பயராமனும் பாட்டில் பூதமும் | 5 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 5 | பாலகணேஷ்

த்தான், இன்று என்ன சமைக்கட்டும்..?” தனம் அமைதியாகக் கைகட்டி நின்று கேட்க, அதை ரசித்தபடி, “ரசம் வெச்சுடு, வெங்காய சாம்பார் செஞ்சிடு, உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சுடு. போதும்..” அத்தனையும் அவளுக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்த ஐட்டமாகவே சொல்லிவிட்டு அவள் முகபாவத்தை ஆராய்ந்தான்.

சலனமே இல்லாமல், “அப்படியே செய்கிறேன் அத்தான்..” என்றபடி உள்ளே சென்றாள்.

அவள் போனதும் சத்தமாக டிவியை வைத்து ரசிக்க ஆரம்பித்தான். சூரியகுமார யாதவன் பாகிஸ்தானைப் பிளந்து கொண்டிருந்தான் டிவியில். தமிழ் ரன்னிங் கமெண்ட்ரி சகிக்க முடியாமல் இருந்தாலும்கூட, சத்தத்தைக் குறைக்காமல், ஓரக்கண்ணால் சமையலறையைக் கவனித்தான். தனலட்சுமி சமையலில் மும்முரமாக இருந்தாள். இதே முன்பாயிருந்தால் டிவியில் சத்தத்தைக் கூட்டியதற்குச் சமையலறையில் இருந்து ‘பறக்கும் தட்டு’ வந்திருக்கும் அவனை அட்டாக் செய்வதற்கு. புன்னகைத்துக் கொண்டான்.

டைனிங் டேபிள். சாதத்தை ஊற்றி, கொதிக்கக் கொதிக்க சூடாய் இருந்த குழம்பை ஊற்றி ஆறவைத்துப் பிசைந்து ஒருவாய் வாயில் போட்டான். சொத்தைக் கடலையை மென்றது போல முகம் மாறினான் ஜெயராமன். “சாம்பார்ல ஏண்டி இவ்வளவு உப்பை அள்ளிக் கொட்டியிருக்க நீயி..? வாயெல்லாம் கரிக்குது..”

“இல்லையே அத்தான். திட்டமாய்த்தானே போட்டேன்..?” என்று ஒரு கரண்டியை கையில் விட்டு ஊற்றிக் குடித்துப் பார்த்தவளின் முகமும் அதே கடலையை மென்றது போலாயிற்று.

“மன்னியுங்கள். ஏதோ மனக்குழப்பத்தில் இரட்டிப்பாகப் போட்டு விட்டிருக்கிறேன். இப்போது என்ன செய்வது..?”

“ம்… அந்தக் கொழம்பை என் தலையில ஊத்து…” எரிச்சலாகிக் கத்தியவன், அடுத்த கணமே வருந்த வேண்டி வந்தது.

‘ஆஆஆஆ’ என்று பக்கத்துத் தெரு அரிசி மில்லின் சங்கு போல விடாமல் அலறினான். சேரை விட்டு எழுந்து பரதமா, டிஸ்கோவா, கதகளியா என்று தெரியாதபடி புதுவிதமான பரதடிஸ்களிகோ ஆடியபடி பாத்ரூமுக்குள் பாய்ந்து பக்கெட் தண்ணீரை தலையில் கவிழ்த்துக் கொண்டான்.

“நான் எது சொன்னாலும் நீ அப்டியே செய்யணும்னு வரம் கேட்டு வாங்கினேன் பாரு… எனக்கு இது தேவைதான்டி…” என்று புலம்பியபடியே தன்மீது அவள் கொட்டிய பக்கெட் சாம்பாரையும் கழுவிச் சுத்தம் செய்தான்.

“அத்தான்… அடுத்து என்ன செய்ய வேண்டும்..?” என்றாள் தனம்.

