தலம்தோறும் தலைவன் | 20 | ஜி.ஏ.பிரபா
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர்
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள்
செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு
உழி தருமே
-திருவாசகம்
ஆனந்தம், நிம்மதி என்பது என்ன?
அது பணத்திலோ பொருளிலோ இல்லை. மனத்தில் உள்ளது.
எவரையும் சார்ந்து அது வருவதில்லை. உண்மையோடு இணைந்திருக்கும்போது அது தானாகவே வரும். உண்மை என்பது மாறாத நிலை. எதுவும் நிரந்தரமில்லை. பரம்பொருள் ஒன்றே உண்மை என்பதை அறிந்து கொள்வதே ஆனந்தம்.
நமக்குள் எண்ண முடியாத ஆசைகள் உள்ளது. எதுவும் நிரந்தரம் இல்லை. என்றோ ஒருநாள் நாம் அடைந்த ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு ஒருநாள் விலகிப் போய் விடும். அதை உணர்ந்து நாமே அதை விட்டு விலகிவிட்டால் ஆனந்தம் நிரந்தரமாக நம்முடன் இருக்கும்.
ஆசை என்ற உணர்வோடு நம்மைக் கட்டிப் போட்டுக் கொண்டு துக்கத்தோடு இணைபிரியாமல் வாழ்கிறோம். அதை உதறி பரமாத்வாவின் உணர்வில் கரைந்து விட்டால் என்றும் ஆனந்தம்தான். அதுவே நிம்மதியான வாழ்வு.
ஞானம், ஆனந்தம், நிம்மதி என்பதெல்லாம் ஒன்றுதான். வெளிப் பொருள்களிலிருந்து நமக்கு நிம்மதி கிடைப்பதில்லை. நமக்குள் இருக்கும் அஞ்ஞானத்தை உதற வேண்டும். அது பரம்பொருளின் மீதான பக்தியால் மட்டுமே சாத்தியம்.
எந்த ஒரு பொருளும், நிறைவேறும் ஆசைகளும் நிரந்தரம் இல்லை. பரம்பொருள் ஒன்று மட்டுமே நிரந்தரம் என்று உணர்ந்து, நம் மனத்தை இறைவன் மீதுத் திருப்ப வேண்டும்.
மாயைக்கு இருப்பிடமான நமக்கே இத்தனை ஆனந்தம் எனும்போது, எந்த மாயைக்கும் ஆட்படாத பரம்பொருள் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அத்தகைய பரம்பொருளின் மீதே நாம் பற்று வைக்க வேண்டும்.
ஈசன் அறியும் இராப்பகலுந்தன்னை பாசத்துள்
வைத்துப் பரிவு செய்வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்
ஈசன் வந்து எம்மிடை ஈண்டி நின்றானே
என்கிறார் திருமூலர்.
இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் நம்மைத் தன் தூய்மையான அன்பில் வைத்துப் போற்றித் தொழும் உயிர்களை ஈசன் அறிவான். ஜோதியாக அவன் வந்து கலந்து விடுவான் என்பதை அறிந்து கொண்டு, எப்போதும் அவனின் தியானத்தில், இருந்தால், அய்யனே நம் எதிரில் தோன்றி நம்மை ஆட்கொள்வார்.
நம்மைக் காத்து ரட்சிக்கவே அந்தப் பரம்பொருள் பல இடங்களில் சுயம்பு ரூபமாகக் காட்சி அளித்தாலும், சில இடங்களில் அதிக சக்தியுடன், கருணையுடன் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று திருக்கோழம்பியம். தேவாரப் பாடல் பெற்ற தலம்.
ஒருமுறை சிவனும் விஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினார்கள். அப்போது காய் உருட்டும்போது நடுவில் ஒரு சந்தேகம் வர, பார்வதியிடம் கேட்கிறார் சிவன். அம்பிகை தன் சகோதரன் விஷ்ணுவுக்குச் சாதகமாகப் பதில் கூற, கோபமடைந்த ஈசன் அன்னையைப் பசுவாகப் பிறக்கும்படி சாபம் இடுகிறார். அப்படிப் பிறந்த அன்னை ஒவ்வொரு தலமாக இறைவனைப் பூஜித்தவற்றில் இதுவும் ஒன்று.
ஒருமுறை ஜோதி வடிவாகக் காட்சி அளித்த ஈசனின் அடிமுடி காண பிரும்மாவும், மகாவிஷ்ணுவும் முயன்ற போது தாழம்பூவின் துணையுடன், ஈசனின் முடியைக் கண்டதாகப் பொய் கூறினார் பிரம்மா. இதனால் தண்டிக்கப்பட்ட பிரம்மன் இங்கு வந்து ஒரு குளம் அமைத்து நீராடி, இறைவனை வழிபட்டார். அதுவே பிரம்ம தீர்த்தம் என்ற பெயரில் இங்கு உள்ளது.
சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரன் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இங்கு வந்து குயிலாகக் கூவி ஈஸ்வரனை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றான். எனவே ஈஸ்வரன் கோகிலேஸ்வரர் என்று அழைக்கப் பட்டார்.
