கழிவறை இருக்கை

 கழிவறை இருக்கை

நூல்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ்
“கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்…
வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க வைப்பதோடு.. நமக்கு முன்னே விரிந்து பரந்து கிடக்கும் மிச்சமுள்ள காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் வாழ்வியல் பதிவேடு.

ஆதி தொட்டு இன்றைக்கு வரைக்கும் தனக்கென்று தனியாக எந்தவிதமான விருப்பு வெருப்புமற்று ஆணின் கழிவறை இருக்கையாகவே இயங்கிவரும் பெண்ணினத்தின் கோணத்திலான … அத்தனை காத்திரங்களையும் இறக்கி வைத்திருப்பதில் ” கழிவறை இருக்கை” அதிரடி..சரவெடி. ஒவ்வொரு வரியும் வார்த்தைகளும் சாட்டையடி. எந்தவிதமான ஒப்பனைகளோ பாசோங்கோயில்லாத இத்தனை வெளிப்படையானதொரு புத்தகத்தை ஆக்கம் செய்த படைப்பாளிக்கு மிகப்பெரிய சலாம்.

புத்தகத்தின் அட்டை வடிவமைப்பே நிறையப் பேசுகிறது. ஒளித்து மறைத்து வைக்கும் இருட்டடைந்த கருப்புப் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் வெள்ளை எழுத்தாக “கழிவறை இருக்கை” ஒரு குறியீடாகவே தோன்றுகிறது.

ஆணோ பெண்ணோ.. காதலும் காமமுமான உணர்வுகள் இருவருக்குமான இயற்கையென்றாலும் அதைப் பற்றிய தனது கருத்துக்களையோ விருப்பு வெருப்புக்களையோ வெளிப்படையாக பேசுவதில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு தரப்படுவதில்லை. அப்படி வெளிப்படையாக பேசும் பெண்ணை.. இவள் எதற்கும் எவருக்கும் மடிந்துவிடுவாள் என்ற கண்ணோட்டத்திற்குள் தான் காலம்காலமாக அடைத்து வைத்து காதலையும் காமத்தையும் அவளுக்கு அந்நியமாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகம்.

யாரும் வெளிப்படையாக பொதுவில் பேசத்தயங்கும் காதல், காமம், திருமண உறவு, திருமணம் கடந்த உறவு, நட்பு, குடும்பம், சுய இன்பம் , பாலியல் கல்வி குறித்தான தேவை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை யும் அது குறித்தான பெற்றோர்களின் பங்கும் சமூகத்தின் பங்கும் என நாம் இதுவரைக்கும் ஒளித்து மறைத்து வைத்த இருட்டுப் பக்கங்களையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக உடைத்து நொறுக்கியெடுத்திருப்பதில் அதிலும் ஒரு பெண்ணாக இருந்து இதைச் செய்த துணிச்சலில்…அசரவைக்கிறார்.. ஆசிரியர்.

இந்தப் புத்தகம் எதிர்மறை நேர்மறையென பல்வேறுபட்ட விமர்சனங்களையும் , விவாதங்களையும் எதிர்கொள்ளும் நிலையில்..
நிச்சயமாக நல்லதொரு மாற்றத்திற்கான விதையினை தூவிச் செல்லும் என்றே நம்புவோமாக. புத்தகம் முழுக்க முழுக்க தன்னுடைய கருத்துகளாகத்தான் அத்தனையும் முன்வைத்திருக்கிறார் ஆசிரியர். வாசிப்போருக்கு ஏற்புடையதோ
மறுப்புடையதோ… ஆனால் நிச்சயமாக ஆரோக்கியமான விவாதத்திற்கும் கருத்துச் செரிவுக்குமான.. பேசியே ஆகவேண்டிய ஒன்றும் தான் இந்தப் படைப்பு.

ஆணும் பெண்ணும் பேசுவதிருக்கட்டும்..
இணையர்களுக்குள் கூட பேச முன்வராத.. பேசிக்கொள்ள கூச்சப்படுகிற
விசயமாகத்தான் இன்றளவும் கலவியென்பது ஒளித்து வைக்கக்கூடிய மறைமுகப் பொருளாக பாவிக்கப்படுவதை அத்தனை ஆழமாக அலசியிருக்கிறது இப்படைப்பு. மறைக்கப்படும்.. ஒளிக்கப்படும் ஒன்றை நோக்கித் தானே தேடலும் நாடலும் ஓடுகின்றன. அங்கிருந்து தானே தவறின் புள்ளி தொடங்குகிறது.

