சிவகங்கையின் வீரமங்கை | 24 | ஜெயஸ்ரீ அனந்த்
இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம்.
சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான்.
குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்வதும்… இதை கண்ட குயிலி அவனிடத்தில், “ஐயா… வீரரே இந்த முறை இளவரசியை …. தவறு… தவறு… ராணியைக் கண்டதும் தாங்கள் மயங்கி விழாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இது தாங்கள் தானா அல்லது தங்கள் உடம்பில் ஏதாவது பிசாசு புகுந்துள்ளதா?…” என்றாள்.
“இல்லை… இல்லை… பிசாசு ஏதும் புகவில்லை ஆனால்…. வீரப்பெண்கள் இருக்கும் இடத்தில் எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன். யார் கண்டது..? நானும் நாளை ஒரு வீரப்பெண்னை விவாகம் செய்துக்கொள்ளும் காலமும் வரலாம்.” என்றான் குயிலியை ஓரகண்களால் பார்த்தபடி.
“ஏதேது…. இந்நாட்டில் வீரப்பெண்களுக்கா பஞ்சம்? ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் . சந்தேகம் என்றால் ஒரு முறை மோதிப் பார்க்கலாமா?” என்றாள் உடைவாளை உறுவியபடி.
குயிலியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவன், அவள் காந்தப் பார்வையில் சற்று மயங்கியனான். ‘உங்களுடன் வாள் வித்தையில் வெல்வதை விட உங்களின் கூர்மையான பார்வையை நான் வெற்றி கொள்வது மிக கடினம். ஆகவே… “ என்றவன் சிறிதும் தாமதிக்காமல் அவ்விடம் விட்டு அகன்றான். குயிலி கையில் பிடித்த வாளுடன் அவன் செல்லும் திக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
ஒருவாறு விவாக வைபவம், கேளிக்கைகள் நடந்து முடிந்ததும் சிற்றரசர்களும், விருந்தினர்களும் முத்துவடுகநாதரிடமும், சசிவர்ணத்தேவரிடமும், செல்லமுத்து விஜயரகுநாத தேவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தத்தம் இராஜ்ஜியத்துக்குத் திரும்பினர். பெரிய பிராட்டி உத்திரகோசமங்கையும், அன்னை அகிலாண்டேஷ்வரி தாயாரும், தம்பதிகளை இரண்டு நாட்கள் தங்களுடன் தங்குமாறு பணிக்கவும், சசிவர்ணத்தேவரும், அன்னையின் ஆணையை மீறலாகாது என்று கூறி, அவர்களை அங்கேயே தங்கியிருக்குமாறு உத்திரவு பிறப்பித்துவிட்டு மங்கை பாகர் சுவாமியையும் தேங்குழல் அம்பிகையையும் தரிசனம் செய்துவிட்டுப் பல்லக்கில் வீரர்கள் புடை சூழ சிவகங்கை நோக்கிப் புறப்பட ஆயத்தமானார்.
குதிரைப்படைகளும், யானைப்படைகளும் முன்னே செல்ல, சேவகர்கள் பல்லக்குத் துக்கிவந்தனர், பல்லக்கில் அமர்ந்து வந்த சசிவர்ணத்தேவருக்குப் பாதுகாப்பாக சிவக்கொழுந்து, தன் வீரர்களுடன் பல்லக்கை ஒட்டியபடி குதிரையில் பயணப்பட்டான். இவர்களுக்கெல்லாம் முன்னதாக குயிலியும், சுமனும் தங்களது குதிரையில் மகிழ்ச்சியுடன் சிவகங்கை நோக்கிப் பயணப்பட்டனர்.
இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடர்ந்த காட்டைத் தாண்டி பயணப்படுகையில், திடீரென்று காட்டுக்குள் ஒரு சலசலப்பு.. கூக்குரல். என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள், விர்ர்ர்…. என்று பறந்து வந்த வாள் ஒன்று சற்றே குறி தவறிப் பல்லக்கின் திரைச் சீலையைக் கிழித்துக்கொண்டு பல்லக்கின் மேற்கூரையில் குத்தி நின்றது. அச்சமயம் அவசர அவசரமாக வீரர்கள் பாதுகாப்பாகப் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டனர். இதை கண்ட சுமனும் குயிலியும் சற்றும் தாமதிக்காமல் வாள் வந்த திசையை நோக்கிக் காட்டுக்குள் ஓடினர். அங்கு கழுத்து அறுபட்டு குருதி பாய்ந்த நிலையில் பவானி தனது உயிரை விட்டுக்கொண்டிருந்தான்.
அவனது ஆக்ரோஷமான கண்கள் அதீத கனலைக் கக்கிக் கொண்டிருந்தன. அவனது அருகாமையில் நின்றிருந்த குதிரை ஒன்றில் கம்பீரமாகப் பெண் ஒருத்தி தனது கையில் குருதி தோய்ந்த வாளுடன் அமர்ந்திருந்தாள். அவள்தான் பவானியின் கழுத்தை அறுத்திருக்கவேண்டும். அப்பெண் வேறு யாரும் அல்ல… சாட்சாத் சிகப்பிதான். அவள் இங்கு எப்படி வந்தாள், எதற்காக சசிவர்ணத்தேவரைக் காப்பாற்ற நினைத்தாள் என்பதை நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இப்பொழுது குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த பவானி, ‘விடமாட்டேன் உன்னை உயிரோடு விடமாட்டேன்’ என்றவன், தன் கைகளில் பிடித்திருந்த கத்தியைக் குறி பார்த்து மறுபடியும் சசிவர்ணத்தேவர் பக்கமாய் வீசினான். அக்கத்தி வீரன் ஒருவனின் இதயத்தைப் பதம் பார்த்தது. மறுபடியும் சிகப்பி தனது வாளால் பவானியின் கழுத்தைப் பதம் பார்த்தாள். “கர்ர்ர்ர்…. கிளுக் … “ என்ற சத்தத்துடன் பவானியின் சகாப்தம் முடிந்தது .
சுமனும் குயிலியும் நடப்பது என்ன என்று சுதாரிப்பதற்க்குள், விர்ர்ர்ர்….. என்று குதிரையைத் திருப்பியவள் மறுபடியும், ‘‘ஆபத்து … ஆபத்து… ஆபத்து… அரசருக்கு ஆபத்து” என்று பெருங்குரலெடுத்து பல்லக்கை நோக்கிப் பாய்ந்தாள். அவளின் வேகத்துக்கு குதிரை ’நேங்ங்ங்க்…. ‘ என்று கனைத்துக்கொண்டு பாய்ந்தது.