ஒற்றனின் காதலி | 3 | சுபா

 ஒற்றனின் காதலி | 3 | சுபா

நான் இரண்டாவது முறையாகத் தக்கலை வந்து சேர்ந்த போது, நான் இளைஞனாக மாறியிருந்தேன். என் இருபத்தாறு வயது முகத்தில் அடர்த்தியான மீசை என்பது பெண்களைப் பயமுறுத்தும். வயதைக் கூட்டிக் காட்டும் என்பதற்காக, மீசையைச் சுத்தமாக வழித்து விட்டேன். முன்பு வந்ததற்கும், இப்போது வந்ததற்கும் இடையில் ஒரு மாதம். முப்பது முழு நாட்கள்.

இந்த நாட்களில் நான், முகத்திற்குக் கிரீம் எல்லாம் தடவி ஒரு மாதிரி, பளபளப்பாக என் முகத்தை மாற்றி இருந்தேன். இப்போதைய ஸ்டைலில் பின்னந்தலை முடியை குதிரையின் பிடரிபோல் வளர்த்திருந்தேன். ஒரு ரவுண்ட் சீப்பினால் முடியை வளைத்து, வளைத்து நான் ஓடினால், பிடரி மயிர் இப்போது குதிரைக்குப் போலவே எழுந்து, எழுந்து அமர்கிறது.

என் உடலின் நிறம் சாதாரணமாகவே மாநிறம். அதில் ஆயில் ஆஃப் ஓலேயைத் தடவித் தடவி, இப்போது உடலில் ஒரு நிரந்தர மினுமினுப்பு வந்து சேர்ந்திருந்தது.

என்னுடன் இருந்த சூட்கேஸில், ஃபாரின் புடவைகள், சென்ட் வகைகள், சின்னச் சின்ன அமெரிக்கன் டயமண்ட் தோடுகள். அமெரிக்கன் டயமண்ட் வங்கி மோதிரங்கள் என்று அடுக்கி வைத்திருந்தேன். மேலும் பெண்கள் விரும்பும் புதுமையான ப்ராக்கள். வேறு, வேறு நிறங்களில். ஒட்டினால், சிக்கென்று ஒட்டிக் கொள்ளும் ஸானிடரி நாப்கின்கள். மெல்லிய டாலர் கோத்த இமிடேஷன் செயின்கள். பெண்கள் எப்போதும் சினிமா, நகை, சென்ட், சின்னச்சின்ன அன்பளிப்புகள் ஆகியவற்றில் மயங்குகிறவர்கள். அடிமைப்படுபவர்கள் என்பதால், ஃபாரினில் இருந்து பொம்மைகள். ரப்பரும், பிளாஸ்டிக்கும் கலந்த ஒரு கலவையில் பண்ணப்பட்டவை. வாசனை ஏற்றப்பட்டவை.

நடனமாடும் பெண் விரல் நீளத்தில். நடனமாடும் ஆண் விரல் நீளத்தில். ஒருவர் அணைப்பில், இன்னொருவர் என்று ஆணும், பெண்ணும் இணைந்து முத்தமிட்டுக் கொள்ளும் பொம்மைகள் விரல் நீளத்தில். அதுவுமன்றி செயற்கைப் பூக்கள், பட்டன் ரோஸ் அளவில் சின்னச் சின்ன அழகான பூக்கள், பச்சைக் காம்புடன் வாசனை ஏற்றப்பட்டு, என் பெட்டியில். அந்தப் பூக்களில் தினம் ஒரு பூவை எடுத்துக் கொடுத்தாலே, ஒரு பெண்ணை என்னால் முப்பது நாட்களில் மடக்க முடியும்.

அந்தப் பெட்டி என் பொக்கிஷம். என் முதலீடு.

நான் தக்கலைக்கு வந்து இறங்கியபோது, மாலை ஐந்தரை மணி. சூரியன் மறைந்தும், மறையாத நேரம்.

லேசாய் மழைச் சாரலில் ஊரே ஈரமாகியிருந்தது. காற்று சிலுசிலுத்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்து விலகி நடந்தேன். சுரங்கத்தின் சங்கு, ஏதோ ஒரு ஷிஃப்ட் முடிந்ததன், அல்லது தொடங்குவதன் அடையாளமாக பீறிட்டு அலறியது.

சினிமா தியேட்டரில், சினிமா விட்டிருந்தார்கள். வெளிப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள். துணையற்றவர்கள். ஆண்கள் எல்லாம் சுரங்கத்தில் மூவாயிரம் அடிக்குக் கீழே போய், உயிர் பயத்துடன் வியர்வை சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், நம் கண்மணிகள் சினிமா தியேட்டரில் சிரித்து, மகிழ்ந்து விட்டு, விடு திரும்பிக் கொண்டிருந்தன.

சுரங்க நகரம் அப்படி ஒன்றும் பணக்கார நகரமாய்க் காட்சியளிக்கவில்லை. டன், டன்னாய் தங்கத்தைத் தரும் சுரங்கம் இருந்தும், பிரதான சாலையில் நிறைய வட்டிக் கடைகள்.

