தமிழகத்திலேயே ஒரு ஆலப்புழா இருக்கு… ரூ.500 போதும்!
இனி கேரளாவுக்கு போக வேணாம்: தமிழகத்திலேயே ஒரு ஆலப்புழா இருக்கு… ரூ.500 போதும்!
சுற்றுலா பிரியர்கள் பெரிதும் விரும்பும் கேரளாவைப் போலவே, தமிழகத்திலும் ஒரு ‘குட்டி கேரளா’ என அழைக்கப்படும் அழகான இடம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தென் இந்தியாவில் சுற்றுலாவுக்கான மிக சிறந்த இடமாக கடவுளின் சொந்த நாடு எனக் கூறப்படும் கேரளா உள்ளது. எங்கு திரும்பினாலும் பச்சை பசெலென்ற காட்சிகள், வயல்வெளிகள், ஆறுகள், மலை தொடர்கள் கண்ணில் தென்படும்.
மேலும் அங்கு பெரும்பாலான இடங்களில் ஆற்றில் படகு பயணம் செய்வதையும், அந்த ஆறுகளின் கரை ஓரங்களில் வீடுகள் அமைந்து இருப்பதையும் பார்க்க முடியும். கேரளாவில் இருக்கும் கிராம பகுதிகளில் வீட்டுக்கு அருகிலேயே ஆறு அல்லது குளம் நிச்சயம் இருக்கும். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கும் நகர சூழலில் இருந்து இங்கு சுற்றுலா செல்லும் பலருக்கும் இது போன்ற இடத்திலேயே நிரந்தரமாக இருந்து விட மாட்டமோ என்ற ஏக்கம் இருக்கும்.
தமிழகத்தில் ஒரு குட்டி கேரளா
சுற்றுலா பயணிகளின் இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் தமிழகத்தில் கேரளாவை பிரதிபலிக்கும் ஒரு அழகிய கிராமம் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா…? ஆம் தமிழகத்திலும் ஒரு குட்டி கேரளா இருக்கிறது. இதனை குட்டி ஆலப்புழா என்றும் கூட சொல்லலாம்.
அழகிய பூலாம்பட்டி கிராமம்
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் உள்ள பூலாம்பட்டி என்ற கிராமம் தான் ஏழைகளின் ஆலப்புழா என சொல்லப்படுகிறது. இங்க போய்ட்டு வர ரொம்ப பணம் தேவை இல்லை. 500 ரூபாய் மட்டும் போதும், இதில் நான்கு பேர் செல்லலாம். ஆலப்புழாவில் எப்படி படகு சவாரி பிரதானமோ, அதுபோல பூலாம்பட்டியை அடைய வேண்டும் என்றால் படகில் தான் செல்ல முடியும். ஒரு நாள் பயணத்திற்கு திட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற ஸ்பாட் இது. சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
இயற்கை காட்சியும் படகு சவாரியும்
எடப்பாடியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூலாம்பட்டி மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு அழகான நீர் நிலைகள், புல்வெளிகள், இயற்கை காட்சி நிரப்பிய படகு சவாரி ஆகியவை நல்ல அனுபவத்தை தருகிறது. இங்குள்ள கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே உள்ளது
.
இச்சை கொள்ளும் பச்சை நிறம்
படகில் செல்லும் வழி எங்கும் பச்சை பசேல் என்ற காட்சியை காண முடியும். மேலும் பூலாம்பட்டியில் கொக்கு மீன் ரொம்ப பிரபலம். மறக்காம அத ட்ரை பண்ணிட்டு வாங்க. இளைய தளபதியின் ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் தேவயானியின் பெண் பார்க்கும் படலம் நினைவிருக்கிறதா உங்களுக்கு? அந்த காட்சி இந்தக் கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது.
நெல் வயல்களும், பருத்தி வயல்களும்
இந்த கிராமத்திற்கு சென்ற உடன் இங்குள்ள நெல் வயல்களும், பருத்தி வயல்களும் நம்மை வரவேற்க காத்திருக்கின்றன. இயற்கையின் அழகை கண் கெட்டாமல் ரசித்தவாறு செல்லும் படகு சவாரி 15 ரூபாய் தான். வெயிலின் அதீத தாக்கத்திலும் இந்த பூலாம்பட்டி காவிரி ஆறு வற்றாது எனக் கூறப்படுகிறது. ஆற்றில் குளியல் போடுபவர்களுக்கான வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பூலாம்பட்டி கிராமம், மேட்டூர் அணையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து 1 மணி நேரத்தில் சென்று விடலாம். அதேபோல கோவை இருந்து இரண்டு மணி நேரத்திலும் போய் விடலாம்.