தலம்தோறும் தலைவன் | 24 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 24 | ஜி.ஏ.பிரபா

24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர்

ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர்

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி

வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி

தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.

—-திருவாசகம்

வார்த்தைகளில் இனிப்பை விரும்பும் நாம் உடலில் இனிப்பு இருப்பதை விரும்புவதில்லை. அதைக் குறைக்க விரும்புகிறோம். அதற்காக என்னென்னவோ வைத்திய முறைகளைப் பின் பற்றுகிறோம். மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம்.

மாறுபட்ட வாழ்க்கை முறை, ருசிக்கு முக்கியத்துவம் தந்து, ஆரோக்கியத்தைப் பின்தள்ளி விட்டோம். நேரம் தவறி உண்ணுதல், வேலையில் மன அழுத்தம், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறோம்.

அமைதியாய், மன அழுத்தம் இன்றி இருந்தாலே எந்த வியாதியும் நம்மை அண்டாது. அந்த அமைதியை இறைவன் சன்னதி மட்டுமே தர முடியும். எல்லையற்ற பரம்பொருளான அந்த ஈசன் தன் பக்தர்களின் அல்லல் தீர்க்கவே வெவ்வேறு தலங்களில் கோயில் கொண்டுள்ளார்.

அந்த வகையில் ஈசன் சர்க்கரை வியாதியைத் தீர்க்க கோவில் வெண்ணி என்ற இடத்தில் கரும்பீஸ்வரராக காட்சி அளிக்கிறார். “வினை தீர்க்கும் வெண்ணித் தொன்னகர் வெண்ணியூர்” என்று அழைக்கப் பட்ட ஊர் இன்று கோவில் வெண்ணி என்ற சிற்றூராக விளங்குகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கோயில். அப்பர், சம்பந்தருடன், தன் ஷேத்திரக் கோவை என்ற நூலில் சுந்தரரும், வெண்ணிக் கரும்பே என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் பதினாறு வயது இளைஞனாக அரியணை ஏறிய கரிகாலன், சேர, பாண்டிய மன்னர்களோடு பதினோரு வேளிர் குலச் சிற்றரசர்களையும் வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் வென்று சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு அடித்தளம் இட்டான். அதுவே இன்று கோவில் வெண்ணி என்று குறிக்கப் படுகிறது.

மிக உக்கிரமான போர். கரிகாலன் எய்த அம்பு, சேரலாதனின் மார்பைத் துளைத்துக் கொண்டு முதுகு வழியாக வந்தது. நாணிய சேரலாதன் உயிர் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் நீக்கினான். அவனின் படை வீரர்களும் அவனுடன் வடக்கிருந்து உயிர் நீங்கினார்கள். எனவே வெண்ணிக் குயத்தியார், இப்போரில் வெற்றி அடைந்தது சேரலாதனே என்று பாடுகிறார்.

நளியிரு முந்நீர் நாவாய் – – – – – – – – – –

நின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லவன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம்

எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.”

என்று சேரலாதனைப் புகழ்ந்து பாடுகிறார் புலவர்.

தன் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது திருவெண்ணியூர் ஈசனே என்று கருதிய கரிகாலன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான். ஆரம்பத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. தல யாத்திரையாக இந்த வழி வந்த இரு முனிவர்கள் கரும்புக் காட்டிற்குள் இறைவன் திருமேனி இருப்பதைக் கண்டு பூஜித்தனர். ஒருவர் இதன் தல விருட்சம் கரும்பு என்றும், மற்றவர் வெண்ணி என்றழைக்கப் படும் நந்தியாவட்டம் பூ என்றும் வாதிட்டனர்.

அப்போது இறைவன் அசரீரியாக இரண்டுமே தல விருட்சமாக இருக்கட்டும் என்று அருளினார். அதற்கு ஏற்றாற் போல் லிங்கத் திருமேனியில் பானத்தின் மேல் கரும்புகளைக் கட்டு கட்டாக இருப்பது போல் தோற்றம் தெரிகிறது. இங்கு ஈசன் சுயம்பு.

வெண்ணி என்பது வெண்ணிற நந்தியாவட்டம் பூ ஆகும். அதுவே இங்கு தல விருட்சம். ஊரின் பெயராக அதுவே இருக்கிறது. விண்ணவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். பசுமையான் வயல்களும், கரும்புக் காடும் நிறைந்த பாதை வழியே செல்லும்போது ஒரு மரத்தடியில் பிடரி அம்மன் உருவம் உள்ளது. போருக்குச் செல்லும்போது கரிகாலன் இங்கு வணங்கிச் சென்றதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கரிகாலனே இக்கோயிலுக்கு நிறையத் திருப்பணிகள் செய்துள்ளான்.

கிழக்குத் திசையில் மூன்று நிலைகள் உள்ள கோபுரமும், ஒரு பிரகாரத்துடனும் கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்குப் பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலக்ஷ்மி, காலபைரவர் சன்னதிகள் உள்ளது. ஆலயத்துக்கு வெளியே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக நந்தியாவட்டை உள்ளது.

