கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்
ஆற்றல் வடிவே காளி – அவள்
ஆற்றும் கலைகள் கோடி
வீற்றி ருக்கும் ஊரோ – அது
ஆலம் பாடி யாமே
ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும்
உலகில் பரவச் செய்வாள்
போற்றி போற்றி என்றே – நீயும்
போற்றி வணங்கு நன்றே
கிருஷ்ணை, அகல்யாவின் கையில் உள்ள நோட்டைப் பார்த்து ..
“நீ எழுதி இருக்கும் இந்தப் பாடலை தினமும் பாடு. என்னுள்ளம் குளிர்கிறது” எனக் கூற..
அகல்யா அழகாய்ப் பாடினாள். அவர்கள் இருவரும் சுந்தரவதனன் ஐசியுவிலிருந்து தனியறைக்கு மாற்றப்பட்டதால் அங்கு அமர்ந்திருந்தனர்.
மருந்துகளின் தாக்கத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சுந்தரவதனம், கிருஷ்ணையை அறிந்தாரில்லை.
“ஆஹா! ஆஹா! மனம் குளிர்கிறது அகல்யா. எழுதிய கைக்கு என்ன செய்யலாம்..? இந்தக் கையை இன்னொருவரிடம் பிடித்துக் கொடுக்கலாமா?”
“ஹான்.. இது என் கை கிருஷ்ணை. ஏனாக்கும் இன்னொருத்தர்ட்ட என்னோடதக் கொடுக்கற?”
“கொடுக்கும் வேளை வந்துட்டதே அகல்யா!”
“கொடுக்கும் வேளைன்னா? அதற்காகத் தான் நீ என்னோடு இருக்கியா? உன்னை என் தெய்வம்ன்னு ஆராதிச்சேனே கிருஷ்ணை. அதுக்கா என்னை யாரோடயோ சேர்க்கற? ம்ச்ச்.. நீயும் மனுஷா மாதிரி கூட்டு சேர்க்கறதுலயே இருக்க.”
அகல்யா சுவராஸ்யமாய்ப் பேசிக் கொண்டிருக்க…
உள்ளே நுழைந்த டாக்டர் “என்னம்மா! அப்பாவுக்கு உடம்பு முடியலன்னு தன்னால புலம்பிட்டு இருக்கியா? அதெல்லாம் சரியாயிடுவாருமா! இன்னைக்கே கூட டிஸ்சார்ஜ் இருக்கும் கவலைப்படாதே!” சொன்னவர் சுந்தரவதனத்திற்கு ஒரு இன்ஜெக்ஷன் செலுத்தி விட்டு அகல்யாவை பார்த்து ‘பயப்படாதே’ என சொல்லிச் சென்றார். சென்ற அவர் பார்வையில் அகல்யா பைத்தியமாக தான் தெரிந்தாள்.
சுதாரித்த அகல்யா, கிருஷ்ணையை விட்டுவிட்டு பின்னோடு ஓடினாள்.
“டாக்டர்! அப்பாவுக்கு டிஸ்சார்ஜ்ன்னா பணம் கட்டணுமே. எவ்வளவு ஆகும், என்னன்னு எங்க போய் கேட்கணும்? ரிசப்ஷன்ல கேட்கவா? எங்க பெரியம்மா பணம் கொண்டு வந்துருவாங்க!”
“பணமா? அதெல்லாம் மொத்தமா கட்டியாச்சே. நீங்க எதுவுமே கட்ட வேணாம். டிஸ்சார்ஜ் சம்மரி வந்ததும் கிளம்பலாம் நீங்க.”
‘என்னடா இது? நானும் கட்டல. பெரியம்மாவும் இன்னும் வரல. பின்ன யாரு கட்டி இருப்பா? எதுவும் ட்ரஸ்ட் இருக்கோ? அப்பாவுக்கு ஏதும் தெரிந்திருக்குமோ?’ குழப்பமான மனநிலையில் மீண்டும் அறைக்குள் வந்தாள்.
“என்னாச்சு அகல்யா? என்ன குழப்பம் உனக்கு?” கிருஷ்ணை கேட்டாள்.
“ம்ம்.. அப்பாவுக்கு இன்னிக்கு டிஸ்சார்ஜ்ன்னா.. பணம் கட்டணுமேன்னு டாக்டர்ட்ட கேட்டா பணமெல்லாம் கட்டியாச்சுங்கறார். நானுமில்ல, பெரியம்மாவுமில்லன்னா யாரா இருக்கும்? கிருஷ்ணை நீயா? நீ போய் பணம் கட்டினியா?”
