சாதனையாளர் சக்தி கிருஷ்ணசாமி || காலச்சக்கரம் சுழல்கிறது-14

 சாதனையாளர் சக்தி கிருஷ்ணசாமி ||  காலச்சக்கரம் சுழல்கிறது-14

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி 1913ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி அன்று கலியபெருமாள், வேதவல்லி தம்பதியின் மகனாகப் பிறந்து தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.

இதே 1913ஆம் ஆண்டு நம்பரில் தான் எனது குருநாதர் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களும் பிறந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் தான் எழுதிய கதை, வசனம் மூலமாகப் புகழ்பெற்ற கதை, வசனகர்த்தாக்கள் ஆகிய ஜூபிடர் பிக்சர்ஸ் இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன், ஏ.எஸ்.ஏ சாமி, ஆரூர் தாஸ், சொர்ணம் ஆகியோர் வரிசையில் சாதனையாளர் ஆகிய சக்தி கிருஷ்ணசாமியும் ஒருவர்.

இவரது தந்தை கலியபெருமாள் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் உறவினர் எனும் காரணத்தினால் தன் மகனை அவரது கம்பெனியில் சேர்த்து இயல், இசை, நாடகம் சம்பந்தமான சகல கலைகளையும் கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

கிருஷ்ணசாமியும் குறுகிய காலத்திற்குள் நாடகம் சம்பந்தமான சகல சூட்சுமங்களையும் கற்றதோடு கதை, வசனம் எழுதுவதில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார். ‘பக்த ராமதாஸ்’ எனும் நாடகத்தில் ராஜமாணிக்கம் அவர்கள் நவாப்பாக நடித்ததால் நவாப் ராஜமாணிக்கம் என்று புகழ் பெற்றார். ஆனாலும் அவரை ‘வாத்தியார்’ என்றே எல்லோரும் அழைப்பது வழக்கமாக இருந்தது.

அதனால் ‘வாத்தியார் கம்பெனி’ என்ற பெயரே நிரந்தரமானது. அங்கு தான் புகழ்பெற்ற எம்.என்.நம்பியார், C.M.V. ரமணன், K.V. சீனிவாசன், N.N. கண்ணப்பா, 

T.K.மாரியப்பன், கல்யாணம் ஆகியோர் நடிகர்களாகப் பல ஆண்டுகள் தமது நடிப்பு, பாட்டுத் திறமைகளால் கோலோச்சிய மாபெரும் கலைஞர்கள் ஆனார்கள்.

T.K. கிருஷ்ணசாமி அவர்கள் அங்கிருந்து விலகி வெளியே வந்த பிறகு சக்தி நாடாக சபா எனும் பெயரில் ஒரு நாடக கம்பெனியைத் தொடங்கினார். அதற்கு தேசிய கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களைச் சந்தித்து தன் நாடகக் குழுவிற்காக ஒரு நாடகம் எழுதித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு நாடக ஆசிரியர் மற்றொரு கதை ஆசிரியைப் பார்த்து தன் நாடகக் குழுவிற்கு ஒரு நாடகம் எழுதித் தர வேண்டும் என்று கேட்பது சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் பெருந்தன்மைக்குச் சான்று அல்லவா. உருவத்தால் மட்டுமல்லாமல்,  உள்ளத்திலும் உயர்ந்த மனிதர் சக்தி கிருஷ்ணசாமி.

மகாத்மா பெற்றுத் தந்த சுதந்திரத்தின் பெருமைகளை மிகவும் நன்கறிந்தவர் எஸ்.டி.சுந்தரம். அவர் ஒரு தேசிய கவிஞராக வலம் வந்த காலத்திலேயே தேசப்பற்று உடைய கதைகளை எழுதி அதற்கு வசனமும், பாடலும் அவரே தான் எழுதுவார். அது மாதிரியான ஒரு நாடகத்தை சக்தி நாடக சபா முதலாளி ஆகிய சக்தி கிருஷ்ணசாமி அவர்களுக்கு வழங்கினார்.

அந்த நாடகம்தான் ‘கவியின் கனவு’.  குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா கவியாக பிரதான பாத்திரத்தில் நடிக்க, எம்.என்.நம்பியார்  வில்லன் ராஜகுருவாகவும், எஸ்.ஏ கண்ணன் கார்மேகம் எனும் நகைச்சுவை பாத்திரத்திலும், கனிமொழி எனும் கதாநாயகி வேடத்தில் ஜி.மணி என்பவரும் நடிக்க அந்த நாடகம் 1948ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் அரங்கேறியது.

அதுதான் சக்தி நாடக சபா ஸ்தாபனத்திற்கு முதல் நாடகம். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நாகப்பட்டினமே அந்த நாடகத்தால் விழாக் கோலம் பூண்டது. நான்கு திசைகளிலும் இருந்து நாடகம் பார்க்க வந்த மக்கள் கூட்டம், மகாமகம் போல் காட்சி அளித்தது. அது சமயம் ஒரு சிரமமும் ஏற்பட்டது. நாடகம் பார்க்க வந்த மக்கள் திரும்பி அவரவர் ஊர்களுக்குப் போக முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. நாடகம் பார்க்க வந்த மக்கள் படும் சிரமத்தைப் பார்த்து மனம் கலங்கிய நாகப்பட்டினத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி இளைஞன் நாடகம் ‘பார்க்க வரும் மக்களின் நலனுக்காக அவர் அவர்கள் ஊருக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் திரும்பிப் போக மத்திய அரசாங்கம் ஒரு ரயிலை நாகப்பட்டினத்திற்கு விட ஏற்பாடு செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ரயில்வே டிபார்ட்மெண்டிற்கு அது பெருமை ஏற்படுத்தும்’ என்று எழுதி மத்திய அரசாங்கத்திற்கு அந்த லெட்டரை அனுப்பி வைத்தார்.

