இளம்சிவப்பு நீலம் பச்சை | ஆர்னிகா நாசர் | சிறுகதை
மின்னல் திருமண மையம்.
ஓட்டிவந்த சூரியசக்தி இரண்டு சக்கரவாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் கனலேந்தி. வயது 28. பச்சைப்பாசி வளர்ப்பு மையத்தில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். 165செமீ உயரன். திராவிடநிறம். கோரை முடி தலைகேசம். நிக்கோட்டின் உதடுகள். இடுங்கிய ஏகாந்தக்கண்கள்.
பெற்றோரை இளவயதில் இழந்தவன். உறவினர் வீட்டில் படித்து வளர்ந்தவன். கடந்த ஒரு வருடமாகக் கனலேந்தியை திருமணஆசை துரத்துகிறது. காதலித்து மணமுடிக்க ஆர்வம் இல்லை. காதலிக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை.
மின்தூக்கியில் ஏறினான். எண்பதாவது மாடியில் துப்பியது.
வராண்டாவில் நடந்தான். மின்னல் திருமண மையத்தின் அறிவிப்பு பலகை வரவேற்றது. உள்ளே பிரவேசித்தான்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வரிசையில் காத்திருந்தனர். ஒரு வழுக்கை எண்பது வயது ஆசாமியின் பின் போய் அமர்ந்தான் கனலேந்தி.
“மணமகள் தேவை விளம்பரம் கொடுத்தாயா?”
“ஆம்!” என்றான் கனலேந்தி.
“நானும்… உனக்கு இது எத்தனாவது திருமணம்?”
‘அடப்பாவி… ஒண்ணுக்கே இங்க வழி இல்ல… எத்தனாவது திருமணமா…’
“முதல் திருமணம்… உங்களுக்கு?”
“நான்காவது திருமணம்… 21வயது இளம்பெண்ணாக தேடுகிறேன். 36-24-36 அளவுள்ள பெண்ணாக இருந்தால் உத்தமம். தினம் இரண்டு தடவையாவது செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆர்வம் பெண்ணைப் பார்த்தால் எழ வேண்டும். மார்பு மட்டும் 36’ ஆக இருந்தால் ஸாம்ப்பெய்ன் பாட்டில் போல் போதை ஏற்றும். பெண்ணின் கூந்தலிருந்து மட்டுமல்ல அவளது உடலிருந்தும் நறுமணம் வீச வேண்டும். ஒவ்வொரு உதட்டு முத்தத்திலும் ஒரு உச்சபட்ச புணர்ச்சி சுகம் கிடைக்கவேண்டும்!”
‘திஸ் இஸ் டூ மச் முதியவரே!”
“யாரைப் பார்த்து முதியவர் என்கிறாய். என்னிடம் ஆண்மை ததும்பி வழிகிறது”
“மன்னியுங்கள் முதிய இளைஞரே!” கையெடுத்துக் கும்பிட்டான்.
கனலேந்தி அமர்ந்தபடி திருமண மையத்துக்கு வந்திருக்கும் ஆண், பெண்களை உன்னித்தான். திருமண அவசியம் ஆணையும் பெண்ணையும் எவ்வளவு தூரத்துக்குத் துரத்துகிறது என்பது வந்திருப்பவர் முகங்களில் அப்பட்டமானது.
முதிர்கன்னிகள்..!
விதவைப்பெண்கள்..!
விவாகரத்தான பெண்கள்..!
பருவவயது யுவதிகள்..!
அழகானோர், அவலட்சணமானோர், சிவந்தோர், கறுத்தோர், உயரர்கள், குள்ளர்கள், குண்டர்கள், ஒல்லிபிச்சான்கள், பணக்காரர்கள், ஏழைகள், உயர்பதவியில் உள்ளோர், கடைநிலைப் பதவியில் உள்ளோர் இதரர் இதரர்கள்…
இங்கு வந்திருக்கும் பெண்களில் யாராவது ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடி விடலாமா..? உடன்படுவாளா, கை உதறுவாளா..?
செக்ஸ் சிலநொடி வானவில்கள். அதற்குதான் எவ்வளவு ஆவலாதிகள்..! மனித ஆயுளில் ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் 1500லிருந்து 2000 நிமிடங்கள் புணர்ச்சி சுகம் கிடைக்கும். அதற்குதான் எத்தனை வன்முறைகள், கொலைகள், தற்கொலைகள்..?