“ம்…? சட்டியும் பானையும் செய்யணும்..” என்று கடுப்பாக பதில் தந்தவன், அவள் சட்டென்று நகரத் தொடங்கவும் ஓடிவந்து பிடித்து நிறுத்தினான். ‘அய்யய்யோ… இவ சொன்னா உடனே செஞ்சு தொலைப்பாளே’ என்று மனக்குரளி கத்த, “அதெல்லாம் நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். இப்ப நாம ஒரு குட்டித் தூக்கம் போடலாம். அப்பத்தான் சாயங்காலம் உன் வீட்டுப் படை (மனதுக்குள் : ராட்சஸப் படை) வர்றதுக்குள்ள ப்ரெஷ்ஷாயி வெல்கம் பண்ணலாம்.” என்றான்.

“ஹாய் மாப்ளே… நல்லாருக்கீங்களா..?” என்றபடி வீட்டுக்குள் எண்ட்ரியானான் சங்கரன். நியாயமாக அவன் உருவத்துக்கு கிங்கரன் என்றே பெயர் வைத்திருக்க வேண்டும். ஓங்குதாங்காக ஆறேகாலடி உயரத்தில், கனத்த சரீரத்துடன் (குடும்பவாகு ஸ்வாமீ அது) விஸ்வரூபமெடுத்த மாயாபஜார் ரங்காராவ் போலத் தோற்றமளித்தான். அவன் பின்னாலேயே சங்கரனுடைய அம்மாவும், இவனுக்கு மாமியாரும், அவளுடைய அம்மாவுமாகிய மைதிலி வர, அவர்களின் பின்னால் சங்கரன் பெற்ற செல்வங்கள் பதினெட்டு வயது நிஷாவும், பனிரெண்டு வயது பரத்தும், எட்டு வயது சுஜய்யும்.

“வா சங்கரா… வாங்கத்தை…” போலியாகப் பல்லைக் காட்டி வரவேற்றான் ஜெ. (போலிப்பல் அல்ல, அவனுக்கு எல்லாப் பற்களும் சரியாகவே இருக்கின்றன.)

“அம்மா…” என்று ஓடிவந்து கட்டிக் கொண்டாள் தனம்.

“ஸ்ஸப்பா.. என்னமா வெயில் பொளக்கறது..” என்று மின்விசிறியை உச்சத்தில் வைத்தபடி அமர்ந்த சங்கரன், “தனம், உன் கையால காபி குடிச்சு எவ்வளவு நாளாச்சு..? காபி போட்டுக் குடேன்..” என்றான்.

தனலட்சுமி, ஜெயராமைனைப் பார்க்க, “எல்லாருக்கும் காபி போட்டுக் குடு தனம்..” என்றான் சங்கடமாக. அதன்பின்னரே அவள் கிச்சன் நோக்கி நகர்ந்தாள்.

“அத்தைக்கு என்னாச்சு.? டல்லாத் தெரியறாங்களே..” என்றது ஷார்ப்பான நிஷா.

அவளை முறைத்தபடியே, “அது ஒண்ணுமில்ல உஷா. நேத்து சரியாத் தூங்கலை அதான்….”

“ஐயோ, மாம்ஸ்… என் பேரு உஷா இல்ல, நிஷா.’

“ஸாரிம்மா. அப்றம்… சொல்லு சங்கரா. என்ன விசேஷம்..? எல்லாருமா ஊர்லருந்து வந்திருக்கீங்க..?”

“அதுவா..? என் ஆபீஸ்ல என்னை சிங்கப்பூருக்கு ஒரு ட்ரெய்னிங்குக்கு அனுப்பற சான்ஸ் இருக்கு மாப்ளே. பாஸ்போர்ட் ஆபீஸ்ல ரெண்டு நாள் வேலையிருக்கு எனக்கு. அம்மா கைலாஷ் யாத்ரா போகணும்னு ரொம்ப நாளா சொல்லிட்ருந்தாங்களா..? இங்க சென்னைல ஒரு ட்ராவல்ஸ்ல பேக்கேஜ் டூர் புக் பண்ணிட்டேன் அம்மாவுக்கு. நாளைக்கு கிளம்பி ஒரு இருபது நாள் டூர். பசங்க ஊர்ல போரடிக்குதுன்னாங்களேன்னு கூட்டிட்டு வந்தேன். நாங்க ரெண்டு மூணு நாள் தங்கிட்டு, கிளம்பிப் போய்ட்டு, அப்பறமா அம்மா வர்றப்ப ரிசீவ் பண்ண திரும்ப வருவோம். அதான் ப்ளான்…”

“கைலாஷ் போறது கைல கேஷ் இருந்தா ஈசி. இல்லன்னா ஆயிடும் உன்னோட பை லாஸ். ஐ மீன்.. பைனான்ஸ் லாஸ்…” என்று ஜெயராமன் சொன்னதற்கு ஹாலதிர மிகையாகச் சிரித்தான் சங்கரன்.