அதைப் பரிசீலித்த மத்திய அரசாங்கம் அவரது கோரிக்கையை ஏற்று ஒரு ஸ்பெஷல் ரயிலை விடத் தொடங்கியது. அந்த ரயிலுக்கு ‘கவியின் கனவு’ ஸ்பெஷல் என்று பெயரும் சூட்டப்பட்டது. இது நாடக உலகின் கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு கௌரவமாகவும் இருந்தது..

‘கவியின் கனவு’ நாடகத்தை அப்போதைய  நாடக கம்பெனிகள் எல்லாமே நடத்தியது என்பது நாடக வரலாறு. சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் தன் சக்தி நாடக சபாவிற்காக பிற்காலத்தில் அவரே எழுதிய நாடகங்கள் தோழன், என் தங்கை, நூர்ஜஹான் போன்ற அனைத்து நாடகங்களுமே பெரும் வெற்றியைப் பெற்றது.

நூர்ஜஹான் நாடகத்தில் நூர்ஜஹான் ஆக பெண் வேடம் ஏற்று நடித்தவரே நடிகர் திலகம் தான். S.V.சுப்பையா இல்லாத சமயத்தில் அவர்தான் கவியின் கனவு நாடகத்தில் கவியாக நடித்தார்.

சக்தி நாடக சபா சிவாஜி அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த ஸ்தாபனம்.     

சக்தி கிருஷ்ணசாமி எழுதிய திரைப்படங்கள் ஆளுக்கு ஒரு வீடு, அம்பிகாபதி, குங்குமம், எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, படகோட்டி, பணக்காரக் குடும்பம்.

நர்கீஸ் நடித்து இந்தியில் வெளிவந்த ‘மதர் இந்தியா’ படத்தை என்.வி.ஆர். பிக்சர்ஸ் புண்ணிய பூமி என்ற பெயரில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ நடிக்க தயாரான படத்திற்கும் உரையாடல் எழுதிய பெருமைக்குரியவர் சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் தான்.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய மாமனிதர் சக்தி கிருஷ்ணசாமி அவர்களின்  துணைவியார் சுகுணாவும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சக்தி நாடக சபாவில் தான் நகைச்சுவை நடிகர் A.வீரப்பனும், S.R.தசரதனும் பிரதான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

நடிப்பிற்கு இலக்கணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று சொல்கிறோம அதுபோல் கதை, திரைக்கதை, வசனத்திற்கு சக்தி கிருஷ்ணசாமி ஒரு இலக்கணம் என்று குறிப்பிட்டு ஆவணப்படுத்துவதே கலைமகளின் ஆசியை அதிகம் பெற்ற சக்தி கிருஷ்ணசாமி அவர்களுக்கு என் போன்ற நடிகர்கள் செலுத்தும் காணிக்கை.

கர்ணன் படத்திற்கும் இவர் தான் உரையாடல். ‘எடுக்கவோ கோக்கவோ’ என்ற உன்னதமான வசனங்களை எல்லாம் எழுத சக்தி கிருஷ்ணசாமி அவர்களுக்கு மட்டுமே சாத்தியம். எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது இவர் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்.

கெய்ரோ பட விழாவில் கட்டபொம்மன்

சிறந்த படமாகவும், சிறந்த நடிகராக நடிகர் திலகமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது செய்தி.

இதை அங்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டபோது பத்மினி அவர்கள் ஓடி வந்து சிவாஜிக்குச் செய்தியைச் சொல்லி வாழ்த்துத் தெரிவித்தாராம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் சிவாஜி தன்னுடைய சிவாஜி நாடக மன்றம் சார்பாகவும் நடத்தி வெற்றி கண்டவர்.  எல்லா நாடகங்களுக்குமே இயக்கம் S.A. கண்ணன் தான்.

தேன்கூடு நாடகத்திற்கு மட்டும் கதை, வசனம் டைரக் ஷன் திரைக்கதை மன்னன் ஜி.பாலசுப்ரமணியம்.

சக்தி கிருஷ்ணசாமி பயங்கிரி என்ற ஒரு நாடகத்தை மட்டுமல்லாமல் தோழன், என் தங்கை ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார். இது எல்லாமே சக்தி நாடக சபாவில் வெற்றி பெற்ற நாடகங்கள்.

சக்தி கிருஷ்ணசாமி 8-11-1987இல் இறைவனடி சேர்ந்தார். அவரது நினைவு நாளை வருடம்தோறும் நாமும் கொண்டாட முயற்சிப்போம். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களாகிய உங்களுக்குச் சந்தேகங்கள் ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நான் எழுதிய அங்கீகாரம் எனும் நூலை ஆன்லைனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...