‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ || மலேசியாவில் லைவ் கான்சர்ட்  

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ என்கிற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு அரங்கில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பு பிப்ரவரியில் இதன் அடுத்த சீசனை 2.0 என்கிற பெயரில் நடத்துவதற்கு உத்வேகம் அளித்தது.
மிகத் திறமையான மற்றும் நன்கு பிரபலமான இசைக்கலைஞர்கள் பங்குபெற்ற, டத்தோ அப்துல் மாலிக் அவர்களால் வழங்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி ஒருவிதமான புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

பாப், ராக், நாட்டுப்புற மற்றும் ஹிப்ஹாப் என வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்து விதம்விதமான இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உற்சாகமும் இளமைத் துள்ளலுமாக வரிசை கட்டிய இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடல்களுக்கு அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் கோரஸாகப் பாடியதுடன் அவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினர்.
ஒலி அதிர்வுகளாலும் மற்றும் ஒளி அலங்கராங்களாலும் ஆக்சியாட்டா அரீனா அரங்கமே ஒரு மறக்க முடியாத இசை அனுபவத்திற்கு மாறியது. வருகை தந்த ஒவ்வொரு பார்வையாளருமே மேடையில் நிகழ்வதை நேர்த்தியாகக் கண்டுகளிக்கும் விதமாக இருக்கை ஏற்பாடுகள் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ் 2.0’வை தொடர்ந்து 3.0 & 4.0 ஆகியவை சமீபத்தில் கடந்த வாரத்தில் மலேசியாவில் நடைபெற்றன.

தங்களது அசத்தலான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைத் தங்களது குரலால் கட்டிப்போட்ட பாடகர்கள் திப்பு, ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் ஆலாப் ராஜூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது..
அடுத்ததாக கார்த்திக், கிரிஷ் மற்றும் விஷ்ணுப்ரியா ஆகியோர் வேறுவிதமான உணர்வை மேடையில் கொண்டுவந்தனர். அவர்களது ஆத்மார்த்த இசையும் வசியம் செய்யும் குரலும் அந்தப் பாடல்களுக்குப் பார்வையாளர்களையும் ஆடவைத்தன.
விதவிதமான ஜானர்களுடன் கூடிய இசையாலும் நிகழ்ச்சிகளின் வரிசையாலும் இரவு கடந்தும் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பார்வையாளர்களைத் தொடர்ந்து வசீகரித்தது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வித்தியாசமான ஸ்டைல்களால் அவற்றை ஒருங்கிணைத்த நேர்த்தியாலும் கூடிய ஒரு ஏற்பாடாக மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், விஜே ரம்யா சுப்ரமணியம், நடிகை அனு இம்மானுவேல் மற்றும் மிருணாளினி ரவி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன் தங்களது பேச்சாலும் செயலாலும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர்.

ஹரிசரண், ஸ்ரீதர் சேனா, ஷர்மிளா மற்றும் சைந்தவி ஆகியோரின் மிரளவைக்கும் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. கூடியிருந்த கூட்டத்தை பிரமிக்க வைத்த அவர்களைப் பாராட்டும் விதமாக அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்
மொத்தமாகப் பார்க்கையில் இந்த இசை நிகழ்ச்சி ஒரு மாபெரும் வெற்றி. பார்வையாளர்களைப் போரடிக்கவிடாமல் பொழுதுபோக்கச் செய்யும் வகையிலான சிறந்த பணியை மேற்கொண்ட இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஒவ்வொருவரும் அடுத்த நிகழ்ச்சி எப்போது நடக்க உள்ளது எனக் கேள்வி எழுப்பும் அளவுக்கு அனைவருக்கும் முழு திருப்தி அளித்ததுடன் குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது.

டிக்கெட் முழுதும் விற்றுத் தீர்ந்த நான்கு சீசன்களால் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ 5.0வை பினாங்கிலும் 6.௦0வை சிங்கப்பூரிலும் 7.0வை மலேசியாவிலும் அடுத்தடுத்து நடத்த உள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!