“அகல்யா! நான் என்று என்னை வெளிப்படுத்தி இருக்கேன்.? உன்னைத் தவிர யார் கண்ணுக்கும் நான் தெரிவதில்லையே. உனக்கான கை ஒன்று வருதுன்னு நான் சொன்னேனே அந்தக் கை கொடுத்திருக்கும்!” கண்சிமிட்டினாள் கிருஷ்ணை.
“கிருஷ்ணை.. நீ சமத்தோல்லியோ? அப்பாகிட்டயே நான் இருக்கற மாதிரி செய்யேன். எந்தக் கையும் எனக்கு வேண்டாம்!”
சொல்லிக் கொண்டிருந்தவளின் பார்வை சுந்தரவதனன் படுத்திருந்த கட்டில் மேல் செல்ல, அவர் முழித்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“பயந்துட்டியா குழந்தே! எனக்கு ஒண்ணுமில்ல! யாரோட பேசிண்டு இருக்க நீ!”
“அப்பா! பயப்படலப்பா. அதான் நம்ம கிருஷ்ணை இருக்காளே. எனக்கு ஒண்ணும் பயமில்ல. உங்களுக்கும் ஒண்ணுமில்ல. சரியாப் போச்சு. நாம் இன்னிக்கே ஊருக்குக் கிளம்பிடலாம் அப்பா!” என்றவள் யாரோ பணம் கட்டியதை அவரிடம் சொல்லி பயமுறுத்த வேண்டாமென்று விட்டுவிட்டாள்.
“யாரும்மா கிருஷ்ணை? நம்ம சொந்தக்காராளா? இல்ல ஊர்க்காராளா? உனக்குத் துணைக்கு வந்துருக்காளா?”
சுந்தரவதனன் மெல்லிய குரலில் கேட்க..
“கிருஷ்ணைப்பா… நம்ம கிருஷ்ணை.! இதோ உட்கார்ந்து இருக்காளே. என்னப்பா என்னை அப்படி பார்க்கற? நம்ம ஆலம்பாடி காளியம்மா தான் கிருஷ்ணையா இங்க வந்து உட்கார்ந்திருக்கா. உங்களுக்குத் தெரியலையா? கிருஷ்ணை! இங்க வாயேன்! அப்பாவுக்கும் நீ யாருன்னு காமியேன்!”
அந்த சமயம் சரியாக சுந்தரவதனன் இருந்த அறையை வாசஸ்பதியுடன் கடந்தார் கறுப்புக் குடைக்காரர்.
பார்வை என்னமோ திறந்திருந்த கதவின் வழி அகல்யாவைத் துளைத்தது.
“இந்த பைத்தியம் இங்க தான் இருக்கா?” அவர் வாய் முணுமுணுத்தது.
“என்ன ஐயா முணுமுணுக்குறீங்க? கொஞ்சம் சத்தமாத் தான் சொல்லுங்க! உங்க உறவுக்காரங்களப் பார்க்க வந்துட்டு எம் பின்னாடி நூல் பிடிச்சாப்புல வந்துட்டு இருக்கீங்க. என்னைக் கொஞ்சம் தனியா விடுங்கய்யா. அம்மாகிட்ட கண்டிப்பா சொல்லிடறேன் நீங்க எனக்கு ஒத்தாசையா இருந்தீங்கன்னு.” வாசஸ்பதி சிரித்தான்.
“இல்ல தம்பி.. நான் மாடியில நேத்து பார்த்தேனே ஒரு பைத்தியம் . அது வர்ற வழில ஒரு ரூமுல இருந்துது. அதச் சொன்னேன் முணுமுணுன்னு!”
“விடுங்கய்யா! ஆஸ்பத்திரின்னா பலதும் இருக்கும்!” என்றவன் அங்கிருந்த ரிசப்ஷன் நோக்கிச் சென்றான்.
“சிஸ்டர்! சுந்தரவதனன் பேஷண்ட் பேரு. ஐசியூவில் இருந்து தனி அறைக்கு மாத்தியாச்சுன்னாங்க. எந்த அறைன்னு சொல்ல முடியுமா?” கூட கறுப்புக் குடை பெரியவரும் இருந்தார்.
