ஒற்றனின் காதலி | 5 | சுபா

 ஒற்றனின் காதலி | 5 | சுபா

டுத்த நாள் காலை. எழுந்தேன். குளித்தேன். சாப்பிட்டேன். நெற்றியில் விபூதி, ப்ளஸ் சந்தனப் பொட்டு சகிதம் அறையிலேயே அடைந்திருந்தேன். நல்ல பிள்ளை தோற்றம். பொழுதைப் போக்கக் கையில் ஒரு நாவல் புத்தகத்தை வைத்திருந்தேன்.

எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண், இந்த மாதிரித்தான் என்று அவளுடைய குணாதிசயங்களைக் கணிக்கும் அபார ஆற்றல் எனக்கு உண்டு.

அதன்படி அவள் நல்லவள். பிறரை வஞ்சிக்காதவள். நற்குடும்பத்தைச் சார்ந்தவள். பழக இனிமையானவள். சுலபத்தில் ஏமாறுபவள். என் வலையில் சிக்கக் கூடியவள். என்னை நம்பி ஏமாறப் போகிறவள். பத்து ரூபாய் அவளைச் சீண்டும். அவள் மனச்சாட்சியை உறுத்தும். திருப்பிக் கொடு என்று மனசாட்சி ஆணையிடும். அதன்படி அவள் திருப்பித் தருவாள். அதற்காகவாவது வருவாள். அந்த யூகத்தில் காத்திருந்தேன்.

திருப்பித் தரும் நோக்கம்தான். இல்லையென்றால், என் முகவரி எதற்கு? லாட்ஜ் பெயர், ரூம் நம்பர், இதெல்லாம் தேவையா?

வரப் போகிறாள், நிச்சயம் வரப் போகிறாள். நான் இல்லாத நேரம் வர உத்தேசமாக இருக்கும். பத்திலிருந்து ஐந்து, நான் வேலைக்குப் போவேன் என்று நினைத்திருப்பாள். அனேகமாக அந்த நேரம் வருவாள்.

நான் நிமிடத்திற்கொருமுறை மணி பார்த்தேன். நாவலில் புத்தி பதியவில்லை. யாரோ, யாரையோ துரத்தினார்கள். யாரோ, யாரையோ கொன்றார்கள். போலீஸ் தேடியது. துப்பறியும் நிபுணன் தேடினான். மாடிகளில் தாவினான். உதைபட்டான். உதைத்தான். துப்பாக்கியால் சுட்டான்.

‘ச்சே’ என்று சலிப்புடன் நாவலைத் தூக்கி எறிந்தேன். அவள் வரவில்லை. ஏன் வரவில்லை? என் கணிப்பு பொய்யானதில்லையே… ஒருவேளை மணியார்டரில் அனுப்பி விட்டாளோ? ஒருவேளை ரிசப்ஷனில் கொடுத்துப் போனாளோ? ஒருவேளை யாராவது பையனைத் தூது அனுப்பினாளோ?

ரிசப்ஷனில் விசாரித்தேன். யாரும் வரவில்லை. பையனும் வரவில்லை. அன்றைக்கு முழுக்க அவள் வரவில்லை. என் ஈகோ அடிபட்டது. நான் வெளியே போகவில்லை. சாப்பாட்டிலிருந்து சகலமும் அறையிலேயே.

மறுநாள்…

மறுநாள்…

மூன்று நாட்கள் கழிந்தன. அவள் வரவில்லை. பணமும் அனுப்பவில்லை. போஸ்ட்மேனும் என்னைத் தேடவில்லை. அவள் முகம் பார்க்காததில், உடலில் பசலை பூத்தது. மோதிரம் நழுவியது. மைனர்செயின் மார்பிலிருந்து வயிற்றுக்குக் கீழே இறங்கியது. கொஞ்சம் மிகையாகச் சொல்லிவிட்டேன். இருந்தாலும் என் நிலையை அப்படித்தான் சொல்ல முடியும். ஏஏஏஏங்கிப் போய்விட்டேன்.

