பயராமனும் பாட்டில் பூதமும் | 8 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 8 | பாலகணேஷ்

டியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி!

“எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல. மிதந்து வர்ற எனக்கே மூச்சு வாங்க வெச்சுட்டியே…”

“எனக்கு அமைஞ்ச மாதிரி உனக்கும் ஒரு பொண்டாட்டி அமைஞ்சிருந்தா, நீயும் இதைவிட நாலுமடங்கு வேகத்துல பறப்பேடா.” என்று ஜெயராமன் சொன்ன நேரத்தில் வானில் போன தேவதைகள் யாரோ ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லியிருக்க வேண்டும். ஜீனிக்கு ஒரு சிறப்பான ஆப்பு அதன் உலகில் தயாராகிக் கொண்டிருந்தது. இந்தக் கணம் அதை அறியும் ஆற்றலற்ற ஜெ.யும் ஜீனியும் சிரித்தார்கள்.

“நல்லவேளை தலீவா, நான் தப்ச்சேன்..” என்று ஜீனி சிரித்தது. சட்டென ஏதோ தோன்றியவனாக ஜெயராமன் கேட்டான், “ஏண்டா ஜீனி, நான் பழக்கதோஷத்துல அவளுக்குப் பயந்து ஓடி வந்துட்டேன். நீதான் அவளைப் பொட்டிப் பாம்பா மாத்தியிருந்தியே… அவ ஏன் என்னை அடிக்கப் போறா..? வீட்டுக்கே திரும்பிடலாமா..?”

“இல்ல தலீவரே, நீ தப்ச்சு வந்ததுதான் செரி. எப்ப அந்த ஹரிபட்டரைப் போட்டுப் பொளந்தாங்களோ, அப்பவே நான் போட்டு வெச்சிருந்த மாயக்கட்டு அறுந்துடுச்சு. இப்ப அவங்க பழைய தனலட்சுமிதான். நீங்க கைல சிக்கிருந்தா கைமா பண்ணிருப்பாங்க.”

“நல்லவேளைடா, தப்ச்சேன்..” என்று பெருமூச்சுவிட்ட அதேநேரம், பக்கத்தில் ஏதோ அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்த ஜெயராமன் திடுக்கிட்டான். “நீயா..?”

பக்கத்தில் வந்தமர்ந்த அந்த அவளும் திடுக்கிட்டு எழுந்தாள். “நீங்களா..? வாட் எ சர்ப்ரைஸ்! எப்டி இருக்கீங்க ஜெயராமன் சார்..?”

“ம்.. இருக்கேன், இருக்கேன். நீ சுஜாதாதானே..?”

“சுஜாதா இல்ல சார், அனிதா.”

“யெஸ், அனிதா. நீ குடுத்த ஜீனியால அவஸ்தைப்பட்டு இப்ப தெருத்தெருவா ஓடிட்ருக்கேன்.”

“வாத்யாரே… அபாண்டமாப் பேசாத. நான் என்னத்த செஞ்சேன்..?” என்றது ஜீனி கோபமாக.

“நீ தனியா வேற எதும் செய்யணுமாடா..? உன்னைப் பாத்து நான் பேசறதாலதானே இத்தனை பிரச்சனையும் ஆரம்பிச்சது..?”

“அப்ப பேசாத.. அத்த விட்டுட்டு என்னைக் குத்தம் சொன்னேன்னா..?” என்று ஜீனி பதிலுக்கு சீறியது.

“எக்ஸ்க்யூஸ் மீ… எனக்கு எதுவும் புரியல சார். கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்..” என்றாள் அந்த அனிதா.

“இதப்பாரும்மா கவிதா…”

“ஐயோ ஸார்… நான் அனிதா..”

“ஏதோ ஒரு தா. அதுவா இப்ப முக்கியம்..? உன் பேச்சைக் கேட்டு நான் திறந்த பாட்டிலால இப்ப பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்ருக்கேன்.”

