கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு

 கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு

3. வீட்டில்…

சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது.

“ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான் மாசிலாமணியின் இரண்டாவது மகனாய் இருக்கவேண்டும்.

போஸ் மௌனமாகத் தன்யாவின் பக்கம் கைகாட்டிவிட்டு ஒதுங்கினான்.

“மகாவீர், உங்க குடும்பத்தைப் பற்றி ஒரு பிக்சர் கொடுக்க முடியுமா?” என்றாள் தன்யா.

“கௌதமைப் பற்றி இதுக்குள்ள உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். அவனால் இந்தக் குடும்பம் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கு. அப்பா… உண்மையைச் சொல்றேன். அவரும் ஒண்ணும் நல்லவர் இல்லை. குடி… குணக்கேடு… என்ன, சமூகத்தில் நல்லபேர் வாங்கிட்டார். எங்களை ஸ்ட்ரிக்டா வளர்க்கறதா நினைச்சுக்கிட்டுப் பாசமே காட்டாம வளர்த்தார். ஒரு பைசாகூட எதுக்கும் கொடுக்க மாட்டார். ஆனா… அவருடைய இன்கம்டாக்ஸ் ரிடர்ன் நான் ஃபைல் பண்ணிக் கொடுக்கறதுக்கு வருஷாவருஷம் எனக்கு ஃபீஸ் கொடுத்துடுவார்!”

“இன்ட்ரஸ்ட்டிங்” என்றாள் தன்யா சிரித்து.

“வெளியில் இருந்து பார்க்கும்போது அப்படித்தான் இருக்கும். எங்களுக்கு ப்ராணாவஸ்தை… முக்கியமா அம்மாவுக்கு. அம்மாவை அடிமை மாதிரி நடத்துவார். “சாந்தீ…” என்று அவர் கூப்பிட்டாலே அம்மா நடுங்குவா! அவளுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கக் கூடாதுங்கறதுதான் சின்ன வயசிலேர்ந்து என் லட்சியமா இருந்தது. ஏன்னா அப்பாவும் கௌதமும் அவளைப் படுத்தின பாடு அப்படி!

“ஆனா கௌதம்னா அம்மாவுக்கு உயிர். அவன் இந்தக் குற்றத்தைச் செய்யலைன்னு இன்னும் சொல்லிட்டிருக்கா, பாவம்…” குரல் நெகிழ்ந்து தழைந்தது மகாவீருக்கு.

“உங்க அப்பாவின் மரணத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

“எதுவுமே தெரியாது! நான் முதல்நாள் மதியமே கல்கத்தா போயிட்டேன். ஆனா ஒண்ணு, கௌதம் அந்த டானிக்கை அடிக்கடி எடுப்பான். சொட்டு மருந்தை அப்பா கண்ணில் ‘நான் விடறேன்’ன்னு முந்திப்பான். ரொம்ப அன்பா, அனுசரணையா இருக்கற மாதிரி நடிச்சான். அவர் அவனை நெருங்கவே விடலை.”

“கண்மருந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் விஷம் என்ற விஷயம்…”

“…வீட்டில் எல்லோருக்குமே தெரியும்” என்றான் மகாவீர் வெளிப்படையாக. “கொஞ்சநாளைக்கு முன்னாடி ஒரு ந்யூஸ் ஐட்டம்ல அமெரிக்கால ஒரு பெண் தன் கணவன்மீது இருந்த கோபத்தால, கண் மருந்தைக் கொஞ்சம் கொஞ்சமா உணவில் கலந்து கொடுத்த செய்தி வந்தது. நாங்க எல்லோருமே அதைப் பற்றிப் பேசினோம். எங்க வீட்டுச் சமையற்காரன்கூடக் கேட்டுட்டிருந்தான்” என்றான்.

அவன் எழுந்து போனதும் “சமையற்காரன்?” என்றாள் தர்ஷினி.

“பாஸிபிள்” என்றாள் தன்யா.

“இல்லை, என் பிள்ளை பண்ணலை அதை! அவன் பண்ணலை!” சாந்தலக்ஷ்மி அலறினாள்.

“அவர் பண்ணலைன்னு எப்படிச் சொல்றீங்க?” சாந்தமாகக் கேட்டாள் தன்யா.

சாந்தி நீளநீளப் பெருமூச்சுகள் வாங்கினாள். பிறகு “அவன் கெட்டப் பழக்கங்கள் உள்ளவன்தான். ஆனா அவன் எதையுமே வெளிப்படையாத்தான் செய்வான். இந்தமாதிரி யாருக்கும் தெரியாம விஷத்தைக் கலக்கறதெல்லாம் அவன் இயல்புக்கே மாறானது. ஒரு கம்பியை வைத்து அவர் தலையில் அவன் அடிச்சிருந்தா, நான் நம்பியிருப்பேன்…”

தன்யாவும் தர்ஷினியும் பரிதாபமாகச் சாந்தியைப் பார்த்தார்கள். இவர்கள் சொல்வது எந்தக் கோர்ட்டில் செல்லுபடியாகும்? இவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதும் என்ன நிச்சயம்?

“தயவுசெய்து நான் சொல்றதை நம்புங்க. கௌதம் இந்தக் கொலையைப் பண்ணலை. அவரோட எதிரிகள் யாரோதான் செய்திருக்கணும். நல்லா துப்பறிஞ்சு பாருங்க” என்று கெஞ்சினாள் சாந்தி.

