பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்

“ஒரு நிமிஷம் சார்…”

வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஜெயராமன் நின்றான். திரும்பினான். “என்னம்மா..?”

“ஐம் ஸாரி, இதைப்பத்தி உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…”

“என்னை மறதிக்காரன்னு கொஞ்சம் முன்னதான் காலை வாரின நீயி…”

“ஹி… ஹி.. அதுவந்து சார்… இதைத் திறக்கறதுக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு. ஒண்ணு பவுர்ணமிக்குள்ள இது வெளிய வந்தாகணும். நாளைக்கு நைட் பவுர்ணமி. அதுக்குள்ள நீங்க இதுக்கு விடுதலை குடுத்துடணும்…”

“இல்லன்னா..?”

“இன்னும் முன்னூறு வருஷம் அந்த ஜீனி உள்ளயே அடைஞ்சு கெடக்க வேண்டியிருக்கும். பாவம் ஸார் அது…”

“இந்த ஜட்ஜ்மெண்ட்லாம் எழுதறது யாரு..? பேசாம இதை நீயே உடைச்சுத் திறந்துடேன். இதுக்கு நான்தான் ஆப்ட்டனா..?”

“இப்பதான சார் விளக்கமா சொன்னேன், உங்களத் தவிர யார் திறந்தாலும் அது திறக்காதுன்னு. நான் கேட்டதைச் சொல்றேன். நீங்க நான் சொல்றதைக் கேட்டுக்குங்க. அவ்ளவ்தான்.”

“பொண்டாட்டி பேச்சைத் தவிர வேற யார் பேச்சையும் நான் கேட்டதில்ல. ஹி.. ஹி…”

“இப்ப கேளுங்க ரெண்டாவது கண்டிஷனை..! நீங்க இந்த பாட்டிலை தனியா இருக்கறப்பதான் திறக்கணும். பக்கத்துல யாரையும் வெச்சுக்கிட்டு திறக்கக் கூடாது.”

“இது ஏதோ மைல்ட புரியற மாதிரி இருக்கு. ‘பட்டணத்தில் பூதம்’ படத்துல பாத்துருக்கனே.. பாட்டில்லருந்து அது வெளிய வர்றப்ப கலர் கலரா, ரூம் பூரா பொகையாக் கௌம்பும். அதான..?”

“இருக்கலாம். அவ்ளவ்தான் ஸார்..” என்று முறுவலித்தாள். கை குவித்தாள்.

வள் வீட்டைக் கடந்து தெருவில் நடந்துவரும் இந்த நேரத்திலும்கூட நினைத்துப் பார்க்கையில் ஜெயராமனுக்கு இதை நம்புவதா வேண்டாமா என்று ஒரு மெல்லிய தயக்கம் இருந்தது. இத்தனை விஞ்ஞான வளர்ச்சி பெற்ற யுகத்தில் பூதமாவது, பாட்டிலாவது… தலையசைத்துக் கொண்டான். தான் நினைத்ததைச் செயல்படுத்த இடம் பார்த்தான்.

இரண்டு தெருக்கள் கடந்ததும் அதற்கான வாய்ப்பு இருந்தது. குப்பைத் தொட்டி..! அதனருகே செல்ல, அதனுள் தலையைவிட்டு ஏதாவது உணவு கிடைக்குமா என்று குடைந்து கொண்டிருந்த நாய் ஒன்று நிமிர்ந்தது. தனக்கு வாய்த்த சக போட்டியாளனோ என்கிறாற்போல் பார்த்து, ர்ர்ர்ர்ர்ர்ர் என்றது. ஜெயராமன் அந்த பாட்டிலைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட கை உயர்த்த…

“டேய், மடையா… நிறுத்துடா…”

திடுக்கிட்டான். நாயா குரல் கொடுத்தது..? நாயெல்லாம் பேசுமா என்ன!! சந்தேகாபஸ்தமாகப் பார்க்க, அது இன்னும் ர்ர்ர்ர்ர் என்று ராகமிழுப்பதை நிறுத்தவில்லை. ‘ச்சே, பிரமை!’ என்று தலையில் தட்டிக் கொண்டு மீண்டும் கை ஓங்க….