பெட்டிக் கடைகளில் மலையாள புத்தகங்களும், தமிழ்ப் புத்தகங்களும் கலப்புக் கலாச்சாரத்திற்கு ஒரு நிரூபணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. மலையாளம் பேசுபவர்கள், கடைகளில் அமர்ந்து வியாபாரித்தார்கள். சுரங்க வேலை முடித்து வந்த தமிழர்கள், கடைகளில் புத்தகமும், பிஸ்கட்டும், தலைவலி மாத்திரையும், தமிழில் கேட்டு வாங்கிப் போனார்கள்.

நான் ‘மாத வாடகைக்கு அறைகள் விடப்படும்’ என்று போர்ட் தொங்கிய ஒரு லாட்ஜின் வரவேற்பறையின் சோஃபாவில் போய் உட்கார்ந்தேன். சென்ற விசிட்டிலேயே நான் அந்த லாட்ஜைப் பார்த்து வைத்து விட்டேன். ஊரிலேயே அது ஒன்றுதான் டீஸண்டான லாட்ஜ் என்று பெயர் பெற்றிருந்தது.

வரவேற்பறைச் சுவரில் முருகனும், இயேசுவும் பிரேமில் அடைபட்டிருந்தார்கள். ஊதுவத்தி வாசனை, மல்லிகைச் சர வாசனை.

நான் டீப்பாயில் மீதியிருந்த ஒரு பேப்பரை எடுத்துப் புரட்டினேன்.

இரண்டு செய்திகளின் தலைப்பை மேய்வதற்குள் ஆள் வந்து விட்டான். விபூதித் தீற்றல், நடுவில் சந்தனப் பொட்டு. அரைக்கை சட்டை, முழுக்கால் சட்டை.

“எந்தா?” என்றான்.

“தமிழ்.”

“சொல்லுங்கள்.”

“ரூம் வேண்டும்.”

“மாச வாடகைக்கா?” என்று கேட்டான். பேச்சில் கேரள வாசனை.

“ஆம்.”

“ஐந்து மாத அட்வான்ஸ். ஷேர் பண்ணுகிறீர்களா?” இல்லை ஒற்றை ஆளா?”

“நான் தனியாக ஒரு ரூம் எடுத்துக்கொள்கிறேன்.”

“நானூறு ரூபாய் வாடகை. ரெண்டாயிரம் அட்வான்ஸ். ரூமில் சமைக்கக் கூடாது. நான்வெஜிடேரியன் கொண்டுவந்து சாப்பிடக் கூடாது. விஸ்கி, பிராந்தி குடிக்கக் கூடாது.”

“சரி” என்றேன். பெண்களைக் கூட்டிவரக் கூடாது என்று சொல்லவில்லை. முதலில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும். இரண்டாயிரம் ரூபாய், நூரு ரூபாய்த் தாள்களாக எண்ணிக் கொடுத்தேன்.

அவனும் ஒரு முறைக்கு, இருமுறை கரன்ஸித் தாள்களை எண்ணினான். கரன்ஸிதாள்களின் இங்க் மணம் எனக்கே புலப்பட்டது. ஒருவேளை கள்ள நோட்டு என்று சந்தேகப்படுகிறானோ, என்னவோ?

அறையில் நுழைந்தேன். ஒற்றைக் கட்டில். வெள்ளை விரிப்புடன் மெத்தை. காற்றுப் புக ஒரு ஜன்னல். வெளியேற ஒரு ஜன்னல். சுவர்களில் வெள்ளை பெயின்டில் முருகனும், இயேசுவும். திரைக்குக் கூட வெள்ளை துணி உபயோகித்திருந்தார்கள். மேஜை நாற்காலி, வெள்ள பெயிண்டில். வெள்ளை பிளாஸ்டிக் கூடை. கிட்டத்தட்ட ஆஸ்பத்திரியும், கல்கத்தாவில் நான் பார்த்த ஒரு மிஷனின் அறையும் என் நினைவில் வந்து போயின.

நான் குளித்தேன். வெள்ளை டவலால் துடைத்துக் கொண்டேன். வெள்ளைப் பவுடர் போட்டுக் கொண்டேன். புது பேண்ட், புது ஷர்ட் அணிந்தேன். விபூதியும், நடுவில் சந்தனப் பொட்டும் வைத்துக் கொண்டேன். அப்பாவித்தனமான முகபாவத்திற்கு அது அவசியமாகப்பட்டது.

வெளியே வந்தேன். எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்று முடிவெடுக்கவில்லை. அந்த ஊரில் மூன்று ஹோட்டல்கள். ஒன்றே ஒன்றுதான் ஏஸி அறையுடன் கொஞ்சம் டீஸன்டான ஹோட்டல்.

அரிசி கொஞ்சம் பொரி, பொரியாகத்தான் இருந்தது. கேரளா பக்கம் என்பதால், அங்கே அந்த அரிசிதான் கிடைக்கும் போல. டிஃபன் பரவாயில்லை.

