் தூரவே இருக்கேன். அப்பப்போ வந்து பாத்துக்கறேன் என்றவள் ரகுராமனிடம்  “தம்பி உன் பக்கத்துல நாகப் பாம்பு இருக்கு. ஜாக்கிரதை என்று எச்சரிப்பாள்.

              தெரிகிறது. ஆனாலும் என்ன செய்ய? அம்மாவுக்கு மூத்த பெண் செல்லம். அதுவும் அம்மாவுக்கு பக்கவாதம் வந்த பின் பிரேமாவின் உதவி அதிகம் தேவை. சில சௌகர்யங்களுக்காக சில விஷயங்களை அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டியிருக்கிறது.   

       பிரியம், மனிதாபிமானம், முக தாட்சண்யம் என்றே வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்தாகி விட்டது. சொல்லப் போனால் வாழ்க்கையையே.

       ரகுராமன் நினைவை ஒதுக்கி விட்டு கிச்சனில் சென்று அடுப்பை பற்ற வைத்து பாலைக் காய்ச்சி அம்மாவுக்கு பனங்கல்கண்டு போட்டு தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு பிளாக் காபி கலந்து கொண்டார்.

       “எழுந்துட்டியா? அம்மா சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வந்தாள்.

       “நான்தான் வாக்கிங் போகணும். நீ எதுக்கு சீக்கிரம் எழுந்துண்டே?

              “தூக்கம் வரலைடா

       “ என்ன கவலை உனக்கு. அதான் பெரிய பொண்ணு கூடவே இருக்கா. சின்னவ டெய்லி வந்துட்டு போறா? என்ன கவலை?

       “உன்னை நினைச்சுத்தான். சின்ன வயசு. இப்படி வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறே.

       “ உனக்கு நான் சின்னப்பையன். ஆனா எனக்கு அம்பது வயசு ஆறது சிரித்தார்.

       “பார்த்தா தெரியலை. இன்னைக்கெல்லாம் வயசு ஒரு காரணமே கிடையாது. பிரேமாவோட சின்ன மாமனார் அறுபது வயசு. போன வாரம் புதுசா ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுண்டு வந்திருக்கார். நேத்து நைட் பூரா பிரேமா அதைப் பத்திதான் பேசிண்டு இருந்தா.

       “ஓஹோ நேத்து நைட்டு பூரா தூங்காம அவர் மண்டையைத்தான் உருட்டிட்டு இருந்தீங்களா? அவர் சின்னப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கலை. அவருக்கு சமமான வயசுதான். அவருக்கு உடம்புல பல நோய்கள். மனைவி இல்லை. வயசுக் காலத்துல ஒரு துணை அவசியம்னு செஞ்சுண்டிருக்கார். அதைப் பத்தி அவங்களே கவலைப் படலை. உங்களுக்கு என்ன?. உங்க குடும்பத்தைப் பத்திப் பேசுங்க.

                     சிறிது கோபத்துடன் பேசினார்.

       “அதுக்கிலடா. உனக்கு அம்பதுதான் நடக்கறது. நீ ஏன் வேற கல்யாணம் செஞ்சுக்க கூடாது?

       “அம்மா அதைப் பத்திப் பேசாதே. முடிஞ்சு போன விஷயம். ஒரு தடவைதான் கல்யாணம் செஞ்சுக்க முடியும். அதுவும் முடிஞ்சு போச்சு.

       “அவ உன்னை உதறிட்டுப் போயிட்டா. நீ இன்னும் அவளையே நினைச்சிண்டே இப்படி ஒத்தை மரமா நிக்கறியேடா

              “இப்படி நிக்கறதை பத்தி நானே கவலைப் படலை.

                                  “பெத்துட்டேனே.

              “ஏன் பெத்தே. ரெண்டு போதும்னு நிறுத்தியிருக்கலாம்ல?

       “என்னவோ, இதானும் ஆம்பளைப் குழந்தையா பிறக்காதான்னு ஒரு ஆசை.

       “எதுக்கு ஆம்பளைப் பையன். அவன் வாழ்க்கையை இழந்துட்டு உன் பொண்களை  எல்லாம் காப்பாத்தணும்னா.– வெடுக்கென்று கேட்டார்.

       ‘வீட்டுக்கு ஒரு ஆம்பளைப் பையன் நீ. கூடப் பொறந்தவாளுக்கு நீதானே செய்யணும்? இப்படி சலிச்சுக்கலாமா?

       “அம்மா சலிப்போடு காபித் தம்ளரை நீட்டினார்.