“டேய் வெண்ணை… சொன்னாப் புரியாது உனக்கு. எத்தனை வருஷமா காத்திருக்கேன் நானு. என்னையக் கை விட்றாதடா..”

இம்முறை தீர்மானித்து விட்டான். பாட்டிலினுள்ளிருந்துதான் குரல் வருகிறது. “ஏய் ஜீனி சக்கரை, நீயா பேசற..? நெஜமாவே நீ பாட்டிலுக்குள்ள இருக்கியா..?” என்று கேட்டுவிட்டு அதைக் காதருகே வைத்துக் கொண்டான்.

“ஆமாண்டா லூசு. அந்தப் பொண்ணு சொன்னபடி செஞ்சு என்னைக் காப்பாத்துடா…”

“மாட்டேன். வார்த்தைக்கு வார்த்தை திட்டற நீயி. என் பொண்டாட்டிகூட என்னை இப்டி திட்னதில்லை. உன்னை எதுக்கு நான் காப்பாத்தணும்..?”

“சார்… சார்… ஜெயராமன் சார்… தெரியாம சார், நான் சார், டென்ஷன்ல சார், திட்டிட்டேன் சார். மன்னிச்சுக்குங்க சார்…” என்று கெஞ்சியது அது உள்ளிருந்து.

“அத்து… அந்த பயம் இருக்கட்டும்..” என்றவனாக அதைச் சுமந்தபடியே வீட்டை நோக்கி நடந்தான். இத்தனை நேரமாய் அடங்கிக்கிடந்த ‘தனலட்சுமியை எப்படிச் சமாளிப்பது?’ மேலேவர, உள்ளுக்குள் குதிரைக் குட்டி உதைத்தது.

அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது. “அங்க்கிள்… ஆண்ட்டி கடைக்குப் போறாங்களாம். வர்றதுக்கு நேரமாகுமாம். சாவி குடுக்கச் சொன்னாங்க..” என்றபடி ஓடிவந்து வீட்டுச் சாவியை நீட்டியது பக்கத்து வீட்டு வாண்டு.

‘ஹப்பாடா…’ என்று பெருமூச்சு விட்டபடி உள்ளேறினான். ஹாலில் தனம் வரைந்த கண்றாவியான இயற்கைக் காட்சி பெயிண்டிங்கின் அருகில் இருந்த மாடத்தில் பாட்டிலை வைத்தான். (அற்புதமான சீனரிம்மா. உன் டேலண்டுக்கு யாரும் ஈடாக மாட்டாங்க என்று மனச்சாட்சியில்லாமல் பொய் சொல்லியிருக்கிறான் – டிபன் தட்டுகள் பறக்கும் தட்டுகளாக மாறும் விபரீதத்துக்கு அஞ்சி.) கதவைத் தாழிட்டுவிட்டு வந்து விளக்கைப் போட்டுக் கொண்டான்.

பாட்டிலை இழுத்துத் திறக்க… மூடியானது நகர்வேனா என்றது. டிராவைத் திறந்து சுத்தியலை எடுத்து கழுத்தில் ஒரு போடு போடத் தயாரானான்.

“அண்ணே… வேணாண்ணே… பாட்டில் சிதைஞ்சா என்னால நிரந்தரமா வெளில வரமுடியாதுண்ணே…” என்று கெஞ்சியது உள்ளிருந்து ஜீனி.

“வேற என்ன தான்யா செய்யறது..? ஆவில காட்டிட்டு இழுத்துப் பாக்கவா.?” என்றான்.

“எனக்கே ஆவி காட்றீங்களா..? என்னவோ செய்ங்க. ஆனா பாட்டில் சிதையாம பிரிக்கணும். உங்களால மட்டும்தான் முடியும்” என்று சிரித்தது உள்ளிருந்து.