நான் மெல்ல ஊரைச் சுற்றினேன். பழகிய இடம்தான். சாலைகளில் தார். ஒரு மாதிரியான ஏற்ற, இறக்கங்களுடன் சாலை. அங்கங்கே ஸ்பீட் ப்ரேக்கர்கள். ஆட்டோக்கள் கருப்பு நிறத்தில். ஊரில் பழைய சுரங்கம், புது சுரங்கம், பழைய, பழைய சுரங்கம் என்று அங்கங்கே சுரங்கங்களின் முகப்புகள். சுரங்கத்தின் முகப்பு ஒரு ராட்சச சைஸ் இயந்திரம் போல் தெரிந்தது. கருப்பு பெயின்ட் பூசப்பட்ட ராட்சச சக்கரங்கள் இரண்டு தெரிய, அதற்குக் கீழே கூரையுடன் கூடிய செங்கல் கட்டிடம்.

மொத்தம் ஐந்து தங்கச் சுரங்கங்கள். நேரு, காந்தி, சுபாஷ், திலக், பாரதி என்று ஒவ்வொரு சுரங்கத்திற்கும் தேசத்தலைவர்களின் பெயர்கள்.

இங்கே பாருங்கப்பா… நாட்டில் மக்களுக்கு தேசப்பற்றை வளர்க்கும் விதம்!

நான் அந்தச் சுரங்கத்திலா போகப் போகிறேன்? இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல? நான் தேடி வந்திருப்பது என் மனதிற்குப் பிடித்த ஒரு கிளி. கிளியோபாட்ரா. சோபியாலாரன். எலிஸபெத் டெய்லர். எல்லாப் பெண்களும் வீட்டிற்குள் புகுந்து விட்டார்களா என்னவோ? தெரு விளக்கின் ஒளியில் அங்கங்கே நடந்து கொண்டிருந்தவர்களில், பெண்களாய் இருந்தவர்கள் மெனோபாஸ் பீரியடைத் தாண்டியவர்கள். நான் சலித்துப் போனேன். திரும்பினேன்.

சற்று தூரத்தில் நியான் விளக்குடன் ஹோட்டல் தெரிந்தது. நான், சாப்பிட்டால் இங்கேதான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கும் ஒரே ஹோட்டல். குளிர்வசதி கொண்ட, சாப்பாட்டு அறை கொண்ட ஹோட்டல்.

நான் அதை நோக்கி நடந்தேன்.

ஹோட்டல் வாசலில் போர்டு, இன்றைய ஸ்பெஷலைச் சொன்னது. உள்ளே நுழைந்தேன். நிறைய ட்யூப் லைட்டுகளின் வெளிச்சத்தில் தங்க வயல்காரர்கள் அத்தனை பேரும் மசால் தோசைகளையும், சப்பாத்திக் குருமாவையும் சாப்பிட்டுக் கெண்டிருந்தார்கள். தங்க வயலே காலியாகி ஹோட்டலுக்குள் நழைந்துவிட்டதோ என்று எண்ணும்படியான கூட்டம். தரையில் சர்வர்கள் சிந்திய டிஃபன் துணுக்குகள். பையன்கள் வழியவிட்ட தண்ணீர். ஈரத்தரை சொதசொதவென்று சேறுபோல் காட்சி அளித்தது.

நான் அருவெறுப்புடன் அத்தனை கூட்டத்தில், கசகசப்பில், ஈரத்தில் சாப்பிடும் மக்களைப் பார்த்தேன்.

ஏ.ஸி ஹால் என்று போர்டு அழைத்தது. கதவைத் தள்ளித் திறந்து, உள்ளே நுழைந்தேன்.

அடக்கமான தங்க விளக்குகள். ஊதுவத்தி வாசனை. உள்ளே நுழைந்தவுடன் குளிர் அணைத்தது.

கொஞ்சம், பெரிய ஹால்தான். ஆச்சரியமான விஷயம், அந்த அறையில் ஒரே ஒரு கஸ்டமர் மட்டும் அமர்ந்திருந்தது. அதைவிட ஆச்சரியம், அந்த கஸ்டமர் பெண் கஸ்டமராக இருந்தது.

நான் உள்ளே நுழைந்து, எனக்கென்று ஒரு மேஜை தேடி, அமர்ந்தேன். அமரும்போது, எனக்கு முதுகு காட்டி எதையோ மௌனமாகத் தின்று கொண்டிருந்த அவளது கவனத்தைக் கவர, என்று நாற்காலியைக் கொஞ்சம் சத்தத்துடன் பின்னுக்குத் தள்ளினேன்.

நான் எதிர்பார்த்தபடியே அவள் கவனம் கலைந்தது.

அவள் மெல்லப் பின்னால் திரும்பி என்னைப் பார்த்தாள்.

ஆ!

நான் தேடி வந்த தேவதை!

–காதலி வருவாள்…

ganesh

1 Comment

  • அட்டகாசம் சார்.மிக அருமையான நடை..ஒற்றனுக்கு காதலி கிடைத்துவிட்டாள் போல. இனி அதகளம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...