“தமிழ்நாட்ல பாட்டிலை எல்லாரும் திறக்கறதாலதான் சார் சிக்கலே தீர மாட்டேங்குது. ஆனா, நான் தந்த பாட்டில்னால சிக்கலே வர வழியில்லயே. என்னாச்சு..?”

“சொல்றேன் கேளு. நீ சொன்னபடி வீட்டுக்கு பாட்டிலை எடுத்துட்டுப் போயி தொறக்கறதுக்கு ட்ரை பண்ணினனா..? அப்போ…” என்று ஆரம்பித்து… “பொண்டாட்டியோட அடிக்குப் பயந்து இப்ப பார்க்குக்கு ஓடிவந்து அல்லாடிட்ருக்கேன்” என்று சொல்லி முடித்தான்.

“இன்ட்ரஸ்டிங்..” என்று மெலிதாகச் சிரித்தாள்.

“உனக்கு இன்ட்ரஸ்டிங். என் பாடுல்ல திண்டாட்டம்..? இப்ப வீட்டுக்குப் போனா அந்த சங்கரனை எப்டி சமாளிக்கறதுன்னே புரியல..”

“ஏன் தலீவா.. நான் வேணா அவனை ஒரு கரடியா மாத்திடவா..?”

“மாத்தாமலே அப்டித்தானேடா இருக்கான் அவன். நீ வேற தனியா மாத்தணுமா..? கொஞ்சம் சும்மாருடா..” என்று கத்தினான் ஜெயராமன்.

“பாவம் ஜீனி, அதை ஏன் சார் கோவிக்கறீங்க..? அது எல்லாருக்கும் எப்பவும் நல்லதைத்தான் நினைக்கும்.”

“என்னது..? ஜீனியை உன்னால பாக்க முடிஞ்சிடுச்சா அனிதா..? அப்ப என் ப்ராப்ளம் சால்வ்டு..” உற்சாகமானான் ஜெ.

“அட, என் பேரை மொத தடவையா சரியாச் சொல்லிருக்கீங்க சார். உணர்ச்சிவசப்பட்டா மறதி வராது போலருக்கே..”

“ரொம்பத் தேவை இப்ப இது. இப்பவே நான் இந்த ஜீனியை வீட்ல உள்ளவங்களுக்கு காட்டிட்டா எவ்ரிதிங் ஓவர்..”

“நீ நினைக்கறதுதான் தலீவரே ரொம்ப ஓவராக் கீது. நான் பாட்டில்ல கெடந்தப்ப பாத்துக்கிட்டவங்கன்றதுனால இவங்க கண்ணுக்கு மட்டும் தெரிவேன். அம்புட்டுதான். இப்பவும் மத்தவங்களுக்கு நான் வெறும் காத்துதான்.” சிரித்தது ஜீனி.

“ஐயோ.. ஐயோ…” தலையில் அடித்துக் கொண்டான். “நான் எஸ்கேப்பாக வழியே இல்லியாடா..?”

“இருக்கு சார். நான் யோசிச்சு ஒரு நல்ல வழியாச் சொல்றேன்.”

“சீக்கிரமா யோசிச்சுச் சொல்லு தாயி…”

“யோசிக்கறதுக்கு கொஞ்சம் தனிமை வேணும் சார். ஒண்ணு பண்ணுங்க.” என்று பார்க்குக்கு எதிரேயிருந்த ஐஸ்க்ரீம் பார்லரைக் கை காட்டினாள். “அங்க போய் ஒரு கார்னெட்டோ கோன் வாங்கிட்டு வாங்க, ப்ளீஸ்… ஐஸ்க்ரீம் தின்னா ப்ரைட்டா யோசனை வரும்..” என்றாள். சிரமேற்கொண்டு ஓடினான் ஜெயராமன்.

“பதினஞ்சு ஐஸ்க்ரீம், பத்து சுண்டல் பாக்கெட், நாலு பஞ்சு மிட்டாய்..” பல்லைக் கடித்தான் ஜெயராமன்.

“என்னது..?”

