தமிழாய் வாழ்வார் அவ்வை நடராஜன்

 தமிழாய் வாழ்வார் அவ்வை நடராஜன்

இவர் பேசத் தொடங்கினால் சங்க காலம் நம் முன்னால் வந்துவிடும். சேரர், சோழர், பண்டியர்களின் பண்பாடும் நாகரிகமும், தமிழர் வாழ்வியலில் ஒன்றான காதலும் வீரமும் நம் கண்முன்னால் காட்சியாக வந்து சாட்சி சொல்லும். அந்தத் தமிழ் சொல்லேறுழவர்தான் அவ்வை நடராசன்.

பட்டிமன்ற மேடைகளில் தெளிவான திலைமையுரை, சொற்பொழிவுகளில் ஆழ்ந்த இலக்கியத்தையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான விளக்கம் என அவரின் தமிழ் மடைதிறந்த வெள்ளமெனப் பாயும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரழிப்பு.  

சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த அவ்வை நடராஜன், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவ்வை நடராஜன் 1936ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஔவை நடராஜன் மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி  ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலுள்ள காந்தி ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். ஒன்பது ஆண்டுகள் (1975 – 1984) வரை அப்பணியிலிருந்தார். பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். 

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான்.

அதன் பிறகு, 1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார். அதன் பிறகு, 2014ஆம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தார்.

2015ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்.

1982-ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்.

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார்.

தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்பச் சொல்லாக்கர் குழுத் துணைத் தலைவராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்.

இவர் பல்வேறு தலைப்புகளில் தமிழிலக்கிய நூல்களை எழுதி தமிழுக்குத் தொண்ட செய்துள்ளார். அவை

வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள், Self Confidence (English), Saying of Stalwart, The Panaroma of Tamils, அருளுக்கு ஔவை சொன்னது, Thirukkovaiyar (English) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவருக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2011ம் ஆண்டு மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

அவர் மறைந்தாலும் அன்னாரின் தமிழ்ப்பணி மறையாது.

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்:

அய்யகோ!

அறிஞர் அவ்வை நடராசன்
மறைந்தாரே!

தமிழ்ச்சங்கத்தின்
ஏடொன்று எரிந்துபட்டதே

அகிலம் தழுவி வீசிய
தமிழ்த்தென்றல்
தன் வீச்சையும் மூச்சையும்
நிறுத்திவிட்டதே

பட்டிமன்றம்
பொட்டிழந்துவிட்டதே

இனி என்னோடு
தனித்தமிழில் உரையாட
எவருளார்?

பேசுதமிழ் உள்ளவரை
உங்கள் பெருமை
வாழும் பெருமை!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...