நூல்கள்… பரிசுகள்… ஆளுமைகள்…

 நூல்கள்… பரிசுகள்… ஆளுமைகள்…

இன்று உலகப் புத்தக தினம். எழுத்தையும், எழுத்தாளர்களையும் வாசகர்கள் மரியாதை செய்யும் திருநாள். புத்தகங்கள் தாமாகவே தம்மை எழுதிக்கொள்வதில்லை. ஆக, அவைகளை எழுதி உயிர்கொடுக்கும் ஆசான்களுக்கு மரியாதை செய்வோம் வாருங்கள்.

ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனம் கிண்டிலில் போட்டியொன்றை நடத்துகிறது. கடந்த நான்கு வருடங்களாக இப்போட்டியை அவதானித்து வருகிறேன். எனக்குத் தெரிந்து 2018-ல் டாக்டர் சென்பாலன் எழுதிய   “பரங்கிமலை இரயில் நிலையம்” என்ற நூல் ஐந்து லட்சம்  முதல் பரிசு வென்றது. 

2019-ல் நடந்த போட்டியில்  ”பேலியோ அறிவியலும் உணவியலும்” என்ற நூல் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெரிய சர்ச்சைகள் கிளம்பியது. காரணம்  அவ்வருட போட்டியின் நடுவர் ஒருவர் அவ்வகை உணவுக் குழுவின் மிக முக்கியஸ்தராகவும் அந்த உணவு முறையைப் பின்பற்றுபவராகவும் இருந்தார். சைவ பேலியோ என்றொரு நூலையும் எழுதியிருந்தார். பரிசு பெற்ற நூலோ நாவல் இலக்கியங்களுக்கு  வெகுதொலைவில் கிடந்தது. புனைவு அல்லது அபுனைவு என்பதைக் கடந்து வேற்றெழுத்துக்கு அந்தப் போட்டியில் வேலையில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக விதிமுறையில் சொல்லியிருந்தபோதிலும் சோரம்போவதில் எப்போதும் சுயவிருப்பம்கொண்ட  நடுவர்களால் ஒட்டறிவியலில் எழுதப்பட்ட மொக்கை புத்தகத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில்  இன்னொரு கொடுமையும் நடந்திருந்தது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் சனநாயகப் பேரியக்கத்தின்  பட்டத்திளவரசருடன் கூடப் படித்தவர் என்று நம்பப்பட்ட ஒருவர் எழுதிய நூலுக்கு இரண்டாம் பரிசு ஈகப்பட்டது. 

கடைசியாக  மூன்றாம்பரிசு எனக்கு மிகப் பரிச்சையமான  ஒரு  கோமாளிக்குப்  போனால் போகட்டும் என்று கொடுத்தார்கள்.  அவரை பகடி செய்வதாக நினைக்கவேண்டாம்.  எனது கணவரும் அவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அந்தக் கதையை எனக்கு முதலிலேயே அனுப்பியிருந்தார். படித்துப் பார்த்துவிட்டு அவ்வருடம் கிண்டிலில் பிரசுரிக்க வேண்டாம் என்று நான்தான் முதலில் சொன்னேன். காரணம் ஏராளமான எழுத்துப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் இருந்தன. ஆனால் மிக நல்ல கதை மற்றும் கதைக்களம். ஆனால் அபுனைவுக் கதையான இதில் பேய், ஆவி என்று கதைவிட்டால் அது புனைவாகிவிடும் என்று  சொன்னேன். பேய்கள் எப்போதும் பேய்களை நம்புவதில்லையென திருவாய் மலர்ந்தவர் என்னிடம் சொல்லாமலேயே முடிந்தவரை பிழை களைந்து சாந்தினி சொர்க்கம் என்ற அந்த நூலை கிண்டிலில் வெளியிட்டுவிட்டார். சிலர் இயல்பிலேயே திறமையானவர்களாகவும் அதே சமயம் மண்டைக்கனம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.  ‘இவள் சொல்லி நாம் கேட்பதா?’ என்று  நினைத்துக் களமாடியவருக்கு மூன்றாம் பரிசைக் கொடுத்து முகத்தில் கரியைப் பூசிவிட்டார்கள் நடுவர்கள். 