“இதுவரைக்கும் நீ தின்னு தீத்தது. ஆனா உருப்படியா ஒரு ஐடியாவும் வரக் காணம். யம்மா தாயீ… இதப்பாரு..” பர்ஸை விரித்துக் காட்டினான். “சுத்தமாக் காலி உன்னால. மாங்காப் பத்தை வாங்கித்தாங்க சார்ன்னு என்னத்தயாச்சும் மறுபடி கேட்டுறாத…”

“கேக்க மாட்டேன். ஏன்னா… எனக்கு பிரமாதமான ஐடியா வந்துடுச்சே…” கை தட்டினாள்.

“சொல்லு.. சொல்லு…” ஆர்வமாக ஜெ. அவளை நெருங்கிய நேரம், அவன் தோளில் அழுத்தமாக ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தான். பார்க்கின் வாட்ச்மேன்!

“யோவ், பாத்தா பெர்ய மனுஸன் மாதிரிக் கீற… பார்க்குல இப்டி கலீஜா குப்பை போட்றது தப்புன்னு தெரியாது..? உன் காலுக்குக் கீழ பாருய்யா.. இன்னாது இது..?” என்று அவன் காய்கறி வண்டிக்காரர்கள் வைத்திருக்கிற ஸ்பீக்கர்போல நான்ஸ்டாப்பாக ஹைடெஸிபலில் கத்த ஆரம்பிக்க, பாய்ந்து அவன் வாயை மூடினான் ஜெ.

“மன்னிச்சுக்கப்பா… தோ, இப்ப க்ளீன் பண்ணிடறேன்…” என்றவன் குனிந்து கீழே கிடந்தவற்றைக் கை நிறைய அள்ளியபடி வெளியே ஓடினான். பார்க் வாசலிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு உள்ளே வந்தான்.

“இன்னா சாரே… குப்பைய அள்ளிப் போட்டுட்டா ஆச்சா..? த பாரு, தரைல இன்னின்னாவோ சிந்திக்கீற. தொடைச்சு சுத்தமாக்கணும் இதெல்லாம். யாராண்ட.?” என்று தோ.கா. மீண்டும் தன் ஹைடெஸிபல் தொண்டையைத் திறக்க, கோபத்தில் பேச்சு வராமல் ஜீனியை நோக்கிக் கை காட்டி, தோட்டக்காரனை சுட்டிக் காட்டினான் ஜெ.

ஜீனி அவன் எதிரில் நின்று கையை ஆட்ட, இப்போது ரிமோட்டில் டிவியை ம்யூட்டாக்கியது போல தோட்டக்காரனின் தொண்டை நரம்புகள் மட்டுமே அசைந்தது, குரல் வரவில்லை. அவன் மிரண்டு போனவனாய், தொண்டையைப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினான்.

“இப்ப சொல்லு அனிதா. என்ன ஐடியா வந்துச்சு உனக்கு..?”

“இப்ப தோட்டக்காரனை சைலண்ட்டாக்க நீங்க ஜீனியை எப்டிப் பயன்படுத்தினீங்க..? இனிமயும் அப்டியே செய்யுங்க. அதான் ஐடியா.”

“புரியலியே…” தலையைச் சொறிந்து கொண்டு, ‘ழே’யென்று விழித்தான். “என்ன சொல்ல வர்ற நீயி..?”

“அதான் சார். உங்களுக்குப் பிரச்சனை எதுல ஆரம்பிச்சுது..?”

“இந்த ஜீனிகிட்ட நான் பேசறதுல, மத்தவங்க அதைப் பாத்ததுலதான்…”

“கரெக்ட். அப்ப இனிமே ஜீனிகிட்ட எதுவும் பேசாதீங்க. இப்ப வாட்ச்மேன் மேட்டர்ல நடந்துகிட்ட மாதிரி சைகையாலயே அதுக்கு உத்தரவு போடுங்க. ப்ராப்ளம் ஸால்வ்ட்..”

“அட என் அறிவுக் கொழுந்தே… எப்டி ஸால்வாகும்..? அப்பயும் நான் கைய உசத்தறதையும் அசைக்கறதையும் எல்லாரும் பாத்தா தப்பா நினைக்க மாட்டாங்களா..?”

