ஒற்றனின் காதலி | 8 | சுபா

 ஒற்றனின் காதலி | 8 | சுபா

நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள்.

நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன்.

அவள் மார்பை அழுத்திக் கொண்டாள்.

“இறந்து விட்டானா என்ன?”

“இல்லை, சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்” என்றேன்.

“யூ ஆர் கிரேட்.”

“தியேட்டரில் இருட்டில் ஒரு முத்தத்துடன் சொல்” என்றேன்.

முதல் முறையாக நான் தியேட்டரின் இருட்டில், அவளை முத்தமிட்டேன். அதற்கே அவள் பிணங்கினாள். மறுத்தாள். என் மற்ற எந்தச் செய்கையையும் அனுமதிக்க மறுத்தாள்.

“யூ ஆர் கிரேட் சிவா” என்றாள்.

ன்றைக்கு நாங்கள் தக்கலை தங்கவயலை அடைந்த போது இரவு மணி ஒன்பது. உமா, என் ஆண்மையின் வலிமையில் மயங்கிப் போன முதல் சம்பவம் அது.

உமா என் காதலின் வலிமையில் மயங்கிப் போன இரண்டாவது சம்பவம்…

“உமா…”

“ம்.”

“எத்தனை தடவை சொல்வது…”

“என்ன?”

“இன்னும் என் மார்பைத் திறந்து காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா நீ?”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.”

“புரியாது. உனக்குப் புரியாது. ஐ லவ் யூ உமா, ஐ லவ் யூ..”

“சிவா, வேண்டாம் சிவா.”

“ஏன் உமா? என்னைப் பிடிக்கவில்லையா?”

“பிடிக்காமல்தான் பழகினேனா? பிடிக்காமல்தான் உங்களோடு தியேட்டர், திருவனந்தபுரம் என்று சுற்றினேனா?”

“பின்னே?”

“நானும் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் சிவா.”

“ஏன்?”

“விஜய்குமார்.”

“உன் கணவனா?”

“ஆம்.”

“டைவர்ஸ் பண்ணிவிடேன்.”

“என்ன காரணம் செல்லி டைவர்ஸ் பண்ணுவது? எனக்கு டைவர்ஸ் கிடைக்காது.”

“விட்டு வா. என்னோடு வா. நீ வியக்குகிற மாதிரி, ஒரு புது வாழ்க்கையை உனக்கு அமைத்துத் தருகிறேன்.”

“வேண்டாம் சிவா.”

“ச்சே. இவ்வளவு தூரம் என்னை விரும்புகிறாய். நான் உன்னை என் உயிருக்கும், மேலாக விரும்புகிறேன். ஆனால், என்னால், உன்னைத் தொடக்கூட முடிவதில்லை. உன் வீட்டில், உன் கட்டிலில், உன் அருகில் என்னால் படுக்க முடிவதில்லை. ஏன் உன் பக்கத்தில் உட்காரக்கூட எனக்கு அனுமதி மறுக்கிறாயே.”

“விஜிதான் காரணம்.”

“அவனை விட்டு வந்து விடு என்கிறேனே..”

“என்னை எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடிப்பார். என் காலில் விழுந்து கதறுவார். என் மனதை மாற்றி, மறுபடி ஒரு தங்கச்சிறையில் வைத்து என்னைக் கொடுமைப்படுத்துவார்.”

“ஐயோ உமா. உன் மேல் பைத்தியமாக இருக்கிறேன். வெறியுடன் அலைகிறேன்.”

நான் என் கையை, அவள் கண்களுக்கு முன்னால் நீட்டினேன். அதில் நான் பச்சை குத்தியிருந்ததைக் காண்பித்தேன். ஒரு இதயத்தின் படமும், பக்கத்தில் உமா என்ற எழுத்துக்களும். பச்சையாவது, நானாவது, குத்துவதாவது..? அது ஒருவிதமான அழியாத மை. பச்சை குத்தியிருக்கிற மாதிரி தோற்றமளிக்கும். பெண்களை வீழ்த்துவதற்கான என் தொழில் முறை லீலா வினோதங்களில் அதுவும் ஒன்று.