வரவேற்பாளினி அழைத்தாள். “மிஸ்டர் கனலேந்தி..!”
எழுந்து போனான். “சொல்லுங்க!”
“இங்கிருந்து நான்காவது அறையில் சம்ஷிகா என்கிற பெண் இருப்பார். அவரிடம் உங்களின் பதிவு அட்டையைக் கொடுங்கள். அவர் உங்களுக்கு வேண்டிய தகவல்களைக் கூறுவார்!”
“நன்றி!”
நடந்தான். நான்காவது அறை சம்ஷிகாவை பார்த்தான். இறக்கைகள் இல்லாத தேவதை போல் இருந்தாள். பொன்வண்டு மார்புகள். ஆரஞ்சுச் சுளை உதடுகள்.
நிமிர்ந்தாள். “என்ன வேண்டும் உங்களுக்கு?”
‘நீங்கதான் வேண்டும். வரீங்களா, கல்யாணம் பண்ணிப்போம்!’
“உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?”
“இல்லை… ஏன்?”
“வலைவீசி மணமகளைத் தேடுவதற்கு பதில் உங்களை மணந்து கொள்ளலாமே என என் மனம் சபலப்படுகிறது!”
“படமெடுத்தாடும் பாம்பு கூட அழகுதான். அழகைப் பார்த்து ஏமாந்து போகாதீர்கள். உங்கள் அட்டையைக் கொடுங்கள்!”
கொடுத்தான்.
“எதிரில் அமருங்கள்!” அமர்ந்தான்
25652 டி-/2048
கணினியில் சொருகினாள். கனலேந்தியின் முழுவிபரக் குறிப்பைக் காட்டியது.
“ஏறக்குறைய ஒரு வருடமாய்ப் பெண் தேடுகிறீர்களோ..?”
“ஆம்..!”
“உடல்தேவையா, மனத்தேவையா..?”
“இரண்டும்தான்..!”
பத்துநொடிகள் ஆழமாக கனலேந்தியைப் பார்த்தாள் சம்ஷிகா.
“உங்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ இரக்கம் பொங்கி வழிகிறது!”
‘இரக்கப்பட்டு ஏதாவது ஒரு சலுகையைக் கொடேன் தெய்வமே..!’
முறுவலித்தான்.
அங்கும் இங்கும் பார்த்தாள். “உங்களிடம் இரகசியமாகப் பேச விரும்புகிறேன். நான் சொல்வதை நீங்கள் யாரிடமும் பகிரக்கூடாது!”
“சரி..!”
ஒரு குப்பியை எடுத்தாள்.
குப்பியில் என்ன வைத்திருக்கிறாள்? நெற்றி சுருக்கினான்.
குப்பியை ஒரு மேஜிசியன் போல லாவகமாக திறந்தாள்.
அதில்-
மூன்று வர்ணங்களில் மாத்திரைகள் இருந்தன.
நீலநிறம்..!
இளம்சிவப்புநிறம்..!
பச்சைநிறம்..!
“மிஸ்டர் கனலேந்தி! இப்போது உங்களுக்கு வயது 28ஆகிறது. இப்போதிருக்கும் உங்கள் அறிவு ஆறுவயதில் இருந்திருந்தால் வாழ்க்கையில் இன்னும் பலபடிகள் முன்னேறியிருப்பீர்கள். இந்த நீலநிற மாத்திரையை நீங்கள் விழுங்கினால் மீண்டும் ஆறுவயதுக்குப் போய் உங்கள் வாழ்க்கையைத் தொடங்குவீர்கள்!”
“மீதி கலர் மாத்திரைகள்!”
“நீங்கள் பச்சைநிற மாத்திரையை விழுங்கினால் உங்கள் வங்கிக் கணக்கில் ஐந்துகோடி ரூபாய் சேரும். அத்துடன் உலகின் மிகஅழகான, ஆனால் அறிவே இல்லாத மனைவி உடனே உங்களுக்கு கிடைப்பாள். பச்சைமாத்திரை விழுங்கின அரைமணி நேரத்தில் இரண்டும் நடக்கும்!”
“சரி… இளம் சிவப்புமாத்திரை..?”