“சரிம்மா. எங்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பிக்கறீங்களா?” என்றாள் தன்யா, தப்பிக்கும் பாவனையில்.

“வெளியாட்கள் எப்படி உள்ளே வந்திருப்பாங்கன்னு பார்க்கத்தானே கேட்கறீங்க? வாங்க, காட்டறேன்” என்று அழைத்துப் போனாள் சாந்தி.

மாசிலாமணி குணத்தில் எப்படிப்பட்டவரோ, வீட்டை அற்புதமாக இழைத்துக் கட்டியிருந்தார். “பூஜையறை, ஹால், கிச்சன், கீழே இரண்டு படுக்கையறைகள், மாடி – ஹால், இரண்டு படுக்கையறை, ஒரு பெரிய கெஸ்ட் ரூம், இந்த அறை வேலைக்காரங்களுக்காகக் கட்டினது – வெளிவாசல், தனிப் படிக்கட்டோட” என்று காட்டிக்கொண்டு வந்தாள்.

“இந்த வாசல் வழியா யாரும் ஏறி வந்திருக்க முடியுமாம்மா?” என்று கேட்டாள் தர்ஷினி. அவளுக்குச் சாந்தியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“இல்லை, இந்த ரூம் பல வருஷமா எங்க வீட்ல வேலை செய்த ஒரு வேலைக்காரன் தங்கிக்கக் கொடுத்திருந்தோம். அவன் சமீபத்தில் வேலையைவிட்டு நின்னுட்டான். கொஞ்சநாளாகவே இந்த ரூம் கதவு, வெளிவாசற்கதவு எல்லாமே பூட்டியிருக்கு, பேட்லாக் அடிச்சு” என்றாள் சாந்தி.

“மிஸ்டர் மகாவீர், இந்த வீட்டில் இன்னொரு வேலைக்காரன் இருந்தானாமே? அவன் எப்போ வீட்டைவிட்டு வெளியே போனான், எதுக்காகன்னு சொல்ல முடியுமா?” தன்யா கேட்டாள்.

“அவன் தானா நிற்கலை, நான்தான் அவனை வெளியே அனுப்பினேன். என் ரூம்ல இருந்த ஏழு லட்ச ரூபாய்ப் பணத்தைத் திருடப் பார்த்தான், தற்செயலா நான் அங்கே போனபோது மாட்டிக்கிட்டான். போலீஸில் ஒப்படைக்கத்தான் நினைச்சேன், ரொம்பகாலமா எங்க வீட்டில் இருந்தவன், அதோட பொண்ணு கல்யாணத்துக்குன்னு சொல்லி மூக்கால் அழுதான். சரின்னு துரத்தி விட்டுட்டேன்” என்றான் மகாவீர்.

“இது என்றைக்கு நடந்தது?”

“எங்கப்பா உயிர்விட்ட அன்றைக்கு, ஏன்?”

தன்யா மகாவீரை விநோதமாகப் பார்த்தாள். “என்ன சார், உங்கப்பாவோட மரணத்துக்கு முன்னால் இந்த வீட்டில் யார்யார் இருந்தாங்க என்ற போலீஸ் லிஸ்டில் இந்த வேலைக்காரனோட பெயர் இல்லையே! எப்படி மிஸ் பண்ணினாங்க?” என்று கேட்டாள்.

“ஐ ஆம் சாரி, நான் உங்ககிட்ட தெளிவா சொல்லலை. இவன் ஒரு வாரமா மகள் கல்யாண வேலைன்னு லீவில்தான் இருந்தான். அப்பா போயிட்ட விவரம் தெரிஞ்சு அன்றைக்கு மதியம்தான் வீட்டுக்கு வந்தான். நான் வரும்போது மதியம் 3 மணி ஆகிட்டது. அப்பா காரியம் எல்லாம் முடிஞ்சு வரும்போது 6 மணி. வீட்டில் ஒரே சொந்தக்காரங்க கூட்டம். திடீர்னு ஏதோ எடுக்கணும்னு என் அறைக்குப் போனா, இவன் பணம் எடுத்துட்டிருக்கான்! அப்படியே டிஸ்மிஸ் பண்ணிட்டேன். அம்மாவுக்குக்கூட அப்புறம்தான் விவரம் தெரியும்” என்று விளக்கினான் மகாவீர்.

தன்யாவின் முகம் சுண்டிவிட்டது. அவன் இந்த வேலைக்காரன் விவகாரத்தில் பெரிய க்ளூ ஏதேனும் இருக்கலாம் என்று எதிர்பார்த்தாள்போலும்!

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது தர்ஷினிக்கு. எனவே “அந்த வேலைக்காரன் பெயரும் விலாசமும் கொடுங்க. பொதுவா விசாரிச்சுப் பார்க்கறோம். கௌதமைப் பற்றி வேறு ஏதாவது க்ளூ கிடைக்கலாம்” என்றாள்.

“தரேன். ஆனா எதுவும் பெரிசா எதிர்பார்க்காதீங்க. அவனும் கௌதமும் சின்ன வயதிலிருந்தே ரொம்ப க்ளோஸ்” என்றான் மகாவீர்.

–இன்னும் வரும்…

ganesh

1 Comment

  • சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையவில்லை. மகாவீர் மேல் சந்தேகம் எழுகிறதே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...