அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஏரல் நகர ஆலயமணி ஒலிக்கப்போகிறது
அயோத்தி நகரில் கட்டியுள்ள ராமர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைக்க தூத்துக்குடி ஏரல் நகரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலய மணி 4 அடி உயரமும் 650 கிலோ எடையும் கொண்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளது ஏரல் என்ற சிறிய நகரம். இங்கு செய்யப்படும் ஆலய மணிக்கு அயோத்தியில் ‘உயர்ந்த கௌரவம்’ கிடைக்க உள்ளது. வெண்கலத்தால் 650 கிலோ எடையுடன் 4 அடி உயரத்தில் பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காகத் தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாத்திரங்கள் மற்றும் கப்பல்கள் உற்பத்திக்குத் தாயகமாக விளங்கும் ஏரல் நகரம், கடல் மார்க்கமாக இலங்கையின் கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இந்துக் கோவில்கள் மட்டுமின்றி கேரளாவில் உள்ள தேவாலயங்களுக்கும் ஏரல் நகரில் பலர் மணிகள் தயாரிக்கின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும்.
இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.
ஏரலில் இரண்டு தலைமுறையாகச் செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ணா பாத்திரக்கடை. இதன் உரிமையாளர் ராமநாதன். இவர் கடந்த 35 ஆண்டுகளாக பாத்திரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறைக்கு மேலே தொங்கவிடப்படுவதற்காக பிரம்மாண்ட மணி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
வெண்கலத்தால் 650 கிலோ எடை மற்றும் 4 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணியைக் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய ராமநாதன் இதற்காகத் தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேரை ஈடுபடுத்தினார்.
இந்த பிரம்மாண்ட மணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சட்ட உரிமைக் குழுவைச் சேர்ந்த குழு, ராமநாதனிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாத்திரக்கடை உரிமையாளர் ராமநாதன் கூறும்போது, “இரண்டு தலைமுறையாக பாத்திரத் தொழிலும் மணி செய்கிற தொழிலும் செய்து வருகிறோம். எனது 35 ஆண்டு பணியில் அயோத்திக்கு மணி செய்வது என்பது எனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய பெருமை. இதற்கான தொழிலாளர் செலவு மட்டும் ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு மணி தயாரித்ததற்குப் பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயில், தஞ்சாவூர் பெரிய கோவில்களில் இருந்தும் மணி செய்ய ஆர்டர் கிடைக்கவுள்ளது” என்றார் ராமநாதன்.
இனி அயோத்தி ராமர் கோயிலில் தமிழகத்தின் மணி நாள்தோறும் ஒலித்துக்கொண்டே இருக்கப்போகிறது என்பது நல்ல விஷயம்தானே…