கிச்சனில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த ஆவியில் சிறிது பாட்டிலைக் காட்டிவிட்டு மீண்டும் ஹாலுக்கு எடுத்து வந்தான். ஒரு துண்டில் பாட்டிலைச் சுற்றி, பாதங்களுக்கிடையில் அழுத்திக் கொண்டு… பல்லைக் கடித்தபடி மூடியை இழுக்க…

சற்றே நகர்ந்தது.

ஆஹா.. சற்றே ஆசுவாசமாகி மறுபடி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கடினமாக இழுக்க…

மூடி தெறித்து விழுந்தது. பாட்டில் வேறொரு பக்கம் போய் விழுந்தது. தரையில் மல்லாக்க விழுந்திருந்த ஜெயராமன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, பாட்டிலிலிருந்து கலர்ப் புகை எதுவும் வரவில்லை. சோடாவில் குண்டை அழுத்தியதும் வருவது போல புஸ்ஸ்ஸ் என்ற சத்தம் மட்டும் வந்து அதுவும் நின்று போனது.

‘என்ன ஆச்சு..? நன்றிகெட்ட ஜீனி சொல்லிக்காம ஓடிடுச்சா..?’ பாட்டிலையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, காதருகே அந்தக் குரல் கேட்டது.

“தேவனே, எனக்கு விடுதலை தந்த தேவனே… மிக்க நன்றி…”

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன், துள்ளி அரையடி விலகி உட்கார்ந்தான். முகத்துக்கருகே அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது அது. ‘அபூர்வ சகோதரர்கள்’ குள்ளக் கமலைவிடக் குள்ளமாக இரண்டரை அடிதான் இருக்கும் போலிருந்தது. மொட்டைத் தலையும், பெரிய புருவங்களும், காதுகளில் குண்டலமுமாக அவன் சினிமாவில் பூதவேஷத்தில் பார்த்த எஸ்.ஏ.அசோகனை மினியேச்சராகச் செய்து வைத்தது போல அசட்டுச் சிரிப்புடன் மிதந்து கொண்டிருந்தது.

“நீதான் அந்த ஆயிரம் வருஷம் அடைபட்டுக் கிடந்த ஜீவனா..? ஆமா, ஆயிரம் வருஷ பனிஷ்மெண்ட் தர்ற அளவுக்கு என்னய்யா பண்ணின..? யாரு குடுத்தாங்க..? உன் பேரு என்ன..?”

“தேவனே… உமது வடிவத்துக்கேற்றபடி சரம் சரமாய்க் கேள்விகளாகக் கேட்டுக் குவிக்காதீர்கள். எனது வடிவத்துக்குத் தக்கபடி ஒவ்வொன்றாய்க் கேளும். என் புராணத்தை உமக்கு உரைக்கிறேன், கேளுங்கள்…”

“பெரிய சீறாப்புராணம்..!! இந்த நாடகத் தமிழ விட்டுட்டு முன்ன மாதிரி ஒழுங்கான தமிழ்ல சொல்லுய்யா…”

“என்னோட பேர் பரிமளராஜ வீரச்சந்திர ஜெயசிம்மப் பிரதாபன். சாந்ததீபி என்ற முனிவரிட்ட குருகுலவாசம் செஞ்சு படிச்சிட்ருந்தேன்…”

“சர்தான்.. பேரைச் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அரை கிலோமீட்டர் போய்டுவ போலருக்கே நீயி.. குருகுலத்துல எப்டித்தான் உன் பேரை அட்டெண்டன்ஸ் எடுத்தாங்களோ..?”

“சுருக்கமாக பிரதாபன் என்றே அழைப்பார்கள். மிகச் சூட்டிகையான மாணவனாக நான் இருந்ததால் தானறிந்த அனைத்து மந்திரதந்திர ஜால சக்திகளையும் ஒன்றுவிடாமல் எனக்குப் போதித்தார் என் குரு. ஆனாலும் ஒரு சின்னத் தப்பைச் செஞ்சதால என்னைப் பூதமாக்கி இந்தக் குடுவைக்குள்ள அடைச்சுட்டார்.”

