மணிரத்னம் வெளியிட்ட அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல்

 மணிரத்னம் வெளியிட்ட அமரர் கல்கி வாழ்க்கை வரலாற்று நூல்

மாபெரும் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். அது தற்போது திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கல்கியின் சிறந்த படைப்புக்கு பொன்னியின் செல்வன் பெரிய சான்று. அதைப் படமாக எடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். அவர் ஏழை மாணவர்களுக்கு உதவி அளித்து வரும் கல்கி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயை வழங்கினார். அவர்தான் தற்போது கல்கியின் வரலாற்று நூலை வெளியிட்டிருக்கிறார்..

அமரர் கல்கி தமிழின்  சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர்.  அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது.  “கல்கி: பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திரமௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் மணிரத்னம் 2023 13 பிப்ரவரி அன்று வெளியிட்டார்.  புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான திருமதி. சீதா ரவி,  திருமதி. லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.

“அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது” என்று  புத்தகத்தை வெளியிடுகையில் இயக்குநர் மணிரத்னம் குறிப்பிட்டார்.

“பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து, திரையில் பார்த்து ரசித்த இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவரது ஆளுமையைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார் திருமதி.சீதா ரவி.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “ கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் சுந்தா எழுதியிருக்கிறார். அதனுடைய சுருக்கம்தான் எஸ்.சந்திரமௌலி எழுதியுள்ள இந்தப் புத்தகம். கல்கி எழுத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவர் எழுதிய புத்தகங்களைப் படித்தாலே தெரிந்துகொள்ளலாம். இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று அவர் ஓர் ஆழ்ந்த தேச பக்தி உடையவர். அவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் தெரியும். அவர் மனத்துணிவு நிரம்பியவர். அதை இன்றைய இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

220 பக்கங்கள் கொண்ட “கல்கி: பொன்னியின் செல்வர்”
புத்தகத்தின் விலை ரூ.225/-
வெளியீடு: கலைஞன் பதிப்பகம்,
9 சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை 600017.
தொலைபேசி: 044-28340488

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...