       “வார்த்தைகளை யோசித்துப் பேசு. யார் சலிச்சுக்கறா? உன் ரெண்டு பொண்களுக்கு கல்யாணம் செஞ்சு, இன்னை வரைக்கும் சீர் செய்யறேன். பிரேமாவோட பையன், கௌசல்யாவோட பொண்ணு எல்லோருக்கும் நான்தான் பீஸ் கட்டினேன், கட்றேன். பிரேமா நம்ம வீட்டிலேயேதான் இருக்கா. சாப்பிடறா. அதுக்கு நான் காசு கூட வாங்கறதில்லை. “

       “நான் வேணா அவகிட்ட சொல்லி பணம் வாங்கித் தந்துடறேன்.

       “ஏம்மா, நீ நினைச்சதைத்தான் பேசுவியா? என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா?

                           “- – – – – – – – – – – – – “

       உனக்கு உன் பொண்ணுங்க உசத்திதான். ஆனா என்னையும் சிந்திச்சுப் பாருன்னு சொல்றேன். இவ்வளவு செஞ்சும் சலிச்சுக்கறேன்னு நீயே சொன்னா எப்படி? இன்னும் என்ன செய்யணும்? உனக்கு, அக்காவுக்காகன்னு நிறையச் செஞ்சாச்சு. என் வாழ்க்கையையே வேண்டாம்னு ஒதுக்கியாச்சு. இதுக்கே மேலயும் என்ன வேணும்?

       அம்மாவின் மனம் உறுத்தியது. மெதுவாகப் பேசினாள்.

              “அப்படி இல்லைடா. உனக்கும் ஒரு வாழ்வு வேணும்னு விரும்றேன்.

                     “ஏன் அவளையும் துரத்தி விடவா?

       “‘ஏண்டா, நான் அப்படி நினைப்பேனா? –அம்மா ஆதங்கத்தோடு கேட்டாள்.

                     “நான் சொல்றதை நீயும் புரிஞ்சுக்கலை.

       “புரியுதும்மா. ஆனா என்னை இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லாதே.

              “அவதான் போயிட்டாளே. எங்க இருக்கான்னு தெரியலையே.

              “அவளா போகலையே.

                     “சரி, நாங்கதான் துரத்தி விட்டோம்.

                     “புரிஞ்சா சரி.

                     “ ஆனா நீ ஏன் அப்போ அமைதியா இருந்தே?

       ஆமாம். தன் அமைதிதான் கல்யாணியை வெகுளச் செய்திருக்கும்.

       “தன்னை துகிலுரிந்ததை விட ஐந்து கணவர்களும் காப்பாற்ற முடியாமல் நின்றதுதான் பாஞ்சாலியைக்  குறுகச் செய்திருக்கும். அதேபோல்தான் நானும். உங்க அக்கா என்மேல பழி போட்டது என்னை வருத்தப் பட வைக்கலை. ஆனா நீங்க அமைதியா இருந்ததுதான் என்னை குறுக வச்சிருக்கு. –கல்யாணி அந்த வார்த்தைகளை மட்டும்தான் எழுதினாள்.

              “எங்கே போகிறோம்? என்ன என்று எதுவும் சொல்லவில்லை.

       அவர் எதுவும் பேசாமல் தன் காபியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.

       மே  மாத வெயிலுக்கு வேப்ப மரத்துக் காத்து குளுமையாக இருந்தது. வேப்பம் பழங்களும், பூக்களும் பரவிக் கிடந்தது. கல்யாணி இவைகளை விட மாட்டாள். வேப்பம்பூவை காய வைத்து சாப்பாட்டில் கலந்து தருவாள். சுடச் சுட சாதத்தின் மேல் காய்ந்த வேப்பம்பூக்களைத் தூவி அதன் மேல் உருக்கிய நெய்யை ஊற்றுவாள். அதைப் பிசைந்து அவளுக்கு ஒரு  வாய் தந்து விட்டுத்தான் தான் சாப்பிடுவார்.

       எந்தச் சாதம் என்றாலும் அவளுக்கு ஒரு வாய் தந்து விட்டுத்தான் தான் சாப்பிடுவார். தன் மனைவி என்பதை விட குழந்தை என்றே அவளை நினைத்தார். இரவில் வேலைகளை முடித்து விட்டு வரும் வரை காத்திருந்து தன் மடியில் அவள் தலை வைத்துப் படுக்க விட்டு மெல்லிய குரலில் பாடுவார்.

       அவர்கள் ரூமுக்குள் தனியாக டிவி இருந்தது. அவர் தோளில் சாய்ந்து கொண்டுதான் பார்ப்பாள். அப்படியே தூங்கியும் விடுவாள். ரகுராமன்தான் எழுப்பி பிடித்துக் கொண்டு போய் படுக்க வைப்பார். தனியாக இருக்கப் பயம் அவளுக்கு. பகல் நேரத்தில் கூட தனியாக இருக்க மாட்டாள்.

       அவருடைய அம்மா, அக்கா எல்லோரும் கூட இருந்தார்கள்.

