முதல்வர் பதவி || கர்நாடகாவில் தள்ளுமுள்ளுக்கிடையில் சமரசம்

 முதல்வர் பதவி || கர்நாடகாவில் தள்ளுமுள்ளுக்கிடையில் சமரசம்

கடந்த 13ஆம் தேதி கர்நாடகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றும் கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. காரணம் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சிவகுமாருக்குத்தான் முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று ஒரு பிரிவினருக்கும் கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்குத்தான் முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று இன்னொரு பிரிவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்தது கர்நாடகாவில்.

ஒரு வழியாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா, ராகுல் ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சித்தராமையா கர்நாடக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக உள்ள 75 வயதான சித்தராமையா இருப்பார் என்று காங்கிரஸ் மே 18 அன்று அறிவித்தது. சிவக்குமார் துணை முதல்வர்.

பெங்களூருவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் மத்திய பார்வையாளர்கள் கலந்துகொண்ட பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு வாரத்தில் இது இரண்டாவது சட்டமன்றக் கூட்டம். முதல் கூட்டம் மே 14 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில், சிவக்குமார் சட்டமன்றத் தலைவராக உள்ளதால் சித்தராமையாவைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமனதாக அதற்கு ஒப்புதல் அளித்தனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழு சனிக்கிழமை (மே 20) பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்க உள்ளது.

பதவியேற்பு விழாவில் பிற மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் பிரதிநிதிகள் ராஜ்பவனில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

1989ஆம் ஆண்டு முதல் எட்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவக்குமார், கர்நாடகாவின் ஒரே துணை முதல்வராக இருப்பார். “லோக்சபா தேர்தல் (2024) முடியும் வரை அவர் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி. தலைவராக நீடிப்பார்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறினார்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் அறிவிப்பு வெளியானவுடன், இரு தலைவர்களும் ட்விட்டரில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள ஐந்து “உத்தரவாதங்கள்” மற்றும் கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வழங்குவதற்கு ஒரு குடும்பமாக வேலை செய்வோம் என்று தெரிவித்தனர்.

வியாழன் அன்று சித்தராமையா, சிவக்குமார், வேணுகோபால், சுர்ஜேவாலாவுடன் காலை உணவை உட்கொண்டனர். இரு தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிக்கும் முயற்சியாக மல்லிகார்ஜுன கார்கே இரு கர்நாடக தலைவர்களின் கைகளையும் உயர்த்திப் பிடிக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

உள்ளபடியே இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை. இடையில் சோனியா காந்தி ஈடுபட்டு “இரண்டு ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பார் அதன் பிறகு (சிவகுமார்) நீங்கள் முதல்வராக இருங்கள், உங்களுக்கு வேண்டிய துறையையும் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று உத்திரவாதம் கொடுத்ததன் காரணமாகவே சிவகுமார் ஒத்துக்கொண்டதாகத் தகவல் வந்துள்ளது.

முதல்வர் தேர்வு சுமூகமாக நடக்காததால், அமைச்சரவை அமைக்கும் பணி, குழப்பமாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், 32 அமைச்சர் பதவிகளுக்கு, கட்சியில் 50க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான துணை முதல்வருமான ஜி. பரமேஸ்வரா, (37) தலித் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, துணை முதல்வர் பதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். எனக்கும் துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று வம்பிழுத்திருக்கிறார்.

சித்தராமையா, சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, (20/5/23) நாளை அமைச்சர்களாகப் பதவியேற்கும் வேட்பாளர்களை கட்சியின் மத்திய தலைவர்கள் பட்டியலிடுவார்கள் என்று கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் பட்டியலில், பாட்டீல், ஜி. பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, பி.கே. ஹரிபிரசாத், எச்.கே. பாட்டீல், கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி மற்றும் யு.டி. காதர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே “இந்த முறை எப்படி கவிழ்க்கலாம்? கூட்டணி ஆட்சியைப் பிடிக்கலாம்” என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது பா.ஜ.க.

பாவம் அது இந்த முறை கர்நாடகாவில் எடுபடாது என்று அடித்துச் சொல்லலாம். ஆனாலும் விடாது கருப்பு… சாரி (காவி) சிவப்பு…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...