திரை வசனத்தின் இமயம் ஆரூர்தாஸ்

 திரை வசனத்தின் இமயம் ஆரூர்தாஸ்

திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று (20, நவம்பர் 2022)  வயது மூப்பு
காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்.  அவருக்கு வயது 91. 

‘வாழ வைத்த தெய்வம்’ என்கிற படத்தின்மூலம் வசனகர்த்தாவாக
அறிமுகமான ஆரூர்தாஸ் சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும்
அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடப்படும் படமான ‘பாசமலர்’
படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் நீண்ட
நிலைபெற்றார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட அன்றைய
திரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு கதை, திரைக்கதை,
அமைத்துள்ளார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதியுள்ளார் ஆரூள்தாஸ்.

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் – ஆரூர்தாஸ் கூட்டணியில் பல
வெற்றிப் படங்கள் உருவாகின.

சிவாஜி கணேசன், விஜயகுமாரி நடிப்பில் வெளிந்த, ‘பெண் என்றால் பெண்’ எனும் திரைப்படத்தை ஆரூர்தாஸ் கதை 
எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் முத்திரை 
பதித்துள்ளார்.

சிவாஜி நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா? பார் மகளே பார்,
பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன்,
பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி,
விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அள்புள்ள அப்பா, போன்ற
படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்,
அன்பே வா, குடும்பத் தலைவன், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன்,
தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா? போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

ஜெமினி கணேசன் நடித்த படங்கள் வாழவைத்த தெய்வம், சௌபாக்கியவதி,
திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர் ஆரூர்தாஸ்.

திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், 
சிவாஜிகணேசனுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதியது இன்னொரு 
சாதனை. சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 28. 
எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் 21. திரை உலகில் நீண்ட காலம் பவனி 
வந்ததால், இவர் பழகாத நடிகர் – நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், 
பாடகர்கள், பாடகிகள் அநேகமாக எவரும் இல்லை.

தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ். பிரபல பழம்பெரும் 
பாடலாசிரியர் அமரர்  தஞ்சை இராமையாதாஸிடம் கற்றுத்தேர்ந்த இவர், 
தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாஸ் 
என்பதையும் சேர்த்து  ஆரூர்தாஸ் என்கிற புனைப் பெயருடன் திகழ்ந்தார்.

இவர் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு வடிவேலு நடித்த ஜகஜ்ஜால புஜபல 
தெனாலிராமன் திரைப்படத்தில் எழுத்துப் பணிகளைப் புரிந்தார்.

தஞ்சைமாவட்டம் நாகப்பட்டினத்தில் 1931ஆம் ஆண்ட செப்டம்பர் 10ஆம்
தேதி பிறந்த இவர் பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டு சினிமாவில் பணியாற்றி நினைத்தார். தேவர் பிலிம்ஸ் அதிபர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா  வாழவைத்த தெய்வம் படம் வாயிலாக அவரை கதை வசனம் எழுதவைத்தார். 
அது மாபெரும் பெற்றி பெற்றது.

சென்னை  தி நகர் நாதமுனி தெருவில் மாதா கேஸலில் வசித்து வந்த இவருக்கு 
ரவிச்சந்தர் என்கிற மகனும், தாராதேவி, உஷாதேவி, ஆஷாதேவி ஆகிய 
மகள்களும் உள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை
கௌரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு ‘கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே
சென்று வழங்கினார்.

ஆரூர்தாஸ் இயக்கியம் நாவல்கள் சிறுகதைகள், சினிமா சம்பந்தமான நூல் கட்டுரைகள் சினிமா அனுபவங்கள் என நூற்றுக்கணக்கான நூல்களை
எழுதியுள்ளார். கோட்டையும் கோடம்பாக்கமும், கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள், நான் முகம் பார்த்த சினிமா கண்ணாடி, நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், தினத்தந்தி வெளிட்ட சினிமாவின் மறுப்பக்கம் பாகம்
1 மற்றும் 2, சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் ஆகிய திரை இலக்கியம், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, கவிஞர் வாலி விருது, மக்கள் கவிஞர்
விருது, கலைத்துறை வித்தகர் விருது உள்பட பல்வேறு விருதுகளை
பெற்றுள்ளார். சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்த ஆரூர்தாசின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் திரைப்பயணம் வசனத்தின்மூலம் என்று நிற்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...