நான்காம் நாள், நானே அவளைத் தேடிப் போவது என்று தீர்மானித்தேன். தயாரானதும் சூட்கேஸ் திறந்தேன். வெறுங்கையோடு பார்ப்பதை விட, ஏதாவது ஒரு பரிசுப் பொருளுடன் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். ஒரு பிளாஸ்டிக் டப்பி, திறந்தால் சங்கீதம். கூடவே ஆண், பெண்ணின் நடன அசைவுகள். அயல்நாட்டு சமாச்சாரம். அதை எடுத்துக்கொண்டேன். பெண்களை இந்த மாதிரி மென்மைகள் கவரும்.

வெளியே வந்து ஆட்டோவில் ஏறினேன். நேரு சுரங்கத்தின் அருகில் இறங்கினேன். அவள் வீட்டிற்குச் செல்லும் வழியில் திரும்பினேன். நடந்தேன். இருட்டில் பார்த்தது என்றாலும் நினைவில் பதிந்த வீடு. காம்பவுண்ட் சுவர், க்ரில் கேட். அதில் தொங்கிய தபால் பெட்டி. அபரிமிதமான செல்வத்தை நினைவுபடுத்தாத வீடு. அதற்கென்று ஏழ்மையை பறைசாற்றும் வீடும் அல்ல.

க்ரில் கேட்டை மெல்ல விலக்கினேன். வாசல் கதவு மூடியிருந்தது. மணி அழுத்தினேன்.

கதவு திறப்பதற்குள் ஒரு அவசர ஒத்திகை நடத்திக்கொண்டேன்.

‘ஏன் வந்தீர்கள்?’

‘நான் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, இந்த பொம்மை டப்பி ஆட்டோவில் இருந்தது. உங்களுடையதா, பாருங்கள்.’

‘ம்ஹூஹூம் இல்லை. அட, அழகாக இருக்கிறதே.’

‘அழகாய் இருப்பதால்தான் உங்களுடையதாய் இருக்கும் என்று நினைத்தேன்.’

‘ச்சீ, கிண்டல் செய்கிறீர்கள்.’

‘கிண்டல் இல்லை. சத்தியம். நான் வரட்டுமா?’

‘இந்தப் பொம்மை? இதை விட்டுப் போகிறீர்களே.’

‘அழகானவர்களிடமே இருக்கட்டும் அது.’

அடுத்த வாக்கியத்தை ஒத்திகை பார்க்குமுன், கதவு திறந்தது. ஒரு பத்து வயதுப் பையன் நின்றிருந்தான். ஏமாற்றமாக இருந்தது.

“யாரு வேணும்?”

“அக்கா இல்லை?” என்று கேட்டேன். டப்பியைத் திறந்து கொண்டே.

அவன் பதில் சொல்லுமுன் டப்பியின் நடனம் அவனை ஈர்த்தது. விழிகள் விரியப் பார்த்தான்.

“அக்கா இல்லை?” கடவுளே அவள், இவனுடைய அக்காவாகத்தான் இருக்க வேண்டும்.

“இருக்காளே” காட், காட் நீ என்னைக் காப்பாற்றிவிட்டாயே.

“கூப்பிடேன். அக்கா அன்றைக்கு ஆட்டோவில் வந்த போது இதை விட்டுப் போய்விட்டாள். கொடுக்க வேண்டும்.”

“ஹை, அக்காவுடையதா இது? தாயேன். என்னிடம் தாயேன்.”

“அக்காவை கூப்பிடு” என்றேன்.

“அக்காவைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே அவன், பொம்மையைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே பாய்ந்தான்.

அவள் வரப்போகிறாள் என்று ஆவலுடன் காத்து இருந்தேன். இடுப்பில் கை வைத்து ஒரு கிழவி வந்தாள்.

வீட்டிற்குள் என்னை அழைத்தாள். போனேன். நுழைந்தவுடன், ஹால். ஹால் சுவர் முழுக்க ஃப்ரேமில் அந்த வீட்டைச் சார்ந்தவர்களின் புகைப்படங்கள்.

ஒன்றிலாவது நான் சந்தித்த, தங்க வயல் தேவதை இல்லை. இது வேறு குடும்பம். அவளுடைய நாசூக்கிற்கும், தேவதைத் தன்மைக்கும் இந்த குடும்பத்திற்கும் ஒத்தே வராது.