அவள் அதைப் பார்த்தாள். பிரமித்தாள்.

“என்ன சிவா இது?”

“என் உடல் அழியும் போதுதான் உன் நினைவும் அழிய வேண்டும் என்பதற்காக, உன் பெயரை இப்படிப் பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன்.”

அவள் என்னை விரிந்த கண்களால் பார்த்தாள்.

“உனக்கு என் உயிரைக் கூடத் தருவேன் உமா… நீ கேட்டால்…” என்றேன்.

“எங்கே தாருங்கள் பார்க்கலாம்.”

நான் தாமதிக்கவில்லை. பையில் தயாராக வைத்திருந்த அந்தக் கூர் ஆயுதத்தை எடுத்தேன். என் ஜுகுலர் வெய்னில் ஒருவெட்டு, வெட்டினேன்.

ரத்தம், முத்தாக வெளிப்பட்டது. முத்து, முத்து, முத்து, முத்து, முத்து, முத்துக்களாக ரத்தம் வெளிப்பட்டு, பிப்பெட்டில் இருந்து இறங்கும் பொட்டாசியம் பர்மாங்கனேட் போல கீழே, சொட்டு, சொட்டாக இறங்கியது.

“சிவா… என்ன இது?”

“ஜுகுலர் வெய்னை வெட்டிக் கொண்டு விட்டேன். உடம்பில் இருக்கும் ரத்தமெல்லாம் வடிந்த பிறகுதான் அது நிற்கும். உடம்பிலிருக்கும் ரத்தம் எல்லாம் போய்விட்டால், உயிரும் போய்விடும். நீ இல்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்றிருந்தால், எனக்கு உயிர் இருந்தால், என்ன? போனால் என்ன?”

“ஐயோ… என்ன காரியம் செய்துவிட்டீர்கள் சிவா” என்று பதறினாள். கஞ்சிபோட்டு, இஸ்திரி செய்திருந்த காட்டன் புடவையின் மேலாக்கை விலக்கி, ‘சர்’ரென்று கிழித்தாள்.

தீப்பெட்டியை எடுத்து குச்சி கிழித்து, அதைப் பற்ற வைத்து கரியாக்கி என் கையில் ரத்தம் சீறிக் கொண்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினாள்.

ரத்தம் நின்றது.

“சிவா… உங்களுக்கு என்மேல் இவ்வளவு கவர்ச்சியா?”

“வெறி” என்றேன் வேதனை காட்டி. அந்த வேதனையினூடே சிரித்துக் கொண்டே என் மார்பில் முகம் புதைத்தாள்.

“எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரிகிறது சிவா.”

“எதற்கு?”

“விஜயகுமாரிடம் இருந்து விலகி, உங்களிடம் வந்து சேருவதற்கு…”

“என்ன வழி?”

“விஜயகுமாரைக் கொலை செய்வது ஒன்றுதான்.”

“ஏய்?”

அவள் அழத் தொடங்கினாள்.

“சிவா, உங்களை விட்டுப் பிரிந்து வாழ, என்னாலும் முடியாது சிவா. விஜி உயிரோடு இருக்கும் வரை நாம் இருவரும் இணைவது என்பது நடக்கவே, நடக்காது. சரி, நீங்கள் கவலைப்படாமல் போங்கள். இன்னும் ஒரு வாரத்தில் நான் இரண்டு பேரும் புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.”

“என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன் திகிலோடு.

“பாலில் தூக்கமாத்திரை. ஸிம்ப்பிள்.”

“கலந்து கொடுத்து விட்டால் விஜி செத்துப் போய்விடுவான். அப்புறம் நீயும், நானும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். அப்படித்தானே?”

“ம்.”