       அதில் அவளுக்கு ரொம்பச் சந்தோஷம். அம்மா, அம்மா என்று அம்மாவிடமும், அக்கா என்று பிரேமாவிடம் ஒட்டிக் கொள்வாள். இவர்களும் அன்போடு பழகுவார்கள். ஆனால் அது வேஷம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவள் பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்தவள்தான்.

       அம்மாவின் மாமா ஒருத்தரின் தூரத்து சொந்தம். அப்பா அம்மா இல்லாமல் அண்ணாவின் தயவில், அண்ணியின் வெறுப்புக்கு நடுவில் வளர்ந்தவள். அப்போது ரகுராமனுக்கு வேலை இல்லை. படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அக்கா பிரேமாவிற்கு திருமணம் ஆகி பையன் பிறந்து ஒரு வயசு.

       பையனுக்கும் வேலை இல்லை. பெரிய இடத்தில் பெண் கிடைக்காது. இது நல்ல பெண். குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருப்பா. சீர் செனத்தி ஜாஸ்தி செய்ய முடியாது. ஆனா நல்ல பொண்ணு. உங்ககிட்ட பிரியமா இருப்பா.– என்றார்.

       பெண் பார்க்கப் போனபோது அவளிடம் தனியாகப் பேசும்போது அவள் ஒரு கேள்விதான் கேட்டாள் .

       “உங்க அம்மா, அக்கா எல்லாரும் உங்க கூடத்தான் இருப்பாங்களா?

                           “ஆமாம். ஏன்.

       “எனக்கு வீடு நிறைய மனுஷங்க வேணும். எந்நேரமும் கலகலன்னு வீடே ஜெகஜோதியாய் இருக்கணும். அவங்க கூட இருக்கணும்னு விரும்பறேன். அம்மா, அக்கா எல்லாரும் அன்பா பேசறாங்க. இந்த அன்பை நான் முழுசா அனுபவிக்கனும்னு விரும்பறேன்.

       அந்த ஆசையே அவள் எப்படி என்பதை நிரூபித்தது. அந்த முழுமை உணர்வில் அவர் கல்யாணியை மணக்கச் சம்மதித்தார். வாழ்க்கையும் இனிமையாகத்தான் ஓடியது. ஆனால் எல்லோரும் வேண்டும் என்று நினைத்தவளை எல்லோரும் வெறுத்தார்கள். ரகுராமன் அவளிடம் மயங்கி தங்களை வெறுத்து விட்டால் என்ன செய்வது என்று பயம் அக்காக்களுக்குள்.

       என்னவோ கல்யாணி போய் விட்டாள்.

              எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. போகும்போது கர்ப்பமாக இருந்தாள். என்ன குழந்தை என்று தெரியவில்லை. மனசுக்குள் ஆசை ததும்புகிறது. என்றேனும் ஒருநாள் சந்திப்போம் என்று நம்பினார்.

       அவர் செய்த தவறுகள், பேசாமல் இருந்ததால் ஏற்பட்ட விபரீதங்கள் என்று எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

       ரகுராமன் வாசல் படியிலேயே அமர்ந்திருந்தார்.

       “ஹலோ ரகு, இனிய காலை வணக்கம்.– பிரேமாவின் கணவர் பெரிய மாமா கை வீசி விட்டுப் போனார். காலையில் வாக்கிங் போய்விட்டு அப்படியே டீக் கடையில் டீ சாப்பிட்டு வருவார். மாலையில் அதே போல் சென்று வடை, பஜ்ஜி, என்று சாப்பிட்டுவிட்டு வருவார்.

       மாமா எதுவுமே சாப்பிடறதில்லை. நான்தான் பாத்து,பாத்து செஞ்சு போடுவேன். என் கைச் சாப்பாடு மட்டும்தான் அவர் சாப்பிடுவார் என்று பிரேமா பெருமை அடித்துக் கொள்வாள்.

       வாசல் திண்ணையில் தட்டு நிறைய பஜ்ஜியை வைத்துச் சாப்பிடும் மாமாவைப் பார்க்கையில் அக்காவை நினைத்துப் பாவமாக இருக்கும். பொறுப்பில்லாதவர். ஆனால் பந்தா பேர்வழி. குடும்பத்தைக் காக்க ரகுராமன் இருக்கான். எனக்கென்ன என்று படுத்து விடுவார்.

ஒரே பையன். பாலமுருகன் என்று பெயர். கல்யாணியிடம்தான் வளர்ந்தான். அவனுக்கு ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை பீஸ் கட்டி படிக்க வைத்தது ரகுராமன்தான். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த கல்யாணியை எல்லோரும் பழி சுமத்தி துரத்தி விட்டார்கள்.

கல்யாணி நீ எங்கே இருக்கே?-மனசு வேதனையோடு கேட்டது.

-(ஏக்கம்.. தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...