கிழவி, ஆட்டோவில் தன் மகள் எப்போது வந்தாள்? எங்கே வந்தாள்? என்று விசாரித்தாள். அட்டைக் கருப்பு நிறத்தில், தூக்கலான உதடுகளுடன், விரிந்த மூக்குடன் ஒரு பெண் வந்தாள். அவள் பெண் என்று நினைக்கப்பட ஒரே காரணம் அவள் புடவை கட்டியிருந்தது.

“இவளா ஆட்டோவில் வந்தவள்?” என்று கேட்டாள் கிழவி.

சத்தியமாய் இல்லை. என் தங்க வயல் தேவதை என்னை ஏமாற்றி இருக்கிறாள்.

பெண்களின் சாதுர்யங்கள் தெரிந்த நான், அவளிடம் ஏமாந்திருக்கிறேன்.

“இல்லை” என்று தலையசைத்தேன்.

கிழவி ஆரம்பம் முதலே சந்தேகக் கடலுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது கத்தவே ஆரம்பித்து விட்டாள்.

“எத்தனை பேர்டா இப்படி கிளம்பியிருக்கீங்க. வயசுப் பொண்ணுங்க வீட்ல நுழைஞ்சி, என்னா கலாட்டா? ஏதாவது திருடிக்கிட்டுப் போலாம்னு பாத்தியா? இல்ல எங்க நடேசை கடத்திக்கிட்டுப் போலாம்னு பாத்தியா? டேய் அருணாசலம், மாரிமுத்து, கொழந்தை சாமி, கொஞ்சம் வாங்கடா. இவனைக் கொஞ்சம் விசாரிங்க.”

அடுத்த விநாடி, வீட்டினுள் ஒரு படையே புகுந்தது. கத்திமேல் நடக்கிற சமாச்சாரம். நான், என் தங்கவயல் தேவதையைத் தேடிவந்ததை வெளிப்படையாகவும் சொல்ல முடியாமல், வீடு மாறி வந்துவிட்டேன் என்று ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு, மயிரிழையில் அடிபடாமல் தப்பித்து, பிடரியில் பின்னங்கால் இடிக்க, ஓடி வந்தேன்.

லாட்ஜுக்கு வந்து சேர்ந்த பின்புதான் என் நெஞ்சப் படபடப்பு அடங்கியது. ஒரு பெண். கேவலம் ஒரு பெண்… என்னை எவ்வளவு சுலபமாய் ஏமாற்றியிருக்கிறாள்? நினைக்க, நினைக்க ஆத்திரமாய் வந்தது. பார்த்தால், பொசுக்குமளவு நெருப்பு உடலெங்கும். கையில் சிக்கினால் நெரித்துக் கொள்ளுமளவு ஆத்திரம் மனமெங்கும்.

மறுபடி இரண்டு நாட்கள் வெளியே தலைகாட்டாமல் அறையிலேயே முடங்கி இருந்தேன். மூன்றாம் நாள், நான்காம் நாள், தங்க வயல் முழுக்க ஆட்டோவில் சுற்றிச் சுற்றி வந்தேன். மார்க்கெட்டில், அடகுக் கடையில், சினிமா தியேட்டரில், ஹோட்டல் வாசலில் எங்கேயாவது அவள் சிக்கமாட்டாளா என்ற வெறியுடன்.

அவள் கிடைக்கவில்லை.

ந்தாம் நாள். காலை, வழக்கம்போல் குளித்து, அறையிலேயே டிஃபனை வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டு, அன்றைய வேட்டையைத் தொடங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, வாசல் கதவு தட்டப்பட்டது.

டிஃபன் தட்டை எடுத்துப்போக வந்த ஹோட்டல் பையன் என்று நினைத்து, “உள்ளே வாடா” என்று எரிச்சலையும் சேர்த்து வெளிப்படுத்தினேன்.

கதவு திறந்தது. உள்ளே வந்தது பையன் இல்லை. அவள்.

என் தங்கவயல் தேவதை! முகத்தில் சிரிப்பு இருந்தது.

“என்னை நினைவிருக்கிறதா?” என்று சிரிப்பினூடே மெல்லிய குரலில் கேட்டாள்.

–காதலி வருவாள்...

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...