நாம் சந்திப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா
மன அழுத்தம் கொண்டவர்களைப் பார்த்தாலே தனியாக அடையாளம் தெரியாது.
அவர்கள் நம்மோடு இயல்பாக பழகிக்கொண்டுதான் இருப்பார்கள். புன்னகைப்பார்கள். ஆனால் அந்த ராட்சசன் மனதுக்குள் ரகசியமாக பதுங்கியிருப்பான்.
கோலி சோடா உடைக்கும்போது பொங்கி வழிவதைப் போல.. அந்த ராட்சசன் பொங்கி வழிய ஒரு தருணத்திற்குக் காத்திருப்பான்.
மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் தாம் மன அழுத்தத்தில் இருப்பது அவர்களால் உணரமுடியும்.
பெரும்பாலும் திட்டங்கள் தோல்வியடையும்போது, எதிர்பாராத இழப்புகளைச் சந்திக்கும்போது, தன்னம்பிக்கை குறைந்து மன அழுத்தம் எட்டிப் பார்க்கிறது.
பார்வைத் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுடன் பேசிப்பார்த்ததுண்டா? நமக்குதான் அச்சச்சோ என்று பரிதாபம் இருக்கும். அவர்கள் சுய இரக்கத்தை எப்போதோ கடந்திருப்பார்கள். இந்தக் குறைபாடு எனக்கு அமைந்தது, வாழ்நாள் முழுக்க சரிசெய்ய இயலாதது என்கிற வலிக்கும் உண்மையை ஜீரணித்து விடுவதால் அந்தக் குறைபாடு அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிப்பதில்லை. இதேப் போல பல வகையான மாற்றுத் திறனாளிகளும் accept the inevitable என்று வாழ்வதால் அவர்களை மன அழுத்தம் நெருங்குவதில்லை.
நமக்கு மனச் சோர்வோ, அழுத்தமோ ஏற்படும்போது மாற்றுத் திறனாளிகள் கணிணி, விளையாட்டு, கலை என்று சகல துறைகளிலும் செய்துள்ள சாதனைகளை யூடியூபில் பார்த்தால்.. தன்னம்பிக்கை பெருகும். நாம் சந்திப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று குற்ற உணர்ச்சியே ஏற்படும்.