கருவறையில் ஈசனும், பெரு மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் சௌந்தர நாயகி அன்னையும் காட்சி அளிக்கிறார்கள். அம்பிகையின் சன்னதியில் வளையல் கட்டி வழிபாடு செய்கிறார்கள் பெண்கள். கர்ப்பிணிப் பெண்கள் வளைகாப்பு முடிந்ததும், சிறிது வளையல்களைக் கொண்டு வந்து இங்கு அம்பிகையின் சன்னதி முன் கட்டித் தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் பிரசவம் சிக்கலில்லாமல் இருக்கும் என்கிறார்கள்.

ஒரே ஒரு வெளிப்பிரகாரம் மட்டுமே உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வேண்டி, வெள்ளைச் சர்க்கரை, ரவையைக் கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு, வலம் வருகிறார்கள். அதை எறும்புகள் சாப்பிடுவதால், சர்க்கரை காணாமல் போகிறது. அதேபோல் நம் நோயும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

அதன் பிறகு, அம்மை அப்பனுக்கு அபிஷேகம் செய்து, பிரகாரத்தை, பதினெட்டு, இருபத்தி நாலு, நாற்பத்தி எட்டு என்ற கணக்கில் வலம் வர வேண்டும். மிகப் பழமையான இக்கோயிலில் இறைவனை நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

பங்குனி 2, 3, 4 தேதிகளில் ஈசனின் திருமேனி மீது சூரிய ஒளி வீசுகிறது. இங்கு சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் இரண்டு பதிகமும் பாடியுள்ளனர். வெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் எல்லா வினைகளும் நீங்கும். அவர்களை எந்தத் துன்பமும் அணுகாது என்றும், சம்பந்தரின் பதிகத்தைத் தொடர்ந்து ஓதுபவர்கள் சிவலோகத்தை அடைந்து இன்பமாய் வாழ்வார் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

சோதியைச் சுண்ண வெண்ணீ றணிந்திட்ட எம்

ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை

வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை

நினைய வல்லார் வினை நில்லாவே”

என்று சம்பந்தர் பாடுகிறார். இதையே அப்பர் பெருமானும் ஐந்தாம் திருமுறையில் வெண்ணியூர் ஈசனை தலை தாழ்த்தி வணங்குபவர்கள் வினைகள் யாவும் தீரும் என்கிறார்.

இலையினால் கொன்றை சூடிய ஈசனார்

மலையினால் அரக்கன் திரள் வாட்டினார்

சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியைத்

தலையினால் தொழுவார் வினை தாவுமே”

என்று திருநாவுக்கரசரும் போற்றித் தொழுகிறார்கள். கரிகால் சோழன், அப்பர், சம்பந்தர், சுந்தரர், முசுகுந்தச் சக்ரவர்த்தி, வெண்ணிக் குயத்தியார், சூரியன், சந்திரன், சங்ககாலப் புலவர்கள், அனைவரும் வழிபட்ட தலம் இது.

இறைவன் ஊரின் பெயரிலேயே வெண்ணிக் கரும்பர், திரையம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணி நாதர். என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். காமிக்க ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள ஆலயம். காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நூற்றி இரண்டாவது தலம்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆணித் திருமஞ்சனம், திருவாதிரை, மாசிமகம், என்று எல்லா நாட்களும் விமர்சிகையாகக் கொண்டாடப்படுகின்றன.

மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் கண்ணினைக்

கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை விண்ணவர்

தாந் தொழும் வெண்ணியில் அண்ணலை அடைய

வல்லார்க்கு இல்லை அல்லலே.”

என்கிறார் சம்பந்தர்.

தஞ்சாவூரிலிருந்து இருபத்தி ஆறு கி.மீ தொலைவிலும், நீடாமங்கலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவிலும் கோயில் உள்ளது. மிகச் சிறிய கிராமம். இன்னும் எந்த வசதிகளும் எட்டிப் பார்க்காத சிற்றூர். ஆனாலும் சுற்றிலும், பசுமை நிரம்பிய வயல்களுடன் அழகாகக் காட்சி அளிக்கிறது.

நோய் தீர மருந்துகளைவிட இறைவன் கருணையே மிக முக்கியம். மருந்துகள் பலிப்பதுகூட அவன் கருணையால்தான். ஈசனை நினைந்து மனம் உருகி பிரார்த்தனை செய்யும்போது, நம் உடலுக்குள் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி பரவுகிறது. அதுவே நம் உடல் உறுப்புகளை நன்றாகச் செயல் பட வைக்கிறது. அதையும் செய்வது ஈசனே.

ஈசனை நினைத்து, அவனை வணங்கினால் சர்க்கரை வியாதியும் கட்டுக்குள் வரும். அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளும் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...