அது உண்மையாகவே முதலிடத்திற்கு வந்திருக்கவேண்டிய அற்புதமான நாவல்.  ஆனால் எழுத்தால் கெடாத அந்த நாவல் எழுத்தாளனால் கெட்டது. அவ்வருடம் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கவேண்டிய லஷ்மி சரவணக்குமாரின் ‘ரூஹ்’ மற்றும் சிவசங்கர் அவர்கள் எழுதிய ‘தோழர் சோழன்’ ஆகிய இரண்டும் பரிசுப் பட்டியலில் இருந்து வெளியே போய்விட்டது. எங்கள் ‘கனா’ என்ற   அற்புதமான அறிவியல் நூல் இறுதிச் சுற்றுக்கே வராமல் போனது.  இதையெல்லாம் ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். அடுத்த வருடம் மீண்டும் போட்டி அறிவித்தபோது  மீண்டும் ஒரு கதையை எழுதி எனக்கு அனுப்பியிருந்தார் அந்த  எழுத்தாளர்.

‘கயல்வெளி’ என்ற அந்தக் கதையைப் படித்துப் பார்த்த எனக்குத் தலை சுற்றியது.  அப்பட்டமான அபுனைவு. சுயசரிதை. எந்த ஒரு நாவலோடும் போட்டிப் போடும் கதைக்கோர்வை. எனக்குப் போனால் போகட்டும் என்று வாழ்க்கையும் கொடுத்து, சோறு போடும் எனது அன்புக் கணவரும் அக்கதையில் ஒரு பாத்திரமாக வந்திருந்தார். 

ஆனால் வழக்கம்போல அதே எழுத்துப் பிழைகளும் ஒற்றுப் பிழைகளும்.  முதல் நாவலுக்குச் சற்று குறைவாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக சீர்படுத்த முடியவில்லை. எனக்கும் தமிழறிவு குறைவுதான். இலக்கிய, இலக்கணமெல்லாம் கல்லூரி இளங்கலையோடு முடிந்ததென்றாலும் இவர்கள் ஊரின் மொழியறிவு எனக்கு இலகுவாக  கைவரவில்லை என்பதும் ஒரு காரணம்.

அந்த மொழி நடை எழுத்துலகிற்கு முற்றிலும் புதியதாக இருந்ததும் இதை வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும்கூட எனக்கிருந்தது. வாசகர்கள் ஏற்றுக்கொண்டு முகநூலிலும், முகநூலுக்கு  வெளியேயும் கூட அந்த நாவலைக் கொண்டாடினார்கள். அதற்குத் தகுதியான நாவல்தான் அது. ஆனால் அவ்வருட ஆப்பு சாரு நிவேதிதா மற்றும் சரவண கார்த்திகேயனால்  அழுத்தமாகச் செதுக்கியடிக்கப்பட்டது.
“ஓப்பன் பண்ணா”   என்றொரு  ஒப்பில்லாத ஈடிணையற்ற இலக்கிய நூல் அவ்வருட முதல் பரிசை தட்டிச் சென்றது. 

‘கயல்வெளி’ ஆசிரியரோ கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தார்.  உன்னால்தான் என்  கதைக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்று சம்பந்தமேயில்லாமல் எனக்கு  வகைதொகையில்லாத ஏச்சும் பேச்சும்  கிடைத்தது. 

அதீத திறமைசசாலிகள் எல்லோரும் ஏன் இப்படி சில அடிப்படை விசயங்களில் மட்டும் மூடர்களாக இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இன்றுவரை போகாததற்கு இவரும் ஒரு காரணம். இதைப் படித்துவிட்டு அவர் பொங்கல் வைக்க வாய்ப்பில்லை என்ற தைரியத்திலேயே இதை எழுதுகிறேன். ஏனென்றால் எனது மாமியார் சாகக் கிடக்கிறார். நான் அங்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். போன் வழியாக அடிக்க முடியாது. திட்டினால் கேட்டுக்கொண்டு சிரிப்பேன். ஆகவே இதுவே சமயம் என்று அறிந்தே இதை எழுதுகிறேன். ஆனால் அவ்வருடம் முதுபெரும் கவிஞரும், ஓவியருமான அய்யா இந்திரன் ராஜேந்திரன் அவர்கள்  நடுவர்களின் அறமற்ற செயலைச்சாடி ஒரு பதிவை எழுதியிருந்தார். அதைதொடர்ந்து எழுத்தாளர் நா. கோபாலக்கிருஷ்ணன்  அண்ணா அவர்களும் நடுவர்களை கடுமையாகச்சாடி பதிவெழுதினார்கள். நானும் என் பங்கிற்கு போதுமான அளவுக்கு பொங்கியிருந்தேன்.  எல்லாவற்றையும் விட முதல் பரிசை தவறவிட்ட அந்த எழுத்தாளர் முக நூலில் வைத்த பொங்கல் மிகச்சுவையாக  பரவலாக பகிரப்பட்டது. 