“எம்ஜியார் மாதிரி பாட்டுக்கு கைய மேலயும் கீழயும் அசைச்சேன்னு சொல்லிடுங்க சார்..” சிரித்தவள், அவன் முறைத்ததும் சிரிப்பதை நிறுத்தினாள்.

“ஓக்கே. சீரியஸாப் பேசறேன். கேளுங்க. அதுல யாருக்கும் சந்தேகம் வராம இருக்கவும் ஒரு வழி இருக்கு. கொஞ்சம் கிட்ட வாங்களேன்..”

ஜெ. அவளை நெருங்க, “தலீவரே, ஓவரா நெருங்கிடாத. யாரானும் பாத்து வூட்ல போய்ச் சொல்லிட்டாங்கன்னா அது மேக்கொண்டு வில்லங்கமாய்டும்” குரல் கொடுத்தது ஜீனி.

“சனியனே, சும்மாரு.” என்று சீறிய ஜெ, “நீ சொல்லும்மா..” என்றான். அவள் அவன் காதில் மெல்லிய குரலில் தன் ஐடியாவைச் சொல்லி முடித்தாள்.

“யாஹ்ஹு…” துள்ளிக் குதித்தான் ஜெயராமன் தன் வயதை மறந்து. “சூப்பர் ஐடியா அனிதா. ரொம்ப தாங்க்ஸ்..”

“அப்ப நாளைக்கு காலைலையே நான் சொன்னபடி செஞ்சிடுங்க. நான் ரெண்டு நாள் கழிச்சு உங்களை வந்து பாக்கறேன். வரட்டா..?” கையசைத்தபடி பார்க் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அனிதா.

“தலீவரே.. வாலு மாதிரி உன்னோடவே ஒட்டிக்கினு கீறேன். என்னாண்ட ஐடியாவச் சொல்லாம ரகசியமாக் கேட்டுக்கிறியே… ஞாயமா இது..?” அருகில் வந்து முணுமுணுத்தது ஜீனி.

“உன்ட்ட சொல்லாமயாடா..? இன்ஃபாக்ட், அவ சொன்னதை இன்னொரு தடவை சொல்லிப் பாத்துக்காட்டா எனக்கு மறந்துடும். சொல்றேன், கேட்டுக்கோ. நாளைக்கு நான் மறந்துட்டாலும் நீ ஞாபகப்படுத்தணும், சரியா..?” முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதனிடம் காற்றுக் குரலில் சொல்லத் தொடங்கினான் ஜெ.

“எனக்கென்னவோ இது வொர்க்கவுட் ஆகுமான்னு டவுட்டாத்தான் கீது…”

“வாயை வெக்காதடா சனியனே. நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும். நான் நம்பறேன்..”

“ஆக்சுவலி, நீ சைகை காட்டக்கூடத் தேவையில்ல. என்னையப் பாத்து, மனசுக்குள்ள நீ நெனச்சாலே உன் எண்ணத்தைப் படிச்சிடுவேன். பயப்படாத. அதெல்லாஞ்சரி. காலைல நீ சொன்ன மாதிரி செஞ்சி, சமாளிச்சிடுவேன்னு வெய்யி. இப்ப வீட்டுக்குப் போனா உதை விழுமே. அதுக்கு என்ன ஐடியா வெச்சிருக்க..?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. இந்நேரம் தனம் தூங்கிருப்பா. சப்போஸ் சங்கரன் முழிச்சிருந்தான்னா, காலைல எக்ஸ்ப்ளெயின் பண்றேன்டா, டயர்டா இருக்குன்னு சொல்லிட்டு பேசாம என் ரூமுக்கு போய் போத்திட்டு படுத்துடுவேன். வா, போலாம்..” என்று அவன் நடக்கத் தொடங்க, “நான் எங்க உலகத்துக்குப் போய் ரவுண்டடிச்சுட்டு காலீய்ல வாரேன் வாத்யாரே..” என்றபடி எஸ்கேப்பானது ஜீனி.

–பூதம் வரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...