தலம்தோறும் தலைவன் | 23 | ஜி.ஏ.பிரபா

23. திருநின்றவூர் ஸ்ரீ இருதயாலீஸ்வரர்

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலையனுங்

கண்டாரு மில்லைக் கடையேனைத் – தொண்டாகக்

கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே

யுண்டாமோ கைம்மாறுரை.

திருவாசகம்

றைவன் உறையும் இடம் இதயம் என்கின்றன வேதங்கள்.

ஆழ்ந்த நம்பிக்கையுடன், இதயத்தில் இறைவனை நிறுத்தி, நாம் பக்தி செய்தால் வேண்டுவன எல்லாம் தருவான் ஈசன் என்பது வேதங்கள் கூறும் பக்தி மார்க்கம்.

ஹோமம் வளர்ப்பதோ, பூஜை செய்வதோ முக்கியமில்லை. அவற்றைப் பக்தியுடன் செய்ய வேண்டும். என்னை மனதில் நிறுத்தி ஒரு பூ, பழம் இல்லை என்றால் ஒரு இலை, தண்ணீர் வைத்து வணங்கினால்கூட நான் உன்னிடம் வருவேன் என்கிறான் கீதையில் கிருஷ்ணன்.

நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது ஆழ்ந்த பக்திதானே தவிர வேறு ஆடம்பர பூஜைகளையும் அல்ல. நம் எண்ணங்கள், நேர்மையாக, உண்மையாக இருப்பின் அனைத்தும் வசமாகும். இதைத்தான் இந்தப் பிரபஞ்சமும் கூறுகிறது.

நம்பிக்கையுடன் கேளுங்கள், கிடைக்கும் என்று நம்புங்கள். கிடைத்து விட்டதாக மகிழ்வுடன் இருங்கள் என்கிறது. ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்தால் நாம் வேண்டுவதை ஈர்க்கலாம் என்பது பிரபஞ்ச விதி.

அதற்கு முதலில் மன அமைதி வேண்டும். அலைபாயும் மனதுடன் நாம் எதைச் செய்தாலும் அங்கு மன அமைதி, ஒருமைப்பாடு இருக்காது. அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் இருக்கிறான், அதுவும் நம் உள்ளத்தில் ஜோதியாக இருக்கிறான் என்று நம்பி, அந்த ஒரு புள்ளியை நோக்கி நம் எண்ணங்களைக் குவிப்பதுதான்.

பகட்டும் படாடோபமாக, பெருமைக்குச் சமர்ப்பிக்கும் காணிக்கைகளை, பூஜைகளை ஈசன் ஏற்பதில்லை.

நெக்கு, நெக்கு நினைப்பவர் நெஞ்சுள்ளே

புக்கு நிற்கும் பொன்னார் சடையன்”

என்கிறது தேவாரம்.

நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே”

என்கிறார் தாயுமானவர்.

பிரம்மாண்டமான இந்த அண்டத்தின் சிறு துகள் நாம். அந்த அணுவுக்குள் அணுவாய் இருப்பவன் ஈசன். அவனைக் கோவிலுக்குள் அடக்க முடியாது. ஆனால் நம் இதயத்தில் வசிக்க வைக்க முடியும்.

தன் அன்பால் மனதுக்குள் கோவில் கட்டிய பூசலாருக்காக, பல்லவ மன்னன் கட்டிய கோவிலையே மறுதளித்தான் இறைவன். மனமும், உள்ளிருக்கும் பக்தியே முக்கியம். செல்வம் அல்ல என்பதை பூசலார் மூலம் உணர்த்துகிறார் அய்யன்.

அவரின் மனக் கோவில்தான் திருநின்றவூரில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. அங்கு இதயாலீஸ்வரராக அமர்ந்து இதய நோய்களைத் தீர்க்கிறார் ஈசன்.

மிகச் சிறந்த சிவபக்தரான பூசலார், எண்ணமும், செயலும் எப்போதும் சிவ பக்தியிலேயே திளைத்திருக்க வாழ்ந்தவர். ஒருநாள் ஈசனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. ஒரு சின்னச் செங்கல் வாங்கக் கூடக் கையில் காசு இல்லை. பல செல்வந்தர்களிடம், சிவபக்தர்களிடமும் கேட்டுப் பார்க்கிறார்.

பணம் கிடைக்கவில்லை. இடைவிடாத நம்பிக்கையுடன் ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தார். இறைவனுக்கான பூஜைகளில் பாவனா முறை என்று ஒரு பூஜை உண்டு. மனதினாலேயே தூய எண்ணத்துடன் இறைவனுக்கு அனைத்தையும் படைப்பது. எனவே தன் மனதில் ஈசனுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்து, ஆகம விதிப்படி அதற்கான முயற்சியில் இறங்கினார் பூசலார்.

ஒரு நல்ல நாள், நேரம் பார்த்து, தனியிடத்தில் அமர்ந்து மனதுக்குள் கோவில் கட்ட ஆரம்பித்தார். சாஸ்திரப் படி, கருவறை, முன் மண்டபம், சுற்றுப் பிரகாரம், சிற்பங்கள், ஆலயக் கதவுகள் என்று அனைத்தையும் தன் மனதிற்குள் சிந்தனையால் கட்டியவர் அதன் கும்பாபிஷேகத்துக்கான நாளையும் குறித்தார்.

இதே நேரத்தில் காஞ்சியில் சிற்பக் கலைக்குப் புத்துயிர் கொடுத்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் ஈசனுக்காக ஒரு கோவில் கட்ட ஆரம்பித்திருந்தான். அற்புதமாக அமைந்த அக்கோவிலின் கும்பாபிஷேகமும் பூசலார் குறித்த நாளும் இறைவன் சித்தத்தால் ஒரே நாளாக அமைந்தது.