அகலிகையின் காரணமாக கௌதம முனிவரின் சாபம் பெற்ற தேவேந்திரன் இங்கு வந்து ஈசனை பலகாலம் பூஜித்து, சாப விமோசனம் பெற்றான். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட ஆலயம் இது.
ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. அதற்கு நேர் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வாயிலின் மேலே அமர்ந்த நிலையில் அம்மையும், அப்பனும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம், வள்ளி தெய்வானையுடன் முருகனும் சுதை வடிவில் உள்ளார்கள். உள்ளே நுழைந்ததும் மூன்று நிலை கோபுரம் நம்மை எதிர்கொள்கிறது. அங்கு பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலக்ஷ்மி, பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் வழக்கமான தெய்வ ரூபங்களுடன், நடராசரும், பிட்சாடனாருடன் சட்டைநாதரும் காட்சி அளிக்கிறார்கள்.
இத்தலம் கோகிலாபுரம் என்று வழங்கப் பட்டு பின் திரு என்ற அடைமொழியுடன் திருக்குழம்பியம் என்று அழைக்கப் படுகிறது. திருமுறை ஓதுவதற்கு முன் விநாயகர் வணக்கம் கூறிய பின், முருகனின் வணக்கமாக, “சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்” என்று அப்பர் பாடிய பாடலைப் பாடுகிறார்கள்.
கோயிலில் இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. கருவறையின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். இது அம்பிகை, ஈசனை பசுவாக வழிபாட்டு, சாப விமோசனம் பெற்ற இடம் என்பதால் பல ஜென்மப் பாபங்கள் இங்கு வந்து ஈசனைத் தரிசித்தால் விலகும் என்பது நம்பிக்கை.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. லிங்கத்தின் பாணம் மிகப் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்த கால் குளம்பின் தடம் ஆவுடையார் மேல் பதிந்துள்ளது. அம்பிகை சௌந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். தல விருட்சம் வில்வம், முல்லைக்கொடி. இங்கு கார்த்திகை, சோமவாரம், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்தைச் சுற்றி கோனேரிராஜபுரம், வைகல் மாடக்கோயில், திருநீலக்குடி, தென்குரங்காடுதுறை, திருவீழிமழலை, திருமீயச்சூர் ஆகிய தேவாரப் பதிகங்கள் பாடப் பெற்ற தலங்கள் உள்ளன. கும்பகோணம் – காரைக்கால் சாலையில் திருநீலகுடியை அடுத்து உள்ளது திருக்கோழம்பியம்.
உலக மாதேவியான அன்னை பசு வடிவில் ஈசனைப் பூஜித்தார். அவரின் குளம்படி பட்ட தடம் காணப்படுவதால் குளம்பியம் என்று பெயர்க் காரணம் ஏற்பட்டது. நந்தலாற்றின் கரையில் இரண்டு ஏக்கர் பரப்பில் கோவில் அமையப் பெற்றுள்ளது.
ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் அனைத்தும், ஈசனின் அற்புதங்கள் நடந்தவை. ஈசன் என்றாலே அன்பு. தன் அடியார்களின் மேல் கொண்ட அன்பின் காரணமாக ஓடி வருகிறான் அப்பன். அதற்காகவே அவன் நடத்தும் லீலைகள்தான் அன்னையுடனான கோபம், சாபம் அனைத்தும். உலகியல் விஷயங்கள் அனைத்தும் அவனின் திருவிளையாடல்தானே.
பிறப்பும், இறப்பும் இல்லாத இவரே அனைத்தையும், ஆக்கியும், அழித்தும், உலகை இயக்குகிறார். அன்பின் உருவமாக,மங்களமாக, அருட்பெரும் ஜோதியாக,எங்கும் நிறைந்திருக்கும் அய்யனின் பெருமைகளே தலங்கள் தோறும் நிறைந்திருக்கின்றன.
இது திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. சாபங்கள் தீரப் பிரார்த்தனை செய்யும் தலமாக விளங்குகிறது. அன்னை, அய்யனுக்கு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்யப் படுகிறது.
“நீற்றானை நீள் சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே”
என்கிறார் திருஞான சம்பந்தர்.
நெடியானோ டயனரியா வகை நின்றதோர் படியானைப்
பண்டங்க வேடம் பயின்றானைக் கடியாருங் கொழம்பு மேவிய
வெள்ளேற்றின் கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே
என்று பூரிக்கிறார் சம்பந்தர்.
கயிலை நன்மலை ஆளும் கபாலியை மயில் இயல்மலை
மாதின் மணாளனை குயில் பயில் பொழில் கோழம்பம்
மேய என் உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே”
என்கிறார் அப்பர்.
கோழம்பு நாதனை வணங்கினால் அனைத்து துன்பங்கள் விலகும் என்கிறார்கள். நம்மைக் காக்கவே தலங்கள் தோறும் குடியிருக்கும் ஈசனை வணங்கி நாமும் நலம் பெறுவோம்.