“பைத்தியம்! விஜி தூக்கமாத்திரை சாப்பிட்டுச் செத்தால் என்ன ஆகும்? சுற்றி இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நான் இங்கே வருவதை ஒருவனாவது பார்த்திருப்பான். அவன் போலீசில் சொல்லுவான். போலீஸ் வரும். போஸ்ட் மார்ட்டத்தில் தூக்கமாத்திரை விஷயம் வரும். தற்கொலை என்று நாம் சொன்னால், போலீஸ் நம்பாது. விஜி கையெழுத்திலேயே நாம் லெட்டர் எழுதினாலும், அது ஃபோர்ஜரி என்பதை போலீஸ்காரர்கள் புரிந்து கொள்வார்கள். உனக்கும், எனக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்ததும், போலீஸ்காரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அவ்வளவுதான். நீ ஜெயிலில் இருப்பாய். கடைசியில் தூக்கில் தொங்குவாய்.”

“எனக்கு நீங்கள் வேண்டும் சிவா.”

“வா, இப்போதே என்னை நான் தருகிறேன். அனுபவி. என்னோடு வந்து விடு. போய்விடலாம்…”

“முடியாது, விஜி இருந்தால் எனக்கு உறுத்தலாக இருக்கும். என்னால் முழுமையாக சந்தோஷமாக இருக்க முடியாது. நான் உங்களோடு இருப்பது விஜிக்குத் தெரிந்தால், எங்கிருந்தாலும் அது என்னைத் தேடிப் பிடித்துவிடும்.”

“அப்படி என்றால் விஜியை நான் கொல்கிறேன்” என்றேன்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கு அவள் வேண்டும். அவசியமாக வேண்டும். அவளை அனுப்பினால் எனக்குப் படியளப்பவர்கள் சந்தோஷப்பட்டு, எனக்கு அதிகமான டாலர்களை அள்ளித் தருவார்கள். ஒரே ஒரு களைதானே. பிடுங்கிவிடலாம். நான் ஒன்றும் என் இறந்த காலத்தில் அஹிம்சாவாதி இல்லையே. இதுவரை யாரையும் கொல்லாமல் இருந்ததில்லையே.

பீஹாரில் அந்த புத்திசுவாதீனமற்ற கணவன். வாரணாசியில் ரயிலில் வரும்போது அறிமுகமான, வயதான கிழவன். அவனுடைய இளமை நிறைந்த, துடிப்பான, சிவந்த உதடுகளை உடைய மனைவிக்காக, நான் அந்தக் கிழவனை ஆற்றின் உள்ளே இழுத்து தண்ணீரில் அழுத்திக் கொன்றதை இன்றுவரை கொலையாகவே நினைக்கவில்லையே.

என் தொழிலைப் பொறுத்தவரை களையெடுப்பு.

“நீங்களா?”

“ஆம்.”

“நீங்கள் கொன்றால் மட்டும் போலீஸ்காரர்கள் உங்களைப் பிடிக்க மாட்டார்களா?”

“நான் கொன்றேன் என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்தால்தானே?”

“பின் எப்படிக் கொல்வீர்கள்!”

“சுரங்கத்தில் வைத்து! சுரங்கத்தில் விபத்து ஏற்படும். அங்கே ஏற்படும் விபத்திற்கெல்லாம் நான் பொறுப்பு என்று யாரும் குறை சொல்ல முடியாது.”

“சரி!” என்றாள் உமா. அவள் தேகம் நடுங்கியது.

காதலாள் கடைக்கண் காட்டினால், அந்த நிலவையே கட்டி இழுத்து வரும் சக்தி படைத்த காதலர்களுக்கு நடுவில், கேவலம் நான் ஒரு கொலை செய்யக் கூடாதா என்ன?