“இளம்சிவப்பு மாத்திரையை விழுங்கினால் சராசரி அழகுள்ள, ஆனால் விவேகமான அறிவான மனைவி கிடைப்பார். மாத்திரை விழுங்கின ஒருமணி நேரத்தில் இது நடக்கும்!”
“ஓவ்!”
“மாத்திரைகளை விழுங்கியபின் தீர்மானித்தது நடந்தே தீரும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. இது ஒன் டைம் ஆபர். ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரைகளை விழுங்கினால் மாத்திரை வேலை செய்யாது. உங்களுக்கு யோசிக்க பத்தே நிமிடங்கள் அவகாசம். அதற்குள் எந்த மாத்திரை வேண்டும் என்பதனை முடிவெடுங்கள்!”
நேரம் கரைய ஆரம்பித்தது.
யோசிக்கத் தொடங்கினான்.
“ஐந்துகோடிப் பணம் அறிவில்லா அழகு மனைவி. இப்படிப்பட்ட மனைவி வாய்த்தால் பணத்தைச் சிலபல மாதங்களில் கரைத்து விடுவாள். ஒரு குழந்தை பெற்றபின் அழகு தொலைந்துவிடும். அவளின் அழகு ஆயுளுக்கும் இருந்தாலும் அறிவில்லாதனத்தால் தனது வாழ்க்கையையும் எனது வாழ்க்கையையும் சேர்த்தே நரகம் ஆக்கி விடுவாள். ஆகவே எனக்கு பச்சை மாத்திரை வேண்டாம் மேடம்!”
“சபாஷ்! மூன்று நிமிடங்கள் கரைந்து விட்டன. மீதி ஏழு நிமிடங்களில் நீலமாத்திரை வேண்டுமா இளம்சிவப்பு மாத்திரை வேண்டுமா என முடிவெடுங்கள்!”
“இருபத்தியெட்டு வயது அனுபவ அறிவுடன் ஆறுவயதுக்கு திரும்பி மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பது தேவையற்றது. பாதிவழி வந்தபின் மீண்டும் ஆரம்பப் பகுதிக்கு போவது விவேகமற்றது. ஆறுவயதுக்குரிய சந்தோஷங்களை இழந்து சீரியசான வாலிபவயது மனதைப் பெறுவது சாபம். ஆகவே எனக்கு நீலநிற மாத்திரை வேண்டாம் அம்மணி!”
“ஓகே!”
“என் பெர்சனாலிட்டிக்கு மீறிய பேரழகியை மணந்து கொண்டு சந்தேகப் பேயாய் உழல்வதை விட சராசரி அழகுள்ள, விவேகமான அறிவுப் பெண்ணை மணப்பதே உத்தமம். அவள் என்னைச் சிறப்பாக வழி நடத்தி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வாள். பொருளாதாரத் தன்னிறைவு பெற வைப்பாள். எனக்கு இளம்சிவப்பு நிற மாத்திரையைக் கொடுங்கள். விழுங்கி ஏழைக்கேத்த எள்ளுருண்டையை பெறுகிறேன்!”
பிங்க் நிற மாத்திரையை விழுங்கினான். சம்ஷிகா மார்பு சிறுத்தாள். நிறம் கறுத்தாள் தலைக் கேசத்தின் நீளம் சுருங்கியது. சங்கீதக்குரல் சராசரி குரலாய் கம்மியது. சம்ஷிகாவின் ந்யூரான் செல்கள் ஞானவெளிச்சம்பட்டுத் தகதகத்தன.
“பிங்க் மாத்திரை விழுங்கியதால் நீங்கள் என்னை அடைகிறீர்கள்..! வாருங்கள், கோயிலில் மாலைமாற்றி தம்பதி ஆவோம்..!”
“கண்ணே சம்ஷிகா..!”
அடுத்த இரண்டு வருடங்களில்…
சம்ஷிகாவும் கனலேந்தியும் திருமணம் செய்து ஆதர்ச தம்பதியினராகி இருந்தனர். பிறந்த இரட்டைகுழந்தைகளுக்கு ‘திருப்தி’, ‘மகிழ்ச்சி’ என பெயர் சூட்டினர்.
காதல்தேவதை பறக்கும் முத்தம் அனுப்பி வாத்சல்யமாய்ச் சிரித்தாள்!
2 Comments
வேகம் புதுமை ரசனை நிறைந்த கதை.. அருமை ஐயா..
நல்ல கதை