“வார்த்தைகள்ல பூந்து வெளையாடறீங்களே மாப்ள… பத்திரிகைல நாலைஞ்சு கதை எழுதின எழுத்தாளர்ன்னா சும்மாவா பின்ன..?” கூடை ஐஸை அவன் தலைமேல் கவிழ்த்தபடி, “தனம், காபி ஒன்ஸ்மோர் ப்ளீஸ்…” என்றான் தனத்தைப் பார்த்து.

அவள் ஜெயராமனைப் பார்க்க, அவன், “போ..” என்று ஆக்ஷன் ரீப்ளேயாகச் சொல்ல, அதைக் கூர்ந்து கவனித்தாள் நிஷா.

“மாப்ளே… காலெல்லாம் ஒரே வலி. முட்டிவலித் தைலம் ஒரு பாட்டில் வேணும். வாங்கித் தரீங்களா..?” என்றாள் மைதிலிப் பாட்டி.

“நீங்க வரீங்கன்னு ஜெயலட்சுமி சொன்னதுமே நாலு பாட்டில் வாங்கி வெச்சுட்டேன் அத்தே..” என்று சத்தமாகச் சொல்லி ஜெயராமன் சிரிக்க, தனலட்சுமி அவனை முறைத்தாள்.

“மாப்ள… என் தங்கச்சி ஜெயலட்சுமியில்ல, தனலட்சுமி” என்று குறுக்கிட்டான் சங்கரன்.

“ஐயாம் ஸாரி ஐங்கரன்… டங் ஸ்லிப்பாய்டுத்து…”

“நாசமாப் போச்சு. நான் ஐங்கரன் இல்ல மாப்ள, சங்கரன்” என்று வெளியே சத்தமாகச் சொன்னவன், ‘இந்த டங்கை கரெக்ட் பண்ண, வசம்பத்தான் தேய்க்கணும்..’ முணுமுணுத்தபடி தலையில் தட்டிக் கொண்டான். “தனம், ஒண்ணாங்கிளாஸ் காபி…” என்றபடி காபி டம்ளரைக் கீழே வைத்தான்.

“யோவ், பொய் சொல்றதுக்கும் ஒரு அளவிருக்குய்யா. ஒண்ணாங் கிளாஸா இது..? இதோட நீ குடிக்கறது மூணாவது கிளாஸ் காபி…” கரித்துக் கொட்டினான் ஜெயராமன்.

‘ழே’யென்று விழித்தான் சங்கரன். “அதுவந்து… காபி பர்ஸ்ட் க்ளாஸா இருக்குன்னு சொன்னேன் மாப்ள. ஹி.. ஹி… தனம், நைட்டுக்கு என்ன டிபன்..?”

தனலட்சுமி, ஜெயராமனைப் பார்க்க, “சப்பாத்தி போடச் சொல்லிருக்கேன் சங்கரா. உனக்கு ஓகேதான.?”

“ஓகேதான். ஆனா, இப்பல்லாம் முன்ன மாதிரி நிறையச் சாப்ட முடியறதில்ல மாப்ள. வயிறு சுருங்கிட்டுது. எனக்கு எட்டே எட்டு சப்பாத்தி போதும்.”

“அதுசெரி….” தலையாட்டிக் கொண்டான் ஜெயராமன். “நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. எனக்கு வெளிவேலை கொஞ்சம் இருக்கு. பாத்துட்டு வந்துடறேன். வரட்டா..?” என்றபடி வெளியேறினான்.

ட்டமேஜை மாநாடு கூடியிருந்தது.

“என்னடி சொல்ற நிஷா.?”

“உண்மையச் சொல்றேன்….” என்றாள் நிஷா ரஜினி வாய்ஸில்.