காதலும் கலவி குறித்துமான தனது தேவை என்ன, ஆசை என்ன, எதிர்பார்ப்பு என்ன, விருப்பு வெருப்பு என்னவென்று ஒரு பெண்ணை பேச
முற்படுத்துவதும்.. அதை அறிய முற்படுவதும் .. அறிந்து கொண்டவாறு அவ்வழியே கலவிப் பயணத்தை இருதரப்புமாக இணைந்து இசைதலிலான தாம்பத்தியத்தின் தலையாய கடமைகளில் ஒரு ஆணின் பங்கு என்ன என்பதனை முன்னிறுத்திய விதத்தில்… உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று உரக்கப் பேசியிருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும்.

இணையர் ஒருவருக்கொருவர் மற்றவர்களுடைய கலவி குறித்தான தேவைகளையும் தேடல்களையும் உணர்வுகளையும் உளப்பூர்வமாக உணர்ந்து .. அதற்கு மதிப்பு கொடுத்து.. அவர்களையும் நெஞ்சார்ந்து உளப்பூர்வமாக அனுபவிக்கச் செய்து தானும் அவ்வாறே உவகை கொள்ளும்படியான ஒருவரையொருவர் கொண்டாடிக் கொண்டாடி குதூகலித்துக் களிப்படைய வேண்டிய ஒரு உன்னதத் தருணத்தை…
அவ்வாறல்லாது… நட்புணர்வோ காதலுணர்வோ துளியும் இல்லாது..
காலைக் கடனை முடித்துக் கொள்வது போல் கலவிக் கடனை முடித்துத் திரும்பிக் கொள்ளும் நாராச சம்பவத்தைத் தான் “கழிவறை இருக்கை” என்று
வெடி வைத்துத் தகர்த்தெறிந்திருக்கிறார் ஆசிரியர்.

நிவர்த்தி செய்து கொள்ளப்படாத .. நிறைவு செய்யப்படாத போதாமையில் அலையும் கலவித் தேடலும், வெளிப்படையாய்ப் பேசிப் பரிமாறிக் கொள்ளும் ஒரு காதலான கூடலை கலாச்சாரச் சீரழிவென்று ஒளித்து மறைத்து வைக்கும் மையப் புள்ளியில் தானே பிறன்மனை நோக்குதலும் பாலியல் வன்முறைக்குமான குற்றங்களின் புள்ளி தொடங்குகிறது என்பதனை உள்ளார்ந்து அலசியிருக்கும் விதத்தில் ” கழிவறை இருக்கை” சமூகப் பார்வையிலான காதல் காமம் குறித்தான ஒரு மிகச்சிறந்த உளவியல் படைப்பென்றே சொல்லலாம்.

நணபர்களுடனான கருத்துப் பரிமாற்றங்கள் என்று ஆசிரியர் முன்வைக்கும் அத்தனையிலும் துளியும் மிகையில்லை. காதல் உணர்வில்லாத கலவியென்பது… இருபாலரையும் நிச்சயம் போதாமையின் பாதையில் மனப்பிறழ்வுக்கு தான் கொண்டு செலுத்தும் என்பதை அப்பட்டமாகக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார்.. ஆசிரியர்.

முப்பத்திரண்டு கட்டுரைகளையும் உள்ளார்ந்து வாசித்து முடிக்கையில் காதலும் நட்புணர்வும் இல்லாது கழிவறை இருக்கையாகிப் போன காமத்தின் பாதையிலான அத்தனை குற்றங்களுக்கும் “அன்பில்லா நெஞ்சம் பாழ்” என்ற வரிகள் அர்த்தம் போதிக்கின்றன.

மொத்தத்தில் .. திருமண பந்தத்தில் காலெடுத்து வைக்கும் புதிய இணையர்களாகட்டும்.. தாம்பத்தியப் பயணத்திலிருக்கும் துணைவர்களாகட்டும்.. வயது, பாலின பேதமின்றி இருபாலருக்குமான காதலும் கலவியும் குறித்தான புரிதலுக்கும் அறிதலுக்குமான மிகச்சிறந்த உளவியல் கையேடு ” கழிவறை இருக்கை”.

அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டியதும் .. ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களில் தெளிவடைந்து கொள்ளக் கூடியதுமான அருமையான புத்தகம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...