“அப்டி என்னத்தச் செஞ்சு தொலைச்ச..?”

“ரிஷிபத்தினி ஒருமுறை குளிக்கையில் மறைந்திருந்து ரசித்துவிட்டேன். அவர்கள் அழகை ‘முழுமை’யாகப் பார்த்து ரசித்ததை குரு கண்டுபிடித்து விட்டதால் எனக்கு இந்தத் தண்டனை…”

“அடப்பாவி… சைட் அடிக்கறது ஒரு குத்தமா..?”

“கற்பழிப்பே செய்தாலும் தண்டனையில்லை உங்க காலத்துல. எங்க காலத்துல அப்டில்லாம் கிடையாதுய்யா. தவறா நினைச்சாலே தண்டனை உண்டு…”

“எங்க காலத்தைப் பத்தில்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கே. சென்னைத் தமிழ்லருந்து மதுரைத் தமிழ் வரைக்கும் கலந்துகட்டி வேற தமிழ்ல பேசற..?”

“கால பரிமாணத்தைக் கடந்தவை பூதங்கள். எதையும் ஒரு நொடியில் அறிய எங்களால் முடியும். என்னை விடுவித்ததற்கு நன்றி. நான் வருகிறேன்…”

“யோவ் இருய்யா… உன்ன விடுவிச்சா ஒரு மாசம் எனக்கு அடிமையா இருந்து கேட்டதைச் செய்வேன்னு அந்த சுனிதா சொல்லிச்சு. நீ இப்டி எஸ்கேப்பானா என்ன அர்த்தம்.?”

“ஆயிரம் வருஷமா அடைபட்டுக் கிடந்தவன் ஸாமீ… கொஞ்சம் உலகத்தை ரவுண்டடிச்சுட்டு, நாஷ்டால்லாம் துன்னுட்டு நாளைக்கு காலீல வர்றேன். நீங்க கேக்கறது எதுன்னாலும் செய்யறேனே…”

“உனக்கு சக்தி இருக்குன்னு நான் எப்டிய்யா நம்பறது..?”

“அதுக்கு என்ன செய்யணுன்ற தலீவா..?”

சுற்றுமுற்றும் பார்த்தான். பீரோவைத் திறந்து ஒரு செயினை எடுத்து வந்தான்.

“தோ பாரு… இது என் மிஸஸ் போட்டுக்கற கவரிங் செயின். இதைச் சொக்கத் தங்கமாக்கிக் காட்டு, பாப்போம்…”

காற்றில் கையைச் சுழற்றி நகையை நோக்கி நீட்டியது ஜீனி. “இப்பப் பாரு நைனா, அசல் தங்கமாக்கிட்டேன்.”

பார்த்தான். “எங்கய்யா..? தங்கம்னா மின்னனும். இது மின்னக் காணமே..?”

“அசல் தங்கம் மின்னாது தலீவா. நீங்க கண்டதையும் கலந்து பண்ற தங்கம்தான் மின்னும். உனுக்கு டவுட்டாருந்தா உன் வொய்ப் வந்ததும் உரசிப் பாத்துடேன்…”

“அவளை நிறையத் தடவை உரசிருக்கேன்டா. இப்ப என்ன புதுசா..?”

தலையில் அடித்துக் கொண்டது ஜீனி.

“அவங்களை இல்ல தலீவா. அவங்கள வீட்ல விட்டுட்டு நகைக்கடைக்கு போய் உரசிப் பாருன்னேன். நான் காலீய்ல வந்துடறேன். வர்ட்டா..?” என்றபடி காற்றில் மிதந்து ஜன்னல்வழி வெளிப்பறந்தது அந்த ஜீனீ. ழேயென்று விழித்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் நம் கதாநாயகன்.

–பூதம் வரும்…

ganesh

1 Comment

  • உரசிப் பார்த்தா நகைச்சுவைத் தங்கம்னு தெரியுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...