கும்பாபிஷேகத்துக்கு முந்தைய தினம் மன்னன் கனவில் ஈசன் தோன்றி, தான் பூசலார் கட்டிய கோவிலில் எழுந்தருளப் போவதாகத் தெரிவிக்கிறார். கண் விழித்த மன்னனுக்குத் திகைப்பு. பல ஆண்டுகளாக இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த கோவிலைவிடப் பூசலார் கட்டியது எந்த விதத்தில் சிறப்பு என்று அறிய விரும்பி, திருநின்றவூர் வருகிறான்.

ஆனால் ஊர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வியப்புடன் மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருந்த பூசலோரை வந்து சந்திக்கிறான் மன்னன்.

மன்னனும், மக்களும் அங்கு ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் ஒரு தெய்வீக ஒளி வீசியது. அங்கு மானசீகமாக அமைத்த கோவிலில் வேள்வியும், மங்கலச் சடங்குகளும், வேள்விகளும் நடப்பதையும், நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் ஈசன் குடியேறுவதையும் அனைவரும் பார்த்தனர்.

கைலாச நாதனைக் கண் குளிரப் பார்த்த மன்னன் பூசலார் மனதில் கட்டிய அதே போன்ற கோவிலை திருநின்றவூரில் நிர்மாணித்தான். இறைவனுக்கு இருதயாலீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மரகதாம்பிகை என்றும் பெயர் சூட்டினான் மன்னன்.

ஈசனின் மூலஸ்தானத்தில் பூசலாரின் உருவச் சிலை உள்ளது. இங்கு வந்து ஈசனைத் தரிசித்தால் இதய நோய்கள் குணமாகும், மனதில் மகிழ்ச்சியும், மங்கள நினைவுகளும் இருக்கும் என்பது நம்பிக்கை.

கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த ஈசனை வணங்கினால் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் தீரும்.

இன்றைய நவீன உலகில் எத்தனையோ மருத்துவ வசதிகள் வந்து விட்டன. ஆனால் அந்த மருந்துகள் செயல்படவும், சிகிச்சை பலிக்கவும் இறைவன் கருணை வேண்டும். ஈசனை நம்பி வழிபடுவதன் மூலம் நோய்களும் தீரும். வந்த நோயும் பறந்து போகும்.

பக்தர்கள் திங்கட்கிழமை தோறும் இங்கு வந்து தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபடுகிறார்கள். நம்பிக்கையும், மன அமைதியுமே இதயம் காக்கும் இனிய மருந்தாகும்.

ஈசனின் கருவறை விமானம் கஜப் ப்ருஷ்ட வடிவில் உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் பல்லவக் கட்டிடக் கலை வடிவமாக உள்ளது.

ஈசன் தெற்கு நோக்கியும், அம்பிகை கிழக்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனி சன்னதிகள்.பூசலார் அமர்ந்து மனக்கோயில் கட்டிய இலுப்பை மரமே தல விருட்சமாக உள்ளது.

இறைவனின் அஞ்செழுத்தை ஓதும் பக்தர்களின் அனைத்து வித நோய்களையும் தீர்ப்பான் என்கிறது தேவாரம்.

திருப்பதம் அஞ்சை ஓதும் செம்மையர்க் கருளிப் பாவப்

பொருப்பதைப் பொடிசெய் பெம்மான் புண்ணிய மூர்த்தி

எந்தை நெருப்பதன் நிறத்தான் வெள்ளை நீற்றினன்

பருப்பதன் மேவுகின்ற பத்தி திரு நின்ற வூரே”

மருத்துவம் சாதிக்க முடியாத பல விஷயங்களை இறைவனின் நாமம் தீர்த்து வைப்பதை பலரும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். இத்தலம் பற்றி சேக்கிழார் பெருமானும் பாடியுள்ளார்.

நீண்ட செஞ்சடையனார்க்கு நினைப்பினால் கோயிலாக்கி

பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி

நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த

நன்று நீடாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங்கு

ஒன்றிய செயலை நாளை யொழிந்து பின் கொளவாயென்று

கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்

என்று பாடுகிறார் சேக்கிழார்.

மகா சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் இவற்றுடன் எல்லா முக்கிய நாட்களும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து பிரார்த்தனை செய்தவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், அம்மை, அப்பனுக்கு அபிஷேகம், வஸ்திரம் சாற்றி தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள்.

பிரார்த்தனையின் பலன் அளவற்றது. அதன் சக்தி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி நாம் விரும்பியதை நம்மிடம் ஈர்க்கிறது. தன் பக்தர்கள் அன்புடன் அளிக்கும் சிறு மலர்களைக் கூட ஏற்று அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறார் ஈசன்.

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி

இரந்து எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்

கரந்து நில்லாக் கள்வனே நின் தன் வார் கழற்கு அன்பு எனக்கும்

நிரந்தரமாய் அருள்வாய் நின்னை ஏத்த முழுவதுமே

என்கிறது திருவாசகம்.

விதவிதமான மலர்களை எடுத்து பக்தர்கள் கவனமாகவும் முறையாகவும் வழங்குகின்றனர். அவன் அருளால் வேண்டுவது எல்லாம் கிடைக்கிறது. அன்னவர் உள்ளத்திலும் நீ ஒளிர்கின்றாய். அவர்களைப் போல் இடைவெளி இன்றி உன்னை நாள் முழுவதும் வணங்குவதற்கு எனக்கு அருள் புரிவாய்

என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

தன்னை நம்பும் பக்தர்கள் உள்ளத்தில் நிலையாக வீற்றிருக்கிறார் ஈசன். நம் இதயத்தில் அவரை நிறுத்தினால் அந்த இதயத்தை அவர் காப்பார்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!