*

சுரங்கத்தில் எனக்கு ஒரு கல்வெட்டும் தொழிலாளியாக வேலையில் சேருவதற்கு, எனக்குப் பத்தாயிரம் ரூபாய் செலவானது. என் வேலை என்னவோ மிகச் சுலபமான வேலைதான். ஒவ்வொரு ஷிஃப்டின் போதும் ஐந்தாறு தொழிலாளிகளுடன் சுரங்கத்தில் இறங்க வேண்டும். இறங்கி, மண்வெட்டி எடுத்து, பாறை வைத்து தகர்த்த தங்கப் பாறைகளை, தண்டவாளத்தில் ஓடும், டீஸலில் இயங்கும் மினி சைஸ் ரயில் என்ஜின்கள், தங்களுக்குப் பின்னால் கோர்த்திருக்கும் ட்ரெய்லர் வண்டியில் வாரிப்போட வேண்டும்.

பாரதி சுரங்கத்தில், எனக்கு வேலை போட்டுத்தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு, அதன்படி பாரதி சுரங்கத்திலேயே வேலைக்குச் சேர்ந்தேன்.

ஏன்?

பாரதி சுரங்கத்தில்தான், விஜி என்று, உமாவால் செல்லமாகவோ, அசெல்லமாகவோ அழைக்கப்படும், விஜயகுமார், சூப்பர்வைசராக வேலை செய்கிறான்.

விஜய்குமாரை அறிமுகம் செய்தே ஆகவேண்டும்.

அவன் நல்ல உயரம். சுரங்கத்தில் இறங்குவதற்கு முன், அவன் அணிந்து வரும் ஆடைகளில் ஒரு ஜெர்கினும், தொப்பியும் கட்டாயம். ஜெர்கின் அவனிடம் எல்லா நிறங்களிலும், ஜாக்கிகள் அணியும் தொப்பி. அவன் தொப்பிக்கு, அவனது முன் வழுக்கையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன். மிக லேசான முன்வழுக்கை. தலைமுடி லேசாகப் பின் வாங்கி இருக்கும். அதை வைத்து வழுக்கை என்பதா? ம்ஹூம்! கண்களில் புத்தி கூர்மை தெரியும். நல்ல பஞ்சாப் வெண் கோதுமை நிறம். ஷூ அணிவான். அவன் சூப்பர்வைஸ் பண்ண வேண்டிய தொழிலாளர்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவான். பழகுவான். தோளில் கைபோட்டு ஒன்றாய் டீ சாப்பிடுவான்.

நான் சேர்ந்த புதிதில், என்னிடமும் அதே மாதிரி வலிய வந்து பழகினான். அவன் சிரித்த விதத்தில், பழகின விதத்தில், அவன் மனைவியிடம், நான் அத்து மீறிப் பழகுபவன் என்ற உண்மை தெரிந்தவனாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால், அவனை நான் கொல்வதற்குமுன், அவன் என்னைக் கொன்று விடுவான். அந்த அளவுக்கு அவனிடம் உடல் வலு இருக்கிறது.

“கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று என்னைக் கேட்டான்.

“இல்லை” என்றேன்.

“பண்ணிக் கொள். நல்ல அழகான, அடக்கமான, பண்பான பெண்ணாகப் பார்த்துப் பண்ணிக் கொள். வாழ்க்கை இனிக்கும். என்னுடையதைப் போல” என்றான்.

“ரைட் சார். எனக்கு முதலில் உங்கள் மனைவியைக் காட்டுங்கள். நீங்கள் சொல்லும் அழகு, அடக்கம், பண்பு எல்லாம் அவரிடம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.”

“பார்த்து?” என்றான் விஜி, புருவங்களை மேலுயர்த்தி.

“உங்கள் மனைவி எனக்குப் பிடித்திருந்தால், எனக்கும், உங்கள் மனைவி போலவே ஒரு பெண்ணைத் தேடும் பொறுப்பை உங்களிடமே கொடுத்து விடுகிறேன். ஏனென்றால், நான் ஒரு அனாதை” என்றேன்.

“யூ ஸீ… திஸ் மேன் ஈஸ் நாட்டி” என்றான் விஜி, என்னை முதுகில் ஆரவாரமாகத் தட்டி.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...