“இதே ஃப்ளோர் தான் சார். அதோ அந்தப்பக்கம் கடைசி விங் . ரூம் நம்பர் நூத்திநாலு.”
“அட! வந்த மாதிரியே பின்னாடி போகணும் தம்பி!”
“ஆமாம் ஐயா! பேச்சுவாக்குல ரூம் நம்பர கேட்காம வந்துட்டேன். வாங்க போலாம்.” இருவரும் பின்னால் திரும்பி சுந்தரவதனத்தைப் பார்க்க நடந்தனர்.
அங்கு படுக்கையில் இருந்த சுந்தரவதனன் நன்கு தெளிந்திருந்தார். தேவகோட்டையில் இருந்து ஜோதியும் அவள் கணவர் ராமனாதனும் வந்திருந்தனர்.
“என்ன சுந்தர் நல்லா இருக்கியா? என்ன இப்படி பயமுறுத்திட்ட?” ஜோதி பெரியம்மா உரிமையுடன் கோபித்துக் கொண்டாள். ராமனாதன் படுக்கையின் அருகில் சென்று சுந்தரவதனனின் கையை ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டார்.
“சரியாப் போயிடும்பா. அகல்யாதான் பாவம் தவிச்சுப் போயிட்டா. போன்ல நாங்க உடனே வரோம்ன்னு சொல்லியும் வேண்டாம்ன்னு சொல்லிட்டா.”
“ஆமா சுந்தர். தெரியாம நான் கால் வலின்னு சொல்லிட்டேன். அதான் குழந்த புரிஞ்சுண்டுட்டு நான் சொன்னப்புறம் நீங்க வந்தாப் போறும் பெரியம்மான்னுட்டா. அகல்யா! இந்தாம்மா! பேங்கில் இருந்து பணம் எடுத்துண்டு வந்துருக்கேன். எவ்வளவுன்னு கேட்டுக் கட்டிட்டு வந்துடு.”
“சரி பெரியம்மா. கொடுங்கோ!” பெரியம்மாவின் கைப்பையை வாங்கிக் கொண்டாள் அகல்யா. பெரியம்மாவிடமாவது சொல்லத்தான் வேண்டும். யாரோ ஒரு மகானுபாவன் அல்லது ‘பாவி’ அப்பாவுக்குப் பணம் கட்டியதை. யாருன்னு தெரிஞ்சாலாவது கொண்டு போய்க் கொடுக்கலாம். ட்ரஸ்ட்ன்னாக்க என்ன விபரம்ன்னு கேட்கலாம். எல்லாத்துக்கும் பெரியம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் செய்யணும்.
அகல்யா பெரியம்மாவுடன் பேசும் தனிமைக்காய்க் காத்திருந்தாள். ராமனாதனும், சுந்தரவதனனும் மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
“அகல்யாவுக்கு இப்போ எதுவும் தெரியக் கூடாது” என்றார் சுந்தரவதனன்.
“அகல்யா! நீ போய் இவாளுக்கு காஃபி வாங்கிண்டு வாம்மா!” அப்பா சொன்னதும், பெரியம்மாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பணம் வைத்திருக்கும் கைப்பையுடன் வெளியேறினாள் அகல்யா. அவளுக்கும் பெரியம்மாவிடம் சொல்ல விஷயம் இருந்ததே!
அவள் ஒரு பக்கம் படியிறங்கவும் மறுபக்கம் வாசஸ்பதி வந்து அறைமுன் நிற்கவும் சரியாய் இருந்தது.
கறுப்புக்குடைப் பெரியவர் சொன்னார்..
“அட இந்த ரூமுல தான் தம்பி அந்தப் பைத்தியம் இருந்துச்சு.”
“ஐயா..சும்மாயிருங்க. விஷயம் தெரியாம பேசக் கூடாது.” அதட்டிய வாசஸ்பதி,”ம்ஹும்! உங்களைக் கூட்டிக்கிட்டு உள்ளே போனா எதையாவது பேசிக் கெடுப்பீங்க. நீங்க போய் உங்க உறவுக்காரங்களப் பாருங்க!”
“அதெல்லாம் பார்த்தாச்சு தம்பி. இங்க உள்ளாற யாரு இருக்கறாங்க?” குடை மூக்கை நுழைத்தது.
“உங்களுக்குச் சம்பந்தமில்லாதவங்க ஐயா. கொஞ்ச நேரம் வெளியில் இருங்க!” முகத்தைக் கடினமாக வைத்துக் கொண்ட வாசஸ்பதி அறையினுள் நுழைந்த வேகத்தில் கதவைச் சாற்றினான்.