அடுத்து மூன்றாவது வருடம் அதிசயமணிகள் என்ற தனது மூன்றாவது சுய சரிதையை எழுதி எனக்கு அனுப்பியிருந்த போது கையெடுத்துக்கும்பிட்டு என்னால் கருத்துச்சொல்ல  இயலாது  என்று சொல்லிவிட்டேன்.  ஏற்கனவே  வேறு பல சிக்கல்களில் சிக்கிச்சீரழிந்து கிடந்த என் நிலையை   நன்றாகவே அறிந்திருந்த அவர் என்னை குறை சொல்ல வழியில்லை.  ஒரு வழியாக அதையும் கிண்டிலில் பதிவிட்டு யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அதிக பட்ச  நேர்மறை  பின்னூட்டங்களை  பெற்ற கதையாக   கிண்டிலில் வலம் வந்தது. தெய்வாதீனமாக இந்தக்கதையோடு போட்டியில் இருந்த கதைகளில் ஒன்றிரண்டைத் தவிர  வேறு எந்தக்கதையுமே பட்டியலில் இருக்காது என்ற அளவிற்கு குப்பைகளாய் கிடந்தது. இவ்வருடம் கண்டிப்பாக இந்த  “அதிசயமணிகள்” என்ற  நூலுக்கு முதல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்காத்திருந்த  வாசகர்களோடு  எழுத்தாளருக்கும் சேர்த்து பொச்சில் சுடுசாம்பலை அடித்து குப்புறப்படுக்கவைத்த நடுவர்கள் என். சொக்கனையும், கேபிள் சங்கரையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.  முதல் மூன்று இடங்களுக்குள் கூட வரவில்லை இந்தக்கதை. உண்மையில்  இவருடைய முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிட்டால் துளியளவும் அதற்கு சளைக்காத, சமரசமில்லாத சாகசக்கதை இது. பிறகு ஏன் இப்படி தொடர்ச்சியாக இப்படியான எழுத்துக்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் சுலபம். சாக்கடைகளில் வாழும் மீன்கள் எப்படி உண்ணத்தகாததோ அது போலவே சாக்கடையர்களிடம் நடுவன்  அதிகாரத்தை கொடுப்பதால் வரும் வினைப்பயன்கள் இவை. இது கிண்டிலில் மட்டும் நடக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். சாகித்திய அகாதமிவரை சந்திசிரித்துக்கொண்டுதானிருக்கிறது. 

சமீபத்தில்  ஒரு நாவலை குணா எனக்கு அனுப்பியிருந்தார். அந்த நாவலின் பெயர்   “செங்கோட்டு யானைகள்”. என் வாழ் நாளில் அப்படியொரு எழுத்தை நான் வாசித்திருக்கவில்லை. நூறாண்டு காலம் துயரத்தையே மூச்சாக சுவாசித்து கடைசியில் துயரத்தோடே அழிந்துபட்ட தொன்மைமிகு பேரினமாம் ஈழத்தமிழினத்தில் பிறந்த  என்னால் கூட அந்த  எழுத்துக்களின்  வலியைச் செரிக்கமுடியவில்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக கடந்த ஆண்டு யுவபுரஷ்கார் பட்டியலில் அந்த நூல் இருந்தும் கூட நட்சத்திரவாசிகள் என்ற மொன்னை எழுத்துக் குப்பைக்கு பரிசை வழங்கியிருக்கிறார்கள்.  இதுவே இன்றைய இலக்கிய அறம்.  நடு  நிலைமை   நடுவர்களின்    யோக்கியதைகளின்  நீதிவரம்பு. எத்தனையோ  நல்லெழுத்துகள் இலக்கிய உலகில் கண்டுகொள்ளப்படாமல்  காலவெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோவதற்கு காரணகர்த்தாக்கள் இது போன்ற அறங்கெட்ட நடுவர்கள்தான். உலக புத்தக தினமான இன்றைய நன்னாளில்  நல்லெழுத்துக்களில் வாழ்கின்ற மெய்யெழுத்தாளர்களைப் போற்றுவோம். நடுவு நிலை தவறிய ஈனப் பிறவிகளைச் சாக்கடையில் போட்டு மிதிப்போம்.   

“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்”.  

சந்தியா ராஜ மாணிக்கம் முகநூல் பக்கத்திலிருந்து

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...