“டாட், அத்தைகிட்ட ஸம்திங் ராங். ஏதோ ப்ரோக்ராம் செஞ்ச ரோபோட் மாதிரி நடந்துக்கறாங்க.”

“ஆமாம்ப்பா. நானும் பாத்தேன். ஏதோ புதுசா பாக்கற மாதிரி என்னையப் பாத்தாங்க. ஒரு மாதிரி ‘ழே’ன்னு முழிக்கறாங்க…” என்றான் பரத்.

“அவ முழியே சின்ன வயசுலருந்து அப்டித்தான்டா.”

“அதில்லைப்பா. இப்ப இன்னும் அதிகமா. என்னமோ அம்னீஷியா பேஷண்ட் மத்தவங்களை பாக்கற மாதிரி. ஸம்திங் ராங்ப்பா…”

“என்னடா சொல்றீங்க..? நான்தான் சரியாக் கவனிக்காம விட்டுட்டனா..? ஏம்மா, நீ பாத்தியா.?”

“கவனிச்சேன்டா. அப்பறமா பேசிக்கலாம்னு இருந்தேன். அவளை ஏதோ பேய் பிடிச்சிருக்குன்னு தோணுது..”

“லூசு மாதிரி உளறாத பாட்டி. 2022 வரைக்கும் உலகம் வந்தாச்சு. இப்பப் போயி பேய் பிடிச்சிருக்கு, நாய் குடிச்சிருக்குன்னுக்கிட்டு…”

“நீ சும்மாருடி. என்னத்தடி கண்ட நீயி..? டேய் சங்கரா, நாம ஊர்ல எத்தனை கேஸ் இந்த மாதிரி பாத்திருக்கோம்.? பேய் விரட்டறதக் கவனிச்சிருக்கோம்..? எனக்கு நிச்சயமாத் தெரியும், அவளை ஏதோ பேய் புடிச்சிருக்கு. நீ உடனே போயி, பேய விரட்டறதுக்கு யாரையாச்சும் ஆள் இந்த ஊர்ல இருக்கானான்னு தேடிப் பாத்து, கூட்டிட்டு வா. போடா…”

“எதுக்கு தேடியெல்லாம் பாக்கணும்..? என் ப்ரெண்டுக்குத் தெரிஞ்சவர் மாம்பலத்துல ஹரிபட்டர்னு ஒருத்தர் இருக்கார். எனக்கும் அவரோட நல்லாப் பழக்கம் உண்டு. அவர் பேயோட்டறதுல எக்ஸ்பர்ட். அவரைக் கூட்டிட்டு வரேன்..”

“என்னது..? ஹாரிபாட்டரா..?” வாயைப் பிளந்தாள் மைதிலிப் பாட்டி. பேரன்களுக்குச் சமமாக அரட்டையடித்து, டிவியில் இங்கிலீஷ் படம் பார்த்து….. பாட்டிக்கு ஹாரிபாட்டர், டோரா போன்ற கேரக்டர்களிலிருந்து டாம் ஹேங்க்ஸ் போன்ற ஆக்டர்கள் வரை எல்லாரையும் தெரிந்திருந்தது.

“ஹாரி பாட்டரில்லைம்மா. ஹரி பட்டர்.” சத்தமாகச் சொன்னான் சங்கரன்.

“ஓ… அப்டியா..? ஹாரிபாட்டர்னா வௌக்குமாத்த எடுத்துண்டு பறப்பன். இவன் பறப்பனோ..?”

“ஓ… இவன் பொண்டாட்டி கைல வௌக்குமாத்த எடுத்துண்டான்னா இவனும் பறப்பன்…” சங்கரன் சொன்னதற்கு வாண்டுகள் கெக்கேபிக்கேயென்று சிரிக்க, ‘ழே’யென்று விழித்தாள் மைதிலிப்பாட்டி.

“சரி, சரி… நான் இப்பவே போய் அவரைக் கூட்டிட்டு வரேன். நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுங்க..” என்றபடி கிளம்பிப் போனான் சங்கரன்.

–பூதம் வரும்…

ganesh

1 Comment

  • கதையும் ஜெட் ஸ்பீடில் பறக்கிறது.
    இயல்பான நகைச்சுவை கதையின் பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...