“வாசஸ்பதி!” என்றார் சுந்தரவதனன் மெல்லிய குரலில். அதன் பின் பேச்சு நீண்டது. அத்தனைக்கும் மௌன சாட்சியானார் ராமனாதன்.
அதே சமயம் அகல்யா காண்டீனில் காபி வாங்கிக் கொடுத்தபடி பெரியம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இந்தப் பணம் இப்பத் தேவையில்லை பெரிம்மா. வேற யாரோ மொத்தமா கட்டிட்டாங்களாம். டாக்டர் சொன்னார். அப்படி லட்சத்துல கட்டற அளவு நமக்கு வாய்ச்சவங்க யாரா இருக்கும் பெரியம்மா? முகம் காட்ட மாட்டேங்கறாங்க? இல்ல நீங்க யாரையேனும் முன்னால் அனுப்பி கட்ட வைச்சீங்களா? அதை மறந்துட்டீங்களா?”
“இல்லடி அகல்யா. நான் யாரையும் அனுப்பலையே. மதுரைன்னா அவளா இருப்பாளோ?”
“யாரு? மதுரை மீனாட்சியா?*
“இல்ல காஞ்சி காமாட்சி! நீ வேற!”
“நான் நம்ம ஆலம்பாடி காளிட்ட கூடக் கேட்டுட்டேன் தெரியுமா பெரியம்மா?” அகல்யா கிருஷ்ணையின் நினைவில் சிரித்தாள்.
“போக்கிரிப் பெண்ணே! தெய்வம் வந்து சொல்லுமா? நாம தான் நம் குறையை அவளிடம் சொல்லணும். சொன்னாலே பாதித் துன்பம் தீர்ந்து விடும் என்பதால் தான் அவள் சன்னிதியில் போய் பாரத்தை இறக்கறோம்!”
“இல்ல பெரியம்மா! அந்தக் காளியம்மா எங்கூட தான் இருக்காள். இல்லேன்னா நான் இவ்வளவு தைரியமா தனியா அப்பாவைப் பார்த்துண்டு இருக்க முடியுமா சொல்லுங்கோ!”
“இருக்கட்டும்டி. அவ என்னிக்கும் உங்கூடயே இருக்கட்டும். இருந்து எல்லா சந்தோஷத்தையும் உனக்கு வாரி வழங்கட்டும்.”
அகல்யாவின் பேச்சை பெரியம்மா சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். உண்மையிலேயே கிருஷ்ணையோடு அகல்யா உறவாடுவது தெரிந்த பின் என்ன கூறுவாளோ?
“வா! ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கோ. நாம போகும் போது ரிசப்ஷனில் யார் பணம் கட்டியது என விசாரித்து விட்டுப் போகலாம்!”
எழுந்து கொண்டாள் அகல்யா.
“ரூம் நம்பர் நூத்தினாலும்மா. பேஷண்ட் பேர் சுந்தரவதனன். பணம் கட்டினவா பேரு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோளேன்!” பெரியம்மா கேட்டாள்.
“நீங்க?” ரிசப்ஷனிஸ்ட் கேட்டாள்.
“இதோ இவ அவரோட பொண்ணு. இவதான் கேட்கறா!” அகல்யாவைக் கை காண்பித்தாள் பெரியம்மா.
“மொத்தமா ரெண்டு லட்சத்தை பணமாக் கட்டியிருக்காரும்மா. கட்டினவர் பேரு வாசஸ்பதி ராஜாராம்”
“வாசஸ்பதி ராஜாராம்! அலமேலுவோட பையன். வந்துட்டானா சுந்தரைத் தேடி. இனி சுந்தருக்கு குழப்பம் விட்டுது. அகல்யா! வாடி! வேண்டியவா தான் பணம் கட்டியிருக்கா!” அகல்யாவை கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்
“யாரு பெரிம்மா அந்த வனஸ்பதி!*
“வனஸ்பதி இல்லடி அகல்யா! வாசஸ்பதி! வாசஸ்பதி ராஜாராம்ன்னு சொன்னாள் இல்லையோ?*
“அதான் யாரு?”
அந்தப் பேருக்குரியவனோ….
“எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் மாமா!” எனக் கூறியபடி நெருங்கி நின்று சுந்தரவதனனைத் தொட்டான்.